கூகிலில் கிடைக்கும் ராணுவ ரகசியங்களை வைத்திருந்த தீவிர(!)வாதி கைது!!

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், நம்நாட்டு சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரிலும், நிரூபணமில்லாத குற்றவாளிகளாகவும், நீதி மன்ற விசாரணைக் கைதிகளாகவும் அதிகமான சதவீதம் பேர் இருந்து வருகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களின் அவலக் காட்சிகள் மாறுவதாக இல்லை.

கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புறந்தள்ளப்பட்டுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரப் போக்கிடமாக வளைகுடா மற்றும் கீழைத்தேய நாடுகளுமே இருந்து வருகின்றன. செலவு குறைந்த வணிகம் செய்யும் நாடுகளாக இலங்கையும் பர்மாவும் உள்ளன. பல்லாண்டுகளாகத் தமிழகத்துடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதால் இவ்விரண்டு நாடுகளில் தமிழக முஸ்லிம் வணிகர்களுக்கு ஆர்வமுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான கொலைவெறியில் குஜராத்தையும் விஞ்சிய கொலைவெறி தேசமாக பர்மா மாறியபிறகு, இந்திய வணிகர்களின் ஒரே அண்மைய வர்த்தக தளமாக இலங்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கை வழியாகப் பாகிஸ்தானுக்குக் கடத்த முயன்றதாக நாட்டின் அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியொன்றைப் பரபரப்பாக வெளியிட்டிருந்தன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. வழக்கமாக சந்தேகத்தின் பேரில் கைதாகும் முஸ்லிம்கள் வெடிகுண்டு அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பெயரில்தான் கைது செய்யப் படுவர். ஆனால் தற்போது கைதாகியுள்ள தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது பிடிபட்டதாகப் புதிய கதை வசனம் எழுதப்பட்டுள்ளது.

அப்பாவி முஸ்லிம்களை, திட்டமிட்டுத் தீவிரவாதிளாக உருவகிக்கும் உளவுத்துறையைப் பற்றி ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் விரிவாக எழுதியிருப்பதை வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்லப்படும் இந்திய ராணுவ ரகசியங்கள், கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. மேலும் குறுந்தகடுகள், பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு ஆகிய ‘பயங்கர ஆயுத’ங்களையும் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. பட்டிதொட்டியெல்லாம் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு இந்தப் பயங்கர ஆயுதங்கள் குப்பனிடமும் சுப்பனிடமும்கூட உள்ளதை அறியாத நமது உளவுப்பிரிவு போலிஸாரின் தொழில்நுட்ப அறிவு கேலிக்குரியதாகிறது.

29-09-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள செய்தியின்படி, தஞ்சாவூரில் ஏற்றுமதி வியாபாரத்திற்கான அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ள தமீம் அன்சாரியைக் கட்டிட உரிமையாளர் ஒப்பந்தக்காலத்திற்கும் முன்பே காலிசெய்யச் சொல்லியுள்ளார். வர்த்தகத்திலிருந்து வரவேண்டிய தொகைகள் வசூலாக வேண்டிய நிலையில் அந்த இடத்தைக் காலிசெய்வது மேலும் இழப்பு ஏற்படுத்தும் என்பதாலும், ஒப்பந்தக்காலம் முடிவடையாததாலும் விரைவில் காலிசெய்வதாகக் கூறியுள்ள நிலையில், ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றதாக பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதில் கட்டிட உரிமையாளரின் கைங்கர்யமும் இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமீம் அன்சாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ ரகசியங்களில் ஊட்டியிலுள்ள வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி முகாம் புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விபரமாகச் சொல்லவேண்டுமெனில், ராணுவப் பயிற்சி முகாம் நடக்கும் வெலிங்டன் கட்டடத்தைத் தம் காருக்குள் இருந்து தமீம் அன்சாரி எடுத்ததாகக் குப்பைச்சாட்டை க்யூ ப்ராஞ்ச் போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். இந்த ராணுவ முகாமில்தான் சிலமாதங்களுக்குமுன் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதும், தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் வேறுமாநிலத்திற்கு அனுப்பப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது மத்திய அரசே இலங்கை ராணுவ வீரர்களைப் பயிற்சிக்கு அழைத்தபோது எடுக்கமுடியாத ராணுவ ரகசிய புகைப்படங்களை தமீம் அன்சாரி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அமர்ந்து எடுத்திருக்கிறார் என்பதும், அதை சிடி, மெமரிகார்டில் வைத்திருந்தார் என்பதும் இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாகும். இவற்றின் அடைப்படையில்தான் திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (FIR 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). க்யூ ப்ராஞ்ச் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி தமீம் அன்சாரி மீதான குற்றங்கள்:
1. மதவிரோதம்
2. சொந்த லாபம்
3. இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சி
4. தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கம்

உலக வரைபடத்தை இணையத்தில் காணும் கூகில் எர்த் (Goolge Earth) மற்றும் கூகில் மேப் (Goolge Map) ஆகியவவை மூலம் எவரும் உலகின் எந்தப்பகுதியை வேண்டுமானாலும் துல்லியமாகக் காண்பதோடு அவைகுறித்த மேலதிக தகவல்களை கூகிலில் தேடினால் ஆயிரக்கணக்கான சுட்டிகளும் படங்களும் கிடைக்கின்றன. கூகில் எர்த் இலவச மென்பொருள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தபோது அப்போதைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி, “கூகிலின் வரைபடங்கள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்றார். ஆக, கூகில் வெளியிட்ட ராணுவ ரகசியங்களை ஒருவர் குறுந்தகடுகளில் பதிவு செய்து கடத்த முயன்றார் என்பது கேலிக்குரியதும், கணினி மற்றும் இணைய நுட்ப அறிவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இந்தியர்களை அவமதிக்கும் செயலுமாகும்.

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வருவதற்கும், அவ்வாறே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் திருச்சி-இலங்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர்.அவர்களால் கொண்டுசெல்ல முடியாதவற்றைப் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு உள்நாட்டில் விவசாய உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் ஒருவரை ராணுவ ரகசியங்களைக் கடத்தியதாக கைது செய்திருப்பது ‘நிலக்கரி ஊழல், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு மற்றும் கூடங்குளம் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் யுக்தியே’ என்று நாம் சொல்வோமெனில் அதற்கான அடிப்படை உள்ளது. ஏனெனில், இலங்கை வியாபாரியிடமிருந்து தமக்கு வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்ற தமீம் அன்சாரியைக் கைது செய்தபோது க்யூ ப்ராஞ்ச் கதைவிட்ட ‘பயங்கர ஆதாரங்கள்’ அவரிடமிருந்து கைப்பற்றப்படவில்லை. மாறாக, அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்ட ரவி எனும் அதிகாரி பறிமுதல் செய்த தமீம் அன்சாரியின் லேப் ட்டாப்பில்தான் கூகுள் மேப்புகள் இருந்தன. இதை, பேரா. அ. மார்க்ஸின் தலைமையில் விசாரித்த உண்மை அறியும் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதோடு, க்யூ ப்ராஞ்ச் ஜோடித்த வழக்கைக் கேலி செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி, தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்பிலும் எக்காலத்திலும் பங்கு வகிக்காதவர். அவரது பங்களிப்பெல்லாம் இந்திய மாணவர்கள் அமைப்பு, இலக்கிய மன்றங்கள், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியவற்றில் மட்டுமே அடக்கம். இவ்வாறு பொதுவிசயங்களிலும், உள்நாட்டு வணிகத்திலும் ஈடுபட்டுள்ள ஒருவர் கூகிலில் கொட்டிக் கிடக்கும் புகைப்படங்களை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தி, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றப் போகிறாராம் தமீம் அன்சாரி. இதுவே ஒரு கேவலமென்றால், இந்தக் கதையை நாள்தோறும் பல்வேறு வசனங்களோடு வெளியிடும் ஒளி மற்றும் அச்சு ஊடகங்களின் போக்கு, படு கேவலம்.

தமீம் அன்சாரி மீது புனையப்பட்டிருக்கும் வழக்கு, சிபிசிஐடி மூலம் முறையான விசாரணை நடத்தப்பட்டு அநியாய வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளவருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதோடு, பொய்வழக்குப் புனைந்தவர்களுக்கு எதிராகக் கடும் சட்டநடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்திய சட்டத்தை நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– அதிரையிலிருந்து தோழர் எழில்

தோழர் வினவின் பதிவு : http://www.vinavu.com/2012/09/25/tamim-ansari/