அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்கள். வேலைக்காகச் சென்றிருந்தேன் என்றாலும் என்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்த என் தாயின் மனநிலையை என்னால் உணர முடிந்தது.
இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் என் தாயின் வயதை ஒத்த ஒரு தாய் தன்னந்தனியாக அலைந்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாய்க்கும் ‘நஜீப் அஹமது’ என்ற பெயரில் என்னைப் போன்ற ஒரு மகன் இருந்திருக்கின்றார். அவருடைய அந்தத் தாயை விட்டு அவர் பிரிந்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்தத் தாய்க்குத் தன் மகன் எங்குச் சென்றார் என்பது தெரியாது. உயிரோடு இருக்கின்றாரா, மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டாரா? தெரியாது. பத்து மாதங்கள் சுமந்து வலி தாங்கிப் பெற்றெடுத்து, இரத்தத்தைப் பாலாக்கி, தான் உண்ணாமல் அவனுக்கு ஊட்டி, தான் உறங்காமல் அவனை உறங்கச்செய்து மகிழ்ந்த ஓர் உயிர், இன்று தன் மகனைக் காணாமல் பல்கலைக்கழகத்திற்கும், காவல்நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் ஓடி, மகனைத் தேடி அலையும் ஓர் அவலநிலையினை ஒவ்வொருவரும் தங்கள் கண்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்திக் கொள்ள வேண்டுகின்றேன். அந்தத் தாயின் இடத்தில் நம் தாயை வைத்து சிந்தித்துப் பார்க்க கோருகின்றேன்.
ஊடகங்கள் தங்களுக்கு எந்த செய்தியை வெளியிட்டால் வியாபாரம் அதிகரிக்குமோ அந்தச் செய்தியைத்தான் முக்கியத்துவம் வழங்கி வெளியிடுகின்றன. அதிலும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களாகவோ தலித்களாகவோ இருந்தால் அந்நிகழ்வு குறித்து எழுத எவருடைய பேனாவிலும் மை இருக்காது. எந்தச் செய்தித் தொலைக்காட்சியிலும் ப்ரைம் டைம் விவாதங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் செய்தித் தொலைக்காட்சிகளின் வாகனங்களால் நிரம்பியிருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கையில் மைக்குடன் பரபரப்பாக நிருபர்கள் எதை எதையோ உளறிக்கொண்டிருந்தனர். மாணவ தலைவர் கன்ஹையா குமார் கைது செய்யப்பட்டதும், விடுதலை செய்யப்பட்டதும் ஆகப்பெரிய வியாபாரத்தையும் டிஆர்பியையும் வடநாட்டு ஊடகங்களுக்கு அளித்தது. ஆனால் அதே ஊ(நா)டகங்கள் இன்று இந்தத் தாயின் முகத்தைக்கூட பதிவு செய்யத் தாயாராக இல்லை.
விடை தெரியா கேள்வி – எங்கே நஜீப்..?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பப்பிரிவில் ஆராய்ச்சி மாணவரான நஜீப் அஹமத் 2016, அக்டோபர் 14ம் தேதி பல்கலைக்கழகத்தின் மஹி-மந்தவி விடுதியின் 106ம் எண் அறையில் வைத்து ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) குண்டர்களால் கடுமையாக தாக்கப்படுகின்றார். அதற்கு அடுத்த நாளில் இருந்து நஜீப் அஹமதைக் காணவில்லை.
நஜீபின் தாய் ஃபாத்திமா நஃபீஸ் அஹமத், புதுடில்லி காவல்துறையில் தன் மகனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். ஆனால் காவல்துறை அந்தப் புகார் மீது மெத்தனமாக நடந்து கொண்ட நிலையில் புதுடில்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. அந்த மனுவின் மீது நீதிபதி, எந்த பாகுபாடும் இன்றி தீவிர விசாரணை நடத்தி விரைவில் நஜீபைக் கண்டுபிடிக்குமாறு புதுடில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதற்குப் பிறகு ஏபிவிபியைச் சார்ந்த நான்கு பேரைக் கைது செய்த காவல்துறை, விசாரணை என்ற பெயரில் நஜீபின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டியுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகமும் நஜீப் காணாமல் போன சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தின் பல்வேறு மாணவ அமைப்புகள் நடத்திய போராட்டங்களை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
புறக்கணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் நடுவில் சிறுபான்மை மக்கள் :
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த, கடந்த நான்கரை வருட காலமாக நமது நாட்டில் வாழக்கூடிய பலருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகின்றது. மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து திரைமறைவில் வேலை செய்து வந்த நாசகார பாசிச சக்திகள் வெளிப்படையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. முற்போக்குச் சிந்தனையாளர்களான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் பொது இடங்களில் வைத்து காவி பயங்ரவாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றனர். புதுடில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் செயலிழக்கச் செய்யப்படுகின்றது. முக்கியமான துறைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உயர்பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். மாட்டரசியல் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டுக்கறி வைத்திருந்த காரணத்திற்காக உயிர்ப்பலிகள் நிகழ்த்தப்படுகின்றன. சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்கள் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்றத் தன்மையை உணர்கின்றனர்.
பல்வேறு துறைகளிலும் காவிமயமாக்கப்படுதல் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கல்வித்துறை அதில் முக்கியமானது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் பாசிச சிந்தனை உடையவர்கள் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டு, அங்கே பயிலும் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபியால் அச்சுறுத்தப்பட்டு உயிர்ப்பயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை எல்லா இடங்களிலும் பரப்புவதில் ஆளும் அரசும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் விஷமாகக் கக்கி வருகின்றனர். தேசத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களை தேச துரோகிகள் என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி மனத்தளவிலும், எதிர்த்துப் பேசுபவர்களை உடலளவிலும் தாக்குவதற்குக் குண்டர் படையினைக் கல்வி வளாகங்களுக்குள் ஊடுருவச் செய்துள்ளனர். கன்ஹையா குமார் மீதான வழக்குகள், உமர் காலித் மீதான வழக்கு, கொலை முயற்சி போன்றவை இதற்கான உதாரணங்கள்.
தங்களது பணிகளுக்குத் தடையாக இருப்பவர்களை அழிப்பதற்கான வேலைகளிலும் பாசிச சக்திகள் ஈடுபட்டுவருகின்றன. சில உதாரணங்கள் ;
1. நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவிகள் தங்கள் தலைகளை மறைக்கக்கூடாது என்ற உத்தரவு மூலம் முஸ்லிம், கிறிஸ்தவ மாணவிகளின் அடிப்படை உரிமைகளில் தலையிட முயற்சி
2. சென்னை IITல் செயல்பட்டு வந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ய முயற்சி
3. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஒருசார்பாக நடந்து கொண்டு சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மாணவர்களைச் செயல்பட விடாமல் தடுக்க முயற்சி
4. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டி நிறுவனப்படுகொலை.
5. துடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களான கன்ஹையா குமார், காலித், உமர் ஃபாருக் ஆகியோர் மீது தேசதுரோக வழக்குப் பதிந்து அவர்களை முடக்க சதி
இந்தச் செயல்பாடுகளின் உச்சகட்டமாகதான் நஜீப் காணாமல் போன சம்பவத்தினை நாம் பார்க்க வேண்டும். இப்படி எல்லா வழிகளிலும் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கும் வாழ்வுரிமைக்கும் ஊறு விளைவிக்கும் ஆதிக்க சக்திகள் மீது எவ்வித நடவடிக்கையும் இங்கு எடுக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, சட்டத்தினால்கூட நியாயமும் கிடைக்கப்பெறுவதில்லை.
ஒரு மாணவன் புகழ்பெற்ற ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போயிருக்கிறார்; இரண்டு வருடங்கள் கழிந்தும் அவரைக் கண்டுபிடிக்க சிறு துரும்பைக் கூட காவல்துறை அசைக்கவில்லை.
நாட்டின் உயரிய புலனாய்வு அமைப்பு என்று மார்தட்டிக் கொள்ளும் சிபிஐ சில நாள்கள் அரசுப் பணத்தில் தின்றும், கழிந்தும் கழித்து பிறகு “கண்டுபிடிக்க முடியவில்லை, வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள். நீதிமன்றமும் கொஞ்சமும் வெட்க உணர்ச்சியின்றி முடித்து வைக்க முன் வருகிறது.
சட்டத்தின் ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் நாட்டில் நீதித்துறையோ அந்த மாணவனின் தாய்க்கு அநீதி இழைக்க மும்முரமாகச் செயல்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை.
இப்போது பதியப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுவையும்கூட தள்ளுபடி செய்துள்ளது.
இன்னொரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆவணங்கள் காணாமல் (!) போய்விட்டன.
உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கிறது.
தேசத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையினர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அறியாதது போல கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் ஓர் ஊடகம், “அந்த மாணவன் இந்தியாவிலிருந்து வெளியேறி ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக” எந்தவித ஆதாரமும் இன்றிச் செய்தி பரப்புகிறது. (பிறகு காவல்துறையே இதனை மறுத்துவிட்டது).
இப்படி காவல்துறை, சிபிஐ,நீதித்துறை, ஊடகங்கள் என்று மக்களுக்கான எல்லா நம்பிக்கைகளும் மாணவன் நஜீப் அஹமதின் தாய்க்குப் போட்டி போட்டுக் கொண்டு துரோகம் இழைத்திருக்கின்றன.
இத்தனைக்கும் அந்த மாணவன் காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் ஆளும் பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபியின் குண்டர்கள் என்பதால். அவர்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் பகீரத முயற்சிகளைச் செய்கின்றார்கள்.
{youtube}UAsZOA8CCK0{/youtube}
அந்த மாணவனின் தாய், தன் மகனைக் கண்டுபிடிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கோள்கிறார், ஆனால் காவல்துறையால் தொல்லைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிறார். வழக்கை நடத்தவிடாமல் மிரட்டப்படுகிறார். நடுரோட்டில் தரதரவென்று இழுத்துச் செல்லப்படுகிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் மனம் தளராமல் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.
நாமும் அன்னை பாத்திமா நஃபீஸ் அவர்களுடன் அவரது போராட்டத்தில் அவருடன் இணைவோம். நஜீப் பற்றிய செய்தியைப் பரப்புவோம். அவரை மீட்டெடுக்க அரசுக்கு அழுத்தம் தரும் செயல்களில் இறங்குவோம். நமது பிரார்த்தனைகளில் மகனை இழந்து தவிக்கும் அந்த அன்னையையும் சேர்த்துக் கொள்வோம்..
நமக்கு நடைபெறும்வரை வெறும் செய்தி என்று கடந்து போகாமல் இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் சமமான நீதியும், வாழ்வுரிமையும் கிடைக்கப்பெற நாம் இணைந்து போராடுவோம்.
சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம்..!
– ஆர். அபுல் ஹசன்
9597739200