தோழர்கள் – 22 – துமாமா பின் உதால் – ثمامة بن أثال

Share this:

துமாமா பின் உதால்

ثمامة بن أثال

மாமாவிலிருந்து மக்காவிற்கு அவர் யாத்திரை கிளம்பினார். அவர் தமது குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. பெரும் செல்வாக்கு உண்டு. கரடுமுரடான போர் வீரர். ஆனாலும் யாத்திரை என்றால் மட்டும் தன்னந்தனியே கிளம்புவது அவரது வழக்கம். வழிப்போக்கிற்கும் பெரிய அளவில் உணவு, இதர பொருட்கள் எடுத்துக் கொள்வது அவரது வழக்கமில்லை. செல்லும் வழிநெடுகிலும் உள்ள இதர கோத்திரத்தினர் அவருக்கு உபசரிப்பு வழங்கத் தயாராக உள்ள நிலையில் அதெல்லாம் அவருக்குத் தேவையில்லாதது.

நாம் முன்னரே பார்த்தபடி மக்காவை நபியவர்கள் கைப்பற்றும்வரை, அஞ்ஞான மக்கள் அங்குள்ள கஅபாவில் நட்டுவைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கே வணக்கமும் வழிபாடும் புரிந்து கொண்டிருந்தனர். யாத்திரை புறப்படுவதும் அச்சிலைகளை வழிபடுவதற்கே. இவரும் அதற்குதான் சென்று கொண்டிருந்தார்.

 

இரவும் பகலுமான நெடுந்தொலைவுப் பயணம் அது. ஏதேனும் ஊரோ, கிராமமோ போகும் வழியில் குறுக்கிடும்போது அங்குத் தங்கிக் கொள்வார். இல்லையென்றால் பாலைவனத்தில் கூடாரம் அமைத்துக் கொண்டு தூக்கம், இளைப்பாறல் எல்லாம். அப்படியான பயணத்தில் அன்றைய இரவு பாலைவனத்தில் தங்கும்படியானது அவருக்கு. திறந்த பாலைவெளியில் கூடாரம் அமைத்துக் கொண்டு, ஒட்டகத்தைக் கட்டிவிட்டு, விலங்குகள் அண்டாமல் தீப்பந்தம் ஒன்றை ஏற்றிவைத்துவிட்டுப் படுக்கை விரித்து, கால் நீட்டிப் படுத்துக் கொள்ள, அசதியில் உறக்கம் அவரைத் தழுவியது. அப்படி அவர் தங்கியிருந்த பகுதி மதீனா நகருக்கு அண்மையில் அமைந்திருந்தது.

இஸ்லாமும் நபியவர்களின் ஆட்சியும் மெதுமெதுவே பலமடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருபுறம் மக்காவிலிருந்து கிளம்பி வந்த குரைஷியர்கள், மதீனாவில் உள்ள யூதர்கள் என்று அவர்களுடனான போர். மதீனாவில் இஸ்லாம் வலுவடைவதைக் கண்டு பயத்தினாலோ, அதை அழித்து ஆளுமை பெற வேண்டும் என்ற வேகத்தினாலோ இதர பல கோத்திரங்களும் தொந்தரவுகள், சச்சரவுகள் அளித்துக் கொணடிருந்தன. அவற்றை அடக்கப் போர், படையெடுப்பு என்று எதிர் நடவடிக்கை மற்றொருபுறம். இத்தகைய பல இடையூறுகளை எதிர்கொள்வதற்கும் எதிரிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் விதமாகவும் நபியவர்கள் நியமித்த தோழர்கள் மதீனாவிற்குப் பாதுகாவலாய் இரவு நேரங்களில், ரோந்து, காவல் புரிவது வழக்கம். அன்றும் அவ்விதம் அன்ஸாரீத் தோழர்களின் குழுவொன்று காவலில் ஈடுபட்டிருக்க, பாலைவெளியில் தூரத்தில் நெருப்பொளி தெரிவதைக் கண்டு அங்கு விரைந்தனர்.

வந்துபார்த்தால், அந்த மனிதர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எதிரியா, வழிப்பறிக் கள்வனா, யார் என்பதெல்லாம் தோழர்களுக்குத் தெரியவில்லை. எச்சரிக்கையுடன் கவனமாய் அவரைச் சூழ்ந்து தட்டியெழுப்பினர். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுந்த அவர், தன் படுக்கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைத் தற்காப்புக்காக எடுத்துக் கொள்ள முயல அதற்கெல்லாம் தோழர்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை. சடுதியில் அவருக்கு அனைத்தும் புரிந்து விட்டது. தாம் எந்த நகருக்கு அருகில் வந்து தங்கியிருக்கிறோம், சுற்றி வளைத்திருப்பதெல்லாம் யார் என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. எதிர்க்க வழியில்லை என்பதும் தெளிவாய்ப் புரிந்தது.

தோழர்கள்தான் விசாரித்தனர். “யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?”

அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். மீண்டும் கேட்டனர். வாய் திறந்து தான் யாரென்று சொன்னால், திறந்த வாய் மூடுவதற்குள் தலை உடலில் தங்கியிருக்காது என்பது அவருக்குத் தெரியும். எனவே அசைந்து கொடுக்காமல் அமைதியாய் இருந்தார்.

“நீ வெறும் வழிப்போக்கனாய் இருந்தால் ஏதாவது சொல்லியிருப்பாய். உனது அமைதி நீ இங்கு வந்திருப்பதற்கு ஏதோ உள்ளர்த்தம் சொல்கிறது. எனவே உன்னைக் கைது செய்து அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று தோழர்கள் அவரை இழுத்துச் செல்ல முயல, அவர் தாமே எழுந்து கொண்டு, தயாராகி, அவர்களுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தார். ”நீங்கள் என்ன கைது செய்வது? நானாகவே ஒப்படைத்துக் கொண்டு உங்களுடன் வருகிறேன்” என்பது அதற்கு அர்த்தம். அந்தளவு பெருமிதம், செருக்கு.

மதீனாவிற்கு அவரை அழைத்துவந்த தோழர்கள், நபியவர்களின் பள்ளிவாசலில் “வலுவான தூணாகப் பார்த்துக் கட்டிப்போடப்பா” என்று அவரைக் கட்டிப் போட்டனர்.

மறுநாள் விடியும்போது பள்ளிவாசலுக்கு வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூணில் கட்டிப் போடப்பட்டிருக்கும் அவரைப் பார்த்தார்கள். ஒன்றும் பேசவில்லை. நேரே தோழர்களிடம் வந்தவர்கள் விசாரித்தார்கள். “கைது செய்து அழைத்துவந்து கட்டிப் போட்டிருக்கிறீர்களே, இவர் யாரென்று தெரியுமா?”

தோழர்களுக்குத் தெரியாதாகையால், “எங்களுக்குத் தெரியாது அல்லாஹ்வின் தூதரே” என்றனர்.

“இவர்தான் துமாமா இப்னு உதால்”

அப்படியே அசந்து போனார்கள் அனைவரும். “என்ன? இவர்தான் துமாமா இப்னு உதாலா?”

“கண்டதும் கொல்ல நபியவர்களால் உத்தரவிடப்பட்ட துமாமா இப்னு உதால் இவர்தானா?”

oOo

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு நபியவர்கள் அரேபிய எல்லையைத் தாண்டியிருந்த மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்துக் கடிதங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றி ஓரளவு ஃபைரோஸ் அத் தைலமி வரலாற்றில் நாம் படித்தது நினைவிருக்கலாம். அதைப்போல் அரேபியாவில் இருந்த சில கோத்திரத்தின் தலைவர்களுக்கும் மடல் அனுப்பி வைக்கப்பட்டது. நஜ்து பகுதியிலுள்ள யமாமாவின் கோத்திரத்தைச் சேர்ந்த பனூ ஹனீஃபாவிற்கும் ஒரு மடல் சென்று சேர்ந்தது. அங்கு துமாமா இப்னு உதால் பனூ ஹனீஃபாவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.

‘மக்காவில் நபி ஒருவர் தோன்றியிருக்கிறாராம்; இன்னின்ன மாதிரியெல்லாம் சொல்கிறாராம்; குரைஷிகளுக்கும் அவருக்கும் இடையே போராம் சண்டையாம்; மதீனாவிற்குச் சென்று விட்டாராம்’ என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. துமாமாவின் காதிலும் அவையெல்லாம் விழுந்து கொண்டிருந்தன. அதற்கெல்லாம் அப்பொழுது அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதெல்லாம் குரைஷியருக்கும் அவர்கள் மத்தியில் அவர்களின் ஓர் அரபு வர்த்தகருக்கும் இடையே நடக்கும் ‘லடாய்’ என்பதாகக் கருதிக்கொண்டு தன் காதைக் குடைந்துகொண்டு சென்று விட்டார்.

இப்பொழுது நபியவர்கள் அனுப்பிய தூதுவர் ஒருவர் மெனக்கெட்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து தம் வீட்டுக் கதவைத் தட்டி, “இந்தாருங்கள் கடிதம்” என்று நீட்டியதும் அதில் ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பைப் படித்ததும், பொத்துக் கொண்டு வந்தது ஆத்திரம். “போனால் போகிறது என்று இந்த முஹம்மதைக் கண்டுகொள்ளாமல் விட்டது தப்பு போலிருக்கிறதே. அங்குச் சுற்றி இங்குச் சுற்றி இப்பொழுது எனக்கே அழைப்பா? அவரைக் கொன்றால்தான் சரிப்படும்” என்று தம் எண்ணத்தை பகிரங்கமாய் அறிவித்துவிட்டார் துமாமா.

அத்துடன் நிற்கவில்லை. பின்னர் ஒரு சூழ்நிலையில் எக்குத் தப்பாய் மாட்டிய நபித் தோழர்கள் சிலரையும் கொன்றுவிட்டார். அந்தச் செய்தி மதீனா வந்தடைந்ததும் பெரும் கோபம் எழுந்தது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு. கண்டதும் சுட உத்தரவு என்பதுபோல் கண்டதும் துமாமாவைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை துமாமாவும் அறியாமல் இல்லை. இருப்பினும் அவரளவில் அவர் ஒரு வீரர். யாருக்கும் அஞ்சாதவர். முஹம்மதும் அவரின் தோழர்களும் தம்மை ஒன்றும் பெரிதாய்த் தாக்கிவிட முடியாது என்றும் அவர் மனதில் ஓர் அலட்சியம் இருந்தது. எனவே தாம் மக்காவிற்கு யாத்திரை செல்லலாம் என்று முடிவெடுத்தபோது தனியே கிளம்புவதில் அவருக்கு அச்சமிருக்கவில்லை.

ஆனால் அது நடந்துவிட்டது. தனியே வந்தவர் வசமே மாட்டினார்.

“இவர்தான் துமாமா இப்னு உதால். கைது செய்தீர்; நல்லது செய்தீர்” என்று தோழர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் நபியவர்கள். தம் குடும்பத்தாரிடம், சிறந்த உணவும் ஆகாரமும் சமைக்கச் சொல்லி, அதையும் தம் பிரத்யேக ஒட்டகத்திலிருந்து கறக்கப்பட்ட பாலையும் அனுப்பி, “இந்தாருங்கள் இதை துமாமாவிற்கு அளியுங்கள்” என்று தோழர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“என்ன? கொலைத் தண்டனை கைதிக்குச் சிறப்பு உபசரிப்பா?” என்று தோழர்களுக்கு ஆச்சரியம். “சரிதான்! வயிற்றுக்கு உணவு ஈந்து பிறகு தலையெடுப்பதுதான் இந்த ஊரில் வழக்கம் போலும்” என்று துமாமாவிற்குப் பேராச்சரியம். கைகள் கட்டு அவிழ்க்கப்பட, உண்டு முடித்ததும் மீண்டும் தூணில் கட்டிவைக்கப்பட்டார். பிறகு நபியவர்கள் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் துமாமாவிடம் பேசினார்கள்.

“உன்னைப் பற்றி நீ என்ன சொல்ல விரும்புகிறாய் துமாமா?”

‘பொறியில் சிக்கிய எலியாய் இருக்கிறோம். தலை போகப்போவது உறுதி. என்ன சொல்ல?’ என்று யோசித்த துமாமா மனதிலுள்ள உண்மை உரைத்தார். சுற்றி வளைக்காமல் உண்மை. “நான் முன்னர் புரிந்த கொலைகளுக்குப் பகரமாய் என்னைக் கொலை புரிய வேண்டுமென்றால் இதோ உங்கள் எதிரே ஓர் உயர்குல இரத்தம். அல்லது கொலைகளுக்கு நட்ட ஈடாகப் பணமோ, பொருளோ வேண்டுமெனில், என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்; இவை இரண்டுமன்றி, தங்களுடைய பெருந்தன்மை குணத்தால் என்னை மன்னித்து விட்டுவிட நினைத்தால் நன்றிமறவாதவனாக என்னைக் காண்பீர்கள்”

நபியவர்கள் பதில் ஏதும் உரைக்கவில்லை. சென்று விட்டார்கள். அடுத்த இரண்டு நாள்கள் அப்படியே தொடர்ந்தன. ஆனால் வேளாவேளைக்கு உணவு, பால் என்று உபசரிப்பு மட்டும் சிறப்பு விருந்தினருக்கான உபசரிப்புபோல் தொடர்ந்து கொண்டிருந்தது. கையைக் கட்டிப் போட்டு, உணவு கொடுத்தும் உபசரிக்கிறார்கள் சரி. ஆனால் பொழுதுபோக வேண்டுமே? சிறப்பான பொழுதுபோக்கும் அவருக்கு அமைந்தது!

துமாமா கட்டிப் போடப்பட்டிருந்தது பள்ளிவாசலில். என்னவித பொழுதுபோக்கு கிடைக்கும்? தொழுகை நடந்தது; நபியவர்களின் சொற்பொழிவு நடந்தது; இறைவனின் வழிபாட்டில் ஆன்மாக்கள் மூழ்கி எழுவது நடந்தது. துமாமா பார்த்தார்; ஏக இறைவனையும் நபியையும் இஸ்லாத்தையும் வெறுத்தாயே பார்! அதன் வாழ்க்கையென்றால் என்னவென்று பார்! என்று எழுதிவைக்காத நாடகம்போல் கண்ணெதிரே புழங்கிக் கொண்டிருந்த வாழ்க்கையைப் பார்த்தார்; பிரமிப்புடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்!

நபியவர்களையும் தோழர்கள் அவர்கள்மேல் தங்கள் உயிரையே தேய்த்து உறவாடுவதையும் காணக் காண – அதெல்லாம் துமாமா அதுவரை கண்டறியாத வேற்றுலக வாழ்க்கை.

இருநாட்களுக்குப் பிறகு துமாமாவை நெருங்கிய நபியவர்கள் கேட்டார்கள், “உன்னைப் பற்றி நீ சொல்ல விரும்புவது என்ன துமாமா?” அதே கேள்வி. துமாமாவிடமிருந்தும் அதே பதில் வந்தது.

அதற்குப் பிறகும் துமாமாவிற்கு அதே உபசரிப்பு நீடித்தது. அதற்கு அடுத்த நாள் மீண்டும் துமாமாவிடம் வந்தார்கள் நபியவர்கள். மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அசராமல், அலுங்காமல் துமாமாவும் அதே பதிலைக் கூறினார்.

அதற்குமேல் அவரிடம் எதுவும் பேசாமல் தம் தோழர்களிடம் திரும்பிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இவரை விடுவியுங்கள்”  என்று அறிவித்துவிட்டுத் தன் இல்லம் திரும்பிவிட்டார்கள். தோழர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தங்கள் இறைத்தூதரின் சொல் அவர்களுக்கு வேதவாக்கு.

துமாமாவிற்கோ குழப்பம். ‘என்ன விடுதலையா? என் தலை எனக்கே சொந்தமா? பணம், பொருள் என்று எந்தப் பிணையத் தொகையும் தேவையில்லையா? காண்பதென்ன கனவா அல்லது நனவா?’

கைகள் விடுவிக்கப்பட, “நீ போகலாம்” என்று அறிவித்துவிட்டுத் தோழர்கள் நடையைக் கட்டிவிட்டார்கள். வெளியே வந்தார் துமாமா. தனது ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். வாயை மென்றுகொண்டே ஒட்டகமும் நடையைக் கட்டியது.

நபியவர்களின் பள்ளிவாசலுக்குச் சற்று தொலைவில் அல்-பஃகீ எனும் அடக்கத்தலத்தின் அருகே பேரீச்சைத் தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு வந்தவர் இறங்கிக் கொண்டார். அத்தோட்டத்தில் அமைந்திருந்த நீரோடையில் ஒட்டகத்தைக் கழுவி நீரருந்த வைத்தார். தன்னைக் கழுவி சுத்தம் செய்து கொண்டார். அமர்ந்து நிதானமாய் யோசித்தார்.

புரியவில்லை; நடந்தது எதுவுமே அவருக்குப் புரியவில்லை. கைதுசெய்து அழைத்துச் சென்றார்கள்; மூன்று நாட்கள் ராஜ உபசாரம் புரிந்தார்கள்; என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்கள். மனதில் பட்டதைச் சொன்னோம். நாம் செய்த கொலைகளுக்கும் அவர்களுக்கு விளைவித்தக் கொடூரத்திற்கும் பழிவாங்கிக் கொள்ள அத்தனை சாத்தியமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் விடுவித்துவிட்டார்கள்.

பள்ளிவாசலில் மூன்று நாட்களும் நடைபெற்ற காட்சிகள் கண்முன் மீண்டும் ஓடி மறைந்தன. தெளிவொன்று பிறந்தது துமாமாவிற்கு. இப்பொழுது அனைத்தும் புரிந்தது. பயணிக்க வேண்டிய திசை புரிந்தது. ஒட்டகத்தில் ஏறிக் கிளம்பினார், மீண்டும் மதீனா பள்ளிவாசலை நோக்கி.

அங்கு அமர்ந்திருந்த நபியவர்களை நோக்கி நடந்த துமாமா, அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்த எந்தத் தோழரையும் சட்டை செய்யவில்லை. நேராய் அவர்களை நெருங்கி சாட்சியுரைத்தார். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! முஹம்மது அவனது தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”

இதரத் தோழர்கள் அந்தக் காட்சியை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க இஸ்லாத்தினுள் புகுந்தார் துமாமா இப்னு உதால் ரலியல்லாஹு அன்ஹு.

தொடர்ந்தார் துமாமா. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதுநாள்வரை உலகிலேயே எனக்கு மிகவும் வெறுப்பளிக்கக் கூடிய முகமாக உங்களது முகமே இருந்தது. ஆனால் இன்றுமுதல் உலகிலேயே எனக்கு மிகவும் உவப்பான முகம் தங்களுடையதே.

“மதங்கள் அனைத்திலும் தாங்கள் சொல்லி வந்த மதத்தையே மிகவும் இழிவானதாக நான் இதுநாள்வரை கருதியிருந்தேன். இன்றிலிருந்து இஸ்லாத்திற்காக எனது உயிரும் துச்சம்.

“மதீனா நகரைப்போல் வேறொரு நகரை நான் வெறுத்ததில்லை. இன்றோ அன்பிற்குரிய நபியும் அவரின் தோழர்களும் வசிக்கும் இந்த நகரே எனக்கு உசத்தி, பேருவப்பு”

அடுத்து தழுதழுத்தது துமாமாவின் குரல். “அஞ்ஞானத்தில் தங்கள் தோழர்களின் உயிரைப் பறித்துவிட்டேனே! இப்பொழுது அதை நான் எப்படி நிவர்த்திப்பது?”

அவரைச் சாந்தமாய்ப் பார்த்தார்கள் முஹம்மது நபி. “நீர் இஸ்லாத்தில் நுழைந்த அக்கணமே உம்முடைய முந்தையப் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன; அழிக்கப்பட்டு விட்டன துமாமா”

துமாமாவின் முகத்திலிருந்த சோகமெல்லாம் மறைந்து புத்துணர்வும் ஒளியும் படர்ந்தன. தம் நெஞ்சில் கைவைத்து உணர்ச்சிகரமாய் உரைத்தார் “அல்லாஹ்வின்மீது ஆணையாக! உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை ஏக இறைவனின்பால் அழைக்க இன்றிலிருந்து எனது உயிர், பொருள் அனைத்தும் அர்ப்பணம். மறுப்பவர்களையெல்லாம் கடுமையாக அணுகப் போகிறேன் – அது தங்களின் தோழர்களிடம் முன்னர் நான் நடந்து கொண்டதைவிட மோசமாக இருக்கும்”

சற்று நிதானப்பட்டவர் தொடர்ந்தார். “அல்லாஹ்வின் தூதரே! நான் மக்காவிற்கு யாத்திரை செல்லும் வழியில்தான் கைது செய்யப்பட்டேன். இப்பொழுது நான் என்ன செய்வது?”

“உனது யாத்திரை தொடரட்டும் துமாமா. ஆனால் உனது வழிபாடு அங்குள்ள சிலைகளுக்கு அல்ல. அவை ஏதொரு சக்தியும் அற்றவை என்பதை நீ உணர்ந்து விட்டாய். கஅபாவில் வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் கற்றுத் தருகிறேன்” என்று உம்ரா செய்வதற்கான வழிமுறைகளை சொல்லி, விவரித்துக் காண்பித்தார்கள் நபியவர்கள்.

கவனமாய் அவற்றைக் கற்றுக்கொண்டு மக்காவிற்குக் கிளம்பினார் துமாமா இப்னு உதால் ரலியல்லாஹு அன்ஹு.

oOo

மக்கத்து வீதிகளில் கம்பீரமாய் பெரும் இரைச்சலுடன் கேட்டது அவ்வொலி.

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்,

லப்பைக், லாஷரீக்க லக லப்பைக்

இன்னல் ஹம்த, வந்நிஃமத்த

லக்கவல் முல்க், லாஷரீக்க லக்

 

வந்துவிட்டேன்; என்னிறைவா! வந்துவிட்டேன்.

வந்துவிட்டேன்; உனக்கு இணையில்லை எனக்கூறி வந்துவிட்டேன்.

எல்லாப் புகழுரையும் அனைத்து அருட்கொடையும்

ஆட்சி அதிகாரமும் இணையிலா உனக்கே உரியன!

நபியவர்கள் கற்றுத்தந்த வாக்கியங்களை துமாமா இரைந்து சொல்லிக் கொண்டு நடக்க, அதைக் கேட்டு அதிர்ந்து திரும்பிய குரைஷிகள் விரைந்துவந்து அவரைச் சூழ்ந்தனர். பெருங்கூட்டம் கூடிவிட்டது. “என்னதொரு தைரியம், ஆணவம்? யார் அது?” என்று நெருங்கி வந்தார்கள் அவர்கள். கைகளில் வாளும் ஆயுதங்களும் மக்காவின் வெயிலில் பளபளத்தன. அதையெல்லாம் சட்டையே செய்யாமல் துமாமா தம் முழக்கத்தைத் தொடர, இளைஞன் ஒருவன் அவரைத் தாக்க விரைய, குரைஷியர்களின் மூத்தவர் ஒருவர்தான் விரைந்து வந்து அவனைத் தடுத்தார். அவருக்குத் துமாமாவை அடையாளம் தெரிந்தது. எந்த ஊரின், எந்த கோத்திரத்தின் தலைவர் அவர், அவரின் பின்புலம் என்ன என்பதெல்லாம் அந்தப் பெரியவருக்கு நன்றாகத் தெரியும்.

“யப்பா முட்டாளே! நிறுத்து! இது யாரென்று தெரியவில்லை? பனூ ஹனீஃபாவின் து.. மா.. மா.. அவரது தாடியின் உரோமத்தில் ஒன்று உதிர்ந்தாலும் நமக்குத் தானியங்கள் காலி”

வெளியூரிலிருந்து மக்காவிற்கு உணவுப் பொருட்களும் சரக்கும் வந்து சேரும் பாதையில் அமைந்திருந்தது யமாமா. அந்த ஊரின் புகழ்பெற்ற கோத்திரத்தின் தலைவன் ஒருவனின்மேல் கைவைத்தால் எங்கு ‘நெறி’ கட்டும் என்பதை அந்தப் பெரியவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

எனவே சிலர், துமாமாவை அணுகி சமாதானம் பேசினார்கள். “இதோ பார் துமாமா, என்னாச்சு உமக்கு? எங்களது கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. உம் பெருமையென்ன, கீர்த்தியென்ன, அந்தஸ்தென்ன? உம்முடைய மூதாதையர்களின் மதத்தை உதறிவிட்டு நீர் இப்படி வழிகெட்டுப் போவீர் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லையே?”

தலை உயர்த்திப் பெருமையுடன் அவர்களைத் திரும்பி பார்த்தார் துமாமா. “முஹம்மதுவும் அவர் அறிவித்துள்ள இஸ்லாமும் நேர்வழிக்கான சிறந்த மார்க்கம் என்பதை மனமார உணர்ந்துவிட்டேன்”

போதுமா? அனைவரையும் ஆழ்ந்து பார்த்தவர் தனக்குள்ள அனுகூலமான சூழ்நிலையைச் சரியாகப் பிரயோகித்தார். “உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன். நான் ஏக இறைவனை வழிபடுவதைத் தடுக்க உங்களில் யார் முனைந்தாலும் சரி, உங்கள் வீட்டுப் பாத்திரங்களெல்லாம் சமைப்பதற்கு தானியமின்றிக் கிடக்க வேண்டியதுதான். அல்லாஹ்வின் தூதரின் அனுமதி இல்லாமல் உங்களுக்கு ஒரு கைப்பிடி தானியமும் யமாமாவைத் தாண்டி வந்து சேராது”

குரைஷிகளின் அடிவயிற்றில் கைவைத்தார் துமாமா. அதைக் கேட்ட குரைஷியர்களுக்கு விதிர்த்தது! வேறுவழியில்லை அவர்களுக்கு. “சென்று தொலை” என்பதுபோல் அவருக்கு வழிவிட்டவர்கள், தங்களது காதுகளை மட்டும் நன்றாகப் பொத்திக் கொண்டார்கள். முஹம்மது கற்றுத்தந்தார் என்று அந்த வாசகங்களையெல்லாம் அவர் தங்கள் ஊருக்கு உள்ளேயே வந்து தங்கள் மத்தியில் முழங்கிக் கொண்டிருப்பதைக் கேட்கும் திராணி அவர்களுக்கு இல்லை.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்ஙனம் கற்றுத் தந்தார்களோ அவ்விதம் தமது உம்ராவை நிறைவேற்றி முடித்தார் துமாமா. எந்த ஒரு குரைஷியும் அவரை நெருங்கவில்லை, தொந்தரவு அளிக்கவில்லை. தமது ஊருக்குத் திரும்பினார் துமாமா.

ஆனால் வந்ததும் முதற்காரியமாக ஒன்று செய்தார். “உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை ஏக இறைவனின்பால் அழைக்க இன்றிலிருந்து எனது உயிர், பொருள் அனைத்தும் அர்ப்பணம். மறுப்பவர்களையெல்லாம் கடுமையாக அணுகப் போகிறேன் – அது தங்களின் தோழர்களிடம் முன்னர் நான் நடந்து கொண்டதைவிட மோசமாக இருக்கும்” என்று நபியவர்களிடம் கூறினார் இல்லையா? அதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

‘மக்காவிற்குச் செல்லும் சரக்குகளுக்கு இன்றிலிருந்து தடை’ என்று புதிய உத்தரவு உடனடி அமலுக்கு வந்தது. என்னவாகும்? மக்காவில் முதலில் உணவுப் பொருட்களின் விலை ஏறியது. பின்னர் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகமானது. அதன் பின்னர் வயிறு பசிக்க ஆரம்பித்தது. தூரத்தில் யமாமாவில் அமர்ந்து கொண்டு குரைஷியர்களை ஆட்டிக் கொண்டிருந்தார் துமாமா.

இதை நீக்க என்ன வழி என்று யோசித்தார்கள் குரைஷியர்கள். ஒரே வழிதான் தென்பட்டது. அதற்குச் சற்று மான, ரோஷத்தை இழக்க வேண்டியது கட்டாயம். இருந்தாலும் பரவாயில்லை. அதுதான் ஒரே வழி. மதீனாவிற்குத் தகவல் அனுப்பினார்கள்.

‘இந்த மாதிரி துமாமா என்பவர் எங்கள் அடிவயிற்றில் அடிக்கிறார். நீங்கள் ஒருவார்த்தை சொன்னால் போதும். எங்களுக்கு உணவு கிடைக்கும். பசிக் கொடுமை தாளவில்லை…’ என்று செய்தி வந்து சேர்ந்தது நபியவர்களுக்கு. ஒரு காலத்தில் நபியவர்களையும் அவர் சுற்றத்தையும் தோழர்களையும் ஊர் விலக்கு செய்து, அபூதாலிபுக் கணவாய்க்குத் துரத்தி அடித்து, உணவு கிடைக்கவிடாமல் செய்து, அவர்களைப் பட்டினியில் வாட்டிப் பார்த்து மகிழ்ந்த குரைஷிச் சமூகம் இன்று அதே நபியவர்களிடம் தங்களது பட்டினிக்குப் பரிகாரம் தேடி ஓடியது. உடனே துமாமாவுக்குக் கடிதம் ஒன்றை நபியவர்கள் அனுப்பி வைக்க,

“என்னுடைய நபியவர்கள் சொல்கிறார்களே, அவர்களது வார்த்தையைத் தட்ட முடியாதே என்பதற்காகவே நான் இதற்கு உடன்படுகிறேன்” என்று தடையைத் தளர்த்தினார் துமாமா.

இங்ஙனம் யமாமாவில் தோழர் துமாமா செயல்பட்டுக் கொண்டிருக்க, அதே யமாமாவிலிருந்து பனூ ஹனீஃபாவைச் சார்ந்த ஒரு குழுவினர் முஹம்மது நபியைச் சந்தித்தார்கள் – இஸ்லாம் கற்க. அக்குழுவில் ஒருவன் இடம் பெற்றிருந்தான். நினைவிருக்கிறதா? முஸைலமா!

oOo

நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில் அமர்ந்ததும் அவர்களை எதிர்கொண்ட தலையாயப் பிரச்சினைகளில் முக்கியமான இரண்டு – இஸ்லாத்தைக் கைகழுவிய முர்தத்களின் பிரச்சினை, மற்றும் தம்மை நபியென அறிவித்துக் கொண்டு அட்டகாசம் புரிய ஆரம்பித்த சில கிறுக்கர்களின் பிரச்சினை. முர்தத்களின் பிரச்சினை மாபெரும் தலைவலி என்பது மட்டுமல்லாது இஸ்லாமிய ஆட்சிக்கே சவால்விட ஆரம்பித்துவிட்டது. மறுபுறம் முஸைலமாவின் பிரச்சினையும் அவனது படைகளுடன் நடைபெற்ற யுத்தமும் ஓர் அகோரம். இதனை நெடுக ஆங்காங்கே பார்த்துக் கொண்டு வந்தோம். மீண்டும் இங்கு முஸைலமாவின் அத்தியாயத்திற்குள் நாம் சற்றுத் திசைமாற வேண்டியுள்ளது.

முஸைலமா தன்னைத் தானே நபி என்று அறிவித்துக் கொண்டவுடன் குலப் பரிவினாலும் பாசத்தினாலும் அறிவை அடமானம் வைத்துவிட்டு பனூ ஹனீஃபாவினர் பெருமளவில் அவனோடு அணி திரண்டனர்தான். ஆனால் முழுக்க முழுக்க அத்தனை பேரும் அறிவிலிகளாக மாறிவிடவில்லை. இஸ்லாம் உள்ளத்தில் உறுதியாய் ஊடுருவியிருந்த சிலரும் அங்கு இருந்தனர். முஸைலமா ஒரு கடைந்தெடுத்த பொய்யன், அயோக்கியன் என்பது உள்ளங்கையில் நெல்லிக்காயெல்லாம் இல்லாமலேயே அவர்களுக்குப் புரிந்தது. குலத்தின் பெரும் பகுதியினர் திசை மாறிச் சென்றுவிட, அந்த வெகு சிலர் உடும்புப் பிடியாய் இஸ்லாத்தைப் பற்றிக்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி முஸைலமாவை அழிக்க அவர்கள் உதவியது குறிப்பிடப்பட வேண்டிய உன்னதப் பணி.

மஃமர் இப்னு கிலாப் அர்-ரும்மானீ معمر بن كلاب الرماني என்பவர் அந்தச் சிலருள் ஒரு முக்கியப் புள்ளி. இப்னு அம்ருல்-யஷ்கரீ  ابن عمرو اليشكري என்பவர் மற்றொருவர். இவர்களைப் போல் இன்னுமொரு முக்கியப் புள்ளியும் இருந்தார். துமாமா இப்னு உதால் ரலியல்லாஹு அன்ஹு. முஸைலமாவை பகிரங்கமாய் எதிர்த்தவர்களில் துமாமாவும் ஒருவர்.

முர்த்தத்களின் பலப்பல கிளர்ச்சிகளை ஆங்காங்கே முஸ்லிம் படைகள் சென்று அடக்கிக் கொண்டிருந்தன. பெரும் போராட்டத்திற்கும் போருக்கும்பின் ஒவ்வொரு குழுவாய் அடங்கி இஸ்லாத்திற்குள் மீண்டு வர, அதற்கு அடுத்து அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் கட்டளையின்படி காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் படை யமாமா நோக்கிக் கிளம்பிச் சென்றது.

அதேநேரத்தில் முஸைலமாவைத் துணிந்து எதிர்த்து நின்ற பனூ ஹனீஃபாவின் தலைவர்களில் ஒருவரான துமாமாவை அங்கிருந்த முஸ்லிம்கள் அண்மிக் கொண்டனர். துமாமா ஒரு வீரர் மட்டுமின்றி மதியூகி. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டிய அவர் முஸைலமாவைப் பின்பற்றும் தம் கோத்திரத்தினரை ஒளிவு மறைவில்லாது திட்டினார், அறிவுறுத்தினார்.

“ஓ ஹனீஃபாக் குலத்தின் மக்களே! என்ன கேடு உங்களுக்கு? நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்; நீங்கள் நேர்வழி பெறக்கூடும். எனக்குக் கீழ்படியுங்கள்; உங்கள் நடத்தை நேர்மையாகும். நிச்சயமாய் உணருங்கள்; முஹம்மது, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவருடைய நபித்துவம் குறித்து எவ்வித ஐயப்பாடும் இல்லை. உலகின் இந்தக் காலகட்டத்திற்கு முஹம்மது மட்டுமே நபி. அவருக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. மேலும் முஸைலமா ஒரு பொய்யன் என்பதையும் உணருங்கள். அவனுடைய பொய்யிலும் பேச்சிலும் மதி மயங்கிவிடாதீர்கள். முஹம்மது, தம் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த குர்ஆன் வசனங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அதில் அல்லாஹ் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அவன் கூறுகிறானே,

ஹா, மீம். (யாவரையும்) மிகைத்தோனும் மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம். அவன் பாவத்தை மன்னிப்பவனும்  தவ்பாவை – பாவமீட்சியை – அங்கீகரிப்பவனும் தண்டிப்பதில் கடுமையானவனும் தயை மிக்கவனும் ஆவான். அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது. (குர்ஆன் 40:1-3)

இந்த இறை வசனங்களுடன் பொய்யன் முஸைலமாவின் உளறலை ஒப்பிட்டுப் பாருங்கள்” என்றவர் இறை வசனம் என்று முஸைலமா பிதற்றி வைத்திருந்த சிலவற்றைப் படித்துக் காண்பித்தார். முஸைலமா எத்தகைய மூன்றாந்தரக் கவிஞன் என்பதை அவ்வரிகள் தெளிவாய்ச் சொல்லின.

“இரண்டையும் கவனமாய் ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் வித்தியாசம் உங்களது குலப்பரிவினால் அமிழ்ந்து விடக்கூடாது. நான் இன்றிரவு காலித் இப்னு வலீதிடம் கிளம்பிச் செல்கிறேன். இந்தப் பொய்யனின் கூட்டத்தாருடன் என்னையும் ஒருவனென்று அவர் கருதிவிடாதிருக்க எனக்கும் என் மனைவி, பிள்ளைகள், சொத்து அனைத்திற்கும் அவரிடம் பாதுகாவல் கோரப் போகிறேன்”

மிகவும் உணர்ச்சிகரமாய் அவர் தம் மக்களுக்கு ஆற்றிய உரை அது. அங்கிருந்த மக்களின் மனதில் அது தைத்தது. அரபு குல வழக்கப்படி “ஓ அபூ ஆமிர்” என்று அவரை விளித்த அம்மக்கள், “அறிந்து கொள்ளுங்கள்! நாங்கள் உம்மோடு இருக்கிறோம்” என்று பதில் அளித்தார்கள். அடுத்து வேகமாய்க் காரியமாற்றினார் துமாமா இப்னு உதால். தமது குலத்தின் அந்த மக்களை உடனழைத்துக் கொண்டு நள்ளிரவில் கிளம்பிச் சென்று காலித் இப்னு வலீதைச் சந்தித்தார். நடந்தவை அனைத்தையும் விவரிக்க அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தார் காலித்.

முஸைலமாவை எதிர்த்துப் போர் துவங்குவதற்குமுன் காலித் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்.

‘முஸைலமாவின் படை வீரர்களின் மனவலிமையைக் குலைக்க வேண்டும்’

துமாமாவை அழைத்து அப்பணிக்கு உபயோகப்படுத்திக் கொண்டார் காலித். “உங்கள் கோத்திரத்து மக்களைச் சந்தியுங்கள். அவர்களது மனங்களில் பயத்தைத் தோற்றுவியுங்கள்”

எதிரியின் மனவலிமையைக் குலைத்துவிட்டால் அவனது வாள், வலிமை இழந்துவிடும் என்பதை மிகச் சரியாக கணித்து வைத்திருந்தவர் காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு. இஸ்லாமியத் தளபதிகளில் காலித் பின் வலீதின் வீரமும் சாதனையும் சாகசத்தின் உச்சம். பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எதிராய் முஸ்லிம்கள் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் புரிந்த வித்தைகள் தனியொரு வீர வரலாறு.

காலீதின் எண்ணத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட துமாமா, தம் மக்களிடம் விரைந்து திரும்பினார். அவர்களைச் சந்தித்து, “நிச்சயமாக ஒரே நேரத்தில் ஒரே குறிக்கோளுக்காக இரு நபிகள் வருவதில்லை, அறிந்து கொள்ளுங்கள். சர்வ நிச்சயமாக முஹம்மதுவிற்குப் பிறகு வேறொரு நபி இல்லவே இல்லை. அவருக்குத் துணையாய் இணையாய் நபி என்று வேறு எவரும் இல்லை. அபூபக்ரு உங்களிடம் ஒரு மனிதரை அனுப்பி வைத்துள்ளார். அவர் தமது பெயராலோ தம் தந்தையின் பெயராலோ அழைக்கப் படுவதில்லை. அவரைச் சுருக்கமாய் ‘அல்லாஹ்வின் போர்வாள்’ என்றுதான் அழைப்பர். அவரிடம் கணக்கற்ற வாள்கள் உள்ளன. எனவே நீங்கள் என்ன செய்வதென்று நிதானமாய் யோசித்து முடிவெடுங்கள்”

அந்தப் பேச்சு சரியாக வேலை செய்தது. முஸைலமாவின் படை வீரர்களது மனவுறுதியை அது தளர்த்திவிட்டது. அதன்பின் நிகழ்வுற்ற போரை அந்தந்தத் தோழர்கள் வரலாற்றினிடையே பார்த்துக்கொண்டு வந்தோம். யமாமா போரில் துமாமாவும் ஆயுதமேந்தி களத்தில் சுழன்ற முக்கிய வீரர்களுள் ஒருவர்.

இறுதியில் முஸைலமா கொல்லப்பட அதன்பிறகு யமாமாவின் கவர்னராக முத்ரஃப் இப்னு அந்-நுஃமானை நியமத்தார் கலீஃபா அபூபக்ரு. முத்ரஃப் வேறு யாருமல்ல. துமாமாவின் சகோதரர் மகன்.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளிநாட்டு மன்னர்களுக்குக் கடிதம் அனுப்பிவைத்ததில் பஹ்ரைன் நாடும் ஒன்று. அப்பொழுது அல்-முன்திர் பின் ஸாவா பின் அல்அக்னஸ் அத்தாரமீ அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். நபியவர்கள் அல்-அலா இப்னுல் ஹள்ரமீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்கள். வாங்கிப் படித்தார் அல்-முன்திர்.

“நான் அரசனாக இருப்பது இவ்வுலகில் மட்டுமே பெருமை. மறுமைக்கு ஒன்றுமில்லை. நீங்கள் வந்துசொல்லும் செய்தி இம்மை மறுமை இரண்டிலும் உருப்பட வழி சொல்கிறது. நான் உயிருடன் இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு உதவப் போகும் ஒரு மார்க்கத்தை நான் ஏற்றுக்கொள்ள இனி எனக்கு என்ன தடை? இதற்குமுன் நான் இஸ்லாத்தைப் பற்றி செவிவழியாய்க் கேள்விபட்டபோது அதை ஏற்றுக் கொண்டவர்களை நினைத்து, என்ன மடத்தனம் இது என்று வியந்திருக்கிறேன். இப்பொழுதோ இஸ்லாத்தை நிராகரிப்பவர்களை நினைத்தால்தான் எனக்கு ஆச்சரியம் தாளவில்லை” என்று மிக அழகிய உரையொன்று ஆற்றினார் அல்-முன்திர். ரோம, பாரசீக மன்னர்கள் போலில்லாமல் மிக உடனே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார் அவர். அவருடன் பஹ்ரைன் மக்கள் பலரும் இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.

அடுத்த சில ஆண்டுகளில் அந்த மன்னர் இறந்துவிட, இங்கு முஹம்மது நபியும் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொள்ள, பஹ்ரைன் மக்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை நிராகரித்து முர்தத் ஆகிப் போனார்கள். தங்களது மன்னனாக அல்-முன்திர் இப்னு அந்-நுஃமான் அல்-ஃகரூர் என்பவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆனால் இங்கும் பனூ ஹனீஃபாவில் அமைந்திருந்த சிறுபான்மையினர்போல் சில முஸ்லிம்கள் இஸ்லாத்தில் உறுதியாய் நிலைத்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஜாரூத் இப்னுல்-மஅலா ரலியல்லாஹு அன்ஹு.

பஹ்ரைனில் நிலைமை மோசமடைந்து கொண்டேபோய், இஸ்லாத்தைக் கைவிட்டவர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் ஜுவாத் எனும் நகரை முற்றுகைக்கு உட்படுத்திவிட்டனர். நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. இப்பொழுது மீண்டும் அல்-அலா இப்னுல் ஹள்ரமீயை பஹ்ரைனுக்கு அனுப்பிவைத்தார் கலீஃபா அபூபக்ரு. ஆனால் இம்முறை கடிதம் ஏந்திவரவில்லை அவர். வாளும் ஆயுதங்களும் போர் வீரர்களும் என்று கிளம்பி வந்தார் அல்-அலா இப்னுல் ஹள்ரமீ ரலியல்லாஹு அன்ஹு.

அந்தப்படை பஹ்ரைனை நெருங்கும்போது முக்கியமான வீரர் ஒருவர் வந்து அந்தப் படையில் இணைந்தார். அவர் துமாமா இப்னு உதால். அதன்பிறகு தொடங்கியது போர். உக்கிரமாய்ப் போரிட்டு ஒருவழியாய் அந்த முர்தத்களை வெற்றி கொண்டது இஸ்லாமியப் படை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டநொடி முதல் மிகவும் தெளிவாய் அதை உணர்ந்து தீவிரமாய் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டவர் துமாமா இப்னு உதால். ஒருகாலத்தில் தூதுச் செய்தி வந்தபோது கோத்திரப் பெருமையில் அதை உதறி எறிந்தவர், பின்னர் தம் கோத்திரத்தைச் சேர்ந்தவனே நபியென்று பொய் சொல்லி உயரத் தொடங்கிய வேளையில் மெய்யும் பொய்யும் எதுவென்று இனம் பிரித்துக் காண்பதில் அவருக்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. வெறும் வாய் வார்த்தைகளில் சேவை என்பதில்லாமல் இஸ்லாத்தின் எதிரிகளை சகல வழிகளிலும் எதிர்த்துப் போரிட்டார் துமாமா. இஸ்லாமிய வேர் ஆழப்பதிந்து அந்நெஞ்சை ஊடுருவியிருந்தது. அதனால் எல்லை கடந்தும் நடைபெற்ற போருக்கு விரைந்து சென்று இணைந்து கொண்டார் அவர் – துமாமா இப்னு உதால். இவர் ஹிஜ்ரீ 20ஆம் ஆண்டு இறந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் முகப்பு |  தோழர்கள்-20 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.