95. தொழுநோய் ராஜா
கடந்த பதினைந்து அத்தியாயங்களாகக் கெய்ரோ, டமாஸ்கஸ், அலெப்போ என்று பயணித்தபடி இருந்து விட்டோம். நூருத்தீன் மரணமடைந்த பின் சிரியாவில் மும்முரமடைந்த அரசியல் பிரச்சினைகளும் மோஸூல் ஆட்சியாளர்களின் சந்தர்ப்பவாதமும் அவற்றையெல்லாம் எதிர்த்து ஸலாஹுத்தீன் மேற்கொண்ட நடவடிக்கைகளும் முத்தாய்ப்பாக அவர் சுல்தானாகப் பரிணாமம் அடைந்ததும் பரபரவென்று நிகழ்ந்தபடி இருந்ததால் ஜெருசலத்திலும் பரங்கியர்கள் தரப்பிலும் என்ன நடந்தது என்பதில் நம்மால் உடனே கவனம் செலுத்த இயலவில்லை. இப்பொழுது சுல்தான் ஸலாஹுத்தீன் கெய்ரோவில் எகிப்தின் உள்கட்டமைப்பில் மும்முரமாக உள்ளதால் அடுத்து அவர் படையுடன் அணிவகுக்கும் முன் ஜெருசலத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற அரசியலைப் பார்த்து விடுவோம்.
நூருத்தீன் மரணமடைந்த அதே காலகட்டத்தில் 14 ஜூலை 1174 அன்று ஜெருசலம் ராஜா அமால்ரிக் மரணமடைந்தார். 38ஆவது வயதில் அவரது ஆயுள் முடிவடைந்தது. அடுத்து அவருடைய 13 வயது மகன் நான்காம் பால்ட்வின் (Baldwin IV) ஜெருசலத்தின் ராஜாவாக அறிவிக்கப்பட்டார். அந்த வமிசத்தில் எஞ்சியிருந்த ஒரே ஆண் வாரிசு அவரே. அவருடைய ஆட்சியில் அவருடைய தாயார், தாய் மாமன் மற்றும் சிலர் உள்ளே புகுந்து ஜெருசலம் அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கப் போவதால் பால்ட்வினின் குடும்பக் கதையையும் அந்த மற்றும் சிலரையும் அறிந்துகொள்வது இங்கு நமக்கு அவசியமாகிவிடுகின்றது.
அமால்ரிக் ராஜாவுக்கும் அவருடைய மனைவி கோட்னியின் அக்னெஸுக்கும் மகளும் மகனும் என்று இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சிபில்லா, அடுத்தவர் பால்ட்வின். பெரிதாகப் பிரச்சினை ஏதும் இல்லாத அவர்களது குடும்ப வாழ்க்கையில், 1163ஆம் ஆண்டு ஜெருசலத்தின் ராஜாவாக அமால்ரிக் அரச கிரீடத்தை ஏற்கும் போது ஜெருசலத்தின் நீதித்துறை புயலைக் கிளப்பியது. அமால்ரிக்–அக்னெஸ் தம்பதியரின்முப்பாட்டன்களின் தாயார் இருவரும் சகோதரிகள்; அதனால் ஒருவகையில் உங்கள் இருவருக்கும் இடையே சகோதர உறவுமுறை உள்ளது; ஜெருசலத்தின் ராஜாவாகப் பதவியேற்பவருக்கு அத்தகு தகாத உறவு கூடாது; ஆகவே உங்கள் திருமணத்தைக் கலைத்து விடுங்கள் என்று அவர்களின் உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அது மேற்பூச்சுதான். அக்னெஸ் தம் குலத்தின் நலன்களை முன்னிறுத்திச் செயல்படுவார் என்ற அச்சம் ஓர் உள்காரணம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. எது எப்படியோ, பதவியா பத்தினியா என்ற நிலை ஏற்பட்டதும் அமால்ரிக் அக்னெஸை விவாகரத்துச் செய்துவிட்டு ஜெருசலத்தில் ராஜா ஆகிவிட்டார். இரண்டு பிள்ளைகளும் சட்டபூர்வமானவை என்று மட்டும் அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு அமால்ரிக் மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது, அதில் தேவையான அளவு அரசியல் எனும் உப்பு சேர்த்துக்கொண்டு திருமணம் முடித்துக்கொண்டது பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவலின் உடன்பிறந்த சகோதரரின் பேத்தி மரியா காம்னெனாவை. காரணம் பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவலுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வட ஆப்பிரிக்கப் பகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசை ஜெருசலம் ராஜா அமால்ரிக்கின் மனத்தை ஒரு பக்கம் அரித்தபடி இருந்தது. குடும்ப உறவு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அந்தக் கூட்டணி எளிதாகும் என்ற திட்டம் அது. அக்னெஸும் உடனே மறுமணம் செய்துகொண்டு அரசவையிலிருந்து வெளியேறி, பிள்ளைகளின் வளர்ப்பில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். அச்சமயம் பால்ட்வினுக்கு இரண்டு வயது. சிபில்லா பெத்தானி நகரில் அவருடைய அத்தை இவெட்டாவின் துறவிமடத்தில் வளர, ஜெருசலத்தில் பால்ட்வினுக்கு ஆசிரியராகவும் தோழராகவும் அமைந்தார் வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம். (William of Tyre).
பால்ட்வின் அடுத்த ராஜா என்று முடிவாகிவிட்டாலும் ஜெருசலத்தின் தன்னிச்சை ராஜாவாகச் செயல்படப் பதினைந்து வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று அவர்கள் வரம்பு நிர்ணையித்து வைத்திருந்தார்கள். ஆகவே, அதுவரை மைனர் ராஜாவுக்குக் காப்பாளராக ஒருவர் இருந்து அரசை நடத்த வேண்டும் என்பது நியதி. இது ஒருபுறமிருக்க புது ராஜா நான்காம் பால்ட்வினின் விஷயத்தில் மற்றொரு பெரும் பிரச்சினை தோன்றியது. அது தொழுநோய்!

ஒருநாள் இளம் ராஜா பால்ட்வின் நண்பர்களுடன் மல்யுத்தம் விளையாடும்போது அன்றைய வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம் (William of Tyre) அசாதரணமான ஒரு விஷயத்தைக் கவனித்தார். விளையாடிவர்களின் நகங்கள் பால்ட்வின் மீது ஆழமாகப் பதிந்தன; பிடிகள் வலுவாக இறுகின. ஆனால் பால்ட்வின் கத்தவில்லை, கதறவில்லை, குறிப்பாக அவனிடம் வலியின் உணர்ச்சியே இல்லை. வில்லியமுக்கு அச்சம் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகம் உறுதியானது. சிறுவன் நான்காம் பால்ட்வின் தொழுநோய்க்கு உள்ளாகியிருந்தான். உடனே அவனுக்கு சிகிச்சை அளித்துக் கவனிக்க மிகச் சிறந்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் அரபு கிறிஸ்தவர் அபூசுலைமான் தாவூத் என்பவரும் ஒருவர்.
சிகிச்சை ஒருபுறம் நிகழ, ராஜாவுக்குத் தேவையான இதர போர்க் கலைப் பயிற்சிகளும் மற்றொருபுறம் அளிக்கப்பட்டன. முக்கியமானதாகக் குதிரைப் போர் பயிற்சி. மருத்துவர் அபூசுலைமானின் சகோதரர் அதற்கான பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். தொழுநோயின் விளைவால் அங்க இயக்கங்களில் பலவீனம் ஏற்பட்ட போதும் இயங்கக்கூடிய தமது இடது கையில் ஆயுதத்தை ஏந்திக்கொண்டு, தமது முழங்கால்களை மட்டுமே பயன்படுத்திக் குதிரையைக் கட்டுப்படுத்தி, திறமையாகப் போரிடும் அளவிற்குப் பயிற்சி பெற்றுத் தேறினார் பால்ட்வின்.

இதனிடையே மைனர் ராஜா பால்ட்வினின் பாதுகாவலராக இருந்து அரசாங்கப் பணிகளை நிர்வகிக்க வந்தமர்ந்தார் திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்ட். சற்றொப்பப் பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்வுற்ற ஹாரிம் போரில் நூருத்தீன் முக்கியமான பரங்கியர் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார். அவர்களுள் ஒருவர்தாம் பரங்கியர்களின் செல்வாக்கு மிக்க இந்தக் கோமான் திரிப்போலியின் மூன்றாம் ரேமோண்ட். இவரை 1174ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பணயத் தொகையாக 80,000 தங்க நாணயங்கள், கைதிகள் பரிமாற்றம் என்ற அடிப்படையில் சிறையிலிருந்து விடுவித்து அனுப்பிவிட்டார் குமுஷ்திஜின். விடுதலையான அவர் தம்முடைய பெரியம்மா மெலிஸாண்டின் பேரன் நான்காம் பால்ட்வினின் உறவினன் என்ற அடிப்படையில் The Leper King என்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொழுநோய் ராஜா நான்காம் பால்ட்வினின் ஆட்சிப் பிரதிநிதியாக ஜெருசலத்தில் வந்து அமர்ந்துவிட்டார்.
ரேமாண்ட்டுக்குச் சற்று மெல்லிய உருவம், குறைவான உயரம், கறுப்பு நிறம், கூர்மையான பார்வை. முன்னெச்சரிக்கையும் கடுமையான நடத்தையும் அவரது இயல்பாக இருந்தன. தாம் சிறையிலிருந்து விடுதலையானதுமே கலிலீ இராஜ்ஜியத்தின் செல்வாக்கு மிக்க இளவரசியான பியூர்ஸின் எஸ்கிவா (Eschiva of Bures) என்ற இளம் விதவையைத் திருமணம் செய்துகொண்டார். கலிலீ கடலை ஒட்டியுள்ள டைபீரியஸை மையப் பகுதியாகக் கொண்டிருந்தது கலிலீ இராஜ்ஜியம். இன்று யூதர்கள் அபகரித்து ஆக்கிரமித்து இஸ்ரேல் என்று பெயரிட்டுள்ள நிலத்தில் உள்ள முழு கலிலீயும் லெபனானின் தெற்கு ஃபினீசியாவும் அன்று கலிலீ இராஜ்ஜியத்தில் உள்ளடங்கியிருந்தன. சுல்தான் ஸலாஹுத்தீன் 1187ஆம் ஆண்டு இந்த கலிலீ இராஜ்ஜியத்தைத்தான் தமது முதல் இலக்காக முற்றுகை இட்டார். அதை எதிர்க்க முடியாமல், முப்பதாண்டுகள் தம் வசம் இருந்த கலிலீ இராஜ்ஜியத்தை ஸலாஹுத்தீனிடம் ஒப்படைத்து விட்டுச் சரணடைந்தார் எஸ்கிவா. வரலாற்றுப் புகழ் மிக்க ஹத்தீன் யுத்தத்துடன் தொடர்புடைய விறுவிறுப்பான அந்நிகழ்வுகளைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். இப்போது நமக்கு இந்த எஸ்கிவா திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்டின் மனைவி ஆனார் என்ற அறிமுகம் போதும்.
ஜெருசலத்தில் ராஜா பால்ட்வினின் அரச பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற ரேமாண்ட் குமுஷ்திஜினின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுல்தான் ஸலாஹுத்தீனுக்குச் சிறு குடைச்சல் கொடுத்துவிட்டு, பிறகு அவருடன் சமாதானம் ஏற்படுத்திக்கொண்டார். அதற்குக் காரணங்கள் இருந்தன. ஜெருசலத்தின் இளவயது புதிய ராஜா நான்காம் பால்ட்வினின் தொழுநோய் முற்றத் தொடங்கியிருந்தது. அதன் தடயக் குறிகள் தெளிவாகத் தெரியலாயின. குறிப்பாக அவரது முகம். அவரைப் பார்ப்பவர்களுக்கு அது சங்கடத்தை அளித்தது. காலப்போக்கில், அவர் நடையிலும் பார்வையிலும் கூடப் பாதிப்பு ஏற்பட்டு, பேச இயலாத நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டார், ஆனால் இச்சமயம் நோய்த்தொற்றுகளால் அவருக்கு உடலில் ஏகப்பட்ட சீர்கேடு ஏற்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, தொழுநோயை அவர்கள் கடவுளின் சாபமாகக் கருதியதால் அதனால் ஏற்பட்ட மதக் களங்கம் ஒரு பக்கம். அது தொற்றுநோய், உடலுறவின் மூலம் பரவும் என்று நம்பப்பட்டதால் அவருக்கு வம்ச விருத்தி என்ற சாத்தியம் அடைபட்டுப் போன அவலம் இன்னொரு பக்கம். அவர் மூலமாக அடுத்த அரச குல வாரிசு கிடையாது என்றாகிப் போனது நிலைமை. ஆகவே, பால்ட்வினின் சகோதரி சிபில்லாவுக்குப் பொருத்தமான மணமகனைத் தேடிப்பிடிக்க வேண்டும்; திருமணம் செய்து வைக்க வேண்டும்; அந்தக் கணவரை அரசாள தயார்படுத்தி கிரீடத்தை அவரது தலையில் ஏற்றி வைக்க வேண்டும் என்பது அவர்களது உடனடித் திட்டமாக மாறியது. அதற்கெல்லாம் பரங்கியர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. எனவே ரேமாண்ட் மனமுவந்து ஸலாஹுத்தீனிடம் சமாதானத்திற்குக் கை நீட்டியிருந்தார்.
பல கோமான்களையும் இளவரசர்களையும் பிரபுக்களையும் தேடித்தேடி இறுதியில் சிபில்லாவுக்கு ஏற்ற மணமகனாக மோன்ஃப்ராட்டின் வில்லியம் (William Longsword of Montferrat) என்ற இத்தாலியப் பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1176ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே, ஜூன் 1177இல் வில்லியம் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். கர்ப்பமுற்றிருந்த சிபில்லா விதவையானார். அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஐந்தாம் பால்ட்வின் (Baldwin V) என்று பெயரிடப்பட்ட அவர் ஜெருசலம் அரியணைக்கான அடுத்த வாரிசாக வரிசைக்கு வந்தார்.
oOo
”தொழுநோய் மன்னன் நான்காம் பால்ட்வினின் ஆட்சி பரங்கியர்களுக்குப் பேரழிவாகவே முடிந்தது” என்கின்றனர் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள். நோய்வாய்ப்பட்டு பலவீனமடைந்த அந்த மன்னன், பதவி விலகாமல் சுயநலத்துடன் ஆட்சியில் நீடித்துத் தொடர்ந்ததால் பரங்கியர்கள் வசமிருந்த ஃபலஸ்தீன் முஸ்லிம்களிடம் முழங்காலிட்டு நிற்கும்படி ஆனது என்று அவரை விமர்சிக்கின்றனர். பின் தொடரப்போகும் நிகழ்வுகளில் அவற்றைப் பார்ப்போம்.
1176ஆம் ஆண்டின் கோடையில் நான்காம் பால்ட்வின் பதினைந்தாவது வயதை எட்டி, காப்பாளரின் தேவையின்றி சுதந்திரமாகச் செயல்படும் ராஜாவாக ஆனதும் அவரது அரசின் கொள்கையிலும் உறவினர்களுடனான இணக்கத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெருசல அரசியலுக்குள் நுழைந்து கால் பதித்த முக்கியமான இரண்டு வில்லன்களால் ஏற்பட்ட விளைவுகளோ அவற்றுள் பகீர் ரகம். அரசாட்சி முழுவதும் தமதானதுமே பால்ட்வின் எடுத்த முக்கிய முடிவு, ‘டமாஸ்கஸுடன் ரேமாண்ட் ஏற்படுத்தியிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தேவையில்லை’ என்பதாகும். முஸ்லிம்களுடனான ஜெருசலத்தின் இந்தக் கொள்கை மாற்றம், ரேமாண்டின் செல்வாக்கையும் சரித்தது. ஏனெனில்–
“அன்பு மகனே பால்ட்வின், என்னதான் நான் உன்னை விட்டுச் சென்று விட்டிருந்தாலும், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயல்லவா? உறவு மறந்து விடுமா? ” என்பது போல் ஏதேதோ பேசி உறவைப் புதுப்பித்துக்கொண்டு ஜெருசலம் அரசவைக்குத் திரும்பினார் பால்ட்வினின் தாயார் அக்னெஸ் (Agnes of Courtenay). வந்து சேர்ந்த வேகத்திலேயே தம்முடைய சகோதரர் கோட்னியின் ஜோஸ்லினை (Joscelin of Courtenay) –பால்ட்வினின் தாய் மாமனை– அரசின் கணக்காயராக நியமித்தார். மிக உயர்ந்த அரசாங்கப் பதவி அது. அதன் மேற்பார்வையில்தான் கருவூலமும் அரச உடைமைகளும் இருந்தன. அப்படியே ராஜா பால்ட்வினின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்குச் செலுத்துபவராகவும் மாறினார் அக்னெஸ்.
திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்ட், கோட்னியின் மூன்றாம் ஜோஸ்லின், ஷட்டியோனின் ரேனால்ட் ஆகியோரெல்லாம் நூருத்தீனால் கைது செய்யப்பட்டுச் சிறைக் கொட்டடியில் கிடந்தவர்கள். அவர்களுக்கெல்லாம் விடுதலை அளித்துச் சிறைக் கதவைத் திறந்து விட்டவர் அலெப்போவின் குமுஷ்திஜின். தளை அறுபட்டுக் கிளம்பிய பூதங்களாக அம்மூவரும் ஸலாஹுத்தீன் அய்யூபிக்கு மாபெரும் உபத்திரவமாய் வந்து சேர்ந்தார்கள். அவர்களுள் ரேனால்ட்டின் வில்லத்தனம் கொடூரத்தின் உச்சம்.
பால்ட்வினுக்குத் தொழுநோயின் உபாதைகளும் அங்கத்தில் பாதிப்புகளும் ஒருபுறம் தொடர்ந்தபடி இருக்க, அவர் சுதந்திர ராஜாவாகச் செயல்பட ஆரம்பித்த நேரத்தில் வந்து இணைந்த மூன்றாம் ஜோஸ்லினும் ஷட்டியோனின் ரேனால்டும் அதுவரை காப்பாளராக இருந்து ஆட்சியைக் கவனித்த ரேமாண்டின் மீது கடும் வெறுப்பில் இருந்தனர். ஜெருசலம் ராஜாங்கம் பலவீனப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமே அவர்தாம் என்று வாதிட்டனர். நூருத்தீன் மரணமடைந்த பின் ஸலாஹுத்தீனின் நிலை உறுதியற்றதாக இருந்தது. அவரைப் போரில் தோற்கடிப்பது முடியாது என்றாலும் அவர் இஸ்லாமிய ஆட்சியை ஒன்றிணைத்து விரிவுபடுத்தியதைத் தடுத்திருக்கலாம். ஆனால் நிர்வாகியாக இருந்த ரேமாண்ட் அப்படி ஏதும் செய்யாமல் நமது இராணுவச் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ராஜதந்திரம் என்ற பெயரில் கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கை இதற்குப் பெருமளவு காரணம் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்; வாதிட்டனர்.
சிரியாவில் ஸலாஹுத்தின் தமது பிடியை வலுப்படுத்தி வருகின்றார். போர் நிறுத்தக் கொள்கையை இனியும் தொடர்வோமானால் அவர் மேலும் வலிமையடைய நாம் உதவி செய்ததாகவே போய் முடியும். ஆகவே நிலைமை மேலும் மோசமாவதற்குள் அவரது முயற்சிகளைத் தடுக்க வேண்டும்; அவரது முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. முழு அளவிலான போர் நடவடிக்கைக்குத் திட்டமிட்டார் தொழுநோய் ராஜா நான்காம் பால்ட்வின்.
அது-
(தொடரும்)
