இனிப்பு என்றாலே பிடிக்காத ஆளில்லை. அதிலும் பழங்களைக் கொண்டு சமைக்கப்படும் இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பார்கள். பண்டிகை / விஷேச தின கொண்டாட்டங்களில் மேலும் மகிழ்வளிக்கும் பைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
தேவையானப் பொருட்கள்:
ரவை |
2 டம்ளர் (அ) 400 கிராம் |
சர்க்கரை |
500கி. |
நன்கு காய்ச்சிய பசும்பால் |
300மி. |
பால் பவுடர் |
200மி. |
பைன் ஆப்பிள் ஸ்லைஸ் (அன்னாசி பழ துண்டுகள்) |
6 துண்டுகள் |
முந்திரி |
150கி. |
சாரப்பருப்பு (அ)பிஸ்தாப்பருப்பு |
100கி. |
காய்ந்த திராட்சை |
50கி. |
குங்குமப்பூ |
ஒரு விள்ளல் (பின்ச்) |
கொதி நீர் |
8 டம்ளர் |
சூரியகாந்தி நெய் (சன்பிளவர் ஆயில்) |
150கி. |
நெய் |
150கி. |
பைன் ஆப்பிள் எசன்ஸ் |
10மி. |
ஆயத்தம்:
1. பைன் ஆப்பிள் ஸ்லைஸை துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.
2. பால் பவுடரை கட்டி தட்டாமல் கரைத்து நன்கு காய்ச்சி வைக்கவும்.
3. ரவையை சுத்தம் செய்யவும்.
4. முந்திரி, சாரப்பருப்பு, திராட்சையை சுத்தம் செய்யவும்.
செய்முறை:
அடி கனமானதொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணையையும், நெய்யையும் விடவும். தணலை குறைத்து வைக்கவும். எண்ணை சூடானதும் முந்திரியையும், திராட்சையும் ஒன்றன்பின் ஒன்றாகப்போட்டு லேசாக சிவந்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் நீரைக் கொதிக்க விடவும். ரவையை 5 நிமிடம் பிரட்டி கொதிநீரை விட்டு கிண்டவும். கட்டி விழக் கூடாது. பாதி வெந்ததும் பவுடர் பால் மற்றும் பசும் பால் ஆகிய இரண்டையும் சேர்க்கவும். பாலில் சிறிதளவு குங்குமப்பூவை கரைத்து விடவும். சிறிது நேரம் பிரட்டி வேகவிட்டு, அன்னாசிப்பழ விழுதைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வரும்போது சர்க்கரையைச் சேர்த்து கரையும் வரை கிளறி, பைன் ஆப்பிள் எசன்ஸ் சேர்த்து இறக்கி பகிர்ந்துண்டு மகிழவும்.
இந்த பைன் ஆப்பிள் ஸ்வீட் மிகவும் மணமாகவும், சுவையாகவும் இருப்பது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தூண்டும்.
ஆக்கம்: ஆர். நூர்ஜஹான்ரஹீம் (கல்லை)