மொழியாக்கம்: அஷ்ஷெய்க் ஸியாவுத்தீன் மதனி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது மனைவிமார் மீதும் மற்றும் நல்லவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.
சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன். அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.
1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போது அதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்”. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு “அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.
2- மனித உள்ளங்கள் – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் – சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள்.
தொடர்-2 >>