தோழர்கள் – 52 குபைப் பின் அதிய் خبيب بن عدي

Share this:

குபைப் பின் அதிய்
خبيب بن عدي

ஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள்! வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று தேடிப் பார்த்தோம் ஸுலாஃபா. சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நீ கேட்ட மண்டையோட்டைக் கொண்டுவர முடியவில்லை.”

‘அவ்வளவுதானா? எல்லாம் போச்சா? என் குடும்பம் அழிந்தது. அதற்குக் காரணமானவரைப் பழிதீர்க்கும் சபதம் தோல்வியுற்றது. எனது வாழ்க்கையில் இப்பொழுது அனைத்தும் முற்றும்.’ ஸுலாஃபா அரற்ற ஆரம்பித்தாள்.

நிறைவேறாதுபோன ஸுலாஃபாவின் சபதம் தனிப்பட்ட ஒன்று என்றாலும் அதன் ஏமாற்றம், வந்தவர்களுக்கும் இருந்தது; அது பரிசுத்தொகை கைநழுவிப்போன இழப்பு. அந்த ஏமாற்றம் குரைஷியருக்கும் இருந்தது. மக்காவில் இருந்த ஒவ்வொரு குரைஷியருக்கும் இருந்தது. ஒருவிதத்தில் குரைஷியருக்கு அது உபரிச் சோகம். ஏனெனில், அவரவருக்கும் அவரவர் குடும்பத்தின் தனிச்சோகமே பெரும் சோகம் என்று தத்தம் மண்டையில் கைவைத்து அமர்ந்திருந்த காலம் அது.

வந்தவர்கள் ‘மண்டையோடு இல்லை’ என்று சொன்னாலும் அடுத்து சொன்ன செய்தி, குரைஷியர் மத்தியில் குதூகலத் தீயைக் கொளுத்திப் போட்டது. “முஹம்மதின் தோழர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர். இழுத்து வந்துள்ளோம்.”

மத்தாப்பாய் முகம் மலர்ந்து, “ஆஹா! அப்படிப்போடு. எங்கே அவர்கள்?” என்று பலமான ஆனந்தக் கூக்குரல்கள்.

ஒருவரின் மண்டையோட்டைத் தந்துவிட்டு நூறு ஒட்டகங்களை பெரும் பரிசாகத் தட்டிச்செல்லும் வாய்ப்பு பறிபோன ஏமாற்றத்தில் இருந்த வந்தவர்கள், அந்த கூக்குரல்களைக் கேட்டு, ‘சரிதான்! முதலுக்கு முற்றும் மோசமில்லை’ என்பதை உணர்ந்தனர். தோழர்கள் இருவரையும் அடிமைகளாக குரைஷியருக்கு விற்றுவிட்டு, “நீங்களாச்சு. அவர்களாச்சு” என்று தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள் அவர்கள்.

அடிமைகளாக வாங்கப்பட்ட தோழர்கள் ஸைத் இப்னுத் தத்தின்னாஹ், குபைப் இப்னு அதீ – ரலியல்லாஹு அன்ஹுமா, இருவரையும் அவர்களின் குரைஷி எசமானர்கள் தத்தம் வீட்டிற்கு இழுத்துச் சென்று, சிறை வைக்கப்பட்டனர் தோழர்கள். அவர்களை விலைபேசி வாங்கியது காலா காலத்திற்கும் அவர்களைக் கொத்தடிமைகளாய் வைத்துச் சீரழிக்கும் எண்ணத்திலெல்லாம் இல்லை. கடுமையான சித்ரவதை செய்து ரசித்து ரசித்துக் கொல்லவேண்டும். அதைப்பார்த்து மக்காவே கைகொட்டி மகிழ வேண்டும். அவ்வளவே!

ஏன் இந்தக் கொலைவெறி?

oOo

பத்ருப் போரும் முஸ்லிம்களின் பெருவெற்றியும் குரைஷிகளின் படுதோல்வியும் தோழர்களின் முந்தைய அத்தியாயங்களில் நாம் நெடுகவே பார்த்துவிட்டதால், இங்கு யுத்தத்தைத் தவிர்த்துவிடுவோம். நமக்குத் தேவை களத்திலிருந்து சில முக்கிய தகவல்கள் மட்டுமே. எடுத்துக்கொள்வோம். நபியவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்கள் முந்நூற்றுப் பதின்மூன்று முஸ்லிம் வீரர்கள் மட்டுமே இல்லையா? அந்தப் பெரும் சிறப்புக்குரிய முக்கிய வீரர்களில் ஒருவர் குபைப் இப்னு அதீ, ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர். நபியவர்கள் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம் உறுதிமொழி அளித்து இஸ்லாத்தில் இணைந்தார். “அவர் அன்ஸார்களுள் சிறப்பிடம் பெற்ற ஒரு வல்லூறு; சகிப்புத்தன்மையுடையவர்; குறையற்ற தூய குணவான்” என்று அவரைப்பற்றி விவரித்துள்ளார் நபிக்கவி ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு.

அன்று ஆயிரத்து சொச்சம் குரைஷிகளை எதிர்த்து நிகழ்ந்த போரில், அசரவில்லை, தயங்கவில்லை. வீரத்துடன் சுழன்றிருக்கிறது அவரது வாள். அதன் சுழற்சிக்கு இரையான குரைஷி முக்கியப்புள்ளி, ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபல். குரைஷிகளுக்கு போரில் ஏற்பட்ட தோல்வி அடக்கி மாளாத அவமானமாகி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு ஆண்களின் இழப்பிற்குக் காரணம் யார் என்பதைக் கவனமாகக் குறித்துக்கொண்டனர். ஹாரித் இப்னு அம்ருவின் பிள்ளைகளின் மனத்தில் பதிந்தபெயர் குபைப் இப்னு அதீ.

மதீனத்து மக்கள் நபியவர்களின் புலப்பெயர்வுக்கு முன்னர் அகபாவிலும் புலம்பெயர்ந்ததும் மதீனாவிலும் நபியவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இஸ்லாத்தில் இணைந்தார்களே அது வெறும்  உணர்ச்சிப்பெருக்கிலோ, அவசரத்திலோ எடுக்கப்பட்ட முடிவெல்லாம் இல்லை. ஒருவேளை உலக ஆதாய நோக்கம் இருந்திருக்குமோ என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் நபியவர்கள் வாக்குறுதி என்று அவர்களுக்கு பதிலளித்ததெல்லாம், “அல்ஜன்னாஹ் – சொர்க்கம்!”

கண்ணுக்குப் புலப்படாத, யாரும் பார்த்திராத, அதுவரை அவர்கள் அறிந்திராத ஒன்றுதான், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. அதுவோ அவர்கள் மத்தியில் மாயம் புரிந்தது. சிறியவர், பெரியவர்; செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடுகள் அழிந்துபோய், வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படாதவர்கள்கூட, ஏதோ ஒரு தருணத்தில் முத்திரை பதித்தார்கள். இஸ்லாத்தை ஏற்றத் தருணத்திலிருந்து மிகச் சொற்ப காலமே வாழும் வாய்ப்பு அமைந்துபோயிருந்தாலும், அழுத்தந்திருத்தமாய் வரலாற்றில் இடம்பெற்று காலத்திற்கும் பேரோங்கினார்கள்.

தலைசிறந்த உதாரணம் குபைப் இப்னு அதீ. இவருடைய தந்தையின் பெயர் அதீ இப்னு மாலிக் இப்னு ஆமிர் என்றும் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் உள்ளனவே தவிர, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரியர் என்று அதிகப்படியான தகவல்கள் வரலாற்றுக் குறிப்புகளில் இல்லை. இஸ்லாத்தில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே முடிவுற்றுப்போனது இவருடைய வரலாறு. ஆனால், இவருக்கென அமைந்துபோன சிறப்பு, அவர் ஏற்படுத்திய தாக்கம், அதில் கருவாகி உருவான இதர தோழர்கள் என அவை பேரதிசயம்! காரணம்? அப்பட்டமான இறை அர்ப்பணிப்பு; நபி நேசம். அவ்வளவுதான்.

அப்படியென்ன தாக்கம்? பார்ப்போம். அதற்குமுன் நிகழ்வொன்றின் சுருக்கம்.

பத்ருப் போர் மட்டுமன்றி, அடுத்து நடைபெற்ற உஹதுப் போரிலும் குபைப் இப்னு அதீ கலந்துகொண்டார். அதற்குப்பின், அவருக்கு மற்றொரு பணி அளித்தார்கள் நபியவர்கள். முன்னர் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் படித்ததை நினைவில் வைத்திருப்பவர்கள் தங்களது முதுகைத் தாங்களே தட்டிக்கொள்ளலாம்.

ஹுதைல் குலத்தின் காலித் இப்னு ஸுஃப்யான் பெரிய கூட்டமொன்றைத் திரட்டி மதீனாவைத் தாக்க வருவதாக நபியவர்களுக்குத் துப்புக் கிடைத்தது. அப்துல்லாஹ் இப்னு அனீஸ் (ரலி) எனும் வீரர் ஒருவரை அழைத்து அந்தக் கூட்டத்தை எதிர்கொள்ளும் பணியை நபியவர்கள் ஒப்படைத்தார்கள். மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த படையை உரைனாஹ் எனும் இடத்தில் சென்று ஒற்றை ஆளாய் மடக்கினார் அப்துல்லாஹ். அதுவும் எப்படி? அந்தக் கூட்டத்தின் தலைவன் காலிதைச் சந்தித்து, “நானும் ஓர் அரபிதான். மதீனாவிற்கு அந்த முஹம்மதைக் கொல்லச் செல்கிறீர்கள் போலிருக்கிறதே! என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

‘எங்கிருந்தோ வந்தார்; தக்கதுணை நான் என்கிறாரே’ என்று அதைக்கேட்டு காலிதுக்கும் மகிழ்ச்சி. ‘நீர் எனக்குக் கூட்டாளி’ என்று இணைத்துக்கொண்டான். ஏதோ பேசி, காலிதைக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து, இருவரும் காலாற நடக்க ஆரம்பிக்க, தனிமையான தூரம் வந்தவுடன் காலிதைக் கொன்று விஷயத்தைக் கச்சிதமாய் முடித்து மதீனா திரும்பிவிட்டார் அனீஸ்.

ஹுதைல் கோத்திரத்திற்குப் பெரும் அதிர்ச்சி! ‘ஒருவன் வந்தான்; கொன்றான்; சென்றான். என்ன அநியாயம் இது?’ என்று கொந்தளித்த அவர்களுக்கு, தாங்கள் மதீனாவை நோக்கி படையெடுத்தது அநியாயம் ஆயிற்றே என்பது மறந்து போனது. கோபம் அதிகரித்தது. ஆத்திரத்தில் பழிவாங்கத் துடித்தனர்.

ஊர் திரும்பியவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். தங்களது நம்பிக்கைக்குரிய அதல் மற்றும் அல்-காராஹ் கோத்திரங்களிலிருந்து சிலரைப் பிரதிநிதியாக முஹம்மது நபியிடம் அனுப்பி வைத்தனர். பல பகுதிகளிலிருந்தும் குழுவினர் சிலர் அவ்வப்போது நபியவர்களை வந்து சந்திப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. இஸ்லாத்தின் செய்தியினாலும் அதன் உண்மையினாலும் கவரப்பட்டவர்கள் நபியவர்களைச் சந்தித்து, தங்கியிருந்து பேசி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்புவார்கள். அங்குள்ள மக்களுக்கு அவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அக்குலத்தினர், அப்பகுதியினர் மத்தியில் இஸ்லாம் படரும். அப்படி இஸ்லாத்தைத் தெரிந்து கொள்பவர்கள்போல் இந்த இரு குழுவினரும் மதீனா வந்து சேர்ந்தனர்.

“உங்கள் மார்க்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் ஊரில் மற்ற மக்களும் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கின்றனர். உங்கள் தோழர்கள் சிலரை எங்களுடன் அனுப்பி வையுங்களேன். அவர்கள் வந்து எங்களுக்கெல்லாம் இஸ்லாம் கற்றுத் தரட்டும். குர்ஆன் ஓதச் சொல்லித் தரட்டும்” என்று நபியவர்களிடம் நைச்சியமாகக் கோரிக்கை வைத்தனர்.

நபியவர்கள் சிறந்த ஆறு பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் மர்தத் இப்னு அபூ மர்தத், காலித் இப்னுல் புகைர், ஆஸிம் இப்னு தாபித், குபைப் இப்னு அதீ, ஸைத் இப்னுத் தத்தின்னாஹ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு தாரிக் ரலியல்லாஹு அன்ஹும். குழுவுக்குத் தலைவராக மர்தத் இப்னு அபூ மர்தத் நியமிக்கப் பெற்றார்.

அந்த இரு குழுக்களுடன் இந்த ஆறு தோழர்களின் பயணம் துவங்கியது. அஸஃபான்-மக்கா நகரங்களுக்கு இடையேயுள்ள அர்-ராஜி எனும் பகுதியில் அமைந்திருந்த சுனை நீருற்றின் அருகே வந்ததும், “நன்றாக ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு பயணத்தைத் தொடருவோமே” என்று அந்தக் குழுவினர் சொன்னதும், சதித்திட்டம் அது என்பதை அறியாத தோழர்கள் அதை ஏற்றுக்கொண்டு,  இளைப்பாறத் தங்கினர். முஸ்லிம்களை அங்கு அமர வைத்துவிட்டு, சிலரிடம் இரகசியமாக ஹுதைல் மக்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது. உற்சாகமுடன் கிளம்பி வந்தது 100 பேர் கொண்ட ஹுதைல் கோத்திரத்தின் பனூ லிஹ்யான் எனும் கிளைக் கூட்டமொன்று. அது தேர்ந்த வில் வீரர்களின் கூட்டம். தோழர்களுக்குத் திகைப்பு! அதிர்ச்சி!! சடுதியில் சுதாரித்துக்கொண்டு, அருகிலிருந்த குன்றிலேறி ஆயுதமேந்திப் போராடத் தயாராகிவிட்டார்கள். நூத்திச் சொச்சம் பேர் சூழ்ந்திருக்க, சண்டையிட்டே ஆக வேண்டும் என்ற நிலை.

அதல் மற்றும் அல்-காராஹ் மக்கள் இப்பொழுது தோழர்களிடம் நைச்சியம் பேசினார்கள். “இதோ பாருங்கள். எங்களுக்கு உங்களைக் கொல்லும் நோக்கமெல்லாம் இல்லை. உங்களைப் பிடித்து மக்காவாசிகளிடம் விற்றால் ஏதோ கொஞ்சம் பணம் பார்ப்போம். அல்லாஹ்வின் மேல் சத்தியமாகச் சொல்கிறோம். நாங்கள் உங்களைக் கொல்ல மாட்டோம்”

யோசித்தார்கள் ஆறு பேரும். இக்கட்டான சூழ்நிலை. எதிரிகளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அதை ஒப்புக்கொள்ளவில்லை. “இறைவனுக்கு இணை வைப்பவர்களின் வாக்குறுதி, சத்தியத்தையெல்லாம் நம்ப முடியாது. முடிந்தவரை சண்டையிட்டுப் பார்ப்போம்” என்று உறுதிபடக் கூறிவிட்டார்.  குழுத்தலைவர் மர்ததுக்கு ஆஸிம் கூறியது சரியென்றே பட்டது. குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவருக்கும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பிப் பார்க்கலாம் என்ற நிலைப்பாடு.

விளைவின் தாக்கம் தமக்கு ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பதை ஆஸிம் நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் அவருடைய மண்டை ஓட்டிற்காக ஸுலாஃபா சூளுரை செய்து காத்திருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அது என்ன மண்டையோடு, சூளுரை என்று ஆர்வப்படுபவர்கள் ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றை வாசித்துவிடுவது நல்லது. எதிர்த்து இடப்போகும் சண்டையில் மரணம் என்பது நிச்சயமான ஒன்று. அதன் பிறகு? இரைந்து பிரார்தித்தார் ஆஸிம். “யா அல்லாஹ்! உனது மார்க்கத்திற்காகவே நான் சண்டையிடுகிறேன். என்னுடைய எலும்போ, சதையோ எதுவுமே என் எதிரிகளின் கைகளில் சிக்கிவிடாமல் காப்பாற்று!”

தாக்கினார்கள் எதிரிகள். எதிர்த்துச் சண்டையிட்டார்கள் தோழர்கள் மூவரும். ஆள் பலத்தில் மிகுந்திருந்த எதிரிகள் வெல்ல, மர்தத் இப்னு அபூ மர்தத், காலித் இப்னுல் புகைர், ஆஸிம் இப்னு தாபித் ஆகிய மூவரும் உயிர் தியாகிகள் ஆயினர். குபைப், ஸைத், அப்துல்லாஹ் ஆகிய மூவரும் எதிரிகளின் வாக்குறுதியை நம்பலாம் என்று முடிவெடுத்தவர்கள் சரணடைந்தனர். ஆனால் குன்றிலிருந்து இறங்கி வந்து கைதிகளாக ஆனதுமே, எதிரிகள் தங்களது வில்லில் இருக்கும் நாணைக் கழற்றி அவர்கள் மூவரையும் கட்டினர். அப்துல்லாஹ் இப்னு தாரிக் மட்டும் கட்டப்பட்டிருந்த தம் கைகளை எப்படியோ விடுவித்துக் கொண்டவர், வாளொன்று ஏந்திப் போரிடத் தயாராகிவிட்டார். ஆனால் எதிரிகளின் அம்புகளும் கற்களும் அவரைத் தாக்கி அவரும் உயிர் தியாகி ஆனார். குபைபும் ஸைதும் தப்பித்து விடாமல் கடுமையான காவல் போடப்பட்டது.

கொல்லப்பட்ட நால்வரில் ஆஸிம் இப்னு தாபித் இருந்தது முதலில் ஹுதைல் மக்களுக்குத் தெரியவில்லை. பின்னர்தான் அவர்களில் ஒருவன் அடையாளம் கண்டு சொன்னான். உற்சாகம் பற்றிக் கொண்டது அவர்களுக்கு. ஸுலாஃபா சபதம் அவர்களுக்கும் தெரிந்திருந்த செய்திதான். ஸுலாஃபாவின் மதுபானத்திற்கு ஆஸிமின் மண்டையோட்டை, புதுக்கோப்பையாக அளித்துவிட்டால் கிடைக்கப் போகும் அளவற்ற பரிசுத் தொகையை நினைத்து அவர்களுக்கு அளவிலா உற்சாகம். ஆனால், ஆஸிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தாரல்லவா, அதை ஏற்று அவரது உடல் எதிரிகளிடம் சிக்காமல் இறைவன் காப்பாற்றினான். அது ஓர் இறை அற்புதம்.

“எவ்வளவோ முயன்று தேடிப் பார்த்தோம் ஸுலாஃபா. சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நீ கேட்ட மண்டையோட்டைக் கொண்டுவர முடியவில்லை” என்று அவளுக்குச் சோக செய்தியை அளித்தவர்கள், “முஹம்மதின் தோழர்கள் இருவர் பிடிபட்டுள்ளனர். இழுத்து வந்துள்ளோம்” என்றனர்.

“ஆஹா! அப்படிப்போடு. எங்கே அவர்கள்?” என்று குரைஷியர் மத்தியில் ஆனந்தக் கூக்குரல்கள்.

இறுதியில் மீதமிருந்த குபைப் மற்றும் ஸைத் ஆகிய இருவரும் மக்காவாசிகளுக்கு விற்கப்பட்டனர். குபைப் இப்னு அதீயை விலைகொடுத்து வாங்கியவர்கள், ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபலின் மகன்கள். பத்ருப் போரில் குபைப் கொன்றாரே அந்த ஹாரித் இப்னு அம்ரு இப்னு நவ்ஃபல். தங்களுடைய தந்தையின் மரணத்திற்குப் பழிதீர்க்கக் காத்திருந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பு வந்தமைந்தது. பலி ஆட்டைப்போல் தங்களது வீட்டிற்கு அவரைக் குதூகலத்துடன் இழுத்துச் சென்று சங்கிலிகளால் கட்டிப்போட்டனர்.

ஸைத் இப்னுத் தத்தின்னாஹ்வை வாங்கியது ஸஃப்வான் இப்னு உமைய்யா. பத்ருப் போரில் கொல்லப்பட்ட தன் தந்தை உமைய்யா இப்னு ஃகலஃப், சகோதரன் ஆகியோரின் பொருட்டு முஹம்மதின் தோழர்கள் யாரையாவது கொன்று தீர்த்தால்தான் தன் ஆத்திரம் ஓரளவிற்காவது மட்டுப்படும் என்ற வெறி ஸஃப்வானுக்கு. பின்னே? சூழ்ச்சி செய்து பழிதீர்க்கலாம் என்று நம்பி, ஸஃப்வான் மதீனாவிற்கு அனுப்பிவைத்த நண்பர் உமைர் இப்னு வஹ்பும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி நபியவர்களுக்குத் தோழராகிவிட்டார். அது ஸஃப்வானுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்திய மற்றொரு சுவையான வரலாறு.

அடுத்து சில நாள்களில் –

மக்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி. அங்கு குரைஷிகள் குழு ஆர்ப்பரிக்க ஸைத் இப்னு தத்தின்னாஹ் கொல்லப்பட்டு உயிர் தியாகியானார். அடுத்து குபைப் இப்னு அதீ அங்கு சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்டார்.

குபைபை அடிமையாக வாங்கிய ஹாரிதின் மகன்கள் உக்பா இப்னுல் ஹாரித், அல்-வலீத் இப்னுல் ஹாரித் இருவரும் தங்களது வீட்டிற்கு அவரைக் கொண்டுசென்று சங்கிலிகளால் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அவ்வீட்டில் நிகழ்ந்த இறை அற்புதச் செய்தி ஒன்றை ஹாரிதின் மகள் ஸைனப் குறிப்பிட்டுள்ளது ஹதீஸில் பதிவாகியுள்ளது. “ஒருமுறை நான் என் கண்களால் கண்டேன். குபைப் திராட்சைக் குலையிலிருந்து உண்டு கொண்டிருந்தார். அப்பொழுது மக்காவில் பழம் கிடைக்கும் பருவமன்று. தவிரவும் அவரோ சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். அல்லாஹ்வைத்தவிர அவருக்கு அந்த உணவை யாரும் அளித்திருக்க முடியாது.”

மற்றொரு நிகழ்வு. தமது அந்தரங்க உரோமங்களை நீக்குவதற்காக சவரக் கத்தி ஒன்றைக் கேட்டார் குபைப். அது அவருக்கு அளிக்கப்பட்டது. வலீதின் மகள் ஸைனப், வீட்டு வேலைகளில் மும்முரமாகி கவனம் திசை திரும்பியிருக்க, அவளுடைய குழந்தையொன்று குபைபிடம் சென்றுவிட்டது. குழந்தையை அன்புடன் தமது தொடையில் அமர்த்திக்கொண்டார் குபைப். தொடையில் குழந்தையும் கையில் கத்தியுமாக குபைபைக் கண்ட ஸைனபுக்கு எப்படி இருந்திருக்கும்? குலை நடுங்கியது. மரண தண்டனைக்குக் காத்திருக்கும் குபைப் அந்தக் குழந்தையைக் கொல்ல எத்தனை நொடி எடுக்கும்? ஸைனபின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்த அதிர்ச்சியையும் கவலையையும் கண்ட குபைப், “நான் குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று அச்சமா? நிச்சயமாக நான் அதைச் செய்யமாட்டேன்.”

அவரது மனப்பக்குவத்தையும் பெருந்தன்மையையும் பறைசாற்றும் இந்நிகழ்வில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளடங்கி உள்ளது. நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதில் எத்தகைய அர்ப்பணம் இருந்திருந்தால் உயிர் இழக்கக் காத்திருக்கும் நிலையிலும்கூட உரோமம் மழித்து சுத்தப்படுத்திக்கொள்ளும் நபியவர்களின் வழிகாட்டுதலை ஒருவர் மெனக்கெட்டு செய்திருப்பார்? தோழர்களுக்கு நபியவர்களின் வழிமுறை, சிறிதோ, பெரிதோ, எதுவும் மேம்போக்கானவை அல்ல.

மரண தண்டனைக்கு இழுத்து வரப்பட்ட குபைப் குரைஷிகளிடம் இறுதி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். “என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ அனுமதியுங்கள்.”

அனுமதியளித்தார்கள். மரண பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார்.  தொழுது முடித்தவர் குரைஷிகளிடம் சொன்னார். “அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் அச்சத்தினாலும் கவலையினாலும் நீளமாய்த் தொழுகிறேன் என்று நீங்கள் நம்பிவிடக்கூடும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு ஏற்படாதிருந்தால் நான் தொழுகையை இன்னும் நீளமாய்த் தொழுதிருப்பேன்.”

கொலைத் தண்டனை அடைந்தவர் கொல்லப்படுமுன் இரண்டு ரக்அத் தொழும் முறை ஒன்றை அன்று துவங்கிவைத்தவர் குபைப். “யா அல்லாஹ்! ஒருவர்விடாமல் இவர்கள் ஒவ்வொருவரையும் அழிப்பாயாக” என்று இறைஞ்சிவிட்டு, கவிதையொன்று உரைத்தார்.

கொல்லப்படுவேன் முஸ்லிமாக

அல்லாஹ்வுக்காகப் போகும் என்னுயிர்.

அஞ்சுதல் என்பது கிஞ்சிற்றுமில்லை

எப்படி வந்தாலென்ன இறப்பு? –

அல்லாஹ்வுக்காக எனும்போது.

அவன் நாடினால்

கூறுபடும் என் அங்கங்கள்

பேறு பெறும்!

குபைபைக் கொல்ல முடிவெடுத்த குரைஷிகள், அரபியர்களின் வரலாற்றில் அதுவரை நிகழாத ஒன்றைச் செய்தார்கள். பனை மரத்தை வெட்டி, பெரிய சிலுவை ஒன்று உருவானது. அதில் குபைபைச் சங்கிலியால் பிணைத்துக் கட்டினார்கள். காழ்ப்புடனான மகிழ்வைச் சுமந்து சூழ்ந்திருந்தது குரைஷியர் கூட்டம். ஈட்டிகளைக் கூர் தீட்டி தயாராய் நின்றிருந்தார்கள் வில்லாளிகள். சடுதியில் சாகக்கூடாது. தாம் மரணிப்பதை அவர் அணுஅணுவாய் உணர வேண்டும்; துடிதுடிக்க வைத்துக்கொல்ல வேண்டும் என்று வெறியும் துடிப்பும் அவர்களுக்கு. ஈட்டியால் குத்தி மகிழ்ந்தது ஒரு கூட்டம்; வாளால் அவரது உடம்பில் இஷ்டத்திற்கு வெட்டியது மற்றொரு கூட்டம். பனைமரச் சிலுவை குருதியால் வியர்த்து நின்றது.

அப்பொழுது அபூஸுஃப்பயான், குபைபிடம் கேட்டான், “நான் பாட்டுக்கு வீட்டில் என் குடும்பத்தினருடன் இருந்திருக்கலாம். அதற்குப் பதிலாய் இவர்கள் இங்கு முஹம்மதின் தலையைக் கொய்திருக்கலாம் என்பதுதானே இப்பொழுது உன்னுடைய எண்ணம்?”

“என்னுடைய இடத்தில் நபியவர்கள் இருந்து, அவர்களுக்கு ஒரு முள் குத்தும் அளவிற்காவது துன்பம் ஏற்பட விட்டுவிட்டு, நான் வீட்டில் சொகுசாய் இருந்துவிடுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். விரும்பவேமாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை.” அந்நிலையிலும் அப்படியான ஒரு பதிலை அவர் சொல்ல முடியுமென்றால், நெஞ்சில் ஈமானின் அழுத்தம் எந்தளவு இருந்திருக்கும்? நபியவர்களின்மீதான அவர்களது பாசமெல்லாம் உதட்டசைவுடன் திருப்தியுறாத நேசம்.

இதைக்கேட்ட அபூஸுஃப்யான், தனது ஒரு கையால் மறுகையை குத்திக்கொண்டு, “முஹம்மதை நேசிக்கும் இந்தத் தோழர்களைப்போல் தம் தலைவரை நேசிக்கும் வேறு யாரையும் நான் இதுவரை கண்டதே இல்லை.” வெறுப்பான ஆச்சரியம் வெளிவந்தது.

உக்பா இப்னுல் ஹாரித் குபைபைக் கொன்று முடித்தான். உயிர் தியாகியானார் குபைப் இப்னு அதீ ரலியல்லாஹு அன்ஹு.

கொல்லப்பட்டார் சரி? குரைஷிகள் மத்தியில் அப்படியென்ன தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று தோன்றுமல்லவா? இந்தக் கொலை நிகழ்வைக் கூட்டத்தினர் இடையே முண்டியடித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சிறுவர் ஒருவர். ஸயீத் இப்னு ஆமிர். அவர் இஸ்லாத்தைத் தழுவவும், இத்தகைய ஒரு கொடூரத்தைத் தாம் தடுத்த இயலாமற் போனதே என்ற வருத்தத்தில் பிற்காலத்தில் அவர் அவ்வப்போது அதிர்ந்து மயக்கமுறவும் இந்நிகழ்வு காரணமாக அமைந்துபோனது.

தவிரவும்,
எவருக்காகக் குபைபைக் கொன்று பழிதீர்த்தார்களோ அந்த ஹாரித் இப்னு ஆமிரின் மகன்கள், உக்பா இப்னு ஹாரித், வலீத் இப்னு ஹாரித், மகள் ஸைனப் ஆகியோர் பிற்காலத்தில் முழுமுற்றிலுமாய் இஸ்லாத்தில் நுழைந்து தோழர்களாகிப் போனார்கள்.

தம் மரணத்திலும் இறை அழைப்பிற்கான முன்னுதாரணத்தைப் பதித்துவிட்டு மறைந்தார் குபைப் இப்னு அதீ.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.