த.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு

தமிழக முதல்வர் அவர்களே!

உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கை நிறுத்துங்கள்!!

குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) 2008ஆம் ஆண்டு நடத்திய ஜெயில் வார்டன் கிரேடு II பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். ஜஃபர் சாதிக்குடன் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால் இவருக்கு மட்டும் பணியாணை வழங்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த ஜஃபர் தேர்வாணையத்தை அணுகுகின்றார். “நீங்கள் ஒரு மத அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும் விடியல் வெள்ளி பத்திரி்கையின் ஏஜண்டாக இருப்பதாகவும் குமரி மாவட்ட உளவுத்துறை(எஸ்.பி.சி.ஐ.டி) இன்ஸ்பெக்டர் அறிக்கை தந்துள்ளார். ஆதலால் உங்களுக்கு அரசுப்பணி வழங்கவியலாது” எனப் பொட்டிலடித்தாற்போல் கூறியது தேவாணையம். தான் எந்தவொரு மத அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என ஜஃபர் எவ்வளவோ வாதிட்டும் அது விழலுக்கு இறைத்த நீராகவே போனது.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காவே உளவுத்துறையால் அநீதி இழைக்கப்பட்ட ஜஃபர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடுகிறார். “ஒருவர் மதஅமைப்புகளில் வெறுமனே உறுப்பினராக இருப்பதோ ஏதேனும் ஒரு பொறுப்பு வகிப்பதோ அவர் அரசு வேலையைப் பெறுவதில் எந்தவிதத் தடையையும் ஏற்படுத்த முடியாது. அவருக்கு அரசுப் பணி மறுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான ஷரத்து 14 வழங்கும் சம உரிமையை(Right to Equality) மறுப்பதாகும். ஆதலால் உடனடியாக அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் உளவுத்துறை தனது திருவிளையாடல்களை நிறுத்திக் கொள்ளவில்லை. உளவு என்ற பெயரில் ஜஃபர் பற்றித் தொடர்ந்து தவறான தகவல்களைத் தேர்வாணையத்திற்கு வழங்கி நெருக்கடி நிலையை ஏற்படுத்தவே, தமிழக அரசின் சார்பாக மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது.

வாதப்பிரதி வாதங்களின்போது தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், “உடனடியாகப் பணி வழங்குமாறு” மீண்டும் உத்தரவிட்டது. ஆயினும் பணியை வழங்கிடாமல் தேர்வாணையம் காலம் தாழ்த்தவே அதே நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் ஜஃபர்.

இதற்குக் கட்டுப்படாத தேர்வாணையம், உளவுத்துறை தந்த கடும் அழுத்தம் காரணமாக தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எஸ்.எல்.பி என்ற இந்தச் சிறப்பு விடுமுறை மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகால தொடர் போராட்டத்திற்குப் பிறகே கடந்த மாத இறுதியில் பணி நியமன ஆணையைத் தேர்வாணையம் ஜஃபருக்கு வழங்கியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் பழங்குடியின மக்களைவிடக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தங்கள் சதவிகிதத்தைவிட மிக மிகக் குறைந்த சொற்பமான அளவே அவர்களுக்குக் கல்வி கிடைக்கின்றது.

இந்நிலையில், ஒரு முஸ்லிம் இளைஞன் இத்துணை தடை கற்களையும் தாண்டி, படித்து அரசு வேலைக்கான போட்டித் தேர்விலும் வெற்றிபெற்றதும், “இவன் தீவிரவாதி; இவன் பயங்கரவாதி; இவன் அந்த இயக்கத்தில் இருக்கின்றான்; இந்த இயக்கத்தில் இருக்கின்றான்; முஸ்லிம் பத்திரி்கையின் ஏஜண்டாக இருக்கின்றான்; வழக்கே இல்லாவிட்டாலும் இவன் மீது கிரிமினல் வழக்கு இருக்கின்றது” எனக் குற்றம் சுமத்தி சதிச் செயல்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கிலும் ஈடுபட்டு வருகின்றது தமிழக உளவுத்துறை. ஜஃபர் சாதிக்கின் வழக்கே இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு.

இந்த ஜஃபர் சாதிக்கோடு நின்றுவிடவில்லை; உளவுத்துறை தனது சேவை(!)யைத் தொடர்ந்து கொண்டு்தான் இருக்கின்றது என்பதற்கு மற்றுமோர் நிதர்சனம்தான் தென்காசி ஹாஜா ஷரிஃப். இவரும் காவலர் பணிக்குத் தேர்ச்சி பெற்று, உளவுத்துறையின் சதிச் செயல் காரணமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவர்மீதும் வழக்கம் போலவே உளவுத்துறை அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றது.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்களே! முஸ்லிம் இளைஞர்களை அரசுப் பணிக்குச் செல்லவிடாமல் தடுப்பதுதான் தங்கள் அரசு உளவுத்துறைக்கு இட்ட கட்டளையா?

இப்படி ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் நீதிமன்றப் படியேறித்தான் போலீஸ் வேலைக்கும் சிறைத்துறை பணிக்கும் நியமன ஆணையைப் பெறவேண்டுமென்றால், பிறகு எப்படி சமூக முன்னேற்றம் ஏற்படும்?

முஸ்லிம்களுக்குத் தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீடு எதற்கு?

தமிழக முதல்வர் அவர்களே! உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்.

உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கைத் தடுத்து நிறுத்துங்கள்!

நன்றி : விடியல் வெள்ளி 11:10 தலையங்கம் (அக்டோபர் 2010)