வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!

Share this:

முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுலுக்கு வரவேண்டும்’ எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களின் முதல் கையொப்பம் மதுவிலக்கிற்காகத்தான்” என்று வேறு யாரும் இதற்குமேல் பேசமுடியாதபடி அறிக்கை கொடுத்துவிட்டது திமுக. எது எப்படியோ மதுவிலக்கு பற்றி மக்கள் மத்தியில் ஒரு புரட்சி வெடித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஏனெனில் அந்த அளவிற்கு மதுவால் தங்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

போராட்டங்கள் பலிக்குமா?

வெறுமனே போராட்டங்கள் நடத்துவதால் மட்டும் மாற்றங்கள் வந்துவிடாது. தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழாமல் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அதேபோல் எந்தவொரு பிரச்சனையையும் நாம் ஒருகோணப் பார்வை கொண்டு அணுகினால் பிரச்சினையின் யதார்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது; தீர்வு காணவும் முடியாது. பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதனை சமூக, அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பல கோணத்தில் பார்க்கும் போதுதான் பிரச்சினைக்கான சரியான தீர்வை நாம் முன் வைக்க முடியும்.

மதுவிலக்கு வேண்டுமா, வேண்டாமா?

மதுவிலக்கு வேண்டும் என வெகுஜன மக்களால் உணரப்பட்டு, பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராடிவரும் இவ்வேளையில், மதுவிலக்கு வேண்டாம் என்று அரசும், சிறு குழுக்களும், சில தனிமனிதர்களும் கூறிவருகின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்கள்:

1) கள்ளச்சாராயம் பெருகிவிடும்

2) மது குடிப்பது தனிமனித சுதந்திரம்

3) மது விற்பனைதான் மாநிலத்திற்கான முக்கிய வருவாய்.

இவைபோல் இன்னும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்படியான காரணங்களோடு இந்த மதுவிலக்குப் பிரச்சினையினை அணுகுவோம்…!

(1)    மதுவும் சமூகப் பிரச்சினையும்

மது, சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, சமூகத்திற்கான மாபெரும் தீமையாகவும் மாறிவிட்டது. மதுவால் சமூகத்தின் மிகப்பெரும் வளமான மனித வளத்தை இழந்து வருகின்றோம். தமிழகத்தில் 2013ஆம் ஆண்டில் மட்டும் நடந்த 14,504 விபத்துக்களில் 15,563 பேர் பலியாகி இருக்கின்றார்கள். இதில் 70% விபத்துகள் மது அருந்தியதால் ஏற்பட்டவை. ஒவ்வொரு மனிதனும் அவன் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகின்றான். அப்படியிருக்கும்போது மது அருந்துவது தனிமனித உரிமை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தனிமனிதன், தனிமனிதனாக வாழ்ந்து மரணிப்பதில்லை. அவன் சமூகத்தின் ஒரு அங்கம். தினமும் குடித்து வரும் கணவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும் ஒரு பெண்ணால்? அவளின் நிலை என்னவாகும்? தினமும் வாந்தியோடும், சிறுநீரோடும் உறங்கும் தன் தந்தையின் நிலையைப் பார்த்து எப்படி ஒரு மகனால், மகளால் நிம்மதியாய் வாழ முடியும்? பிள்ளைகளால் எப்படி சரியாக வளர முடியும்? குடித்துவிட்டு தனது மகளின் கற்பை சூறையாடிய தந்தையைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தோம் அல்லவா…! ஒரு தனி “குடி”மகனால் அவனுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் எவ்வளவு பெரிய பாதிப்பு…! பிறகு எப்படி குடிப்பதை தனிமனித சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்…! அதுமட்டுமல்ல, மது சமூகத்தில் கற்பழிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை, விபத்து போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகக் காரணமாகவும் அமைகின்றது.

அவற்றுள் ஊடகங்களில் வெளிவராத நிகழ்வுகள் எண்பது சதவீதமாகும். இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஊடகங்களில் வெளியான மதுபோதை நிகழ்வுகள்:

•    போதையில் ஆட்டோ டிரைவரைக் குத்திக் கொன்ற போலீஸ்காரர்! (விகடன்.காம் 1.8.2015).

•    தஞ்சை அருகே இளம் பட்டதாரிப் பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளை!  (தட்ஸ் தமிழ் 2.8.2015).

•    மது போதையில் தகராறு: தந்தையைக் கொன்ற மகன்!  (தினமணி 5.8.2015).

•    மது போதையில் மனைவியைக் கொலை செய்து, இரு குழந்தைகளைத் தவிக்க விட்டுத் தப்பிச் சென்ற கட்டடத் தொழிலாளி!  (விகடன் 6.8.2015).

•    சேலம், அரிசிபாளையம், சத்திரம் தெப்பக்குளத்தில் குடிபோதையில் குளிக்கச் சென்ற பெயின்டர், மகனுடன் நீரில் மூழ்கினார்!  (தினமலர் 7.8.2015).

•    போதையில், ஆடைகள் கலை(ளை)ந்து, சாலையில் துவண்டு விழுந்த ஆசிரியை!  (தட்ஸ் தமிழ் 7.8.2015).

•    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் பள்ளி மாணவர்கள் 3 பேர், மது போதையில் தள்ளாடியபடி சண்டை!  (மாலை மலர் 8.8.2015).

•    மது குடித்துச் சொத்தை அழித்த மகன் ; தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய்! (தட்ஸ் தமிழ் 28.8.2015).

•    கோவையில் பரிதாபம்: குடிப்பழக்கத்தால் மகனுக்குத் திருமணம் ஆகாததால் வேதனை! தாய் தற்கொலை!  (தினத் தந்தி 29.8.2015).

இவை தவிர எண்ணற்ற சமூக விரோதச் செயல்களுக்குக் காரணமான மதுவை, தனிமனித உரிமை எனக் கூறுவதே பெருங் குற்றமாகும்.

அடுத்து, மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற கூற்றை முன்வைக்கின்றார்கள். விட்டால் இவர்களே கள்ளச்சாராயம் காய்ச்சவும் செய்வார்கள். இப்போது மட்டுமென்ன காய்ச்சாமலா இருக்கின்றார்கள்? கடந்த 2005-2014 வரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1509. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பலியான 843ஐவிட 666 பேர் தமிழகத்தில் அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர். மதுக்கடைகள் மானாவாரியாகத் திறந்து கிடக்கும்போதும் கள்ளச் சாராயச் சாவுகள் தமிழகத்தில் அதிகமாகத்தான் நடைபெறுகின்றன. ஆகவே, இத்தகைய காரணங்கள் நம்மிடையே வலுவான கொள்கைகளும் சட்டமும் வலுவான காவல்துறை கட்டமைப்பும் இல்லாததையே காட்டுகின்றது. இத்தகைய சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமான மதுவை நாம் ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா…?

(2)    மதுவும் பொருளாதாரப் பிரச்சினையும்

“மது விற்பனையின் முலம் கிடைக்கும் வருவாய்தான் தமிழக அரசை நடத்திச் செல்வதற்கான மிகப்பெரும் வருவாய்” என்று தமிழகத்தின் பல்வேறு அமைச்சர்கள் – குறிப்பாக திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூவி, கூவி  சட்டசபையில் பேசியது இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால், இந்தக் கூற்று அப்பட்டமான பொய். இது பொய்தான் என்று கூவியவருக்கும் தெரியும்…! மது விற்பனையினால் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி. ஆனால், மது குடிப்பதால், போதைப் பழக்கத்தால் வேலை – வருமான இழப்பு மற்றும் மருத்துவ செலவுக்காக மக்கள் செலவழிக்கும் தொகை ரூ.67,443 கோடி. அரசுக்குக் கிடைக்கும் வருமானத்திற்காக மக்கள் இழக்கும் தொகை அரசின் வருமானத்தைவிட 3 மடங்கு அதிகம். அதுமட்டுமல்ல மதுவினால் மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக அரசு செலவிடும் தொகை பல கோடிகள். உண்மை இவ்வாறிருக்க, மது விற்பனைதான் அரசுக்கு  முக்கியமான வருவாய் என எப்படி கூசாமல் பொய் பேசுகின்றனர் – அதுவும் மக்கள் மன்றத்தில்?

வருவாய்க்கான மாற்று வழிகள் உண்டா ?

ஏன் இல்லை…? தமிழகம் வளம் கொழிக்கும் பூமி. விவசாயமே தொன்று தொட்டு நமது தொழில்; விவசாயிகளே நமது நண்பர்கள் எண்ணுமளவுக்கு விவசாய பூமி நாம் வாழும் தமிழகம். இன்றைக்குத் தொழில்துறையை பெருக்க வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தாய்மண்ணை அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அரசாள்வோர். அந்நிய நிறுவனங்களோ நமது வளங்களை உறிஞ்சிக் கொண்டு, பல கோடிகளை சம்பாதித்துவிட்டு நம் இளைஞர்களுக்கு டாட்டா காண்பித்துச் சென்று விடுகின்றன. இதனால் நமது விவசாயிகள் மட்டுமல்ல, நமது மண் வளமும் பாதிக்கப்படுகின்றது. விவசாயத்தையும் உற்பத்தியையும் பெருக்கி நம்மால் பணம் ஈட்ட முடியாதா..?

விவசாயம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு வளங்களும் சூறையாடப்பட்டுதானே வருகின்றன. திரு. சகாயம் IAS அவர்கள் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுக் காட்டினார். அதாவது, தாதுமணல் மற்றும் கிரானைட் போன்ற கனிம வளங்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதியினை அரசு தனியாரிடம் ஒப்படைத்து விட்டது. அதனை அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மிகப்பெரும் வருமானம் கிடைக்கும். இன்றைக்கு திரு. சகாயம் அவர்கள் கணிமவளக் கொள்ளையினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்.!

அதுமட்டுமல்ல, எங்கும் ஊழல், எதிலும் ஊழல்…! அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தினை தனிநபர்(அதிகாரி)கள் இலஞ்சமாகப் பெற்று அரசை ஏமாற்றுவதற்கு உடந்தையாக உள்ளார்கள். இப்படிப் பல வழிகளில் பொதுமக்களும் அதிகாரிகளும் அரசை ஏமாற்றி வருகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை இடைமறித்து வழிப்பறி கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களையும் அவற்றுக்குத் துணை நிற்கும் அதிகாரிகளையும் இனங்கண்டு, அவர்களைக் களை எடுத்தாலே போதும். அரசுக்குத் தேவையான வருமானத்தை சரியான வழியில் ஈட்டிவிட முடியும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும் மதுவிற்பனையினை அரசு ஏன் கையிலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

(3)    மதுவும், அரசியல் பிரச்சனையும்

லாட்டரியை ஒழிக்கத் தெரிந்த தமிழக முதல்வருக்கு மதுவை ஒழிக்கத் தெரியாதா? அதுவும் இப்போது தமிழகத்தை ஆள்பவர் ஒரு பெண் முதல்வர். மதுவினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தாமே! அவர்களின் வலியை முதல்வர் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

மதுவிற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைப்பதைவிட, அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இயங்கும் மது ஆலைகளின் அதிபர்கள் பல இலட்சம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டி வருகின்றனர். சில குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் “மதுவை ஒழிக்க வேண்டும்” என்று சொல்வதெல்லாம் ஓட்டு வங்கிக்காகத்தானே தவிர மக்களின் மீதான உண்மையான அக்கறையினால் இல்லை.

பூரண மதுவிலக்கை அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது தமிழகத்திலே அமல்படுத்தினார்கள். அவர்களின் வழிவந்த இரு திராவிடக் கட்சிகளும் மதுவைப் போட்டிப்போட்டு வளர்த்துவிட்டனர். இவர்களுக்கு எங்கே இருக்கின்றது மக்களின் மீது அக்கறை? பாஜகவோ சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டப்பார்க்கின்றது..! பாஜக ஆட்சியில் இருக்கும் மற்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வக்கில்லை. ஆனால், இங்கே கூவுகின்றார்கள்.

தந்தை பெரியார் அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் மக்களின் வளர்ச்சிக்காகப் பங்காற்றினர். மக்களுக்குத் தீங்குவிளைவிக்கும் மதுவுக்கெதிராகத் தங்களின் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இன்று தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கின்றார்கள். அரசு பெறுகின்ற வருமானத்தைவிட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அடையும் வருமானத்தை முன்னிறுத்தியே இவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார பலம் இருந்தும் சமூகத்தைப் பாதிக்கும் மதுவை அரசு தடுக்காமல் இருப்பதற்கான காரணம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்ற மாயை அல்ல; தனிநபர்களுக்குக் கிடைக்கும் வருமானமே..! மக்கள் எழுச்சி ஏற்படாமல் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. தமிழகத்திலிருந்து மதுவை முற்றாக ஒழிக்க அனைவரும் சேர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட வேண்டும். மக்கள் போராட்டங்களை சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சரியான வழியில் ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும். தீர்வை எட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக மக்கள் போராட்டங்களை வழிநடத்த வேண்டும். தமிழகத்தில் மதுவை இல்லாது ஒழிப்பதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். அதற்கான நம்பிக்கை ஒளிக் கீற்றுகள் தென்படுகின்றன.

கடந்த 11.8.2015 அன்று கோவையில் நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,

•    அரசின் பணி கல்விச் சாலைகள் நடத்துவதே; சாராயம் விற்பதல்ல!

•    அரசின் பணி மக்களை வாழவைப்பதுதான்; மக்களைக் கொல்வது அல்ல!

•    ஒரு நாட்டின் முக்கிய வளம், அந்நாட்டின் மக்களே!

•    அவர்களின் உயிர்களைப் பறிக்கும் மது எனும் அரக்கனை அரசு உடனே இல்லாதொழிக்க வேண்டும்!

•    மக்களை சிந்திக்க விடாமல் கெடுப்பதற்காக அரசு பயன்படுத்தும் இராஜதந்திரம்தான் மது.

•    அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் பெரும் மாணவ சமூகத்தைக் கொண்டு தொடர் போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!

என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவை இல்லாதொழிக்க முடியுமா?

மாற்றுப் பெருளாதார வழிமுறைகளைக் கையாண்டு பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்தினாலும் தனிமனித வாழ்விலிருந்து மதுவை முற்றாக ஒழிக்க முடியுமா?

ஏன் ஒழிக்க முடியாது? இறைவழிபாடு மட்டும் அல்லாமல் மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் இஸ்லாம் அதற்கான மிகச் சிறந்த வழிமுறையை முன்வைக்கின்றது. இஸ்லாமிய மீளெழுச்சியின் காலகட்டத்தில் – அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் –  அரபு சமூகத்தினர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பாக மதுவில் மூழ்கியிருந்தனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்கள் மதுவைப் பயன்படுத்தினார்கள். இன்னும் அவர்களின் இல்லங்களில் மதுவினைப் பெரிய, பெரிய பீப்பாய்களில்  சேகரித்து வைத்திருந்தார்கள். அரபியர் ஒருவரின் அந்தஸ்து, அவருடைய இல்லத்தில் இருப்பில் இருந்த மதுப் பீப்பாய்களின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் இஸ்லாம் அவர்களின் மதுப் பழக்கத்தினை அடியோடு மாற்றியது. “இறைவன் மதுவினை முற்றாகத் தடைசெய்துவிட்டான்” என்று நபியவர்கள் பிரகடனம் செய்ததுதான் தாமதம்; தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த மதுவினை அனைவரும் வீதிகளிலே ஊற்றினர். அப்போது குடித்திருந்தவர்கள் வாயில் விரலைவிட்டு வாந்தி எடுத்தனர். எந்தளவுக்கெனில், அன்றைய தினம் மதினா நகரில் மது ஆறு ஓடியது என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ ஓரிரவில் நடத்தப்பட்ட அற்புதம் அல்ல. மாறாக மனித வாழ்வின் எதார்த்தத்தின் அடிப்படையினை நன்கு உணர்ந்த இறைவன், ஒரு தீமையைச் சமூகத்திலிருந்து களைவதற்கு முன்பாக அந்தச் சமூகத்தைத் தூதரின் வாயிலாக மிகச் சிறந்த முறையில் கட்டமைத்தான். குறிப்பாக ஒரே இறைவன் மீதான நம்பிக்கை, நாம் செய்யும் நன்மை, தீமையின் அடிப்படையில் இறுதித்தீர்ப்பு நாளன்று சொர்க்கம், நரகம் வழங்கப்படும் என்பதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டது. பிறகு ஒரே கட்டளையின் வழியாக அல்லாமல் சீரிய இடைவெளியில் மெல்ல மெல்ல மது தடைசெய்யப்பட்டது. ஆம், இஸ்லாம் மதுவுக்கெதிரான சீரிய புரட்சியை செய்து காட்டியது. அதனைக் கீழே உள்ள இறைக்கட்டளைகள் மிக அழகாக விவரிக்கின்றன.

3 கட்டளைகள்

1.    நபியே! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு(ச் சொற்ப)ப் பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகம் (2:219).

2.    இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள், (தொழுகையில்) நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும் … (4:43).

3.    இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், சிலை வழிபாடு, குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க சைத்தானிய செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (5:90).

நபியவர்கள் இறந்து பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் முஸ்லிம் சமூகத்தில் கனிசமான மக்கள் மதுவிலிருந்து விலகி வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான காரணம் இறைவன் நமது செயல்களைக் கண்காணிக்கின்றான்; நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் நமக்கான சன்மானமும் தண்டனையும் கிடைக்கும் என்ற சிந்தனை இருப்பதுதான். தேர்வு அறையிலிருக்கும் மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், கண்காணிப்பாளர் இருந்தால்தானே மாணவர்கள் எந்தத் தவறுகளிலும் ஈடுபடாமல் தேர்வு எழுதுவார்கள். அது போலத்தான் நம்மைக் கண்காணிக்கும் இறைவன் மீதான அச்சம் ஏற்படும்போதுதான்  நாம் தவறுகளிலிருந்து விலகி வாழ முடியும்.

தனிமனின் மட்டுமல்ல, அரசும் அதனை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளும் இறைவனுக்கு அஞ்சி வாழ்வார்களேயானால் மதுவை மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் அனைத்துத் தீமைகளையும் நம்மால் முழுமையாக அல்லது முடிந்தளவு விரட்டியடித்துவிட முடியும்.

இறைவனை அஞ்சாதவர்களை என்ன செய்வது?

அதற்கும் வழி இருக்கிறது.

சட்டக் கல்லூரி மாணவியும் மது எதிர்ப்புப் போராளியுமான நந்தினி கூறுகின்றார்:

மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். ஐபிசி பிரிவு 328 இன்படி அரசு மது விற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா…? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47இன்படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்.

பிரச்சினைகளை முடிந்தளவு அலசி, அவற்றுக்கான தீர்வுகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.

மதுவில்லாத தமிழகம் மலரட்டும்!

– மு.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,(Ph.D)
ஆராய்ச்சி மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
99656 31860 biothakir@gmail.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.