இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை!

Share this:

நல்ல முறையில் மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள ஏழை சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை தொழிற்கல்வி உதவித்தொகை அளிக்க முன்வந்துள்ளது.

இந்த ஊக்கத்தொகை இந்தியாவில் பயிலும் இந்தியக் குடிமகன்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வழங்கும் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் மொத்தம் 20,000 சிறுபான்மையின (இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பார்சி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த) மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் முஸ்லிம் மாணவர்களில் 366 பேருக்கும் புதுவையில் முஸ்லிம் மாணவர்களில் 6 பேருக்கும் உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் சில:

1.  இந்தியாவிலிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். கல்விக்கட்டணம் நேரடியாக கல்வி நிறுவனத்திற்கே செலுத்தப்படும். உணவு மற்றும் பிற தேவைகளுக்கான சிறு அளவிலான படி (மாதமொன்றுக்கு விடுதியில் தங்கிப் படிப்பவருக்கு ரூ.1000, தங்காமல் படிப்பவருக்கு ரூ. 500 ஓராண்டில் அதிகபட்சம் 10 மாதங்களுக்கு)  மாணவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.

2. போட்டி நுழைவுத் தேர்வுகளின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் அவ்வாறு இல்லாமல் தேர்வு பெற்ற மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். எனினும், போட்டித் தேர்வில்லாமல் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்ற மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வுகளில் குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. ஒவ்வொரு கல்வியாண்டும் உதவித்தொகை பெறுவது நடப்பு ஆண்டுகளில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்தே இருக்கும்.

4. இவ்வாறு உதவித்தொகை பெறும் மாணாக்கர் வேறு எந்தவகைத் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.

5. மாணாக்கரது எல்லா வழிகளிலுமான குடும்ப ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. மாணாக்கரது நடத்தை திருப்திகரமாக இருக்கும் வரையே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

7. படிப்பைப் பாதியிலேயே கைவிடும் மாணாக்கருக்கும், தேர்ந்தெடுத்த தொழிற்புலத்தை மாற்றிப் படிக்கும் மாணாக்கருக்கும் இந்த உதவித்தொகை நிறுத்தப்படுவதோடு அதுவரை வழங்கப்பட்ட உதவித்தொகையைத் திரும்பப் பெறும் உரிமையும் அமைச்சகத்துக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர் இதற்காகவே பிரத்தியேகமாக உள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கையெழுத்திட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

அதோடு வருமானத்திற்கான சான்றிதழும், நிலையான இருப்பிற்கான சான்றும் (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை), குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர் என்பதற்கான சான்றிதழும் இணைத்துத் தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தின் முதல்வர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அமைச்சகத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30.

மேலும் விபரங்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வத் தளத்தில் மேல்விபரங்களைக் காணலாம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.