வாழ்க்கையின் மதிப்பு

ப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை.

சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது.

“வாழ்க்கையின் மதிப்பு என்ன?”

சிறு வயதினன் என்பதால் அனுபவ ரீதியில் இந்தக் கேள்விக்கு விடையளிக்க நினைத்தவர் அவனிடம் ஓர் ஒளிரும் ரத்தினக் கல்லைக் கொடுத்துச் சொன்னார் “உனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் காட்டி, இதன் மதிப்பை அறிந்து வா; ஆனால் யாரிடமும் இதை விற்று விடாதே”

சிறுவன் மகிழ்வுடன் அந்தக் கல்லைப் பெற்றுக்கொண்டான். முதலில் தான் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கும் தள்ளுவண்டிக்காரரிடம் காண்பித்தான். ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள் தருவதாகவும், தனக்கு அக்கல்லைக் கொடுத்துவிடும்படியும் அந்த வண்டிக்காரர் கேட்டார்.

“தாத்தா யாரிடமும் கொடுத்து விடக் கூடாது” என்று சொல்லியிருப்பதைச் சொல்லி விடைபெற்ற அந்தச் சிறுவன், அடுத்து வழமையான காய்கறி வியாபாரிடம் சென்று அந்தக் கல்லைக் காண்பித்தான்.

அவரும் பார்த்துவிட்டு, “இந்த உருளைக் கிழங்குக் கூடையைத் தருகிறேன், இந்தக் கல்லைத் தருகிறாயா?” என்று கேட்டார். அன்புடன் மறுத்த சிறுவன் அடுத்தொரு நகைக்கடையை அணுகினான்.

ரத்தினக் கல்லைப் பார்த்து வியந்த நகை வணிகர், “அருமையான இந்தக் கல்லுக்குப் பத்து இலட்சம் ரூபாய் தரலாம்” என்ற போது சிறுவனுக்கு ஆச்சரியம்! ஆனால் யாரிடமும் விற்கக் கூடாது என்ற தாத்தாவின் நிபந்தனை நினைவுக்கு வர அவரிடமும் நளினமாக மறுத்துவிட்டுப் போனவனுக்கு, ஒரு வைரக் கல் வணிகர் நினைவுக்கு வர அவரிடமும் ஓர் ஆலோசனை கேட்கலாம் என்று அந்த இரத்தினக் கல் வணிகரை அணுகினான்.

சிறுவன் கையில் மதிப்பான கல்லைக் கண்ட வணிகரும் வியந்தார். உயரிய செம்பட்டு வெல்வெட் துணியை விரித்து அதன்மீது அக்கல்லை வைத்துவிட்டு அதனையே சுற்றிச் சுற்றி வந்தார். மெல்லக் குனிந்து அதனைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வியப்பில் விழிகள் விரிய சிறுவனை அன்புடன் ஆரத்தழுவி “உனக்கு எங்கிருந்து கிடைத்தது இந்த உயர்வான இரத்தினம்? என்று வினவினார்.

மதிப்பு அறிந்து வரும்படி பாட்டனார் பணித்ததைச் சொன்னான் சிறுவன்.

“என் முழுவாழ்வின் சம்பாத்தியத்தை, சொத்தெல்லாம் கொடுத்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது” என்றார் அந்தச் செல்வ வணிகர்.

பிரமித்து நின்ற சிறுவன் பிறகு பாட்டனாரிடம் திரும்பி தான் அறிந்த மதிப்பை, நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.

பாட்டனார் “இப்போது உன் கேள்விக்கு விடை கிடைத்ததா?” என்று கேட்டார்.

“மனிதா, நீ ஒரு உயர்மதிப்பிலானவன். சொல்லப் போனால்,விலைமதிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன். மற்ற மனிதர்கள் அவரவர் பொருளாதார நிலை, ஆற்றல், அறிவு, அனுபவம், நம்பிக்கை, நாணயம், சொத்து, உள்நோக்கு, ஆதாயம், சிரம வகை ஆகியவற்றின் அடிப்படையிலேயே பிறரை மதிப்பிடுவர்.

ஆனால் பயப்படாதே, கவலையுறாதே, உன்னை, உன் உண்மையான மதிப்பை உணரவும் உரைக்கவும் யாரேனும் வருவர். நீ தனித்துவமானவன், தன்னிகரற்றவன். ஆக, உன்னை நீயே உணர். இந்த உலகின் அற்ப காசு-பணம், சில்லறைச் சொத்துகளுக்கு உன்னை விற்று விடாதே. கூழைக் கும்பிடுகளில் உன்னைக் குலைத்துவிடாதே, எளிய அற்ப வசதிகளில் உன்னைக் கரைத்துக் கொள்ளாதே*.

*மகத்தான ஓரிறையின் மகத்தான படைப்பு நீ. உன்னை யாராலும் பிரதி செய்யவோ, ஈடு செய்யவோ இயலாது*

*மதிப்பானவன் நீ*
*மதிப்பாய் உன்னை*
*உன் மதியால் உலகை வெல்வாய்*

தமிழில்: இப்னு ஹம்துன்