உண்மையைத் தேடி… (மின்னஞ்சல் மூலம் பணம்?)

Share this:

சென்ற தொடரில் ஆதாரமில்லாத ஒரு கனவை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு மூடத்தனமான செய்தி பரப்பப்படுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அதன் அபத்தங்கள் என்ன என்பனவற்றையும் கண்டோம.
இப்போது மனிதனின் பேராசைக் குணத்தை மையமாகக் கொண்டு ஒரு பொய்ச்செய்தி எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதையும் அதன் அபத்தங்களையும் ஆராய்வோம்.

உங்களுக்கு தோராயமாக கீழ்க்கண்ட தொனியில் இவ்வாறு மடல்கள் வந்திருக்கலாம்.

பில்கேட்ஸ் தன் சொத்தைத் தங்களுடன் பகிர்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஏஓஎல் (AOL) நிறுவனமும் இணைந்துவிட்டன.

(இவை இரண்டும் மிகப்பெரும் போட்டி நிறுவனங்கள்; இவை இணைவது என்பது மின்மடல் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய மிகச் சாதாரண நிகழ்வன்று)

உலகில் எவ்வளவு கணினிகளில் தங்களின் மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள் எனக் கண்டுபிடிக்க இந்த மின்மடலை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் உடனடியாக அனுப்பவும். எனக்குத் தெரிந்த நண்பர் x என்பவர் இதேபோல் செய்து தற்போது 3241 டாலர் பெற்றுள்ளார். எனவே நீங்களும் இதேபோல் பணம் சம்பாதிக்க உடன் இந்த மடலை அனுப்புங்கள்.

அதே போல்,

“தெரிந்த அனைவருக்கும் இந்த மடலை அனுப்பி நீங்களும் ஸாம்சங் செல்பேசி இலவசமாகப் பெறுங்கள்” என்ற தொனியில் இன்னொரு மடல் சிறிது காலம் முன்பு ஸாம்சங் செல்பேசி நிறுவனம் இதேபோல் ஏதோ ஆராய்ச்சி(?) செய்வதற்காக இந்த மடலை அனுப்பி உள்ளனர்.

இது போன்ற பல தயாரிப்புகளை இலவசமாகப் பெறுவதற்கு ‘நல்ல’ நோக்குடன், செய்தியின் நம்பகத்தன்மையை ஆராயாமல் உங்கள் நண்பர் இதே தொனியில் அமைந்த மடல்களை உங்களுக்கு அனுப்பி இருப்பார்.

மின்மடல் மூலமாகப் பணப்பரிமாற்றம் செய்வது என்பதெல்லாம் இயலாத காரியம் மட்டுமன்றி செய்யக் கூடாத காரியம். ஏனெனில் மின்மடலின் கட்டமைப்பே அப்படி. நாம் எவரென்று நினைத்து அனுப்புகிறோமோ அவர்தான் மின்மடலைப் பெறுகிறார் என்பது மிகச்சரியாக நிரூபிக்க இயலாது. அப்படியே இயலும் என்றாலும் ஒருவருக்கே ஏகப்பட்ட மின்மடல் முகவரிகள் இருக்கலாம். அவரே தனக்குத் தானே மடல் அனுப்புவதால் இதனால் அறியப்படும் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. மேலும் பில்கேட்ஸுக்கு (மட்டுமல்லாது சாம்சங் மற்றும் இன்னபிற இது போன்ற மடல் குறிப்பிடும் நிறுவனத் தலைவர்களுக்கு) உருப்படியான வேறு வேலைகள் எல்லாம் இல்லையா என்ன?

இது ஒருவேளை உண்மையாகவே இருந்து இதனால் விளம்பரம் கிடைப்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும், இதனால் விளையும் பணிச்சுமைகள் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை எளிதில் புறந்தள்ளி விடுவதால் இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை.

இம்மாதிரி மடல்களை நம்மில் சிலர் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நமக்கு அனுப்பி வைத்தவரின் ‘நல்ல’ எண்ணத்தைத் தொடர்ந்து பரப்புவதாக எண்ணி அனுப்பி வைக்கிறோம்.

இம்மாதிரி மடல்களை எழுதுதலும் அதனைப் பரப்பத் தூண்டுதலும் மனிதனின் பேராசையைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மிகப்பெரிய மோசடியாகும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பொய்யைப் பரப்புதலும் பொருள் வளங்களை வீண் விரயம் செய்வதும் மிகப் பெரும்பாவங்கள் ஆகும். அதுவும் தான் இப்படி ஒரு பாவம் செய்வது அறியாமலேயே பல சகோதரர்கள் இந்த வலையில் விழுந்து விடுகின்றனர். இதனைக்குறித்தும் சகோதரர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இதே போன்று சகோதரர் ஒருவருக்கு திருமதி. அரஃபாத் (?) அவர்களிடமிருந்து வந்த ஒரு ஏமாற்று மின்னஞ்சல் பற்றி இங்கே படிக்கலாம்.

இத்தகைய மின்மடல்கள் குறித்த மேலதிக விரிவான விளக்கங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

– அபூஷைமா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.