கொடிது.. கொடிது.. வறுமை கொடிது!

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-6)

கட்டுரைத் தொடரில் இது வரை…

“கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் பிற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்” என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.  ஆனால், இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது!

நலிவடைந்த சமுதாயத்தினரை பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு ஜகாத்!

ஆனால், ஜகாத்தினால் ஏற்படவிருக்கும் நன்மைகளை சமுதாயம் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஜகாத்தை முறையாக ஒரு பொது நிதியில் சேகரித்து பங்கிடுவதற்கு ஒரு கூட்டு அமைப்பை ஏற்படுத்துவது  இன்றைய சூழலில் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. 

கருத்து வேறுபாடுகளும் இயக்கச்சண்டைகளும் மலிந்திருக்கும் இன்றையச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய மாநில அளவிலாவது ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

oOo

இனி..,

இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பிற சமூகங்களுடன் ஒப்புநோக்கையில் இஸ்லாமிய சமுதாயம் குறிப்பிடத்தக்க அளவில் சமூக முன்னேற்றத்தை அடையவும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்கள்:

  1. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்
  2. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுதல் மற்றும்
  3. கல்வி மேம்பாடு


கொடிது கொடிது வறுமை கொடிது!

வறியவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக ‘கிராமிய வங்கி’  (Grameen Bank) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் பங்களாதேசத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் முஹம்மது யூனுஸ்.  அவரது இந்த முயற்சிக்காக 2006-ஆம் ஆண்டு ‘அமைதி’க்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப் பட்டது.  1970-களில் பங்களாதேசத்தில் நிலவிய கடும் பஞ்சமே முஹம்மது யூனுஸ் இத்திட்டத்தை தொடங்க மூலகாரணமாக இருந்தது.  அந்தக் கொடுமையான காலத்தைப் பற்றி அவர் தனது ‘வறியவரின் வங்கியாளர்’ (Banker to the Poor) என்ற நூலில் நினைவு கூர்கிறார்.

1974-இல் பங்களாதேசத்தை கடும் பஞ்சம் பீடித்துக் கொண்டது.  பொருளியல் துறைத் தலைவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டகாங் பல்கலைக்கழகம் நாட்டின் தென்கிழக்குக்கோடியில் அமைந்திருந்தது.  நாட்டின் வடபகுதியில் உள்ள குக்கிராமங்களில் நிகழும் பட்டினிச்சாவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வெளியான தகவல்களை ஆரம்பத்தில் நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால், பிறகு எலும்புக்கூடுகளைப் போன்ற மனிதர்கள் தலைநகர் டாக்காவின் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தென்பட ஆரம்பித்தார்கள்.  துளித்துளியாக வந்து கொண்டிருந்தவர்கள் வெகு விரைவிலேயே பெருவெள்ளமாகிப் போனார்கள்.  எங்குப் பார்த்தாலும் பட்டினி மக்கள்!  பெரும்பாலும் அசைவற்று அமர்ந்திருக்கும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துக் கொள்வதுகூட கடினமாக இருந்தது.  அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள்;  ஆண்கள், பெண்கள், குழந்தைகள்!  வயோதிகர்கள் சிறுவர்களைப் போலவும் சிறுவர்கள் வயோதிகர்களைப் போலவும் இருந்தார்கள்.”

கடும் பசியில் இருந்த அம்மக்கள் எந்த ஒரு கோஷத்தையும் எழுப்பவில்லை.  நன்றாக உண்டு, தூங்கி எழுந்து கொண்டிருந்த எம்மைப் போன்ற நகர மக்களிடம் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.   மாறாக, அவர்கள் சாவை எதிர்நோக்கி எங்கள் வீட்டு வாசல்களில் அமைதியாக படுத்துக் கிடந்தார்கள். 

சாவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.  ஆனால் பட்டினியால் சாவது என்பது ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று!  அது ‘ஸ்லோ மோஷனில்’ நிகழ்கிறது.  வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இடைவெளி வினாடிக்கு வினாடி குறைந்துக் கொண்டே வந்து ஒருநேரத்தில் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமலாகி விடுகிறது.  தூக்கத்தில் நிகழ்வதைப்போல உணரவே முடியாத நிலையில் மிக அமைதியாகச் சாவு அவர்களைத் தழுவிக் கொள்கிறது. 

இத்தனையும் வேளாவேளைக்கு அவர்களுக்கு ஒரு கைப்பிடிச்சோறு கூட கிடைக்காததுதான் காரணம்.  எல்லா வளங்களும் கொட்டிக்கிடக்கும் இந்த உலகில், அதன் விசித்திரங்களைக் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பச்சிளங்குழந்தை பாலுக்காகக் கதறி அழுகிறது.  அது கிடைக்காமலேயே தூங்கியும் விடுகிறது.  அடுத்தநாள் உயிர்வாழத் தேவையான சக்தி அதற்கு இல்லாமல் போய்விடலாம்.

ஆம்… வறுமை மிகவும் கொடியது!  சமுதாயத்தில் ஒரு பங்கினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ‘எனக்கு அதனால் பாதிப்பில்லை என்பதால், நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?’ என யாரும் ஒதுங்கியிருக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்காகத் திட்டங்கள் தீட்டாத நாடுகளே இல்லை எனும் அளவிற்கு அது உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.  ‘வறுமையை ஒழிக்க வேண்டும்’ என்ற நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், அதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

முஹம்மது யூனுஸ் சொல்கிறார்:

தான-தருமங்கள் செய்வதுதான்  வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவது என்பதாக நாம் பெரும்பாலும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  வறுமை ஏற்படுவதன் காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை தவிர்ப்பதற்காக நாம்தான் தருமங்கள் செய்கிறோமே என்ற மேலோட்டமான எண்ணத்தில் நமது பொறுப்பை, கடமையை உதறித் தள்ளி விடுகிறோம்.  வறியவர்களுக்கு உதவுவதற்காக அல்லாமல் நம் மனசாட்சிக்கு சின்ன ஒரு திருப்தி ஏற்படுவதற்காகவே நாம் தருமங்கள் செய்கிறோம்.  

தருமங்கள் செய்வது வறுமை எனும் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது.  மாறாக, அது வறுமையை இன்னும் அதிகரிக்கவே உதவும்.  தருமங்கள் வறியவர்களின் சுய முயற்சிகளை முடக்கி, தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலேயே தடுத்து விடுகின்றன.

(கட்டாயத்) தானங்கள் யாவும் (அடிப்படை வசதிகள் இல்லாத) வறியவர்களுக்கும் (போதிய பொருள் வசதி இல்லாத) ஏழைகளுக்கும் அதனை வசூலிக்கும் பணியாளர்களுக்கும் உள்ளங்கள் தேற்றப்பட வேண்டிய(புதிய)வர்களுக்கும் அடிமைகளு(டைய விடுதலை)க்கும் (மீளாக்) கடனில் மூழ்கியவர்களுக்கும் அறப்போராளிகளுக்கும் வழிப்போக்கருக்கும் (மட்டுமே) உரியவையாகும்.  இது அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட கடமையாகும்.  அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான்.  (குர்ஆன் 9:60)

‘வறியவர்’ என்பவர் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள வசதியற்றவர்களும் ‘ஏழை’ என்போர் ஏதோ சிறிது பொருள் இருந்தாலும், தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாதவர்களையும் குறிக்கும்.  இந்த இரு பிரிவினருமே ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள்.

வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த வழி அது ஏற்படுவதற்கான மூல காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது.  சமுதாயத்தின் எல்லா தரப்பினரின் கூட்டு முயற்சி இதற்குக் கட்டாயம் தேவை.  அப்படி இல்லாமல் அவரவர் தனித்தனியே தான தருமங்கள் செய்துக் கொண்டிருந்தால் வறுமையை ஒழிக்க முடியாது.  அது போலவே, ஒருங்கிணைந்த ஜகாத் வினியோகம் அல்லாமல் தனிநபர்கள் தாங்களாகவே ஜகாத்தை வினியோகம் செய்து கொண்டிருப்பதும் வறுமைக்கான தீர்வு ஆகாது.

வறுமையால் வாடுபவர்களில் பலர் மக்களிடம் தங்கள் குறைகளைக் கூறி யாசகம் கேட்பதில்லை.  தனிநபர்கள் தாங்களாகவே பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயக்கம் காட்டுவர்.  அவர்களின் தன்மானத்திற்கு எந்த பங்கமும் நேரிடாமலும், ‘தானம் கொடுத்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டு விட்டோம்’ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாத அளவிலும் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்.  அத்தகையோருக்கு ஒரு பொதுவான ஜகாத் அமைப்பின் மூலம் உதவிகள் செய்வதே சரியான முறையாகும்.

உழைப்பதில் ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.  சிறுதொழில்களைத் தொடங்கி நடத்த பயிற்சிகளும் முதலீட்டு உதவிகளும் அளிக்கப்படலாம்.  உழைக்க முடியாத நிலையில் உள்ள முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவி மாதாமாதம் வழங்கப்படலாம்.

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...