சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 57

Share this:

57. அஸ்கலானின் வீழ்ச்சி

ஜெருசல ராஜா ஃபுல்க் மரணமடைந்ததும் விதவையான அவருடைய மனைவி மெலிஸாண்ட், பதின்மூன்று வயதுடைய தம் மூத்த மகன் மூன்றாம் பால்ட்வினை (Baldwin III) ஜெருசலத்தின் சம்பிரதாய ராஜாவாக ஆக்கிவிட்டு, ஆட்சி செலுத்த ஆரம்பித்தார் என்று பார்த்தோம். அதன்பின் அங்கு நிகழ்ந்தவற்றையும் பார்த்து விடுவோம்.

தொடக்கத்தில் சிறுவர் பால்ட்வினுக்குத் தம் தாயார் ராணி மெலிஸாண்ட்டின் அறிவும் அனுபவமும் ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால் அவர் பதின்ம வயதைக் கடந்து காளைப்பருவத்தை  எட்டியதும் தாயாரின் அதிகாரமும் கட்டுப்பாடும் உறுத்தின; குடைந்தன. நெருக்கடியில் நெளிந்தார்.

‘முன்னர் நான் சிறு பிள்ளை, வழிநடத்தினீர்கள் சரி; இப்பொழுது நான்தான் பருவமடைந்து விட்டேனே, வழிவிட்டு நகர வேண்டியதுதானே? ராஜா நான்; என் ஆட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ இத்தகு மனோநிலையுடன் அவர் தலைநிமிர்த்தியதும் தாய்க்கும் தனயனுக்கும் இடையே பனிப்போர் உருவானது. பனி விலகி, போர் என்ற நிலைக்கும் சென்றுவிட்டது.

ஆட்சி செலுத்தி அதன் சுவையைப் பருகிவிட்ட மெலிஸாண்டுக்குப் பரவலான ஆதரவு இருந்து வந்தது. அந்தத் தெம்பில் அவர் தம் பங்கு அதிகாரத்தை மகனுக்கு விட்டுத்தர விரும்பவில்லை. பெற்ற பாசம் இரண்டாம்பட்சமாகி வளர்ந்தது விரோதம். இறுதியில், தாயை ஜெருசலத்தில் முற்றுகையிட்டு, வற்புறுத்திப் பதவி விலக வைத்து ஆட்சியைத் தம் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சுதந்திரமான ராஜவானார் மூன்றாம் பால்ட்வின்.

ஜெருசலத்தின் அரசியல் நிலவரம் அது என்றால், ரேமாண்டை இழந்திருந்த அந்தாக்கியாவுக்கு ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் நெருக்கடி. ரேமாண்டின் மகன் மூன்றாம் பொஹிமாண்டுக்கு (Bohemond III) அச்சமயம் ஐந்து வயது. அதனால், ஜெருசல ராஜா மூன்றாம் பால்ட்வின் ரேமாண்டின் விதவை மனைவி கான்ஸ்டன்ஸைத் தாம் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு மறுமணம் முடித்து வைக்கத் திட்டமிட்டார். தாட்சண்யமின்றி அதை நிராகரித்தார் கான்ஸ்டன்ஸ். தம் தாயார் அலிக்ஸ் செய்ததைப்போல், தம் விதியைத் தாமே பார்த்துக்கொள்வது  என்பது அவர் முடிவு. அதனால் தகுந்த ஆட்சித் தலைமையோ, இராணுவத் தலைமையோ இல்லாமல் போன அந்தாக்கியா, ஜெருசல ராஜாவின் தற்காலிக மேற்பார்வைக்குள் வந்தது. திரிப்போலியிலோ, அதன் அதிபராக இருந்த இரண்டாம் ரேமாண்டை அங்கிருந்த அஸாஸியர்கள் தங்கள் பங்கிற்குக் கொன்று முடித்திருந்தார்கள். அவருடைய மகன் மூன்றாம் ரேமாண்டுக்குப் பன்னிரெண்டு வயது. அதனால் திரிப்போலியின் பாதுகாவலர் என்ற பொறுப்பும் ஜெருசல ராஜாவின் வசமானது.

இரண்டாம் சிலுவைப்போரில் முஸ்லிம்களிடம் தோற்று, அதனால் ஏற்பட்ட அவமானம்; அடுத்து இனாப் போரில் ரேமாண்ட் கொல்லப்பட்டு அவர் தலை பறிபோய், தகுந்த தலைமையின்றிப்போன அந்தாக்கியா; எடிஸ்ஸாவில் இரண்டாம் ஜோஸ்லின் சிறைபிடிக்கப்பட்ட பின் அங்கு முற்றுப் பெற்றுவிட்ட தங்கள் ஆட்சி; திரிப்போலியின் இரண்டாம் ரேமாண்ட் கொல்லப்பட்டு அங்கும் அசுபம்; அடுத்த சிலுவைப்போரைத் தொடுப்போம்; அணி திரண்டு வரவும் என்று ஐரோப்பாவிற்குத் தகவல்கள் அனுப்பினால் கிணற்றில் போட்ட கற்களாய் அந்த வேண்டுகோள்… தொடர் தோல்வியும் அடிமேல் அடியுமாக உற்சாகமின்றி, துக்கமும் கவலையுமாக மனமுடைந்து இருந்தார்கள் பரங்கியர்கள். ஏதேனும் ஒரு பெருவெற்றியே அந்த சோகத்தை ஆற்றும் என்ற நிலை.

அதனால், நூருத்தீன் தமது கவனத்தை டமாஸ்கஸின் மீது குவித்து அங்கு மும்முரமாக இருந்த நேரத்தில், தமது ஒற்றை அதிகாரத்தை ஜெருசலத்தில் உறுதிப்படுத்திக்கொண்ட ராஜா மூன்றாம் பால்ட்வின் அவ்விதமான ஒரு வெற்றிக்கு வியூகம் வகுத்தார். இலக்கானது ஜெருசலத்தின் தென்மேற்கே உள்ள அஸ்கலான்.

முதலாம் சிலுவைப்போரில் ஜெருசலத்தைப் பிடித்தபின், காட்ஃப்ரேயின் தலைமையில் ஃபாத்திமீக்களுடன்  அஸ்கலானில் போர் நடைபெற்றது; சிலுவைப்படை வென்றது; ஆயினும் சிலுவைப்படைத் தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அஸ்கலான் பரங்கியர்களிடம் பறிபோகாமல் இஸ்லாமியர்கள் வசமே தங்கியது என்று முன்னர் நாம் பார்த்தது நினைவிருக்கலாம். பண்டைய துறைமுக நகரமான அந்த அஸ்கலான், அதன் பின் எகிப்தில் ஆட்சி செலுத்திய ஃபாத்திமீக்களின் வசமே இருந்து வந்தது. அவர்களுக்கு அதுதான் ஜெருசலத்திற்கான நுழைவாயில் நகரம். நகரைச் சுற்றி அரை வட்டத்தில் இரண்டு அடுக்குப் பாதுகாப்பாக உள்புற, வெளிப்புறச் சுவர்கள்; அவற்றில் கோபுரங்கள். நான்கு நுழைவாயில்களைத் தாண்டி நகரினுள் நுழைந்தால் வலைப் பின்னலாய் நெளியும் தெருக்கள். அவர்களுக்குத் தேவையான நீர் ஆதாரமாகக் கிணறுகளும் நீர்த் தேக்கங்களும் நகரினுள் நிறைந்து இருந்தன. ஆண்டிற்கு நான்கு முறை மக்களுக்கான உணவுப் பொருட்களை எகிப்து அனுப்பி வந்தது. பாதுகாப்புக்குத் துருப்புகளையும் ஆயுதங்களையும் குவித்திருந்தது அஸ்கலான்.

அஸ்கலானுக்குத் தெற்கே  உள்ளது கஸ்ஸா (காஸா). 1150ஆம் ஆண்டு, ராஜா மூன்றாம் பால்ட்வின் முதல் வேலையாக கஸ்ஸாவில் ஒரு கோட்டையைக் கட்டினார். அது கெய்ரோவுக்கும் அஸ்கலானுக்கும் இடையிலான நிலவழித் தொடர்பைச் சிதைத்தது. அதன் பின், 1153ஆம் ஆண்டு, அஸ்கலானை நோக்கிப் படையைக் கிளப்பினார் அவர். ஜெருசலத்தின் தலைமைப் பாதிரியார், சிஸேரியா, நஸாரத், டைர் நகரங்களின் பேராயர்கள், மடாதிபதிகள், ஹாஸ்பிடல்ர்கள், டெம்ப்ளர்கள் என்று பெருந்தலைகளுடன் திரண்டிருந்தது அப்பெரும் படை. இராணுவத் தளவாடங்களாகக் கவண் வீசும் இயந்திரங்கள், நகரும் வகையில் கட்டமைக்கப்பட்ட உயரமான முற்றுகைக் கோபுரம் ஆகியன இழுத்து வரப்பட்டன. வெகு முக்கியமாக, ஆதார உத்வேகமாக, சுமந்து வரப்பட்டிருந்தது மெய்ச் சிலுவை.

அஸ்கலான் சுற்றி வளைக்கப்பட்டது;  முற்றுகை இடப்பட்டது; கடுமையான தாக்குதல் தொடங்கியது.

வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால் அவர்களது முற்றுகைக் கோபுரம் நகர்ந்து நகர்ந்து தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதை அழித்தால்தான் சரிவரும் என்று முடிவெடுத்தது அஸ்கலான். சுவர்களுக்கும் அந்தக் கோபுரத்துக்கும் இடையே மரக்கட்டைகளைத் தூக்கிப் போட்டு நிரப்பினார்கள். தாரும் எண்ணெய்யும் ஊற்றினார்கள். பற்ற வைத்தார்கள். திகுதிகுவென்று எரிந்தது தீ. ஆனால் அச்சமயம் பார்த்து வீசிய கடுமையான கடல் காற்று நெருப்பை நகரத்தின் பக்கம் திருப்ப, அஸ்கலானின் பாதுகாப்புச் சுவரின் ஒரு பகுதி  பாதிப்படைந்து இடிந்து விழுந்தது. கும்மாளக் குதூகலத்துடன், கொள்ளை தாகத்துடன் அதன் உள் நுழைய ஓடியது பரங்கியர் படை. ஆனால் படையில் இருந்த டெம்ப்ளர்களுக்கோ நகரைத் தாங்கள் முதலில் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற சுயநலம். நாற்பது டெம்ப்ளர்கள் விரைந்து வந்து பரங்கியர் படையினருக்குத் தடுப்பு ஏற்படுத்தினார்கள்; தடுத்து நிறுத்தினார்கள். அந்த உட்கட்சி களேபரத்தின் விளைவாகப் பரங்கியர்களுள் வெகு சிலரே சுவரின் இடிபாடுகளுக்குள் நுழைய முடிந்தது.

சுவர் இடிந்ததால் மனம் இடிந்து போயிருந்த அஸ்கலான் மக்களுக்கு அது எதிர்பாராத திருப்பம். அலையாக நுழையப் போகிறது படை என்று அஞ்சியவர்கள், உள் நுழைந்தவர்கள் சிலர் மட்டுமே என்றதும் எளிதாக அவர்களை வெட்டித்தள்ளினர். கிடைத்த அவகாசத்தில் வெகு வேகமாக இடிந்த சுவர் பகுதியை அடைத்து மூடினர். தாம் கொன்ற பரங்கியர்களின் உடல்களைக் கயிற்றில் கட்டி,  முற்றுகை இட்டிருந்த படையினர் பார்வைக்குக் கொத்தளத்தின் உச்சியில் இருந்து தொங்கவிட்டனர். திசை மாறிய தீயினால் அஸ்கலான் சுவருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. அது விழுந்து சரிந்தபோது சிதறிய இடிபாடுகள் பரங்கியர்களின் முற்றுகைக் கோபுரத்தையும் சேதப்படுத்தி உபயோகமில்லாமல் ஆக்கிவிட்டது. தற்காலிக வெற்றியில் ஆசுவாச மூச்சுவிட்டது அஸ்கலான்.

பரங்கியர்கள் அடுத்து என்ன என்று யோசித்தார்கள். போதும் திரும்பிவிடலாம் என்றது ஒரு கட்சி. தேவன் நம்முடன் இருக்கின்றார்; போரைத் தொடர்வோம் என்றது மற்றொரு கூட்டம். மூன்று நாள் விவாதித்தார்கள். முற்றுகையைத் தொடர்வோம் என்று முடிவானது. அதன் பின் நிகழ்ந்த பல கட்டத் தாக்குதலில் பரங்கியர் கை ஓங்கியது; நிபந்தனை விதித்தனர். ஏற்றுக்கொண்டது அஸ்கலான். அந்தப் போரின் போது, அஸ்கலான் நூருத்தீனை உதவிக்கு அழைத்தது, அபாக், நூருத்தீனின் காலை வாரிவிட்டுப் பரங்கியர்களுடன் கூட்டணி அமைத்தது ஆகியனவற்றைத்தாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இறுதியில் எட்டு மாத முற்றுகைக்குப் பிறகு, 1153ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22இல் அஸ்கலான் பரங்கியர்களிடம் வீழ்ந்தது.

இந்தப் போரில் பங்கு பெற, அந்தாக்கியாவிலிருந்து ஒரு சேனாதிபதி மூன்றாம் பால்ட்வினிடம் வந்து சேர்ந்திருந்தான். பற்பல சேனாதிபதிகளுள் ஒருவன் என்று பெயர் முக்கியத்துவம்கூட இன்றி இருந்தவன் அவன். அடுத்தச் சில மாதங்களில் மிகப் பெரும் அந்தஸ்திற்கு உயர்ந்து அவன் நிகழ்த்திய களேபரம் ஒரு வினோதம் என்றால், பின்னர் பதினாறு ஆண்டுகள் கழித்து சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வரலாற்றில் நுழைந்து, முதன்மையான வில்லனாக உருவெடுத்து போட்ட ஆட்டங்கள் கொடூரம்.

யார் அவன்? அப்படி என்ன பெரிய வில்லன்? அவனது அறிமுகம் வெகு முக்கியம் என்பதால அடுத்து அவனை முன்னறிமுகம் செய்து கொள்வோம்.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.