தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-1)

Share this:

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ

عدي بن حاتم الطائي
 
பகுதி – 1

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு பெண் குரல் ஒலித்தது. “அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்துவிட்டனர். என்னுடைய பாதுகாவலர் என்னைக் கைவிட்டு மறைந்துவிட்டார். என்னிடம் கருணை புரியுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக!”

பள்ளிவாசலுக்கு வெளியே போர்க் கைதிகளைச் சிறைவைக்கும் கொட்டடி ஒன்றிருந்தது. பலர் அதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதில் ஒரு பெண் கைதி ஸுஃபானா. அவர்தாம் நபியவர்கள் அவ்வழியே பள்ளிவாசலுக்குச் செல்லும்போது இவ்விதம் சொன்னார்.

“உன்னைக் கைவிட்ட பாதுகாவலர் யார்?” நபியவர்கள் விசாரித்தார்கள். பதில் சொன்னார் ஸுஃபானா.

“அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் ஓடிப்போனாரே அவரா?” என்ற நபியவர்கள் வேறேதும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

அடுத்த நாள். நபியவர்கள் அப்பகுதியைக் கடந்துசெல்லும்போது மீண்டும் அதேபோல் முறையிட்டார் ஸுஃபானா. முந்தைய நாளைப் போலவே இன்றும் நபியவர்கள் அவரிடம் அதே கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

அதற்கு அடுத்த நாளும் நபியவர்கள் அதேபோல் அந்த இடத்தைக் கடந்தார்கள். ஆனால் தம் முயற்சியில் நம்பிக்கை இழந்திருந்த ஸுஃபானா இம்முறை ஏதும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் நபியவர்களின் பின்னால் ஒரு முக்கியத் தோழர் வந்து கொண்டிருந்தார். அவர் ஸுஃபானாவிடம்’முறையிடு’ என்பதுபோல் சைகை செய்து தூண்டினார்.

“அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்துவிட்டனர். என்னுடைய பாதுகாவலர் என்னைக் கைவிட்டு மறைந்துவிட்டார். என்னிடம் கருணை புரியுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக” என்று வார்த்தை பிசகாமல் அதே வேண்டுகோளை விடுத்தார் ஸுஃபானா.

இம்முறை நபியவர்களின் பதில் வேறுவிதமாக அமைந்தது. “நான் உன்னை விடுவிக்கிறேன். ஆனால் அவசரப்பட்டு நீ வெளியேற வேண்டாம். உன் குலத்தைச் சேர்ந்த நம்பகமானவர்கள் இங்கு வந்தால், அவர்கள் உன்னைப் பத்திரமாக உன் மக்களிடம் அழைத்துச் செல்வார்கள் என்று நீ நம்பினால், என்னிடம் தெரிவிக்கவும்.”

விடுதலையானார் ஸுஃபானா. பெரும் மகிழ்ச்சி அவருக்கு! தமக்குச் சைகை புரிந்த அந்தத் தோழர் யார் என்று விசாரித்தார். ‘அலீ இப்னு அபீதாலிப்’ என்று பதில் கிடைத்தது. அடுத்து ஸுஃபானாவுக்கு ஆவலுடனான காத்திருப்புத் துவங்கியது. தம் குலத்து மக்கள் யாரேனும் மதீனாவிற்கு வரமாட்டார்களா என்று ஸுஃபானா மதீனாவில் காத்திருக்க ஆரம்பித்தார். ஒருநாள் பஅல்லி அல்லது குதாஆ எனும் குலத்தைச் சேர்ந்த வணிகக் குழு மதீனா வந்தடைந்தது. அக்குலம் அந்தப் பெண் சார்ந்திருந்த கோத்திரத்தின் கிளைக்குலமே. அப்படியொரு வணிகக்குழு வந்துள்ளது என்ற செய்தி தெரியவந்ததும் ஸிரியாவிலுள்ள தம் சகோதரனிடம் திரும்பத் துடித்து, உடனே நபியவர்களிடம் விரைந்தார் ஸுஃபானா.

“அல்லாஹ்வின் தூதரே! என் குல மக்களின் குழுவொன்று மதீனா வந்துள்ளது. அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என நான் நம்புகிறேன்.”

நல்ல துணிமணிகள், சிறிதளவு பணம், பயணிக்க ஓர் ஒட்டகம் எனக் கொடை அளித்து அந்த வணிகக் கூட்டத்துடன் ஸுஃபானாவை அனுப்பி வைத்தார்கள் வள்ளல் நபியவர்கள். ஸிரியாவை நோக்கிப் பயணம் கிளம்பினார் ஸுஃபானா. ஆனால் அவர் மனத்தில் மட்டும் தம் உடன்பிறப்பின்மீது ஏகக் கோபம்!

oOo

நபியவர்களின் தோழர் ஹுதைஃபா இப்னு யமான் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அபூஉபைதா என்றொரு மகன். அவருக்கு நபியவர்களின் தோழர் ஒருவரைப் பற்றிய வரலாறு தெரியவந்திருந்தது. அதைப் பிறருக்கும் விவரித்துவந்தார் அவர். ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டாரே தவிர, அபூஉபைதா இப்னு ஹுதைஃபா அந்தத் தோழரைச் சந்தித்ததில்லை. இப்படியிருக்கும்போது அந்தத் தோழர் கூஃபா நகரில் இருப்பது ஒருநாள் அவருக்குத் தெரியவந்தது. ‘அவரைச் சந்தித்தால் அவரது வாயாலேயே அவரது கதையை நேரடியாகக் கேட்டு அறிய முடியுமே’ என்று தோன்றியது அபூஉபைதாவுக்கு. தாமதிக்காமல் கிளம்பினார். சென்றார். சந்தித்தார்.

“உங்களைப் பற்றி நான் அறிந்த ஹதீத் ஒன்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அதை உங்களிடமிருந்து நேரடியாகவே கேட்டறிய வேண்டும் என்று வந்திருக்கிறேன்.”

‘அப்படியா, சொல்கிறேன் கேளுங்கள்’ என்று தம் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் அந்தத் தோழர். அந்தக் கதையை நாமும் கேட்பதற்குமுன், முன்னிகழ்வுகள் சிலவற்றை நாம் அறிமுகம் செய்துகொள்வது அந்த கதைக்கு முக்கியம். செய்துகொள்வோம்.

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு மக்காவின் பெருவெற்றிக்குப் பின் நபியவர்கள் மதீனாவுக்குத் திரும்பிவிட்டார்கள். அதற்கடுத்த ஆறு மாதங்கள் பெரும்பாலும் அமைதியுடன் கழிந்தன. ஆனாலும் முக்கியமான சில நிகழ்வுகளும் நடைபெற்றன. சில படைப் பிரிவுகளை ஆங்காங்கே உள்ள குலப்பிரிவுகளிடம் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள். அந்தக் குலத்தினர் முன்வந்து இஸ்லாத்தில் இணையவேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லி அனுப்பப்பட்ட செய்தி. இதுதவிர மற்றொரு முக்கிய விஷயத்திற்காகவும் சில குலத்தினரிடம் முஸ்லிம் படைப் பிரிவு சென்றது. அந்தப் பிரிவிற்கு இடப்பட்ட கட்டளை ‘அந்தந்தக் குலத்தினரின் உருவ வழிபாட்டுச் சிலைகளை உடைக்க வேண்டும்’.

மக்கா வெற்றியின்போது கஅபாவின் உள்ளும் புறமும் இருந்த சிறியதும் பெரியதுமான 360 சிலைகளை, “இன்னும், ‘சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக” எனும் குர்ஆன் வசனத்தை ஓதியபடி தம் கையில் இருந்த கோலால் தள்ளி உடைத்து உருவ வழிபாட்டை மக்காவிலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, தமது தவாஃபைத் துவக்கினார்கள் நபியவர்கள். அல் இஸ்ரா சூராவின் 81ஆம் வசனம் அது. அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய ஏகத்துவத்திற்கு நேர் முரணான உருவ வழிபாட்டுச் சிலைகள் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும் என்பது நபியவர்களின் உறுதியான எண்ணமாக இருந்தது. கடவுளர்கள் என அம்மக்கள் நம்பிய புகழ்பெற்ற சிலைகள் எந்தப் பகுதியிலெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் முஸ்லிம் படையினர், முக்கியமான தோழர்களின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அல் ஃபலஸ் என்றொரு சிலை. இந்தச் சிலை தாயீ எனும் குலத்தினருக்கு குலக் கடவுள். ஸைத் அல்-கைர் என்பவர் மதீனாவுக்கு வந்து நபியவர்களைச் சந்தித்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், திரும்பும் வழியில் இறந்துபோனார் என்று முன்னர் படித்தது நினைவிருக்கிறதா? அவர் சார்ந்திருந்த அதே தாயீ குலம்.

மக்காவிலிருந்து நபியவர்கள் மதீனா திரும்பியபின், ரபீயுல் ஆஃகிர் மாதம், மதீனத்து தோழர்கள் நூற்றைம்பது பேரைத் திரட்டி, அவர்களது தலைமையை அலீ இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அளித்து, தாயீ குலத்தினர் வாழும் பகுதிக்குச் சென்று அந்தச் சிலையை அழித்துவிட்டு வரும்படிக் கட்டளையிட்டார்கள். நூறு ஒட்டகங்கள், ஐம்பது குதிரைகளில் கறுப்புக் கொடியும் வெள்ளைப் பதாகையுமாக புறப்பட்டுச் சென்றது முஸ்லிம்களின் படை.

தாயீ குலத்தினரின் பெரும் தலைவராக ஹாதிம் இப்னு அப்துல்லாஹ் என்பவர் திகழ்ந்து வந்தார். அவருக்குச் சொல்லி மாளாத தயாள குணம். அரேபியாவின் மக்கள் மத்தியில் அந்த தயாள குணத்தினாலேயே “ஹாதிம் அல் ஜவாத்  – கொடைவள்ளல் ஜவாத்” என்று அவர் மிகவும் பிரபலமானவர். ஹாதிம் இறந்ததும் அவருடைய மகன் அதிய் என்பவரைத் தம்முடைய தலைவராக ஏற்றுக்கொண்டு அவரைத் தங்களுக்கு ஓர் அரசராகவே ஆக்கிக்கொண்டனர் தாயீ குலத்து மக்கள். அம்மக்களிடம் அவருக்கு ஏக மதிப்பு, மரியாதை.

உயர்குடியைச் சேர்ந்த அதிய், கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டார். ஆனால் அது ‘என் மதம் எனக்கு. நான் சொல்லும் மார்க்கம் உங்களுக்கு’ எனும் வகையிலான ஒருவிதமான மார்க்கம். போரில் கைப்பற்றப்படுபவை, எதிரிகள்மீது தாக்குதல் நடத்திப் பறிக்கப்படுபவை என தாயீ மக்கள் கைப்பற்றும் எதுவாக இருந்தாலும் தமக்கு நான்கில் ஒரு பங்கு என்றொரு சட்டம் இட்டிருந்தார் அதிய். அதை மறுபேச்சின்றிப் பின்பற்றி வந்தார்கள் அம்மக்கள். தம் மக்களின் ஒப்பற்ற தலைவனாய், ஏகபோக உரிமையுடன் அரசாண்டுவந்த அதிய்யின் காதுகளை மக்காவிலும் மதீனாவிலும் அதன் சுற்றும் முற்றும் மீளெழுச்சி பெற்றுவந்த இஸ்லாம் பற்றிய செய்தி வந்து தாக்காமல் இல்லை. ஆனால் அந்தச் செய்தியெல்லாம் அவருக்கு நபியவர்களின்மேல் அளவற்ற வெறுப்பைத்தான் ஏற்படுத்தியிருந்தன.

நபியவர்களை நேரில் சந்தித்ததில்லை; பார்த்ததில்லை. ஆனால் செய்தியறிந்த நாளாய் ஒன்று மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. இஸ்லாமிய மார்க்கமானது தமது தலைமைக்கும் அந்தஸ்திற்கும் கௌரவத்திற்கும் பாதகம்; அரசனாய் அனுபவித்து வரும் சொகுசுக்கும் மக்களிடம் பெற்றுவரும் பங்கு உரிமைக்கும் கேடு என்பதே அது. எனவே கேள்விபட்ட நாளிலிருந்து, இருபது ஆண்டுகளாக, பெரும் கசப்புடன் நபியவர்களை வெறுத்து வந்தார் அவர். இருந்தாலும் நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டது, ஒவ்வொரு கோத்திரமாய் இஸ்லாத்தில் இணைவது என்று தம்மைச் சுற்றி நடப்பவற்றை அவர் கவனிக்கத் தவறவில்லை. இஸ்லாம் தம் வாசலில் வந்து நின்று கதவைத் தட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருக்குப் புரிந்துபோனது.

தம் கால்நடைகளைப் பராமரிப்பவரை அழைத்தார் அதிய். நல்லதொரு பதுஉ அரபி அவர். “ஒட்டகங்கள் சிலவற்றை எனக்காகத் தயார் செய்யவும். நீண்ட பயணத்திற்கு ஏற்ற வலுவான ஒட்டகங்களாய் அவை இருக்க வேண்டும். முஹம்மதின் படை ஏதும் நம்மை நெருங்குவது தெரிந்தால் அதை உடனே நீ எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று கட்டளையிட்டார். ‘உத்தரவு எசமான்’ என ஒட்டகங்கள் தயாராகின.

இப்படி அதிய் இங்கு முற்கூட்டி தயாராகியிருந்த சில நாள்களில்தான் அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் முஸ்லிம்களின் படை தாயீயை நோக்கி விரைந்து வந்தது.

பதுஉ அரபி அதிய்யிடம் ஓடிவந்தார். “ஓ அதிய். முஹம்மதின் குதிரைவீரர்கள் வந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று நீர் திட்டமிட்டிருந்தீரோ அதை இப்பொழுது செயல்படுத்தவும். உயர்த்திப் பிடிக்கப்பட்ட கொடி, பதாகை ஆகியவை நம்மை நோக்கி வருவதைக் கண்டேன். விசாரித்தால், அது முஹம்மது அனுப்பிவைத்த படை என்கிறார்கள்.”

“உடனே ஒட்டகங்களைக் கிளப்பு” என்று அவருக்கு உத்தரவிட்டார் அதிய். தம் வீட்டுப் பெண்கள், பிள்ளைகள் அனைவரையும் ‘கிளம்பு, கிளம்பு’ என்று அழைத்துக்கொண்டு கிறித்தவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஸிரியாவை நோக்கி, தப்பி ஓடினார். ஆனால் அந்த அவசரத்தில், பதட்டத்தில் ஒரு தவறு நிகழ்ந்து போனது. பின் தங்கிப்போயிருந்தார் சகோதரி ஸுஃபானா பின்த் ஹாதிம். அவரை மறந்து விட்டுச் சென்றிருந்தார் அதிய் பின் ஹாதிம்.

தாயீ மக்களின் ஊருக்குள் வந்த முஸ்லிம்களின் படை அல் ஃபலஸ் சிலையை உடைத்துக் கொளுத்தி அந்தப் பகுதியை உருவ வழிபாட்டிலிருந்து மீட்டது. எதிர்த்துச் சண்டையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தப் போரில் முஸ்லிம்கள் கைப்பற்றியவர்களுள் சில பெண்கள். அந்தப் பெண்களுள் ஒருவர் ஸுஃபானா.

கைதிகளை அழைத்துக்கொண்டு மதீனாவுக்குத் திரும்பிய படையினர் நபியவர்களிடம் நிகழ்ந்ததைத் தெரிவித்தனர். அதிய் இப்னு ஹாதிம் தப்பிச் சென்று விட்டதைக் கூறினர். பள்ளிவாசலின் வெளியே போர்க் கைதிகளைச் சிறைவைக்கும் கொட்டடியில் கைதிகள் தனித்து வைக்கப்பட்டனர்.

அவ்விதம் கைதியாக மதீனா வந்து அடைபட்ட ஸுஃபானா, நபியவர்களின் கருணை மனத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும். தகுந்த முறையில் அவர் விடுத்த கோரிக்கையால், காரியம் கை கூடியது. விடுதலையடைந்தவர், மதீனா வந்து சேர்ந்த வணிகக் குழுவுடன், நபியவர்கள் தந்த ஒட்டகத்தில் ஸிரியா நோக்கிக் கிளம்பினார். விடுதலையடைந்த மகிழ்ச்சியைமீறி அவருக்குக் கோபம். தம்மை நிராதரவாக விட்டுவிட்டுத் தப்பியோடிய தம் சகோதரர் மீது ஏகப்பட்ட கோபம். அதைச் சுமந்து கொண்டும் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

அங்கே ஸிரியாவில் தம் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார் அதிய், தூரத்தில் ஓர் ஒட்டகம் வந்து கொண்டிருந்தது. அதன்மேல் ஒரு பெண்.

‘ஹாதிமின் மகள்’ என்று பரபரத்தது அவரது மனம். அருகே நெருங்கியதும் அடையாளம் தெரிந்தது. அவருடைய சகோதரியேதான்.

வந்தவர், “கருணையற்ற, இரக்கமற்ற மனிதனே! உன் பெண்டுகளையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு உடன்பிறந்த சகோதரி என்னை விட்டுவிட்டாயே” என்று கோபத்துடன் தம் சகோதரரை சரமாரியாக வசை பாட ஆரம்பித்துவிட்டார்.

“அருமைச் சகோதரியே. என்னை வசைபாடாதே. உன்னிடம் சொல்ல எனக்கு எந்தச் சாக்குப்போக்கும் இல்லை. நிச்சயமாக இது என்னுடைய தவறே” என்று அப்பட்டமாய்த் தமது தவறை ஒப்புக்கொண்டு கெஞ்சி, கொஞ்சி ஒருவாறு தம் சகோதரியைச் சமாதானப்படுத்தி விட்டார் அதிய். தம்முடன் தங்க வைத்துக்கொண்டார். ஸுஃபானாவுக்குக் கூர்மதி; தூரநோக்குப் பார்வை அதிகம் என்று அறிந்து வைத்திருந்த அதிய், ஒருநாள் அவரிடம் நபியவர்களைப் பற்றி விசாரித்தார்.

“உமக்கு எந்தளவு சாத்தியமோ அவ்வளவு துரிதமுடன் அவருடன் இணையவும். இதுவே உமக்கு மிகச் சிறந்த உபதேசம்.”

தொடர்ந்தார். “அந்த மனிதர் உண்மையிலேயே ஒரு நபியாக இருக்கும்பட்சத்தில் நீர் எவ்வளவு விரைவாக இணைகிறீரோ அந்தளவு உமக்கு நல்லது. மாறாய் அவர் ஓர் அரசர் மட்டுமே எனில், உம்முடைய சமூக நிலையையும் சிறப்பையும் கவனத்தில் கொண்டால், அவருடன் இணைவதால் உமக்கு எந்தப் பாதகமும் இல்லை.”

“நிச்சயமாக இது நல்ல ஆலோசனை” என்றார் அதிய் இப்னு ஹாதிம்.

oOo

அபூஉபைதா இப்னு ஹுதைஃபாவிடம் தம் கதையைத் தொடர்ந்தார் அதிய் இப்னு ஹாதிம். அவரிடம் விவரித்த வகையிலும் வேறு சிலரிடம் அவர் சொல்லிய வகையிலும் அதிய் இப்னு ஹாதிம் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு அவரது வார்த்தைகளாகவே ஹதீத் நூல்களில் பதிவாகியுள்ளது.

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வெகு விரைவில் மதீனாவை நோக்கிக் கிளம்பினார் அதிய். யாரை அத்தனை காலம் வெறுத்துவந்தாரோ, யாரிடம் அச்சமுற்று ஸிரியாவிற்குத் தப்பிச்சென்றாரோ, அந்த நபியவர்களை நோக்கி அவரது பயணம் துவங்கியது. தமக்குக் கருணை கிடைக்கும் என்ற உத்தரவாதமெல்லாம் அப்போது அவருக்கு இல்லை. இருந்தாலும் ஆவல் உந்தியது.

பள்ளிவாசலுக்குள் சென்று நபியவர்களைச் சந்தித்து, முகமன் கூறினார் அதிய்.
“யார் நீ?” என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.

“அதிய் இப்னு ஹாதிம்.”

எழுந்து, அன்புடன் வரவேற்று, அவரது கையைப்பற்றித் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள் நபியவர்கள். வழியில் வயது முதிர்ந்த, பலவீனமான மூதாட்டி ஒருவர் நபியவர்களை நிறுத்தினார். தமது குறையோ, தேவையோ அதை அவர் நபியவர்களிடம் பேசிக் கொண்டேயிருக்க, நெடுநேரம் பொறுமையாக நின்று அதைக் கேட்டுக்கொண்டார்கள் அந்த மாமனிதர்.

அதிய் மனத்திற்குள் நினைத்துக்கொண்டார். ‘நிச்சயமாக இந்த மனிதர் ஓர் அரசல்லர்.’

அதிய்யின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள் நபியவர்கள். ஒரு திண்டை அவருக்கு அளித்து, “இதில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்று அன்புடன் உபசாரம் புரிந்தார்கள். ஈச்ச மரத்தின் நார் திணிக்கப்பட்ட, தோலினால் தயாரிக்கப்பட்ட திண்டு அது.

நபியவர்களின் உபச்சாரத்தால் கூச்சமுற்ற அதிய் “இல்லை தாங்கள் இதில் அமருங்கள்” என்றார்.

“இது உமக்காக” என்று நபியவர்கள் மீண்டும் வற்புறுத்தியவுடன் விருந்தினர் அதிய் அதில் அமர்ந்துகொள்ள, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தரையில் அமர்ந்தார்கள். அமரும்படி வீட்டில் விரிப்பேதும் இல்லாதததைக் கவனித்தார் அதிய். தம் மனத்திற்குள் மீண்டும் நினைத்துக்கொண்டார். ‘நிச்சயமாக இவர் ஓர் அரசல்லர். அரசர்கள் இத்தகைய வாழ்க்கை வாழ்வதில்லை.’

பேச்சைத் துவக்கினார்கள் நபியவர்கள். “அதிய் இப்னு ஹாதிம், சொல்லுங்கள். கிறித்தவர்கள், ஸாபியீன்கள் எனும் இரண்டு மதத்தினருக்கு இடையில் நீர் தடுமாறிக் கொண்டிருந்தீர் அல்லவா?”

“ஆம்”

“உம் மக்கள் போரில் கைப்பற்றும் பொருள்களிலிருந்து நான்கில் ஒரு பங்கை உமக்கென எடுத்துக்கொண்டீர் அல்லவா?”

“ஆம்”

“ஆனால், அல் மிர்பஆ உமது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயலாயிற்றே?” அரசருக்கு அவ்விதம் அளிக்கப்படும் கால்பங்கு அல் மிர்பஆ.

“ஆம் நிச்சயமாக” என்று வியந்தார் அதிய். மனதில் நினைத்துக்கொண்டார். ‘வேறெவருக்கும் தெரியாத மிர்பஆ பற்றிய சட்டம் இவருக்குத் தெரிந்திருக்கிறது. நிச்சயமாக, இவர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு நபியேதான்.’

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் அதிய்க்கு இருக்கக்கூடிய மூன்று தயக்கங்களை நபியவர்கள் விவரித்தார்கள். “அதிய். இந்த மார்க்கத்தைப் பின்பற்றும் மக்கள் ஏழை எளியவர்களாக இருக்கிறார்கள் என்பதால் இதை ஏற்றுக்கொள்வதில் உமக்குத் தயக்கம் இருக்கலாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்நிலை சில காலம் மட்டுமே. பிறகு இவர்களிடம் எந்தளவு செல்வம் இருக்குமென்றால், அவர்கள் ஈவதைப் பெற்றுக்கொள்ள ஆள் இருக்கமாட்டார்கள்.

“இவர்களின் எதிரிகளின் எண்ணிக்கை பெரும் அளவிலும் இவர்களது எண்ணிக்கை சொற்ப அளவிலும் இருக்கிறதே என்று நீர் தயங்கலாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்நிலை சில காலம் மட்டுமே. பின்னர் வரும் காலத்தில் ஈராக்கின் காதிஸிய்யா நகரிலுள்ள ஒரு பெண், எத்தகைய அச்சமும் இன்றி, தன்னந்தனியே தம் ஒட்டகத்தில் பயணித்து மக்காவிலுள்ள பள்ளிவாசலை அடைவார்.

“அதிகாரமும் ராஜாங்கமும் முஸ்லிம்களன்றி மற்றவருக்கு உரியதாக இருக்கிறதே என்பதாலும் உமக்கு இஸ்லாத்தை ஏற்பதில் தயக்கம் இருக்கலாம். இந்நிலை சில காலம் மட்டுமே. பாபிலோன் நகரிலுள்ள பளபளக்கும் வெள்ளை மாளிகைகள் சரணடைவதையும் பாரசீக அரசன் குஸ்ரோ இப்னு ஹுர்முஸின் செல்வம் முஸ்லிம்கள் வசமாவதையும் நீர் அறிய வருவீர்.”

“என்ன? குஸ்ரோ இப்னு ஹுர்முஸ்?” நம்பமுடியாத ஆச்சரியத்துடன் கேட்டார் அதிய்.

“ஆம். குஸ்ரோ இப்னு ஹுர்முஸ்” அதை மும்முறை கூறினார்கள் நபியவர்கள்.

அல்லாஹ்வின் தூதரைத்தவிர வேறுயாரும் இப்படியெல்லாம் உறுதியுடன் முன்னறிவிப்புச் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவருக்கு அதற்குமேல் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. இஸ்லாத்தினுள் நுழைந்தார் அதிய் இப்னு ஹாதிம், ரலியல்லாஹு அன்ஹு.

அபூ உபைதா இப்னு ஹுதைஃபாவிடம் கூறினார் அதிய். “இரண்டு விஷயங்களை நான் கண்டுவிட்டேன். அல் ஹீரா நகரிலிருந்து ஒரு பெண் தகுந்த பயணத் துணையின்றி கஅபாவை அடைந்து தவாஃப் புரிந்துள்ளார். பாரசீக சாம்ராஜ்யத்தின் மதாயின் நகரைத் தாக்கிய குதிரைப்படையினரின் முன்வரிசையில் நானும் ஒருவன். அந்நகரம் கைப்பற்றப்பட்டு, குஸ்ரோவின் செல்வம் நம் வசமானது. அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நபியவர்களின் மூன்றாவது அறிவிப்பும் நிகழ்ந்தேறும்.”

அதுவும் நிகழ்ந்தது. ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு. உமர் இப்னு அப்துல் அஸீஸின் காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் திளைத்து, கருவூலத்திலுள்ள ஸகாத்தை ஏழைகள் வந்து பெற்றுச்செல்லும்படி அரசாங்க அதிகாரி தெருத்தெருவாய்க் கூவி அறிவிக்க, வந்து பெற்றுக்கொள்ள ஆள்தான் இல்லை. அந்தளவு மக்கள் தன்னிறைவுடன் திகழ்ந்திருந்தனர்.

oOo

இரண்டாவது கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் பைத்துல்மாலில் சேகரமாகும் செல்வம் மக்களுக்கு வாரிவாரி வழங்கப்பட்டது. ஒருமுறை தம் குல மக்களை அழைத்துக்கொண்டு உமரிடம் வந்தார் அதிய் இப்னு ஹாதிம் அத் தாயீ. ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் என்று வழங்கிக்கொண்டே இருந்த உமர், அதிய்யை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை தம்மை அடையாளம் தெரியவில்லையோ என்று அதிய்க்கு சந்தேகம். அவர் உமரின் அருகே சென்றார். முகத்தைத் திருப்பிக்கொண்டார் உமர். கவனிக்கவில்லை போலிருக்கிறது என்று அவரது முகத்தின் முன் சென்று நின்றார் அதிய். அப்பொழுதும் திரும்பிக்கொண்டார் உமர்.

அதற்குமேல் பொறுக்க இயலாமல், “ஓ அமீருல் மூஃமினீன், என்னை அடையாளம் தெரியவில்லையா?”

அதைக்கேட்டு பலமாய்ச் சிரிக்க ஆரம்பித்தார் உமர். “அதிய் இப்னு ஹாதிம். உம்மை மிக நன்றாக அறிவேன். உம் மக்கள் நம்பிக்கை கொள்ளாதபோது நீர் நம்பிக்கைக் கொண்டீர். அவர்கள் திரும்பிவிட்டபோது நீர் மட்டும் வந்தீர். அவர்கள் துரோகம் புரிந்துவிட்டபோது நீர் நம்பிக்கை மாறாமல் விசுவாசமாய் இருந்தீர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் தோழர்களுக்கும் ஆதரவும் மகிழ்வும் அளித்த முதல் ஈகை, தாயீ மக்களின் ஈகை. அதை நீர் நபியவர்களுக்குக் கொண்டுவந்தீர்” என்று பழையவற்றை நினைவுகூர்ந்த உமர்,

“கொடிய வறுமையில் உழல்பவர்களுக்கும் அவர்களுடைய இனத் தலைவர்களுக்கு உள்ள பொறுப்புகளினால் அவர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து அளித்தேன்” என்று அந்த மக்களுக்கு முன்னுரிமை அளித்த காரணத்தை விவரித்தார் உமர். அதைக்கேட்ட அதிய், “எனில் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று சொல்லிவிட்டார்.

உமர் அதிய்யைப் பாராட்டி பேசினாரே, நம்பிக்கை, விசுவாசம், அவர் குலத்து மக்களின் துரோகம், அவையெல்லாம் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள். அதிய் இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹுவின் மேன்மையைப் பறைசாற்றும் விஷயங்கள். அவற்றை அறிய முந்தைய கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹுவின் ஆட்சியினுள் நுழைய வேண்டும். நுழைவோம்.

– நூருத்தீன்

பகுதி – 2 விரைவில் இன்ஷா அல்லாஹ்…


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.