சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 94

Share this:

94. கெய்ரோவில் ஸலாஹுத்தீன்

மாஸ்கஸும் சிரியாவின் தெற்குப் பகுதிகளும் வசமாகிவிட்டன; அலெப்போ மட்டும் முரண்டு பிடித்துக்கொண்டே இருக்கிறது; தற்சமயம் அதை விட்டுப்பிடிப்பதைத் தவிர, போர் நடவடிக்கை சரிவராது என்றாகி விட்டது; எனவே, எகிப்துக்குச் சென்று சில முக்கிய விஷயங்களைக் கவனிப்போம். இங்கு ஆட்சி விரிவடைந்தாலும் அங்கு நிர்வாகம் பலவீனப்படக் கூடாதல்லவா’ என எகிப்துக்குச் சென்று வர முடிவெடுத்தார் சுல்தான் ஸலாஹுத்தீன். டமாஸ்கஸின் நிர்வாகத்தை, யெமனிலிருந்து திரும்பிவிட்ட தம் அண்ணன் ஷம்சுத் தவ்லாவிடம் ஒப்படைத்துவிட்டு ரபீயுல் அவ்வல் ஹி. 572 / செப்டெம்பர் 1176. டமாஸ்கஸிலிருந்து கிளம்பி கெய்ரோ வந்து சேர்ந்தார்.

அடுத்த ஓராண்டு வரை அங்குத்தான் அவரது வாசம் நீடித்தது. பரபரவெனப் பற்பல நிர்வாக நடவடிக்கைகளும் கட்டுமானங்களும் முன்னெடுக்கப்பட்டன. வெகு முக்கியமாக எகிப்தின் பாதுகாப்பும் கெய்ரோவுக்கான சுற்றுச் சுவரும். சிரியாவில் நிகழ்த்திய படையெடுப்புகளும் முற்றுகைகளும் அவை அளித்த அனுபவமும் எகிப்தின் பாதுகாப்பைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் சுல்தான் ஸலாஹுத்தீனுக்குள் ஏற்படுத்தியிருந்தன. சிரியாவில் பலமான அரண்களுடன் திகழ்ந்த நகரங்களும் வலுவான கோட்டைகளும் எதிரிகளின் தாக்குதலை சமாளித்து எதிர்த்து நிற்க எந்தளவு முக்கியமாக உள்ளன என்பதைக் கவனித்திருந்தார் ஸலாஹுத்தீன். பால்பெக், ஹமா, ஹும்ஸ் நகரங்கள் மற்றும் பல குடியிருப்புகள் அவரது முற்றுகைக்கு உள்ளானபோது தற்காப்பு மதில்களாலும் கோட்டைகளாலும் அந்நகரங்கள் எத்தகு பலன்களைப் பெற்றன என்ற பாடம் அவருக்குக் கிடைத்திருந்தது. அந்த மதில்களுள் பல நூருத்தீன் அவரது ஆட்சியில் கட்டியவை. அலெப்போ நகரமோ வலுவான அரண்களுடனும் எளிதில் தகர்க்க முடியாத பாதுகாவல்களுடனும் உயர்ந்தோங்கி நின்றிருந்தது. இவையன்றி, அவரது இளமைப் பருவத்தில் இரண்டாம் சிலுவைப்போர் நடைபெற்றபோது டமாஸ்கஸின் சுவர்களும் வலிமை வாய்ந்த கோட்டையும் அதைத் தடுத்து எதிர்கொண்டதும் அவருக்கு நினைவில் இருந்தது. இவற்றுடன் ஒப்பிடும்போது கெய்ரோவின் அரண்கள் வெறுமே அடிப்படையானதாகவும் பழமையானதாகவும் இருந்தன. அவற்றை நவீனப்படுத்திப் பாதுகாப்பை மேம்படுத்துவது கட்டாயம் என்று முடிவானது.

நாம் இன்று அறிந்துள்ள கெய்ரோ அன்று இரண்டு நகரங்களாக இருந்தது. அவை, முதலில் அரபியர்கள் உருவாக்கிய ஃபுஸ்தத். அதன் பின் ஆட்சிக்கு வந்த ஃபாத்திமீக்கள் உருவாக்கிய காஹிரா. இவை இரண்டையும் ஒரே வட்டத்திற்குள் கொண்டு வந்தது சுல்தான் ஸலாஹுத்தீன் உருவாக்கிய சுற்றுச் சுவர். ஃபுஸ்தத்துக்கும் கெய்ரோவுக்கும் தனித்தனியே சுவர்களை எழுப்பிப் பிரித்தால் காவலுக்குத் தனித்தனிக் குழுக்களாக வீரர்கள் தேவை; எனவே, இரண்டு நகரங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரே சுற்றுச் சுவர் எழுப்புவதே உசிதம் என்று முடிவெடுத்தார் ஸலாஹுத்தீன். உருவானது திட்டம். மாபெரும் திட்டம். ஆறு ஆண்டுகளுக்கு முன் நகரில் ஏற்கெனவே இருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி வலுப்படுத்தப்பட்டிருந்த போதும் இப்பொழுது நிகழத் தொடங்கிய மாற்றம் பெரும் மாற்றம். அது கெய்ரோவின் தற்காப்பையும் ஸலாஹுத்தீனின் அதிகாரத்தையும் பறைசாற்றும் கம்பீர மாற்றம்.

சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆரம்பமானது. அதன் சுற்றளவு 29,302 முழம். அதாவது 43,953 அடி. அதனுடன் சேர்த்துக் கோட்டை ஒன்றும் எழும்பியது. நகரின் மத்தியில் முக்கியக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் ஸஅத் தவ்லா மஸ்ஜிதுக்கு அண்மையிலும் உள்ளது அல்-முகத்தம் மலை. 75 மீட்டர் உயரத்தில் இருந்தது அதன் உச்சி. அங்கு கோட்டை ஒன்று கட்ட உத்தரவிடப்பட்டது. அந்த மகா திட்டத்தின் பொறுப்பு சுல்தானின் நம்பிக்கைக்குரிய கரகுஷ் ன்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஷிர்குஹ்வின் படையில் அஸ்காராக இருந்த காக்கேஸிய கரகுஷ், ஓர் அலி. ஸலாஹுத்தீன் ஃபாத்திமீக்களின் வஸீராக நியமிக்கப்பட்டபோது அவருடன் இணைந்த கரகுஷ் அவருக்கு விசுவானமானவராக அமைந்து, துணைத் தளபதியாகச் சேவையாற்றி பின்னர் வீரமரணமும் எய்தியவர். கரகுஷ்ஷுக்குக் கூர்மதி; ஆனால் முரட்டு வீரர். மலை உச்சியில் வலுவான அடித்தளங்களுடன் எழும்பிய அக்கோட்டையில் ஒரு கிணற்றையும் கட்டினார் கரகுஷ். நபி யூஸுஃப் (அலை) அவர்களை நினைவுகூரும் வகையில் அதற்கு இடப்பட்ட பெயர் ’யூஸுஃப் கிணறு’. அந்தக் கிணற்றை அடைய மலையில் சீரான பாதைகளும் செதுக்கப்பட்டன. தொண்ணூறு மீட்டர் ஆழமுள்ள அக்கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கோட்டையில் வசித்த மக்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கக் கால்நடை மிருகங்கள் உதவின.

கோட்டையிலிருந்து கீழே பார்த்தால் முழு நகரமும் கண்களுக்குள் அடங்கியது. அதனால், நகரக் கண்காணிப்பு மேம்பட்டு, நகரத்தில் எங்கு எந்தக் கலகம் ஏற்பட்டாலும் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது. கெய்ரோவின் மீது எதிரிகள் படையெடுத்து வந்தால் அதையும் உடனே அறிய முடிந்தது. என்பதோடன்றி அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளும் சிறப்பான தற்காப்புத் தளமாகவும் ஆகிவிட்டது அக்கோட்டை.

மலை உச்சியில் கட்டப்பட்ட கோட்டையைக் குறித்துப் பிற்கால ஆசிரியர் ஒருவர், ‘ஃபாத்திமீக்களின் மிச்சசொச்ச ஆதரவாளர்களைப் பற்றிய எச்சரிக்கை உணர்வு நீடித்து வந்தது. அந்த ஆட்சியாளர்களின் அரண்மனைகளையோ பிரித்து அளித்தாகிவிட்டது. எனவே பாதுகாப்பு மிக்க புதிய இடம் தேவைப்பட்டது’ என்று எழுதியுள்ளார். எகிப்திய வரலாற்றாசிரியர் அல்-மக்ரீஸீயின் குறிப்புகளிலோ கோட்டையைப் பற்றி நாவுக்குச் சுவையான தகவல் உள்ளது. ‘சுல்தான் கெய்ரோவில் இறைச்சியைத் தொங்கவிட்டு ஆராய்ந்தார். அது ஒரு நாளுக்குப் பிறகு கெட்டுவிட்டது. கோட்டையில் அதிகப்படியான இறைச்சிகள் தொங்கவிடப்பட்டன. அவை இரண்டு நாட்களுக்குப் பிறகே கெட்டுப்போயின. ஆகவே மலைப்பகுதி சுகாதாரமானதாகக் கருதப்பட்டது.

இவையும் கோட்டை கட்ட உபகாரணங்களாக இருந்திருக்கலாம். ஆனால், தனக்கே உரிய உயர்நோக்குடன் உயர எழும்பியது கோட்டை. இரண்டு நகரங்களையும் கட்டியணைத்துச் சுற்றி வளைத்து நீண்டது சுவர் கட்டுமானம். கோட்டையின் கட்டுமானப் பணிகள் 1183-84 ஆம் ஆண்டுகளுக்குள் நிறைவடைந்த போதும் சுவரின் பணிகள் மட்டும் ஸலாஹுத்தீனின் மரணத்திற்குப் பிறகும் நீண்டது. அது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே முடிவுற்றது.

மற்றொரு திட்டமாக நைல் நதியின் மேற்குக் கரையிலுள்ள ஜீஸாவிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலை அமைத்தார்கள். சுமார் நாற்பது வளைவுகளுடன் பாலைவனத்தில் நீண்டு பாலங்களில் முடிவுற்றது அந்தப் பாதை. நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. அப்பொழுது இராணுவம் கெய்ரோவிலிருந்து வெளியேறுவது மிகக் கடினம். அச்சமயத்தில் எதிரிகள் படையெடுத்து வந்தால் என்ன செய்வது? அவர்களை எதிர்கொள்ள கெய்ரோவிலுள்ள படைகள் இப்பொழுது இந்தப் பாதையின் மூலம் வெளியேறிச் செல்ல வழி ஏற்பட்டது. சுல்தான் ஸலாஹுத்தீனும் ஃகராகுஷும் எந்தளவு தற்காப்பு ஏற்பாடுகளிலும் இராணுவ நடவடிக்கைகளிலும் முன்னேற்பாடாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இத்திட்டம் ஓர் உதாரணம்.

கெய்ரோ மட்டுமின்றி தமீதா, தனிஸ், அலெக்ஸாந்திரியா நகரங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தற்காப்புக்கான முன்னேற்பாடுகள் முடுக்கப்பட்டன. ஃபாத்திமியர் ஆட்சிக் காலத்தில் கப்பற்படை வலிமையாக இருந்தது. அதே வலிமையை மீட்டெடுத்து, கப்பல் படையை விரிவாக்கச் சிறப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார் ஸலாஹுத்தீன். அறுபது போர்க் கப்பல்களும் இருபது போக்குவரத்துக் கப்பல்களும் உருவாயின.

இராணுவ ரீதியான செயல்பாடுகள் இவையெனில் சிறப்பான இதர திட்டங்களும் காரியங்களும் அதே வேகத்தில் நடைபெற்றன.

oOo

அக்காலத்தில் மக்காவுக்கு வரும் ஹஜ் பயணிகளிடம் நுழைவு வரி வசூலிக்கப்பட்டது. அது அந்நகர ஆளுநர் இட்டிருந்த சட்டம். வரி கட்டினால் மட்டுமே ஹஜ்ஜுக்கு அனுமதி என்ற கடுமையான சட்டம். வசூலிக்கப்படும் வரிகளே மக்கா நிர்வாகத்திற்கான வருமானமாக இருந்திருக்க வேண்டும். ‘இது எங்களுக்கு அதிகப்படியான பொருளாதார சிரமத்தை அளிக்கிறது’ என்று மக்கள் தங்களின் கோரிக்கையை சுல்தான் ஸலாஹுத்தீனின் கவனத்திற்குக் கொண்டுசென்றனர். துரித நடவடிக்கை எடுத்தார் ஸலாஹுத்தீன்.

“மக்காவின் ஆட்சியாளருக்கு அந்த வரிகளுக்கான இழப்பீட்டை நாம் நமது சொத்திலிருந்து அளிப்போம். அவருக்கு நிலங்களை ஒதுக்குவோம். அதிலிருந்து அவர் பயனீட்டலாம்” என்று அறிவித்தார் சுல்தான். வெறுமே அறிவிப்புடன் நின்று விடாமல் மக்காவின் ஆட்சியாளருடன் ஒப்பந்தமும் ஏற்படுத்தினார். ஹஜ் பயணிகளின் வரிகளுக்குப் பகரமாய் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரெண்டு இலட்சம் கிலோ கோதுமை என்று உடன்படிக்கை ஏற்பட்டது. (அக்கால அளவீட்டில் எட்டாயிரம் அர்தெப். இன்றைய அளவில் ஓர் அர்தெப் என்பது 150 கிலோவாகும்) இரத்தானது வரி.

ஹஜ் பயணம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மாபெரும் வேட்கை. அதன் ஏற்பாடுகள் பெரும் பிரயத்தனம். அதில் முக்கியமான சிரமம் ஒன்று தீர்ந்துவிட்டது என்றால் அம்மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அகமகிழ்ந்து போனார்கள் அவர்கள். பிரபலமானது சுல்தான் ஸலாஹுத்தீனின் புகழ். மக்காவிலோ அவரைப் பெரும் புரவலராக அடையாளப்படுத்தி விட்டது இந்த அறச்செயல்.

கல்வித் துறையின் சார்பாக கெய்ரோவில் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் அடக்கத்தலத்திற்கு அண்மையில் ஒரு கல்விக்கூடம் கட்டப்பட்டது. அலெக்சாந்திரியாவில் ஒரு சட்டக் கல்லூரி உருவானது. அரண்மனையின் ஒரு பகுதியில் மருத்துவமனை கட்ட உத்தரவிடப்பட்டது. கல்விக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஏராளமான நன்கொடை வழங்கப்பட்டது.

oOo

இதற்கிடையே பரங்கியர் தரப்பில் நடந்தவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன் சுருக்கமாகப் பார்ப்போம்:
1176ஆம் ஆண்டு தொழுநோய் மன்னன் நான்காம் பால்ட்வின் பருவ வயதை எட்டியதும் அதுவரை நிழல் ஆட்சி செய்துகொண்டிருந்த கோமான் ரேமாண்டின் செல்வாக்கு முடிவுக்கு வந்தது. தம் தொழுநோய் உபாதையை ஒதுக்கி வைத்துவிட்டு, நான்தான் ராஜா என்று ஆட்டத்தில் இறங்கினார் நான்காம் பால்ட்வின். ரேமாண்ட் அத்தனை ஆண்டுகள் முஸ்லிம்களிடம் மேற்கொண்டிருந்த தூதுறவு நட்புக் கொள்கையைத் துண்டித்துவிட்டு, டமாஸ்கஸுடனான சமாதான உறவைப் புதுப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டு, ‘கிளப்பு படைகளை’ என்று உத்தரவிட்டார் அவர்.

அவரது படை அல்-பிஃகா நகரின் மீது தாக்குதல் தொடுத்தது. அச்சமயம் ஷம்சுத்தீன் முஹம்மது இப்னு அப்துல் மாலிக் இப்னுல் முகத்தம் என்பவர் பால்பெக்கின் ஆட்சியாளர். பிஃகா நகர் பால்பெக் மாவட்டத்தின் ஒரு பகுதி. பரங்கியர்கள் படைக்குழு அந்நகரின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது என்று அவருக்குத் தகவல் வந்து சேர்ந்ததும் அவர்களை எதிர்கொள்ள, தம் படை வீரர்களுடன் சென்றார் ஷம்சுத்தீன். அவருடைய படையினர் புதர்களில் பதுங்கியிருந்து பரங்கியர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்; பலரைக் கொன்றனர். இருநூறு பரங்கியர்களைக் கைது செய்து ஸலாஹுத்தீனிடம் அனுப்பி வைத்தார் ஷம்சுத்தீன்.

அதே நேரத்தில்–
டமாஸ்கஸ் பகுதிக்குள் பரங்கியர்களின் மற்றொரு குழு நுழைந்தது. ஸலாஹுத்தீனின் சகோதரர் ஷம்சுத்தவ்லாவுக்கு அத்தகவல் சென்றது. அவரும் பரங்கியர்களை எதிர்க்கத் தம் படையுடன் சென்றார். ஆனால் அங்கு அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டு முஸ்லிம் படையினர் பலரை பரங்கியர்கள் கைது செய்தனர். இது பரங்கியர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. பிஃகா நகரில் ஏற்பட்ட இழப்பிற்கு இது ஈடு என்று பெருமிதம் ஏற்பட்டு அவர்களது ஆட்டம் அப்பகுதியில் விரிவடைந்தது.

இவ்வாறாக, ஜெருசலத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு, முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு, எந்த ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் மத விரோதிகளாய் பரங்கியர்கள் வீற்றிருக்கும்போது, ஸலாஹுத்தீனின் கவனம் எப்படி அவரது ஆட்சி நிர்வாகத்துடன் மட்டும் திருப்தியுற்று நின்று விடும்? நிர்வாக மேம்பாடுகளும் ஒழுங்கமைப்பும் ஒருபுறம் நடைபெற்றாலும் அவரது எண்ணமும் இலக்கும் ஒன்றில் மட்டும் நிலைகுத்தி நின்றது. ஜெருசலம்! அதை மீட்கப் புனிதப்போர்! தம் சகோதரர் தூரான்ஷாவுக்கும் அதை எழுதியிருந்தார்

‘இவ்வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள்.. . சிலுவையுத்தக்காரர்களுடன் போரிடுவது’
அது–
(தொடரும்)


Share this: