“… என்ன குடுப்பியோ?”

Share this:

ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில் யாரையாவது ஜோடியாக வெளியே காண நேரும்போது, அசடு வழிய வேண்டி வரும்.

ஒரு கத்தை திருமண அழைப்பு அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அறியமுடிந்த இன்னொரு விஷயம் திருமணம் ஆன கையோடு அதில் இரண்டு ஜோடிகளுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது என்பது. அதுவும் திருமணம் முடிந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குள்.


‘விவாகரத்து’ என்ற சொல்லை, சிறு வயதில் கேள்விப் பட்டிருப்பதே நம்மில் பலருக்கு அபூர்வம். எங்கோ யாருக்கோ எப்போதோ நிகழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் மேற்படி சமாச்சாரம் என்பதுதான் மீதியுள்ள சிலரும் கேட்டு வளர்ந்தது. நமக்கும் அதற்கும் ஞானப்ராப்திகூட இருக்காது. அனால், இன்று சர்வ சாதாரணம். ‘இம்’ என்றால் டிவோர்ஸ். ‘ஏன்’ என்றால் கோர்ட்கேஸ். முடிந்தது கதை. அப்புறம்? தந்தை அல்லது சகோதரனிடம் பணம் இருந்தால் – அல்லது மீண்டும் இரக்கத் துணிவிருந்தால் – சிலருக்கு இரண்டாம் திருமணம். பலருக்கு இல்லை. வாழாவெட்டி என்று கடைசிவரைக்கும் பெயெர். ஒன்று இரண்டல்ல, நமது சமூகத்தில் அண்மைக் காலமாக நிறைய நடக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த பகிரங்க ரகசியம்.

புனிதமானது என்று சமீகாலம் வரை கருதப்பட்டத் திருமண உறவுகள் தந்திரமான வியாபரமாகவும், சுற்றத்தார்களுக்குப் பொழுது போக்கிற்காக விளையாடும் பகடையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. காரணம் கேட்டால் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். (The Other party is always at fault) என்ன காரணம்?

வரதட்சணை:
வேறு பல சிறிய காரணங்கள் இருந்தாலும், முதலும் முடிவுமான பெரிய காரணம் வரதட்சணையும் அது சார்ந்த கொடுமைகளும் மட்டும்தான். பெண்ணிற்குப் புகுந்த வீட்டில் கொடுமை என்பது வாழையடி வாழை. கொடுமையின் அளவு அந்த வீட்டில் இருக்கும் மாமியாரின் மாறிக்கொண்டிருக்கும் மனநிலை, நாத்தனார்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளால் வேறுபடலாமேயொழிய, இல்லை என்பதரிது. வரதட்சணையைப் பற்றி பேசுபவர்கள் மார்க்க அறிவில்லாதவர்களாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் பப்பி ஷேம்!! பப்பி ஷேம்!! இந்த நிகழ்வைக் கேளுங்கள்.

லீவில் ஊருக்குச் சென்றிருந்த நேரம். எனது ஒரு மருமகளுக்காக மாப்பிள்ளைத்தரம் பற்றிப் பேசவேண்டும் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு மூன்று பேர் வந்தார்கள். அரேபியாவின் காலநிலை, வேலை வாய்ப்பு, கம்பியூட்டர் படித்து முடித்த மச்சினனுக்கு விசா வாய்ப்புகள் போன்ற பௌதீக நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் பேச்சு கல்யாண விஷயம் பற்றித் திரும்பியது. வந்தவர்களில் முதலாமவர் கேட்ட முதல் கேள்வி

“சரீ…என்ன குடுப்பியோ?”

தடாலடியாக ஒளிவு மறைவு இல்லாமல் இப்படிக் கேட்பார் என்று நினைக்கவில்லை.

காரணம் அவரது தோற்றத்தின் மேல் வைத்திருந்த மரியாதை. காட்டிக் கொள்ளாமல் அப்பாவியாக “எதுக்கு?” என்றேன்

“இல்லே உங்க ரேட் என்னாண்ணு சொன்னியன்னா அதுக்கு ஏத்தா மாரி பாக்கலாம்லா. இப்போ 50 நகை 50 ரூவா கையிலெயும்ணா பையான் கோட்டாறூ. கோழிக்கடை வெச்சிருக்கான். 75 ம் 50 ம் நா பையன் ஜவுளிக்கடைலெ நிக்காம் பார்த்துகிடுங்கோ பி.காம் படிச்சிருக்கானாம்….இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கில்லியா…என்ன நாஞ் சொல்லது…”

உடல் கூசியது. கட்டுப்படுத்திக் கொண்டு மற்ற ரெண்டுபேரையும் பார்த்தேன். ஆமா ஆமா என்று வில்லுப் பாட்டிற்குத் தலையசைத்த பாவத்தில் பேரம் படியுமாவெனப் பார்த்துக் கொண்டிருந்ததார்கள்.

“இப்பிடி மாடு கணக்கா வெலெ பேசற மாப்பிள்ளைக்கு இங்கெ பொண்ணு இல்லை பார்த்துகிடுங்கோ..”. என்று அவருடைய பாணியில் சிரித்துக்கொண்டே சொன்னேன்.

மூன்று பேரும் வெலெ வெலெத்துப் போய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு மெதுவாக எழுந்து சென்றுவிட்டார்கள். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரே குற்றவாளி நான்தான் என்று பின்பு தீர்ப்பெழுதப்பட்டது. மூன்று ‘வெலெப்பெட்ட’ ஆளுகளைப் பேசி விரட்டிவிட்டேனாம்.

மேற்சொன்ன சம்பவம் பெரிய அதிசயமில்லை. எல்லாக் குடும்பத்திலும் நடப்பதுதான். அதிர்ச்சி என்னவென்றால் முதலில் வந்த தரகரின் முழுநேர ஊழியம், பக்கத்து ஊர் பள்ளியில் தொழவைப்பது. அந்த ஜமாஅத்தின் பேஷ் இமாம். (பேஷ்.. என்றால் என்ன?). பகுதி நேரத் தொழில் கல்யாணத் தரகு வேலை மற்றும் வரதட்சணைப் பேரம் பேசுதல். கூட வந்தவர் ஒரு தங்ஙள். தங்ஙளின் சித்து வேலைகளைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையிலும் எழுதித்தீர்க்க முடியாத விஷயமிருக்கிறது. இருக்கட்டும்.

மூன்றாவது நபர் தங்ஙளின் ஏஜெண்ட். தங்ஙள் மற்றும் தங்ஙளின் ஏஜெண்டுகளின் கமெண்ட் “இப்பொ இங்கெ இப்படியெல்லாம் தான் நடக்கு.”

ஆக வரதட்சணை வாங்குவது ஹராம் என்றால் இந்த ஜென்மங்களுக்குச் சிரிப்பாணி வருகிறது. ‘அட போக்கத்தப் பயலே’ என்கிற ரீதியில் பார்க்கிறார்கள். மார்க்கக் கல்வி உள்ளவர்கள்கூட வக்காலத்து வாங்கும் சங்கதியாகிவிட்டது. இதற்கு எதிராக மாநாடு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இயக்கங்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று மட்டுமல்ல பெருகிவருகிறார்கள் என்பது சமூகத்திற்கு ஆறுதல் தரும் விஷயமென்றாலும் இரண்டு மூன்று தலைமுறையாகப் புரையோடியிருக்கும் பிரம்மாண்டத்திற்கு எதிராக மிருக பலத்துடன் போராட வேண்டியிருக்கிறதென்பது தான் உண்மை.

இஸ்லாமியச் சமுதாயத்தின் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பேரழிவிற்கான முதற் காரணம் இது. வேறு எந்த சமூகத்திலாவது கணவன் உயிரோடு இருக்கும்போதே குடும்ப வாழ்க்கை வஞ்சிக்கப்பட்ட மனைவிமார்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்களா?.

பிறந்த குழந்தையைக் கிள்ளச் சொல்லி மொபைல் போனில் பதியச்செய்து கேட்டு இன்புறும் அவலம் நடக்குமா? ஐந்தாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் வளைகுடாவில் அவஸ்தைப் படும் விட்டில் பூச்சிகள் நிறைந்த ஒரு சமூகமாகத் தமிழக, கேரள முஸ்லிம் சமூகத்தை மாற்றியதில் வரதட்சணைக்கு இருக்கும் பெரிய பங்கைச் செவிட்டு ஊமைகளால்தான் மறுக்க இயலும். இரண்டோ அதற்கு மேலோ பெண் மக்கள் இருக்கும் தகப்பனின் வாழ்க்கை வரதட்சணையைச் சுற்றி சுற்றிப் பின் அஸ்தமிக்கும்.

சொத்தை விற்றோ, கடன் வாங்கியோ, கண்ணியத்திற்கு அப்பாற்பட்டு பிச்சை எடுத்தோ பெண்ணின் திருமணத்தை நடத்தி விடவேண்டும் என்பதே பல குடும்பங்களின் வாழ்க்கை இலட்சியம்.

ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் முதுகெலும்பை உடைப்பதும், இயற்கையாகக் குடும்பத்தில் இருக்க வேண்டிய பண்பாடு, மகிழ்ச்சி, அன்னியோன்னியம், உறவுகள் எல்லாம் ‘எரிமுன்னர் வைத்தூறு போல’ அழிந்துவிடுவதும் இதனால் தான். இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை ‘இறக்கிவிட்டுவிட்டால்’ பிரச்சினை நின்றுவிடுமா? இல்லை. வேறு ரூபத்தில் வன்முறைகள் ஆரம்பிக்கும்.

வரதட்சணைச் சார்ந்த வன்முறைகள்:
உலகத்தில் எந்தத் தகப்பனும் புத்தி ஸ்வாதீனம் இல்லாதவரையிலும் தனது ஆயுள் சேகரிப்பைத் தன் மகளுக்குத் தானமாகக் கொடுத்துப் புகுந்த வீட்டில் போய் கொடுமைப்பட அனுமதிக்க மாட்டான். நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்களில் பெண்களுக்கு எதிரி பெண்களே. திருமணம் முடிந்த அடுத்த நாளே பெண் கொண்டுவந்த அல்லது கொண்டுவராமல் விட்ட பொருட்களின் கணக்குகள் தயார் செய்யப்பட்டு போருக்கு ஆயத்தமாவார்கள்.

கணவனின் சகோதரிகள் எனப்படும் துர்தேவதைகள் (விதி விலக்குகள் உண்டு ஆனால் மிகச் சொற்பம்), மெத்தை கொண்டு வந்தாயா? மேல்விரிப்புத் தான் உண்டுமா? உன் தகப்பனுக்கு பிரிட்ஜ்க்குப் போக்கில்லையா? ஏன் வந்தாய்? எதற்கிங்கிருக்கிறாய்? மதினிமார்களுக்கு மரியாதைச் செய்யத் தெரியாதா? (தங்கத்தில் வளை போடவேண்டுமாம்). அந்த வீட்டில் என்னவெல்லாம் செய்கிறார்கள்? உலக நடப்புத் தெரியாதா?.

இப்படிக் கேட்டுத் துன்புறுத்தும் துர்தேவதைகளுக்கு மதினிமார்களோ மாமியாரோ இருக்கமாட்டார்கள். அல்லது ‘ஏன் இன்னொரு குடும்பத்தில் போய் பிரச்சினை செய்கிறாய் என்று கேட்கத் தெரியாத ‘பொட்டைக்’ கணவனாக வாய்த்து இருப்பான்.

தாய்க்குத் தன் மகன் அன்றிலிருந்து வேறு மனிதனாகத் தெரியத் தொடங்குவான். எது சொன்னாலும் செய்தாலும் ‘அவளின்’ தலையணை மந்திரம் ‘அவளின்’ வீட்டிலிருந்து வரும் நபர்கள் அவமானப் படுத்தப் படுவார்கள். ‘அவளின்’ பேச்சுக்களை ஒட்டுக் கேட்க பத்து வயது சிறுமியை (துர்தேவதையின் மகளாக இருக்கும்) அனுப்பி ஜூனியர் துர்தேவதையைத் தயார் செய்வார்கள்.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் இரண்டுவிதமானக் கொடுமைகள். ஒன்று சமையலறையின் மொத்த குத்தகையையும் எடுத்துக் கொண்டு விருந்தாளிகளிக்குச் சமையல் செய்யவேண்டும். துர்தேவதைகளும் விருந்தாளிகளும் சேர்ந்து மருமகளின் பிரதாபங்களை அளந்து ‘வேடிக்கையாகச் சிரிப்பதையும்’ சகித்துக் கொள்ளவேண்டும்.

கொஞ்சமேனும் நியாய உணர்வுள்ள தாயாக இருந்தால் வாய்மூடி இருப்பாள். கவனிக்க, வாய் மூடித்தான் இருப்பாள். நியாயம் சொல்ல மாட்டாள். நியாய உணர்வில்லாத தாயாக இருந்தாலோ மகளுக்கும் மருமகளுக்கும் நடக்கும் போரில் மகளின் தளபதி தாய் தான். அல்லது தாயின் தளபதி மகள். எங்கிருந்தோ மகனைக் ‘கொண்டுபோக’ வந்த மருமகளுக்கு எந்த மாமியாரால் பரிந்து பேச இயலும்? அப்படி இருமுனைத் தாக்குதல். ஒன்றுக்கு மேற்பட்ட துர்தேவதைகள் வாய்த்துவிட்டாலோ பல முனைத் தாக்குதல்கள். மாமியாரிடம் அனுமதி பெற்றுத்தான் படுக்கையறைக்குச் செல்ல வேண்டும் என்ற ‘சட்ட’மெல்லாம்கூட இருந்திருக்கிறது.

நாத்தனாருக்குக் கல்யாணமா? மருமகளின் தங்கம் மொத்தமும் கொடுத்து விடவேண்டும். ஏனென்றால் கணவனின் சகோதரிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டியது கணவனின் கடமையல்லவா?. தாய் சொல்வாள், அதற்குத் தானடா உன்னைப் பெற்றேன் என்று. கையாலாகாத கணவன் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவான்? மனைவியின் பொன் கைமாறும். பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இதே சீனரியோ மகளுக்கு வந்திருக்கிறது என்று வைத்துகொள்வோம். தாயின் நியாயம் இப்படி இருக்கும். “கொடுக்காதே! எல்லாத்தையும் வித்துத் தொலைச்சால் நீ என்ன செய்வாய்?”. மகளைத் தான் பெற்றதும் மருமகளை எவளோ பெற்றதுமல்லவா?

இத்தனை அநியாயமும் மகன் வீட்டிலிருக்கும்போது. மகன் வெளிநாட்டுக்குப் போய்விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வருடம் கழித்து அவன் லீவில் வரும்வரை அவள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பது அவள் தாய் தந்தைச் செய்த பாக்கியம். இததனைப் பண்பாட்டுச்சீரழிவுக்கும் மூல காரணம் சீதனம்.

மேற்சொன்ன காரியங்கள் எதுவும் மிகைப் படுத்தப் பட்டவையல்ல. அடக்கி வாசித்து எழுதப்பட்டதே. இன்னொரு கட்டுரை எழுதுமளவுக்கு அனாச்சாரங்கள் நடக்கின்றன.

சரி இதெல்லாம் மாமியார் நாத்தனார் கொடுமைகள். இருக்கட்டும். புகுந்த வீட்டிற்குப் போய் அட்டகாசம், அநியாயம் செய்யும் மருமகள்கள் இல்லையா? இருக்கிறார்கள். குறைவு!.

உயிரோடு எரித்து, ஸ்டவ் வெடித்து, தூக்கிலிடப்பட்டு, தூக்கிட்டு, துரத்தப்பட்டு நாள் தோறும் நடக்கும் ‘விபத்துக்கள்’ எல்லாம் மருமகள்-களாகப் பார்த்துத் தான் நடக்கின்றன. மாமியார் நாத்தனார்களுக்கு நடப்பதில்லை.

இந்த நாத்தனார்களும் இன்னொரு வீட்டின் மருமகள்களே. மாமியாரின் மகள்கள் இன்னொரு வீட்டிற்குச் செல்லும்போது ஏறக்குறைய இதே நிகழ்வுகள் அங்கும் நடக்கிறது. அந்த வீட்டின் துர்தேவதைகளின் குணநலன்களைப் பொறுத்து அளவில் மாறுபடும். அப்படி ஒரு சைக்கிள் சுற்றிக் கொண்டிருக்கிறது மொத்த சமூகத்திலும். அப்படியே மருமகள் செய்யும் அநியாயமும் சீதனத்தின் பெயரிலேயேதான் நடக்கிறது. என் தாய் தந்தையிடமிருந்து நான் கொண்டுவந்த பணத்திற்கும் பொன்னிற்கும் மீதுள்ள முழு அதிகாரமும் எனக்குத்தான் என்ற உரிமையில் வரும் அதிகாரம்.

அது சரி இதில் ஆண்களுக்குப் பங்கே இல்லையா?. இருக்கிறது மிகப் பெரிய பங்கு. என்ன?

(இன்னும், இன்ஷா அல்லாஹ்…)

– அபூ பிலால்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.