இந்திய உளவுத் துறையா, கொக்கா?

ஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா இண்டிகா ( HR-03-0054) லேடன் காரை, நமது உளவுத் துறை கடந்த புதன்கிழமை மாலை ஹரியானா மாநிலத்தின் அம்பாலா ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் பகுதில் மடக்கிப் பிடித்தது. அந்த வண்டியில் பயணித்து வந்தவர்கள் சிறப்புக் காவல்படையினருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்களாம். ஒருவர்கூட பிடிபடவில்லையாம்.

இத்தனைக்கும் இந்த பயங்கரவாதச் செயல் பற்றி 12 நாட்களுக்கு முன்னரே நமது உளவுத் துறைக்கு விவரமான துப்புக் கிடைத்திருக்கிறது. அதாவது,

  1. ஆர் டி எக்ஸ் வெடி மருந்துகள், 5 டிட்டோனேட்டர்கள், 2 டைமர்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும் பொறுப்பும் அவற்றை ‘பாப்பர் கல்ஷா இண்டர்நேஷனல்’ (Babbar Khalsa International – BKI) எனும் சீக்கியத் தீவிரவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் லஷ்கரே தய்யிபாவுக்காம்.
  2. அவற்றைப் பெற்றுக் கொண்டு டெல்லிக்கு எடுத்துச் சென்று தீபாவளி வரைக்கும் காத்திருந்து, தீபாவளி நாளன்று ஒரு திரையரங்கில் வெடிக்கச் செய்யவது பா.கா.இயின் பொறுப்பாம்.


கஷ்மீரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதைச் சுற்றிலும் பலத்த காவலுடன் இயங்கும் நமது இராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கடத்தப்பட்ட வெடிபொருட்களின் நீண்ட பயணத்தையும் லஷ்கரே தய்யிபா + பாப்பர் கல்ஷா + ஐ எஸ் ஐ ஆகியோர் இணைந்து திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலையும் நமது உளவுத் துறை கண்டுபிடித்துத் தடுத்துவிட்டதாம். நமது ஊடகங்கள் பெருமிதப்படுகின்றன.

நாமும் பெருமிதப் படுவோம், இவை அனைத்தும் செட்-அப்கள் இல்லாமல் உண்மையாக இருந்தால்.