1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!

டந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின் அவக்கேடாகிவிட்ட ஊழல்+விசாரணைகளும் நம்மை இச்செய்தியை விட்டும் திசை திருப்பியிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

ஓர் இஸ்ரேலியப் பட்டாளத்தானை விடுவித்து, இஸ்ரேலின் சிறைகளிலிருந்து 1027 ஃபலஸ்தீனப் போராளிகளை ஹமாஸ் மீட்டெடுத்த நிகழ்வை இருதரப்புமே வெற்றியாகக் கொண்டாடியிருந்தாலும், அந்தக் கொண்டாட்டத்திற்குரிய நாயகர்கள் ஹமாஸ் போராளிகள் மட்டுமே என்பது தெளிவு. பரிமாறப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாம் இதனைச் சொல்லவில்லை. மாறாக, ஐந்து வருடங்களுக்கு முன்பு, கிலாட் ஷாலிட் என்கிற அந்த இஸ்ரேலியப் பட்டாளத்தானை, ஹமாஸ் தனக்கே உரிய ஒரு ‘நடவடிக்கை’யில் ‘கைப்பற்றிய’ போது (அதை பிபிசி வகையறாக்கள் ‘ஊடகங்களுக்கே உரித்தான குறுக்குப்புத்தியில் “கடத்தப்பட்ட” என்று கூறின) இஸ்ரேல் வாந்தியெடுத்த வார்த்தைகளை அந்நாடு மீண்டும் தின்றது என்ற வகையில் தான் ஹமாஸுக்கு அந்த வெற்றி.

அப்போது இஸ்ரேல் சொன்னது என்ன?

“(ஹமாஸ் என்கிற) இந்தப் ‘பயங்கரவாத அமைப்பு’டன் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை”

‘கைது’ செய்யப்பட்ட ஷலாட்டை விடுவிக்க இஸ்ரேல் பலவழிகளில் முயன்றது. முதலில், மூன்றாம் நாடுகளான நார்வே, ஜெர்மனி, எகிப்து, பாலஸ்தீனிய அத்தாரிட்டி, என்ற பலரையும் தூது அனுப்பியது. ம்ஹூம், பலனில்லை. ஃபலஸ்தீனியர்களின் நலம் விரும்பியாகச் செயற்படும் சவூதி அரசும்கூட, அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, ஷலாட்டை விடுவித்துவிடும்படி கோரியிருந்தது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

அடுத்ததாக, இஸ்ரேல் செய்தது, அவர்களால் எப்போதும் சிறப்பாகச் செய்ய முடிகிற ஒரு காரியத்தைத்தான். ஆம், வன்முறையை அது மீண்டும் கையிலெடுத்தது, ஆத்திரத்துடன். கொத்துக் கொத்தாக, ஃபலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதன் மூலம் ஹமாஸைப் பணிய வைக்கலாம் என்று கருதியது. கோடைமழை நடவடிக்கை (Operation Summer Rain) என்று பெயரிடப்பட்ட தனது வன்போர் மூலம் 400க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களைக் கொன்று குவித்தது. அப்போதும், ஹமாஸ் அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக, கஸ்ஸா பகுதியில் தனது ஆக்ரமிப்பின் கொடுங்கரத்தை இறுக்கிப் பார்த்தது. கஸ்ஸா பகுதியில் 30 சத கட்டடங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனாலும் ஷாலிட்டை மீட்க முடியவில்லை. ஹமாஸின் புறவலிமை அவ்வாறிருந்தது என்பதை விட, அதன் அகவலிமை அரணாய் அமைந்தது என்பதே காரணம் என்று சொல்லலாம்.

இவ்வாறாக, “ஹமாஸுடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை” என்ற இஸ்ரேலின் கொள்கையைத் தளர வைத்ததில், அரசியல் மற்றும் ராஜதந்திர வெற்றிகளை ஹமாஸ் அறுவடை செய்துள்ளது எனலாம். ஃபலஸ்தீன் என்றால் ஹமாஸ் என்கிற குறியீடு அங்கிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கொள்ளலாம். காலனியாதிக்க வரலாற்றில், 1க்கு 1027 எனும் கைதிகள் பரிமாற்றம் இதுவே முதல்முறையாக இருக்கும்.

(இதற்கிடையில், விடுவித்த கைதிகளைக் கொன்றுவிடும்படி இஸ்ரேல் தனது மக்களுக்கு பரிசுத்தொகை ஆசை காட்டியதும், அதற்கு சவூதி அறிஞர் டாக்டர். அவாத் அல்கர்னீ தக்க பதிலடி கொடுத்ததும் அதைக் கண்ணுற்ற இஸ்ரேலிய வலதுசாரிகள் “அவாத் கர்னியைக் கொன்று வருபவருக்கு ஒரு மில்லியன் டாலர்கள்” என்று ‘வீரவசனம்’ பேசியதும் வேறுகதை.)(http://www.inneram.com/2011110419992/saudi-prince-backs-clerics-bounty-offer-for-israeli-soldier)

ஹமாஸின் இந்த வெற்றியை வியக்க, இன்றைக்கு கஸ்ஸா பகுதி இருக்கும் நிலையை அறிந்திருக்க வேண்டும். எல்லாப் பக்கமும் இஸ்ரேலிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கஸ்ஸாவின் வான், மற்றும் கடல் பரப்பையும் இஸ்ரேலே ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்நிலையிலும் 5 ஆண்டுகாலமாக இஸ்ரேலியப் பட்டாளத்தானை அவர்கள் கண்களில் படாமல் மறைத்து வைத்து, அவர்களைப் பணிய வைத்திருப்பது ஹமாஸின் மிகப்பெரிய சாதனையே! ஆகவே, ஹமாஸின் இந்தப் பெரும் சாதனையை மற்ற ஃபலஸ்தீனிய குழுக்களும் அங்கிகரிப்பதே முறையாகும்.

நேற்றொரு நண்பர் நினைவு கூர்ந்திருந்தார்: கஸ்ஸாப் பகுதியின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா ஒருமுறை சொன்னார்:

“இஸ்ரேலே,

உன்னிடம் ஆயுதங்கள் இருக்கின்றன;

எங்களிடம் வலுவான ஈமான் இருக்கிறது!

உன்பக்கம் அமெரிக்கா இருக்கிறது;

எங்கள் பக்கமோ இறைவன் இருக்கின்றான்!”

அநீதமிழைக்கப்படுபவர்களின் பக்கமே நீதியும் இறுதி வெற்றியுமிருக்கும்!

– இளைய கவி