தோழர்கள் – 17 – முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)

Share this:

முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி
(معاذ بن جبل)

 

லீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம் சென்றுவரச் சொன்னார். அரசு உதவி பெறத் தகுதியான ஏழை மக்களுக்குக் கருவூலத்திலிருந்து உதவித் தொகை எடுத்துச் சென்று வழங்க வேண்டும். ஸகாத் அளிக்க வேண்டியவர்களிடமிருந்து ஸகாத் திரட்டி வரவேண்டும். அவருக்கு அப்பணி இடப்பட்டது. “உத்தரவு கலீஃபா!” என்று உடனே கிளம்பிச் சென்றார் அத்தோழர். அது சற்று நீண்ட பயணம்.


கலீஃபாவின் தூதுவர் வந்திருக்கிறார் என்றதும் ஸகாத் செலுத்த வேண்டியவர்களெல்லாம் அள்ளி அள்ளி அளித்தார்கள். ஏழைகளுக்கெல்லாம் உதவித் தொகை சர்வ தாராளமாய் முறைப்படி வினியோகிக்கப்பட்டது. வந்த பணி திருப்தியுடன் நிறைவேற, தனக்கு இடப்பட்ட கட்டளைகளைத் திறம்பட முடித்து, பயணத்திலிருந்து திரும்பினார் அந்தத் தோழர். கழுத்தில் குதிரைச் சேணக் கம்பளி; வெறுங்கை. அதை வீசிக்கொண்டு அவர் வீடு வந்துசேர, அவரின் மனைவி திகைப்படைந்து விட்டார்.

“என்ன இது? கவர்னருக்கு அழகா இது? தங்களது நீண்ட பயணத்துக்குக் கிடைத்த பரிசு இதுதானா? தங்களது பணிக்குரிய கூலி எங்கே?”

சற்றுக் கவனிக்க வேண்டும்; கிம்பளமெல்லாம் இல்லை! செய்த அரசுப் பணிக்குச் சம்பளமாகவோ, சன்மானமாகவோ கிடைக்கப்பெறும் பொருள்களைத்தான் அவருடைய மனைவி எதிர்பார்த்திருந்தார். நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் அப்படி எதுவுமேயின்றி ‘வீசிய கை, வெறுங்கையோடு’ கணவன் வீடு திரும்பி வந்தால்?

“ஓ! அதுவா? என்னைக் கண்காணிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் என்னுடைய நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் யாரிடமும் நான் எந்தவித சன்மானமும் பெறவில்லை”

கணவர் சொன்னது உட்பொருள் பொதித்த பதில். ஆனால் மிகவும் கோபமேற்பட்டது அவரின் மனைவிக்கு. சன்மானம், பொருள் என்பதெல்லாம் இப்பொழுது இரண்டாம் பட்சமாகிவிட, ‘என்ன? … என் கணவர்மேல் சந்தேகமா?’ என்ற கோபம்.

“அது எப்படி? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? முதல் கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு! அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? உங்களை நடத்திய விதமென்ன? ஆனால் இப்பொழுது இந்த உமர்? இவர் மட்டும் உங்களுடன் கண்காணிப்பாளைரை அனுப்பினாரோ?” என்று கொதித்தார்!

அத்துடன் விடவில்லை, கலீஃபா உமருடைய இல்லத்திற்குக் கிளம்பிச் சென்று அவர் வீட்டுப் பெண்களிடம் இதை முறையிட்டார். உமருக்குச் செய்தி எட்டியது. கூப்பிட்டனுப்பினார் அந்தத் தோழரை.

“என்னய்யா இது புதுக் கதை? நான் என்றிலிருந்து உம்மைக் கண்காணிக்க ஆளனுப்பினேன்?”

“அமீருல் மூஃமினீன்! நீங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை. நெடும் பயணத்திலிருந்து திரும்பிய நான் கூலியோ பரிசோ எதுவுமே கொண்டு வராததால் ஏமாற்றமடைந்த என் மனைவியைச் சமாளிக்க வேறுவழி தெரியவில்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்”

உளமாரச் சிரித்தார் உமர். சில பரிசுப் பொருட்களை அவருக்கு அளித்து, “இந்தாரும். இதை எடுத்துச் சென்று உம் மனைவிக்குப் பரிசளிக்கவும், மகிழ்விக்கவும்”

பெற்றுக் கொண்டு திரும்பினார் அந்தத் தோழர் – முஆத் பின் ஜபல். ரலியல்லாஹு அன்ஹு.

அப்பயணத்தில் அவசியமின்றி எதுவும் பெற விழையாத முஆத், அதற்குமுன் வேறொரு சந்தர்ப்பத்தில் தனக்கான உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உமரிடம் வாக்குவாதம் புரிந்ததை இதனூடே பார்ப்போம். அதற்கு முன்,

பரவலாய்ப் பெரிதும் அறியப்பெற்ற இந்தத் தோழர் முஆத் பின் ஜபலைப் பற்றிய முன்னுரையைச் சற்றுப் பார்த்துவிடுவோம்.

* * * * *

முதல் அகபா உடன்படிக்கைக்குப் பிறகு முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு யத்ரிபிற்கு வந்து பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தாரல்லவா? அப்பொழுது அங்கு இஸ்லாம் மெதுவாய் மீளெழுச்சி பெற ஆரம்பித்தபோது முஆத் பின் ஜபல் இளைஞர். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கலாம். கூர்மதி; எவரையும் ஈர்க்கும் நாவன்மை; இளமையின் புத்துணர்வு; சுருள் முடி; கரிய நிறக் கண்கள்; அழகிய வெண்மையான பற்கள் என்று பார்ப்பவரைக் கவரும் வசீகரத் தோற்றம்.

இந்த இளைஞரை இஸ்லாத்தின் வசீகரம் முற்றும் கவர, “இதுதான் வாழ்வியல் நெறி” என்று பிடித்துப்போக, ஏற்றுக் கொண்டு நுழைந்தார்.

அதற்கு அடுத்து அகபாவில் இரண்டாம் முறை ஏற்பட்ட உடன்படிக்கையைப் பற்றி முன்னரே படித்தோம். எந்தத் தோழர் என்று நினைவிருக்கிறதா? ஹபீப் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. அந்த உடன்படிக்கையின் போது 73 ஆண்களும் 2 பெண்களும் சத்தியப் பிரமாணம் செய்தார்களில்லையா? அந்தக் குழுவில் இவரும் ஒருவர். இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனைப் பொழுதில் அங்கம் வகித்தவர்.

பிறகு யத்ரிப் திரும்பிய முஆத், தன் வயதினை ஒத்த நண்பர்களுடன் ஒரு குழு அமைத்துக் கொண்டார். இளைஞர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் அவர்கள் சில செயல்களில் ஈடுபட்டனர்.  மௌட்டீகத்திலும் உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டு, இந்த இஸ்லாத்தை உணராமல் இருக்கிறார்களே ஊரிலுள்ள பெரியவர்கள் சிலர், அவர்களுக்கு எப்படி உணர்த்தலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினர். அவரவர் வீட்டிலுள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டம். பரபரவென்று காரியம் நடந்தது. சில சமயங்களில் சிலர் வீட்டிலிருந்து அவர்கள் கண்ணெதிரிலேயே சிலைகளை எடுத்துச் சென்றுவிடுவார்கள்; சில சமயங்களில் இரகசியமாக!

அப்பொழுது யத்ரிபில் அம்ரு இப்னு அல்-ஜமூ எனும் பெயருடைய, வயதில் மூத்தவர் ஒருவர் இருந்தார். இவர் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தோழர். பனூ சலமா கோத்திரத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். தனது வீட்டில் பிரத்யேகக் கடவுள் சிலை ஒன்றை வழிபாட்டிற்காக அவர் வைத்திருந்தார். அக்காலத்தில் மேல்குடி வகுப்பினர் வழக்கம் அது என்பதை அபூதர்தா ரலியல்லாஹு வரலாறு மூலம் படித்திருக்கிறோம். அந்தச் சிலையின் பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது. வெகு சிரத்தையாக அதைப் பரமாரித்து வந்தார் அம்ரு இப்னு அல்-ஜமூ. ஒவ்வொருநாள் காலையும் அதை நறுமணத் திரவியங்களால் கழுவி, பட்டாடை அணிவித்து, சிறப்பான கவனிப்பு நடைபெறும்.

முஆத் பின் ஜபலோடு அம்ரு இப்னு அல்-ஜமூவின் மூன்று மகன்களும் அடங்கிய இளைஞர் குழு, ஒருநாள் இரவு அந்தச் சிலையை கடத்திச்சென்று பனூ சலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர். காலையில் எழுந்த பெரியவருக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி! பல இடங்களில் தேடிப்பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று வைத்தார். “ஓ மனாத்! சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்”

அன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள். காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.

மூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக் கொண்டுவந்து வைத்தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், ”சத்தியமாகச் சொல்கிறேன். யார் இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது” என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரு இப்னு அல்-ஜமூ.

மீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.

காலையில் கண்விழித்த முதியவருக்கு, “அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா?” என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேடவேண்டியதாகிவிட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடக்க மாட்டாய்”

இளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது. பிறகு அம்ரு இப்னு அல்-ஜமூ ரலியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பை எட்டியது தனி வரலாறு. அது பிறகு இன்ஷா அல்லாஹ்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்குப் பிறகு யத்ரிப், “மதீனா”வாகியது. அதற்காகவே காத்திருந்ததைப்போல் அவரை நெருங்கி, அண்மி, உற்றத் தோழராகிப் போனார் முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. உத்தமத் தூதரிடம் அவ்விதம் நெருங்கிக் கிடந்தால் என்னவாகும்? குர்ஆன் ஞானம் நேரடியாய் புதுப் பொலிவுடன் அப்படியே பாய்ந்தது. பயின்றார்; படித்தார்; கற்றார்; அறிவுச் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கினார். தோழர்களின் மத்தியில் குர்ஆன் பற்றிய அளவற்ற ஞானமுடையவர்களில் ஒருவராகிப் போனார் முஆத்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றிக் கொண்டதை ஹகீம் பின் ஹிஸாம் வரலாற்றில் பார்த்தோமல்லவா? அந்த வெற்றிக்குப்பின் குரைஷிக்குல மக்கள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். அப்படிப் புதிதாய் இணைந்தவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தைப் போதிக்கத் திறமையான ஆசான் தேவைப்பட்டார். நபியவர்கள் அத்தாப் இப்னு உஸைத் ரலியல்லாஹு அன்ஹுவை மக்கா நகருக்கு கவர்னராக நியமனம் செய்தார்கள். அவர் இருபது வயது இளைஞர். அடுத்து அந்நகர மக்களுக்கு குர்ஆனைப் போதிக்கவும் இஸ்லாமியச் சட்டங்களை கற்றுத்தரவும் மற்றொரு இளைஞரான முஆத் பின் ஜபல் நியமிக்கப்பெற்றார்.

இட்ட பணியைச் சிறப்புடன் செய்து, சிலகாலம் கழித்து மதீனா திரும்பினார் முஆத்.

மதீனாவில் நபியவர்கள் தனக்கு அருளப்பட்டுக் கொண்டிருந்த இறை வசனங்களை அத்தியாயங்களாய் முறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆறுபேர் கொண்ட குழுவொன்று இருந்தது. அதில் வெகுமுக்கியமானவர் ஸைது இப்னு தாபித். அவர் தலைமையில் குர்ஆன், ஒரு நூலாகத் தொகுக்கப்பெற்ற விபரங்களைத்தான் அவரது வரலாற்றில் பார்த்தோம். அந்தக் குழுவில் மற்றொருவர் முஆத் பின் ஜபல். இந்தக் காலத்தைப்போல் சம்பிரதாயத்துக்கு விண்ணப்பித்துவிட்டு, பின்னணியில் செய்யப்படும் பலமான பரிந்துரையால் கிடைக்கும் இடமா அது? ஞானம் வேண்டும். அத்தகைய குர்ஆன் ஞானம் இருந்தது முஆதிற்கு! வாய்ப்பு அமைந்தது!

அத்தகைய அவருடைய கல்வியறிவையும் ஞானத்தையும் தோழர்களும் உணர்ந்திருந்தார்கள். அதனால் முஆதின்மீது மிகுந்த மதிப்பு இருந்தது அவர்களுக்கு. அவர் உரையாடினால் மிகக் கவனமாய்ச் செவிசாய்த்துக் கேட்டுக் கொண்டார்கள். அவருடைய இந்த அறிவாற்றலை நபியவர்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த கலீஃபாக்கள் அபூபக்ரும் உமரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்னுதாரணமாய் ஒரு முக்கியப் பயணம் அமைந்தது.

* * * * *

யமனிலிருந்த மன்னர் பாதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதையும் அங்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்ததையும் ஃபைரோஸ் அத் தைலமி ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் படித்தோம். அங்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு அடுத்து முக்கியத் தேவையொன்று ஏற்பட்டது. ஆசான் தேவை! என்ன செய்வதென்று யோசித்தவர்கள் குழுவொன்றை நியமித்து, “மதீனாவுக்குப் போய் நபியவர்களிடம் நற்செய்தி கூறி, ஆசான் அழைத்து வாருங்கள்” என்று அனுப்பிவைத்தார்கள் யமன் மக்கள்.

முஹம்மது நபியவர்களிடம் அந்தத் தூதுக்குழு வந்தது. “நாங்களும் எங்கள் மக்களுள் ஒரு பகுதியினரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்கு இஸ்லாமிய நெறிகளையும் போதனைகளையும் கற்றுத்தர உங்கள் தோழர்களை அனுப்பிவையுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

உடனே தோழர்கள் குழுவொன்று நியமனம் ஆனது. அனைவரும் தேர்ந்த ஆசான்கள்; மிகச் சிறப்பான குணாதிசயம் அமைந்தவர்கள். அவர்களுக்குத் தலைவராக முஆத் பின் ஜபல் நியமிக்கப் பெற்றார்.

அந்தத் தோழர்கள் குழு யமனுக்குக் கிளம்பியது. வாகனத்தின்மேல் அமர்ந்திருந்த முஆதுடன் சேர்ந்து சிறிது தூரம்வரை நடந்தே சென்று வழியனுப்பினார்கள் முஹம்மது நபி. நடந்தபடியே சில அறிவுரைகள் பகரப்பட்டன. காலா காலத்திற்கும் எப்பொழுதும் அனைவருக்கும் பொருந்தும் அறிவுரை. பக்கம் பக்கமாய்க் கட்டுரை எழுதுமளவு அர்த்தங்கள் பொதிந்த அறிவுரை.

“மக்களுக்கு விஷயங்களை எளிதாக்கு முஆத்! அவர்களுக்கு எதையும் கடினமாக்காதே. அவர்களுக்கு நற்செய்தி வழங்குபவனாய் இருந்துகொள். அவர்கள் உன்னைக் கண்டு வெறுத்து ஒதுங்கி விடாதவாறு நடந்து கொள்ள வேண்டும்”

இதில் அடங்கிவிடுகிறதே பலப் பிரச்சனைகளுக்கான தீர்வு. இதை மட்டும் படித்து ஒழுகினாலே போதாது?

தொடர்ந்து கூறினார்கள், “முந்தைய வேதம் அருளப்பெற்ற மக்களுக்கு மத்தியில் நீ செல்கிறாய்.  அவர்களை ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ள அழைப்பாயாக! – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் – என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். அதை உன்னிடமிருந்து அவர்கள் ஏற்றுக் கொண்டவுடன், அவர்கள் மீது ஐவேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அறிவி! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன், அவர்கள் மீது அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான் என்றும் அதைச் செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறவும். அதை ஏற்றுக்கொண்டால் அவர்களிடமுள்ள செல்வத்தின் மதிப்பு மிக்கதிலிருந்து ஸகாத்தாக எதையும் எடுக்க வேண்டாம். அநியாயம் இழைக்கப் பெற்று வருந்துபவன், தனது குறையை அல்லாஹ்விடம் தெரிவிக்கும் பிரார்த்தனையிலிருந்து உன்னைத் தற்காத்துக் கொள்! ஏனெனில் அத்தகைய பிரார்த்தனை அல்லாஹ்வை நேரடியாகச் சென்று அடைகிறது”

அழைப்பு! எளிமையான நேரடியான அழைப்பு. அஞ்ஞானத்திலுள்ள மக்களிடம் அதை எப்படிப் படிப்படியாகக் கொண்டு செல்வது என்பதன் மிக எளிய அறிவுரை.

அதுவரை அனைத்தையும் கவனமாய் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த முஆத் அடுத்து நபியவர்கள் கூறியதைக் கேட்டதும் துடித்து அழுதுவிட்டார். எந்த இதயம் தாங்கும்?

”முஆதே! அனேகமாய் அடுத்த ஆண்டு நீர் என்னைக் காண முடியாது. என்னுடைய அடக்கத்தலத்தையும் பள்ளிவாசலையும் மட்டுமே நீ காணக்கூடும்”

அதைக் கேட்ட முஆத் விம்மி வெடித்தார். அத்தகைய ஒரு சாத்தியம் உள்ளது என்ற எண்ணமே அதுவரை யாருக்கும் தோன்றியதில்லை. ஈட்டியாய்த் தாக்கியது அந்த முன்னறிவிப்பு. அவருடனிருந்த மற்ற தோழர்களும் அழுதார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவியலாத சோகம் அது.

பின்னர் மதீனாவை நோக்கித் திரும்பிய நபியவர்கள், ”இறையச்சமும் இறை பக்தியும் உடையவர்கள் யாரோ அவர்களெல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களே. அவர்கள் எங்கிருப்பவராயினும் சரி. எக்காலத்தவராயினும் சரி” என்று  கூற, கண்ணீர் மல்க, பிரியாவிடை பெற்றார் முஆத்.

அந்தக் கணத்தின் வலியையும் வேதனையையும் உணர நமக்கெல்லாம் நேசம் வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் நமக்கு நம் உயிரினும் மேல் என்ற நேசம் வேண்டும். அவர்களுக்கு அது இருந்தது; வரலாறு படைத்தார்கள்!

* * * * *

அக்காலத்தில் பாலைவனத்தில் பயணம் என்பது கால்நடை வாகனங்களின் மீது மட்டுமே! இளைப்பாற சிறந்த தங்குமிடங்களோ, உணவிற்கு வாகான சிற்றுண்டி விடுதிகளோ எதுவும் இருந்ததில்லை. இக்காலத்தில் அரபு நாடுகளில் நாம் காணும் சொகுசுப் பயணத்திற்கும் அதற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. கடும் வெயிலில் நிகழும் அந்தப் பயணமே பெரியதொரு சவால். கிளம்பிச் சென்றார்கள் முஆதும் தோழர்களும். ஒரே நோக்கம் மட்டுமிருந்தது. மக்களுக்கு இறைக்கல்வி பயிற்றுவிக்க வேண்டும்; அதற்காக எத்தகைய சோதனைகளையும் தாங்கலாம். அந்த எண்ணம் தரும் சொகுசே போதுமானதாய் இருக்க – பயணித்தனர்.

யமன் சென்றடைந்த முஆத் மக்களையெல்லாம் அழைத்தார். பாடங்கள் துவங்கின.

‘கல்வி முக்கியம்’, ‘வாழ்வின் மேன்மைக்குக் கல்வி கட்டாயம்’ என்பதில் நமக்கெல்லாம் அபிப்ராய பேதமில்லை. ஆனால் கல்வியென்பதன் அடிப்படை என்ன, எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதில்தான் மிகமிகப் பெரும்பான்மையோருக்கு விழிப்பும் இல்லை, உணர்வும் இல்லை. ரோமர்களின் நாகரீகமும் ஆளுமையும் அரேபிய எல்லைக்கு அப்பால் வல்லரசு சக்தியாய் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்க, பாலைவனத்தில் நாகரீகத்தின் வேறு பரிமாணத்தில் திகழ்ந்து கொண்டிருந்த அந்த மக்கள், பல்கலைக் கட்டிச் சிறக்க, உலக ஞானத்தில் போட்டியிட என்பதெல்லாம் இல்லாமல் நிதானமாய் வேறுவிதமான சிலேட்டும் பல்பமும் எடுத்து வைத்துக் கொண்டு பாடம் கற்க ஆரம்பித்தார்கள்.

ஏகத்துவம் உணருங்கள், இஸ்லாத்தின் அடிப்படையை அரிச்சுவடியாக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அவர்களுக்கு முதல் கட்டளை. வெற்றி என்பதன் அருஞ்சொற்பொருள் அவர்களுக்கு வேறுவிதமாய் சொல்லப்பட்டது! “அப்படியா சேதி?” என்று சம்மணமிட்டு அமர்ந்து, மாய்ந்து வியந்து கற்க ஆரம்பித்தார்கள் அவர்களும்.

என்ன நடந்தது? அமர்ந்தவர்கள் எழுந்து நின்றபோது வல்லரசுகள் அவர்கள் காலடியில் வந்து வீழ்ந்தன!

அப்படியெனில் இதர ஞானம்? தேவையில்லையா? தடுக்கப்பட்டுள்ளதா? அது, காந்தத்தின் மீது வந்து பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளுமே இரும்பு, அப்படித் தானாய் நிகழும்! வரலாறு உணர்த்தும் விசித்திரம் அது!

மாறாக, உலக ஞானத்தை அரிச்சுவடியாக்கிக் கொண்டு, அதில் சாதித்துவிட்டு, மீந்த பொழுதில் “படித்துத்தான் பார்ப்போமே” என்று இஸ்லாமியக் கல்வியை எட்டிப்பார்த்தால் என்னவாகும்? கண்களை விற்றுச் சித்திரம் வாங்கிய கதையாகிவிடும். மிகையில்லை! அதைத்தான் நிகழ்காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

தூதுவரின் தூதர் முஆத் அற்புதம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நபியவர்களிடம் பயின்ற நேரடிக் கல்வியாளர் அல்லவா? போதனைகள் பிரமாதமாய் அவரிடமிருந்து வெளிப்பட, யமன் மக்கள் மகிழ்ந்து பருகிக்கொண்டிருந்தார்கள். யமனில் இஸ்லாம் வலுவாகிக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் புதுப்பிரச்சினை முளைத்தது. எது? நமக்குப் பழைய பிரச்சினைதான் அது.

ஃபைரோஸ் அத்-தைலமி வரலாற்றில் பார்த்தோமே அஸ்வத் அல்-அன்ஸி என்ற பொய்யன்; “நானும் நபி” என்று அறிவித்துக் கொண்டானே, அவன் பிரச்சனை! குலப்பெருமையினாலும் பேச்சு வசீகரத்தினாலும் அவன்பின் மக்கள் கூட்டம் திரள, முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று மட்டும் கலிமாவையும் ஒற்றுமையையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றது. அஸ்வதிற்கு எதிராக அந்த உள்ளூர் முஸ்லிம்கள் அணிதிரண்டனர். ஆனால், அந்த முஸ்லிம் போர்வீரர்களின் பலம் ஒரே நகரத்தில் ஒருமித்துக் குவிந்தில்லாமல் பல பகுதிகளிலும் பரவியிருந்தது. அப்படிப் பரவியிருந்த குழு, தங்களுக்குள் ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டது. அவ்விதமான ஒரு குழுவிற்கு முஆத் பின் ஜபல் தலைவர். அவரும் இதரப் பகுதிகளான ஹம்தான், ஹுமைர் ஆகியனவற்றின் தலைவர்களும் சரியான முறையில் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அஸ்வதிற்கு எதிரான தங்கள் போரைத் திறம்பட நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.

ஒருவழியாக அஸ்வதை ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹு கொன்றொழிக்க, அந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்தது. அதையடுத்து சன்ஆ நகரம் மூன்று தலைவர்களின் பொறுப்பின்கீழ் வந்தது. அவர்கள் ஃபைரோஸ், தாதாவைஹ், ஃகைஸ். அப்பொழுது முஆத் பின் ஜபல் சன்ஆ வந்தடைந்தார். அவரைக் கண்டதும் “நீங்கள்தான் சன்ஆ நகரின் கவர்னர்,” என்று அந்த மூவரும் ஏகமனதாக அறிவித்துவிட்டனர்.

அவர் சன்ஆவின் கவர்னராக மக்களின் இமாமாகத் தொழவைக்க ஆரம்பித்தார். மூன்று நாளே ஆகியிருக்கும். மதீனாவிலிருந்து செய்தி வந்து சேர்ந்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னுயிர் நீத்த செய்தி. மதீனா திரும்பினார் முஆத். நபியவர்கள் இல்லாத மதீனாவைக் கண்டு அவர் அடைந்த சோகமும் துக்கமும் அளவிட முடியாதது!

* * * * *

அடுத்து, அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அபூபக்ரிடம் சென்றார். “முஆதைக் கூப்பிட்டு அனுப்புங்கள். அவருடைய வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் அவருக்கு வைத்துக் கொள்ளட்டும். அவர் யமனிலிருந்து ஈட்டி வந்திருக்கும் மற்றவற்றை நீங்கள் கருவூலத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.”

முஆத் ரலியல்லாஹு அன்ஹு யமனில் இஸ்லாமியப் பணிபுரிந்தபோது அவருக்கு ஊதியமும் சன்மானமும் கிடைத்திருந்தன. அவற்றை அவர் மதீனா திரும்பும்போது எடுத்து வந்திருந்தார். குறிப்பிடும்படியான அளவிற்கு அதன் மதிப்பு இருந்திருக்கிறது. கலீஃபாவின் பொறுப்பிலிருந்த கருவூலத்திலிருந்து உதவி தேவைப்படும் முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. உமருக்கு என்ன தோன்றியதென்றால் முஆதிடமுள்ள அதிகப்படியான செல்வத்தைக் கருவூலத்திற்குக் கொண்டுவந்துவிட்டால் அதைக்கொண்டு இன்னும்பல முஸ்லிம்களுக்கும் பயன் ஏற்படுத்தித் தரலாமே என்ற நல்லெண்ணம்.

அதைக் கேட்ட அபூபக்ரு, “அது முடியாது உமர்! நபியவர்கள் முஆதை யமனுக்கு அனுப்பிவைக்கும்போது அவர் அங்குப் பொருளீட்டி, தனக்குத் தானே  உதவிக் கொள்ளட்டும் என்று அனுமதி அளித்திருந்தார்கள். எனவே அவராக விரும்பி எதை என்னிடம் தருகிறாரோ அதைத் தவிர வேறொரு சல்லிக்காசையும் நான் அவரிடமிருந்து எடுத்துக் கொள்ள மாட்டேன்,” என்று சொல்லிவிட்டார்.

தன்னுடைய அபிப்ராயத்தை அபூபக்ரு ஏற்கவில்லை என்றதும், ‘ஒருவேளை அவர் சொல்வது சரியாக இருக்கக்கூடும்’ என்று உமர் நினைத்தார். இருந்தாலும், ‘ஒருமுறை நாமே போய் முஆதிடம் நேரடியாய்ப் பேசிப் பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது. நேரடியாய் அவரிடம் சென்றார் உமர். அபூபக்ரிடம் தான் கூறியதை இவரிடமும் கூறினார்.

அதற்கு முஆத், “இதோ பாருங்கள் உமர்! அல்லாஹ்வின் தூதர் என்னை யமனுக்கு அனுப்பி வைத்தார்கள். நான் பொருளீட்டிக் கொள்ள அனுமதித்தார்கள். அதனால் நான் ஈட்டிவந்ததைத் தர முடியாது,” என்று சொல்லிவிட்டார்.

முஆதும் மறுத்தபின், ‘நம்மால் ஆனது சொல்லிப் பார்த்தோம், அவர்கள் விரும்பவில்லை; பரவாயில்லை,’ என்று திரும்பிவிட்டார் உமர்.

உமரின் ஆலோசனையை நிராகரித்து அனுப்பியபின் யோசித்தார் முஆத். பழைய கனவொன்றும் அவருக்கு நினைவிற்கு வந்து அதிகம் சிந்திக்கத் தூண்டியது. கிளம்பி உமரிடம் சென்றார்.

“ஓ உமர்! நான் உம்முடைய ஆலோசனையை ஏற்கிறேன். உங்கள் சொற்படியே செய்கிறேன்.“

வியந்த உமரிடம், “என் மனமாறுதலுக்குக் காரணம் என்ன தெரியுமா? ஒருமுறை கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழியில் நான் மாட்டிக் கொண்டு கிடந்தேன். மூழ்கி விடப்போகிறேன் என்ற பயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அப்பொழுது தாங்கள்தாம் வந்து என்னைக் காப்பாற்றினீர்கள்,” என்று சொல்லிவிட்டு அபூபக்ரிடம் கிளம்பிச் சென்றார் முஆத். நடந்தவை அனைத்தையும் அவரிடம் கூறி, “ஆணையிட்டுச் சொல்கிறேன்; அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் இருப்பவையெல்லாம் இவைதான். நான் ஏதொன்றையும் தங்களிடமிருந்து மறைக்கவில்லை.”

அனைத்தையும் கேட்டுக் கொண்ட அபூபக்ரோ, “உமக்கு நன்கொடையாய் வந்த எதனையும் நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை முஆத்,” என்று கூறிவிட்டார்.

நன்கொடை, தன்னுரிமை, பொதுநலம் என்பதெல்லாம் அதனதன் இலக்கணத்துடன் புழங்கிக் கொண்டிருந்தார்கள், வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் – ரலியல்லாஹு அன்ஹும்.

இது இவ்வாறிருக்க, அக்காலம் போர்க் கோலத்தில் இருந்தது. ஒருபுறம் முஸைலமாவுடன் போர், மறுபுறம் இஸ்லாமிய அரசிற்கு எதிராகத் திரும்பிவிட்டவர்களுடன் போர், வேறொருபுறம் அரபு நாட்டின் எல்லை தாண்டிப் போர், என்று பலமுனைகளில் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. பற்பல தோழர்களும் போர்முனையில் வீர சாகசம் புரிந்துகொண்டிருக்க, தன்னையும் களத்திற்கு அனுப்பும்படி முஆத் கலீஃபாவிடம் வேண்டிக்கொண்டிருந்தார். ஆனால் உமரோ அவரை மதீனாவை விட்டு வெளியே போருக்கு அனுப்பாமல்  தடுத்துக் கொண்டிருந்தார். காரணம் இருந்தது; முன்னுரிமை பெறும் காரணம். அவரைப் போன்ற ஞானமுள்ளவர்கள் இஸ்லாமியத் தலைநகரில் ஆலோசனை வழங்க கலீஃபாவுடன் இருக்க வேண்டும் என்பது ஒன்று; மதீனத்து மக்களுக்கும் முஆதின் சேவை அத்தியாவசியம் என்பது இன்னொன்று. ஏனெனில் ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்களே, “என்னுடைய சமூகத்தில் ஹலால் (அனுமதிக்கப்பட்டவை), ஹராம் (தடுக்கப்பட்டவை) பற்றிய தெள்ளிய அறிவு கொண்ட ஒருவர் முஆத் பின் ஜபல்,” என்று அவருடைய அறிவின் ஆளுமைக்கு நற்சான்று வழங்கியிருந்தார்கள்.  இதையெல்லாம் மனதில் கொண்டு உமர் தனது எண்ணத்தில் உறுதியாயிருந்தார்.

அபூபக்ரு கேட்டார் “புரிகிறது. ஆனால் வீரமரணத்திற்காக ஏங்குபவரை எப்படி நாம் தடுத்து நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும் உமர்?“

அதற்கு உமர், ”அல்லாஹ் நாடினால் ஒரு மனிதர் படுக்கையில் இருக்கும் போதும் அவன் அவருக்கு வீரமரணத்தை அளிக்க முடியுமே!”

சற்று மூச்சிழுத்து யோசியுங்கள். முஆத் அடிப்படையில் கல்வியாளர். மக்களுக்கு ஓதிக் கொடுத்து, பிரசங்கம் புரிந்து, தொழுதோமா, நோன்பு வைத்தோமா என்று பள்ளிவாசலில் தனது வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளவில்லை. மரணத்தை நோக்கி ஓடுவதற்கு,  கலீஃபாவுடன் மல்லுக்கட்டி நின்றார். ஏனெனில் அவர் கற்ற கல்வி அவருக்கு வீரத்தை உபரியாக்கவில்லை. மூலாதாரமாக ஆக்கியிருந்தது.

அப்படி அன்று முஆதைத் தடுத்து நிறுத்திய உமர் பிறகு தனது ஆட்சியின்போது, அவரை “இங்கே வாருங்கள்” என்று அழைத்து யமன் நாட்டிற்கு கவர்னராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார். அதற்கும் காரணம் இருந்தது. ‘இவர் இது செய்வார்’ என்பது மட்டுமல்லாமல், ‘எவர் எங்கு எப்போது எது செய்ய வேண்டும்’ என்பதைக் கணிப்பதில் உமருக்கு அசாத்திய சாமர்த்தியம் இருந்தது. தவிர, அவர் கவர்னர்களைத் தேர்ந்தெடுத்ததே தனிக் கட்டுரை அளவிற்கான சமாச்சாரம். பிறிதொரு போதில் அதைப் பார்ப்போம். இப்பொழுது இன்னும் கொஞ்சம் யமன்.

யமன் மக்களிடம் இஸ்லாம் வலுவாய்ப் பதிந்திருந்தது. மக்களிடம் செல்வம் மிகைத்திருந்தது. அதற்குரிய ஸகாத்தை அளிப்பதில் பேருவப்பு நிறைந்திருந்தது. முதல் ஆண்டு அங்கு மக்களிடமிருந்து திரட்டப்பெற்ற ஸகாத் செல்வத்தை அங்கிருந்த மற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்ததுபோக மீந்ததை மதீனாவிற்கு அனுப்பிவைத்தார் முஆத். ஆட்சேபித்தார் உமர்! பிறகு கடிதமெழுதினார். “நன்றாகக் கேட்டுக் கொள்ளும் முஆத்! அங்கிருந்து வரி வசூல் செய்து அனுப்ப நான் உம்மை அனுப்பி வைக்கவில்லை. யமனின் செல்வந்தர்களிடமிருந்து ஸகாத்தை வாங்கி யமனிலுள்ள ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கச் சொன்னேன்”

முஆத் பதிலெழுதினார், “அது புரிகிறது! ஆனால் என்ன செய்ய? இங்கு அதைப் பெறுவதற்கு ஆள் உள்ள நிலையிலா அதை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்?” ஸகாத் பணத்தை முழுவதுமாய் வினியோகிக்க ஏழைகளே இல்லாத அளவிற்கு யமனிலுள்ள நிலைமை சிறப்பாகியிருந்தது!

அதற்கு அடுத்த ஆண்டு நிலைமை மேலும் மாறியது. இம்முறை ஸகாத்தாக சேர்ந்த செல்வத்திலிருந்து பாதியை உமருக்கு அனுப்பி வைத்தார் முஆத். மீண்டும் அதே போல் கடிதப் பரிவர்த்தனை நிகழ்ந்தது.

மூன்றாம் ஆண்டு, நிலைமை அதைவிட மாறியது. முழு ஸகாத்தையும் மதீனாவிற்கு அனுப்பி வைக்கும் நிலை. இம்முறை மிகக் கடுமையாக ஆட்சேபித்தார் உமர். முஆத் பதில் அனுப்பினார், “அமீருல் மூஃமினீன்! நம்புங்கள், இங்கு ஒருவர்கூட ஸகாத் பெறும் நிலையில் இல்லை.”

விசித்திரமாயில்லை? அது இஸ்லாம் கற்றுத்தந்த பொருளாதாரம்! ஏட்டுச் சுரைக்காய் அல்ல!  அவர்கள் கற்றார்கள், நிகழ்த்திக் காட்டினார்கள்!

* * * * *

காலம் உருண்டு கொண்டிருந்தது. இஸ்லாம் பரவிக் கொண்டிருந்தது.

அபூஸுஃப்யானின் மனைவியருள் ஸைனப் பின்த் நவ்ஃபல் என்பார் ஒருவர். அவ்விருக்கும் பிறந்த பெண்ணை நபியவர்கள் மணமுடித்திருந்தார்கள். அவர், அன்னை உம்மு ஹபீபா (ரலி). உம்மு ஹபீபாவுக்கு ஒரு சகோதரர். பெயர் யஸீத். இந்த யஸீத் இப்னு அபீஸுஃப்யான் சிரியாவில் கவர்னராயிருந்தார். அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. யமன் மக்கள் நபியவர்களுக்குக் கோரிக்கை அனுப்பியதைப்போன்ற நெருக்கடி. கலீஃபா உமருக்கு ஒரு கடிதம் எழுதினார் அவர். “அமீருல் மூஃமினீன்! மக்கள் சிரியாவின் நகரங்களில் வந்து குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். நகரங்கள் பெருகி விரிவடைந்து வருகின்றன. இந்த மக்களுக்கெல்லாம் குர்ஆன் போதிக்கவும், மார்க்க சட்ட திட்டங்கள் போதிக்கவும் ஆசான்கள் தேவைப்படுகிறார்கள். தயவுசெய்து அதற்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி உதவுங்கள்”

ஐந்து தோழர்களை அழைத்தார் உமர். முஆத் பின் ஜபல், உபாதா இப்னு ஸாமித், அபூஅய்யூப் அல்அன்ஸாரி, உபை இப்னு கஅப், அபூதர்தா – ரலியல்லாஹு அன்ஹும். அபூதர்தா சிரியா கிளம்பிச் சென்ற தகவலை அவரது வரலாற்றில் நாம் முன்னரே படித்த நிகழ்வுதான் இது.

உமர் கூறினார், “அல்லாஹ்வின் கருணை உங்கள்மேல் பொழிவதாக! சிரியாவிலுள்ள உங்களின் சகோதரர்கள் என்னுடைய உதவியைக் கேட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களுக்கு குர்ஆனும் நம் மார்க்கமும் போதிக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களிலிருந்து மூன்று பேரை நீங்களே தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். அல்லது சீட்டில் பெயர் எழுதிக் குலுக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லையா, உங்களில் மூவரை நான் தேர்ந்தெடுப்பேன்”

“இதில் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்க என்ன இருக்கிறது? அபூஅய்யூப் மிகவும் வயது முதிர்ந்தவர். உபை இப்னு கஅப், இயலாத நிலையில் உள்ளார். ஆகவே நாங்கள் மூவரும் செல்வதற்குத் தயார்,” என்று ஏகமனதாகத் தெரிவித்துவிட்டார்கள்.

மகிழ்வடைந்த உமர் அவர்களுக்குக் கட்டளைகள் வழங்கினார். “பணியை ஹிம்ஸில் துவங்குங்கள். அங்குப் பணி திருப்திகரமாய் முடிந்ததும், உங்களில் ஒருவர் அங்குத் தங்கிக் கொண்டு, ஒருவர் டமாஸ்கஸ் நகருக்கும் மற்றொருவர் ஃபலஸ்தீனுக்கும் செல்லவும்”

“உத்தரவு கலீஃபா!” என்று அந்த மூவர் அணி கிளம்பி ஹிம்ஸ் சென்றடைந்தது. பணி துவங்கியது. முஆத் பின் ஜபல் புகழ் அங்கும் பரவியது.

அதற்குச் சான்றாய் யஸீத் இப்னு குதைப் என்பவர் சிலாகித்ததை வரலாற்று ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளார்கள். ”நான் ஒருமுறை ஹிம்ஸில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு சுருள் முடியுடைய இளைஞர் ஒருவரைக் கண்டேன். அவரைச் சுற்றி மக்கள் குழுமியிருந்தனர். அவருடைய சொற்பொழிவு தீப்பொறி பறந்து வருவது போலிருந்தது. அவர் மக்களைத் தம்வசப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் யாரென்று விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.   அவர்தாம் முஆத் பின் ஜபல்”

சிலகாலம் கழித்து உபாதா இப்னு ஸாமித் அங்குத் தங்கிக்கொள்ள, அபூதர்தாவும் முஆதும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொரு தோழரைப் படிக்கும்போதும் தவறாமல் அடிப்படையில் ஒரு விஷயத்தைக் காணலாம். போரோ, கல்வியோ – சளைக்காமல் களைப்படையாமல் இறைப்பணியைத் தோள், நெஞ்சு, முதுகு என்று சுமந்து தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். அலுக்கவில்லையே அவர்களுக்கு! அந்த ஓட்டத்துக்கான பிரதிபலன் நம் கலிமாவின்பின் ஒளிந்திருக்கும் சொர்க்க வாழ்க்கை என்பது நமக்கு அதிகம் புரிவதில்லை; அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இப்போதைக்கு முஆதைத் தொடர்வோம்.

டமாஸ்கஸ் நகரில் ஒரு பள்ளிவாசல். ஏறக்குறைய முப்பதுபேர் கொண்ட தோழர்களின் கல்வி பயிலும் குழு ஒன்று அமர்ந்திருந்தது. அனைவரும் மூத்த தோழர்கள். அவர்களுடன் அமைதியாய் இளைஞர் முஆத் அமர்ந்திருந்தார். தோழர்கள் மத்தியில் ஏதாவது ஒன்றைப் பற்றி கருத்து வேறுபாடு தோன்றும்போதெல்லாம், அவர்கள் முஆதை அணுகித் தங்களது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அபூ முஸ்லிம் அல்-கவ்லானி என்பவர் அப்பொழுது அந்தப் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘வயதில் மூத்த தோழர்களுக்கு இளைஞர் ஒருவர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்; அவர்களும் அப்படி கவனித்துக் கேட்கிறார்கள்! யாராய் இருக்கும்?’

அருகிலிருந்த ஒருவரிடம் விசாரித்தார். “அவர்தாம் நபித்தோழர் முஆத் பின் ஜபல்,“ என பதில் வந்தது.

மறுநாள் மதியம் லுஹர் தொழுகைக்காக அபூ முஸ்லிம் அல்-கவ்லானி பள்ளிவாசலுக்குச் சென்றபோது முஆத் அங்கு வந்து தொழுது கொண்டிருந்தார். கருமையான கண்களுடனும், பளீரெனும் வெள்ளைப் பற்களுடனும், அறிவொளி வீசும் அமைதியான தோற்றத்துடனும், முதல் நாள் அவரைக் கண்டதிலிருந்து அபூ முஸ்லிம் அல்-கவ்லானிக்கு அவர் மேல் இனந்தெரியா மதிப்பு ஏற்பட்டிருந்தது.

முஆத் தொழுகையை முடித்ததும் அவரை நெருங்கி முகமன் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மேல் ஆணையாக, நான் உம்மை அல்லாஹ்விற்காக நேசிக்கிறேன்” என்று கூறினார் அபூ முஸ்லிம்.

பதில் முகமன் கூறி அவரை நிமிர்ந்து பார்த்த முஆத் ஆச்சரியமாகக் கேட்டார், “அல்லாஹ்வின் மேல் ஆணையாகவா?”

”ஆம், அல்லாஹ்வின் மேல் ஆணையாக”.

“அப்படியானால் ஒரு செய்தி சொல்கிறேன், மகிழ்வுறுங்கள். ‘என் பொருட்டு யார் இருவர் பரஸ்பரம் நேசம் கொள்கிறார்களோ, பரஸ்பரம் அமர்கிறார்களோ, பரஸ்பரம் சந்தித்துக் கொள்கிறார்களோ, பரஸ்பரம் தாராளமாய்க் கொடுத்து உதவிக் கொள்கிறார்களோ, நான் அவர்களை நேசிக்கிறேன்’ என்று இறைவன் அறிவித்துள்ளதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெரிவித்தார்கள்,” என்றார் முஆத்.

மேலும் விவரித்தார், “நான் அந்த நேசம் பற்றி மேலும் நபியவர்களிடம் விசாரித்தேன். அல்லாஹ்வின் தூதரே! எது சிறப்பான திடநம்பிக்கை?”

“அதற்கு அவர்கள் ‘ஒருவரை/ஒன்றை இறைவனுக்காக மட்டுமே நேசிக்கவோ, இறைவனுக்காக மட்டுமே வெறுக்கவோ செய்து, உனது நாவை இறைத்துதியில் மும்மரமாக வைத்திருப்பதாகும்,’ என்று பதில் அளித்தார்கள்”

“அல்லாஹ்வின் தூதரே! இதைத் தவிர வேறு ஏதும் உண்டா? என்று கேட்டேன்”

“அதற்கு நபியவர்கள், ‘நீ உனக்காக எதை விரும்புகிறாயோ, எதை வெறுக்கிறாயோ அதையே மற்றவருக்கும் விரும்ப வேண்டும், வெறுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.”

ஆசையாய்த் தன்னை நெருங்கி முகமன் கூறி வாழ்த்தியவருக்கு மாபெரும் நற்செய்தி வழங்கி அனுப்பிவைத்தார்கள் முஆத். நமக்கெல்லாம் இது படித்த/அறிமுகமான ஹதீஸாக இருக்கலாம். ஆனால் நபியின் மொழியை முதன்முறையாக ஓர் உற்ற தோழரின் வாயிலாகக் கேட்டு உணரக்கூடிய பரவசம் தனி சுகம். அதை அன்று அபூமுஸ்லிம் அல்-கவ்லானிக்கு அளித்தார் முஆத்.

தோழர்களுக்கு அடுத்தத் தலைமுறையினர் கூறியதெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு தம் சகாக்களிடம் முஆதைப் பற்றிப் பாராட்டிக் கூறியது – அது வேறுவகை நற்சான்று.

முஆத் பின் ஜபல், நபி இப்ராஹீம் (அலை) போல் சிறப்பானவர் என்பது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்தின் அபிப்ராயம். ஒருமுறை தன் சக தோழர்களிடம் அவர் கூறினார், “முஆத் ‘ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை’“ என்று குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 120வது வசனத்தை ஓதி விவரித்தார் அவர்.

ஆச்சரியத்துடன் அதை கேட்டுக் கொண்ட அவர்கள், “இந்த வசனத்தில் உம்மா என்பது என்ன?“ என்று விளக்கம் கேட்டார்கள்.

“மக்களுக்கு நன்மை போதிப்பவர் என்று அர்த்தம்” என்று பதிலளித்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் பிறகு அவர்களிடம் கேட்டார், ”அந்த வசனத்தில் உள்ள ‘அல்-கானித்’ என்ன தெரியுமா?”

“தெரியாது,”

“கானித் என்றால் அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமுற்றாய் அடிபணிந்தவன் என்று அர்த்தம்.”

முஆத் அத்தகைய சிறப்புக்குரியவர் என்பது அத்தோழரின் கருத்து. அந்த அளவிற்கு, பரந்த இஸ்லாமிய சட்ட அறிவும் மிகமிக உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் முஆதிடம் இருந்தன. அவருடைய ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும் எத்தகைய கடின கேள்விகளுக்கும் பதில் அளிக்கவல்ல ஆற்றலும் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்குச் சிறப்பான அங்கீகாரத்தை அளித்திருந்தன. மக்கள் மெச்சத் தக்கவராய்த் திகழ்ந்தார் அவர்.

அத்தகைய தகுதியெல்லாம் அவருக்கு இருந்ததாலேயே உமரின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்துக் கொண்டிருந்தார் முஆத். அது என்ன குழு? உமருக்கு மிகச் சிக்கலான பிரச்சனைகள் தோன்றும் போதெல்லாம் அவருக்கு ஆலோசனை அளிக்கும் குழு. அக்குழுவில் இருந்த மற்ற இருவர் உபை இப்னு கஅப், ஸைத் இப்னு தாபித். அவர்களது அறிவாற்றல்மேல் அத்தகைய உயர்வான மதிப்புக் கொண்டிருந்தார் உமர்.

ஒருமுறை உமர் மனமாரக் கூறிய பாராட்டும் ஒன்று உண்டு. “முஆதைப்போல் இன்னொருவரை எந்தப் பெண்ணும் ஈன்றெடுக்க முடியாது”

* * * * *

முஆதின் பயணம் தொடர்ந்தது. ஃபலஸ்தீன் சென்றடைந்தவர் தனக்கிடப்பட்ட பணியைத் தொடர ஆரம்பித்தார். மக்களைக் கல்வி பயிலத் தூண்டுவது அவரது அறிவுரையில் வாடிக்கை.

“மக்களே! அறிவைத் தேடுங்கள். அல்லாஹ்வின் பொருட்டு கல்வி கற்பது இறைபக்தியாகும். அதைத் தேடுவது வழிபாடாகும். அதை விவாதிப்பது இறைத்துதியாகும். அதைச் செயற்படுத்துவது  அறப்போராகும். கல்வியறிவில்லாத பிறருக்குக் கற்பிப்பது தர்மமாகும். கல்வியறிவு என்பது, நமக்கு ஆகுமானது (ஹலால்)எது, தடுக்கப்பட்டது (ஹராம்)எது என்று இனங்காண உதவும். கல்வி, சுவர்க்கவாசிகளின் கலங்கரை விளக்காகும். ஒருவர் தனிமையில் இருக்கும்போது அது ஆறுதலளிக்கிறது. சாதாரண சூழலிலும் சிக்கலான சூழலிலும் சரியானபடி நாம் நடந்துகொள்ள அது உதவும். கல்வி என்பது நமது எதிரிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம். கல்வியறிவின் காரணத்தால் அல்லாஹ் மக்களின் தரத்தை உயர்த்துகிறான். அவர்களை உயர்குலத்தாருள் ஒருவராக்குகிறான். தலைவர்கள் ஆக்குகிறான். கல்வியாளரது முன்மாதிரியை மக்கள் பின்பற்றுவார்கள். அவரது அபிப்ராயத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்”

படிக்க வேண்டும்; பாடம் படிக்குமுன் முஆத் விட்டுச் சென்ற மேற்காணும் வாசகங்களை மீண்டும் மீண்டும் நாம் படிக்க வேண்டும்.

இப்படியாக அவர் பணி செவ்வனே தொடர்ந்து கொண்டிருக்க இறைவன் நிர்ணயித்த விதி வந்திறங்கியது.

அம்வாஸ் (Amwas) என்றொரு சிறு நகரம். ஃபலஸ்தீன் நாட்டில் ஜெருசலேம்- ரம்லா நகர்களின் இடையே உள்ளது. ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டு. அங்கு முதன் முதலில் கொள்ளைநோய் (plague) தோன்றிப் பரவ ஆரம்பித்தது. தோன்றியது; முடிந்தது என்றில்லாமல் முஸ்லிம்களுக்கு எக்கச்சக்க உயிர்ச் சேதத்தை விளைவித்த துக்கம் அது. இஸ்லாமிய வரலாற்றில் அம்வாஸின் கொள்ளை நோய் [Plague of Amwas (Emmaus)] என்றே இடம்பெற்று நிலைத்து விட்டது.

சிரியாவில் நிலைமை மிகமோசமாகியிருந்தது. அபூஉபைதா இப்னுல் ஜர்ரா ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது அங்கு கவர்னராக இருந்தார். மக்களெல்லாம் பாதிப்புற்று மரணமடைந்து கொண்டிருக்க கலீஃபா உமர், அபூஉபைதாவை மதீனா திரும்பி விடுமாறு அழைத்தும் அவர் இணங்கவில்லை. ஆனால் இறைவனிடம் “யா அல்லாஹ் எனக்கும் இதன் பங்கைத் தா!” என்று வேண்ட அவரையும் நோய் தொற்றியது; மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அப்பொழுது முஆத் பின் ஜபலை அங்கு அழைத்து, “முஆத்! என் பணி முடிந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது. நீ இவர்களுக்குத் தொழுகையை முன்நின்று நடத்தவும்,” என்று கேட்டுக் கொள்ள ஏற்றுக் கொண்டார் முஆத்.

பின்னர் அபூஉபைதா மரணமடைந்ததும் எழுந்து நின்று மக்களிடம் உரையாற்றினார் முஆத். “மக்களே! அல்லாஹ்விடம் உங்கள் பாவங்களுக்காக உளமார வருந்துங்கள். ஒருவன் தனது பாவங்களுக்காக வருந்திய நிலையில் மரணமுற்று அல்லாஹ்வைச் சந்திக்கும்பொழுது அவனின் பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்விற்குக் கடமையாகிறது. யாரெல்லாம் கடன்பட்டிருக்கிறீர்களோ அவர்களெல்லாம் கடனை திருப்பிச் செலுத்திவிடுங்கள். ஏனெனில் அதுவரை அந்த மனிதன் அந்தக் கடனுக்கு அடைமானமாகும். யாரெல்லாம் சக முஸ்லிம் ஒருவரிடம் பிணக்குற்று விலகியிருக்கிறீர்களோ, அவர்களெல்லாம் அவரைச் சந்தித்து வேற்றுமையை நிவர்த்தி செய்துகொண்டு கைகுலுக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவர் சக முஸ்லிமிடம் பிணக்குற்று மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருத்தல் தகாது. அந்தப் பாவம் அல்லாஹ்வின் முன் மிகக் கடுமையானதாகும்.

”முஸ்லிம்களே! நீங்கள் தலைவர் ஒருவரை இழந்த துயரத்தில் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். அவரைவிடப் பணிவடக்கமான ஒருவரை, நேர்மையான ஒருவரை, ஏமாற்றுதல் துரோகம் போன்றவையெல்லாம் அறியாத அவரைப்போல் ஒருவரை, பொதுமக்களிடம் நேர்மையான ஒருவரை, அவர்களிடம் இரக்க உணர்ச்சி மேம்பட்ட ஒருவரை, நான் காணமுடியாது. இறைவனின் பரிவு அவர்மேல் பொழிய இறைஞ்சுங்கள். அவருடைய இறுதித் தொழுகையில் கலந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பானாக! அவரைப்போல் மிகச் சிறந்த ஒருவர் இனி உங்களுக்குத் தலைமையேற்க முடியாது”

பின்னர் முஆத், அபூஉபைதாவின் இறுதித் தொழுகையை நிகழ்த்தி, அடக்கம் செய்துவிட்டு, அந்த இழப்பைப் பற்றி கலீஃபா உமருக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்துவிட்டு விம்மி அழுதார் உமர். அபூஉபைதாவின் மரணத்திற்குப் பிறகு முஆத் பின் ஜபலே மக்களுக்கு இமாமாய் இருந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். கொள்ளை நோயின் கடுமையோ அதிகமாகிக் கொண்டே இருந்தது. மேலும் மேலும் மிகமோசமாகப் பரவிக் கொண்டிருந்தது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலம். விரைவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை; உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அப்பொழுது மக்களை அழைத்து உரை நிகழ்த்தினார் முஆத். “மக்களே! இந்த நோய் உங்கள் இறைவனின் கருணையாகும். உங்கள் நபியின் துஆவை இறைவன் அங்கீகரித்ததாகும். ஏனெனில் முந்தையக் காலங்களில் இங்ஙனமாகவே மிகச் சிறந்த மக்கள் இறந்துள்ளனர். இந்த நோயில் முஆத் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டுகிறார்”

ஆளாளுக்குப் பங்கு கேட்கிறார்களே, இதென்ன பரிசா, அன்பளிப்பா? ஆனால் அவர்களுக்கு அந்த உலகமகா சோதனையும் இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகவே தோன்றியது; கேட்டார்கள். மக்களின் சுக, துக்கத்தில் பங்கு என்பதை, துக்கம் பிரம்மாண்டமாய் தாக்கிய போதும் அட்சரம் பிசகாமல் பங்கெடுத்து அந்தத் தலைவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

முஆதின் மகன் அப்துர் ரஹ்மானை அந்நோய்த் தொற்றியது. தந்தையிடம் மகன் கூறினார், “இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (இதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்”. கூறினார் என்பதைவிட ஓதினார் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அது குர்ஆனின் 2ஆம் அத்தியாத்தின் 147ஆவது வசனம் அது.

அதற்கு முஆத், ”அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்,” என்றார். அந்த பதிலும் இறைவசனம். குர்ஆனின் 37ஆம் அத்தியாத்தின் 102ஆவது வசனம். குர்ஆனில் உருவான சமூகம் அல்லவா அது? உரையாடலில், வசனங்கள் இழைந்திருந்தன. அதுவே மூச்சாகவும் பேச்சாகவுமிருந்தது. வேறென்ன சொல்வது?

மகன் இறந்ததும் முஆதை அந்த நோய் தொற்றியது. அந்த நோயின் வேதனையும் வலியும் மிகவும் கடினமானதும்கூட. அதன் துன்பத்தில் இருந்த அவரை அவருடைய தோழர்கள் காண வந்திருந்தனர். அந்த இறுதி நேரத்திலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் முஆத்.

“வாழ்க்கையில் அவகாசமும் வாய்ப்பும் இருக்கும்பொழுதே நற்காரியங்கள் புரிவதில் கடினமாய் உழையுங்கள். தவறிப்போனால், ஆஹா, இன்னும் கொஞ்சம் நற்காரியம் புரிந்திருக்கலாமே என்று பின்னர் வருந்துவீர்கள். இறந்து போகும்முன் செலவழித்துவிடுங்கள், தேவையானதை உங்கள் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லுங்கள். நீங்கள் உண்பது, பருகுவது, உடுத்துவது, செலவழிப்பது தவிர உங்களது சொத்திலிருந்து வேறு எதுவுமே உங்களுடையதல்ல. ஏனெனில் அவை உங்கள் வாரிசுதாரர்களுக்கே சென்று சேரும்”

அவரது சகாக்களுக்குக் கண்ணீர் பெருகியது. ”ஏன் அழுகிறீர்கள்?”

“தாங்கள் இறந்ததும் கல்வியறிவுடனான எங்களது தொடர்பு அறுபட்டுப் போகுமே, அதை நினைத்து அழுகிறோம்”

“அறிவும் இறை நம்பிக்கையும் என்றென்றும் நிலைத்திருக்கும். யாரெல்லாம் அதைத் தேடுகிறார்களோ அவர்கள் அதை குர்ஆனிலும் நபிவழியிலும் கண்டு கொள்வார்கள்”

எத்தகைய எளிமையான உண்மை? அறிவு தொலையவில்லை. அறிவற்று நாம்தானே அதை வேறெங்கெங்கோ தேடித் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்தார் முஆத், “குர்ஆனுக்கு எதிராய் எதைக் கேள்விப்பட்டாலும் அதை ஆராயுங்கள். ஆனால் நீங்கள் கேள்விப்படுவதற்கு எதிராய் குர்ஆனில் ஆராயாதீர்கள்”

அனைத்திற்கும் அளவுகோல் குர்ஆன். வேறெதுவும் குர்ஆனிற்கு அளவுகோல் அல்ல. குர்ஆனைக் கொண்டே அனைத்தையும் ஆராய வேண்டுமேயன்றி, மற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராயக் கூடாது என்று அறிவுறுத்தினார் முஆத். அவர் மக்களுக்கு குர்ஆன் போதித்ததெல்லாம் இந்த அடிப்படையிலே அமைந்திருந்தது.

விழிப்பும் மயக்கமுமான அவரது இறுதி நேரத்தில் விழிப்பு வரும்போதெல்லாம் கூறினார், ”என் இறைவா! நீ விரும்பும் வகையில் என்னை மரணிக்கச் செய். உன் புகழ்மீது ஆணையாகக் கூறுகிறேன், என் நெஞ்சம் உன்னை விரும்புகிறது என்பதை நீ அறிவாய். தனது மரணத்தைக் கண்டு வருந்துபவன் வெற்றியடைய முடியாது. யா அல்லாஹ்! நான் எந்தக் காரணத்திற்காக இந்த உலகில் தங்கியிருக்க விரும்பினேன் என்பதை நீ அறிவாய். மரம் நடவோ, அணை கட்டவோ அல்ல. ஆனால் நெடிய இரவுகளில் உன்னைத் தொழுவதற்கும் நெடிய பகல் பொழுதுகளில் உனக்காக நோன்பு நோற்று, அந்தக் கடுமையான வெப்பத்தில் ஏற்படும் தாகத்தை உனக்காகத் தாங்குவதற்கும், அறிஞர்கள் உன்னைத் துதித்தவாறு அமர்ந்திருக்கும் அமர்வுகளில் கலந்திருப்பதற்காக மட்டுமே இந்த உலகை நான் விரும்பினேன்”

மரணத்தின் இறுதித் தருணம் அவரை நெருங்க, கிப்லாவின் திசையில் தனது முகத்தைத் திருப்பிய முஆத், ”பேராவலுடன் நான் நேசிக்கும் நேசத்திற்குரியவரே, வருகை புரிய நீண்ட நாள் காத்திருந்த விருந்தினரே, வருக! உம்மை வரவேற்கிறேன்! யா அல்லாஹ்! நம்பிக்கைக் கொண்டு உண்மையாளர்களாய்த் திகழ்பவர்களின் ஆன்மாவை எங்ஙனம் நீ கைக்கொள்வாயோ அங்ஙனம் என் ஆன்மாவை எடுத்துக்கொள்”

தொழுகைக்கும் நோன்பிற்கும் எத்தகைய வரையறை அவரது மனதில் இருந்திருக்கிறது! உலகில் தங்கியிருக்க விழைந்ததும் சரி, மரணத்தை அஞ்சாமல் வரவேற்றதும் சரி, அனைத்திலும் இறை உவப்பல்லவா அடித்தளம்.

அவரது இவ்வுலகப் பயணம் முடிவுற்றது. அப்பொழுது அவருக்கு வயது 38.

இறப்பதற்குமுன் அம்ரு இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவை அழைத்து, தன்னுடைய தலைமைப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் முஆத். அம்ரு இப்னுல்ஆஸ் முஆதின் இறுதித் தொழுகையை நிறைவேற்றி, அவரை அடக்கம் செய்துவிட்டு இறைஞ்சினார், “ஓ முஆத்! நாங்கள் அறிந்தவரைக்கும் மிகச் சிறந்த நேர்மையாளர்களில் ஒருவர் நீர். முஸ்லிம்களில் மிகச் சிறந்த ஒருவர் நீர். கல்வியறிவற்றவர்களுக்குக் கல்வி அளித்தீர். கொடியவர்களிடம் மிகக் கடுமையாய் நடந்து கொண்டீர். இறை நம்பிக்கையாளர்களிடம் அபாரமான இரக்கம் கொண்டிருந்தீர். அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழியட்டுமாக”

செய்தி உமருக்கு வந்துச் சேர்ந்தது. அவருக்கும் முஸ்லிம்களுக்கும் அழுகை பீறிட்டது! உமர் கூறினார், “அல்லாஹ்வின் கருணை அவர்மீது பொழியட்டுமாக. அவருடைய மரணத்தினால் நம் சமூகம் அளவற்ற அறிவாற்றலை இழந்துவிட்டது. பற்பலமுறை அவர் நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார், நாம் ஏற்றுக் கொண்டோம். அது எத்தகைய நற்பேற்றை நமக்கு அளித்தது. நாம் அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்; அதனால் பயனடைந்திருக்கிறோம். அவர் நாம் நேர்வழியில் நடக்க உதவியிருக்கிறார். அல்லாஹ் அவருக்கு வெகுமதி வழங்குவானாக; நியாயம் அளிப்பானாக”

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.