உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,
A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)
இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,
A-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.
A-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.
ஒரே இறைவன் – படைத்தவனை ஒருமைப்படுத்துதல் – ஏக இறைவன் – என்ற கொள்கையினையே “ஏகத்துவம்/தௌஹீத்” என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம்.
அதாவது “ஏகத்துவவாதிகள்” அல்லது “தௌஹீதுவாதிகள்” என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.
இப்போது, “இறைவன் ஒருவனே” என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.
எளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே? இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் “ஜெகோவா” பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே? உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, “ஏகத்துவம்-இறைவன் ஒருவனே” சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும். அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.
அப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன?
இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது “ஏகத்துவம்+தூதுத்துவம்” ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். “ஏகத்துவம் – லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை” – இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. “லா இலாஹ இல்லல்லாஹ் – ஏகத்துவம்” + “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – தூதுத்துவம்” ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை! ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.
ஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது “ஏகத்துவம்+தூதுத்துவம்” ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
முன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான “ரிஸாலத்” (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர்.
வரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள்.
தொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, “ஒரே இறைவன் – ஏகத்துவம்” என்பதோடு நில்லாமல், முஹம்மது(ஸல்) அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
அதே சமயம், ஒரே இறைவன் – ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது(ஸல்) அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால் அவர் முஸ்லிம் ஆகமாட்டார். ஆனாலும், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் அவரும் தௌஹீதுவாதி / ஏகத்துவவாதியே!
அல்லாஹ்வும் தன் மறையில், அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய சொல்லைக் கூறுபவர் யார்?” (குர்ஆன் 41:33) என்று கூறுகிறான்.
எனவே, நாம் நம்மை வெறுமனே தவ்ஹீதுவாதி என்று அழைத்துக் கொள்வதைவிட, என் கொள்கை தவ்ஹீது என்று சொல்லிக் கொள்வதைவிட இறைக்கட்டளையின் படி “நான் முஸ்லிம்; என் கொள்கை இஸ்லாம்” என்று சொல்லிக் கொள்வதே சாலப் பொருத்தமானது.
– அபூசுமையா