காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-4)

Share this:

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். படம் காண்க.

“நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்” என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)

இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் ‘ஹிஜ்ர்’ அல்லது ‘ஹத்தீம்’ என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள்.

அதற்கான காரணம்…

யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ”மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?” என்று கேட்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ”எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)” என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ”உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்” என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்.

அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ”என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் – என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க – நான் ‘ஹிஜ்ர்’ பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை” என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் காபாவில் ‘ஹிஜ்ர்’ பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்)

குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை – அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் – இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது.

ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ”அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ”நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! ‘ஹிஜ்ர்’ பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!” என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் (‘ஹிஜ்ர்’ பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்)

பிறகு…

அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ”அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ”ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ”ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்)

பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ”ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ”ஆம்” என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ”இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்” என்றார். (முஸ்லிம்)

இவ்வாறாக…

– நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

– பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர்.

– பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள்.

– பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார்.

– இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம்.

இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ”இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்” என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

{mosimage}காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் – வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். அருகிலுள்ள படம் காண்க.

மேலும்,

காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.

இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில்,

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது காபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!” என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!” என்று பதிலளித்தார்கள். நான் ‘காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்’ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்” என்று பதிலளித்தார்கள். (புகாரி)

இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

(அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)

ஆக்கம்: அபூமுஹை

(தொடர் நிறைவடைந்தது)

< பகுதி 3
 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.