அமெரிக்கப் பொருளாதாரமும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளும்!

2009-இல் தனது அதிகாரத்தை இழக்கப்போகும் உலக மரண வியாபாரி “புஷ்ஷின் பதவியிழப்பின் போது, அமெரிக்காவின் நிலை என்னவாயிருக்கும்?” இது, அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் கட்சி மீண்டும் அதிகாரத்தில் வருவதை நிர்ணயிக்கப்போகும் காரணிக் கேள்வியாகும். “அமெரிக்காவின் அரசியல் வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரச் சரிவினை நாடு கண்டுள்ளதாக” அமெரிக்கத் தணிக்கை அறிக்கை (Auditing Report) கூறுகின்றது. “பொருளாதாரச் சரிவினை ஈடுகட்ட, வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்” எனவும் அவ்வறிக்கை ஆலோசனை கூறுகின்றது.

தனது அதிகாரப் பதவியிழப்பின் பொழுது நாடு எதிர்நோக்கும் இப்பிரச்சனையைக் கண்முன் நிறுத்திக் கொண்டுதான் புஷ் கடந்த தினங்களில் துளிப்பயனும் இல்லாத ஒரு மத்திய கிழக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

‘உலகில் தனது அதிகார நிலைநாட்டலுக்கு எதிராக எவரும் தலையெடுத்து விடக்கூடாது’ என்பதில் மட்டுமே கவனத்தை வைத்துத் தனது அயல்நாட்டுக் கொள்கையை வகுத்துக் கொண்டு, அதைப் பின்பற்றிச்சென்ற புஷ்ஷிற்குக் கிடைத்த மிகப்பெரும் அடியாக அவரது வளைகுடாப் பயணம் கருதப்படுகின்றது.

இச்சிக்கலான சூழலிலேயே அடுத்தத் தேர்தல் நடக்குமெனில், புஷ்ஷின் கட்சி படுதோல்வியைச் சந்திக்கப்போவது நிச்சயம். இதனை உணர்ந்து கொண்டதாலேயே இதுவரை தான் பின்பற்றிய வழியில் தான் எதிரியாக நினைக்கும் ஈரானை வளைகுடா நாடுகளிலிருந்துத் தனிமைபடுத்தும் நோக்குடன் ஓர் அவசர வளைகுடா சுற்றுப்பயணத்தை புஷ் மேற்கொண்டார். ஆனால், அவரது பயணம் ஏற்படுத்திய விளைவு அவருக்கு திருப்திகரமானதாக இல்லை.

வளைகுடா நாடுகளுக்கிடையில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்து வரும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் பிற்காலத்தில் தங்களுக்கும் மிகப்பெரும் தலைவலியாக மாறும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட வளைகுடா நாடுகள், ஈரானுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கருத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “அணு ஆயுதக் கொள்கையின் பெயரில் ஈரானின் மீது அமெரிக்கா ஏற்படுத்தியப் பொருளாதாரத் தடையினால் எவ்விதப் பயனுமில்லை” என அமெரிக்க ஆடிட்டிங் அறிக்கை கூறுகிறது. 2003 முதல் தற்பொழுது வரை சுமார் 2000 கோடி டாலருக்கான அயல்நாட்டு ஒப்பந்தங்களில் ஈரான் கையொப்பமிட்டுள்ளதாக அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்கா விசாரணைத் துறையிலுள்ள முக்கியக் குழுவின் இந்த அறிக்கை புஷ்ஷிற்கு மிகப் பெரும் தலைவேதனையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே அணு ஆயுத தயாரிப்புப் பெயரைக் கூறி ஈரான் மீது ஐநா இரு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ‘அணுஆயுத தயாரிப்பு முயற்சிகளைக் கைவிடத் தயாராகவில்லை’ என்று காரணம் காட்டி மூன்றாவது பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்த ஐநாவை அமெரிக்கா நிர்பந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணைக் குழுவான அரசுப் பொறுப்புச்சாட்டும் அலுவலகத்தின் (Government Accountability Office – GAO-வின்) முந்தைய இரு பொருளாதாரத் தடைகள் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த இவ்வறிக்கை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

 

”அரசும் வல்லுனர்களும் ஈரான் மீதான இத்தகையத் தடைகள் மூலம் சில பலன்கள் ஏற்பட்டுள்ளன எனக் கூறுகின்றனர். ஆனால், அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நிர்ணயிப்பது கடினமானதாகும்” என GAO அறிக்கை கூறுகின்றது. இது மட்டுமின்றி, ”இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி பொருளாதாரத் துறையில் ஈரானுக்கு ஏதாவது ஒரு வழியிலாவது இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதே சந்தேகம்தான்” எனவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

 

2003 முதல் யுரேனியச் செறிவூட்டலினை விரிவுபடுத்துவதற்காக அயல்நாட்டுக் நிறுவனங்களுடன் ஈரான் 2000 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.  இதில் எல்லா ஒப்பந்தங்களும் முழுமை அடைந்தனவா என்பது உறுதியில்லை. “ஈரானிய அரசு வங்கிகளுக்கு எதிராக ஏற்படுத்தியத் தடையினால், எதிர்பார்த்த அளவில் பலன் விளைவதற்கான சாத்தியம் இல்லை” எனவும் அந்த அறிக்கை கருத்துத் தெரிவித்திருக்கின்றது.

 

”யுரேனியச் செறிவூட்டலில் ஈரானின் நிலையும் உலகரீதியில் அதற்குள்ள வியாபாரத் தொடர்புகளில் ஈரானின் ஆளுமையும் ஈரானைத் தனிமைபடுத்துவதில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். எண்ணையின் உலக அளவிலான தேவை, அதன் விலை ஏற்றம், ஈரானின் எண்ணெய் உற்பத்தித் திறன் மற்றும் வினியோகதிறன் ஆகியவை  2006 இல் ஈரானுக்கு 5000 கோடி டாலர் வருமானம் ஈட்டிக் கொடுத்துள்ளது. 1987 முதல் 2006 வரையுள்ள காலகட்டத்தில் ஈரானின் ஏற்றுமதி 850 கோடி டாலரிலிருந்து 7000 கோடி டாலராக உயர்ந்துள்ளது” எனவும் GAO அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒருபக்கம் தன்னை எதிர்க்கின்ற, தனக்கு எதிராக மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து வரும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி, அந்நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தையும் ஆட்சி நிலைப்பையும் குலைத்து, அதனைக் காரணம் காட்டி, அந்நாட்டின் மீது படை ஏவி மீந்திருக்கும் வளத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு ஈரானின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ள இவ்வேளை, அமெரிக்காவின் பொருளாதாரம் ஒரு பக்கம் அப்படியே சரிந்து அதல பாதாளத்திற்குச் செல்வதாக வந்த அறிக்கை, எழுந்திருக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுக்கின்றதோ என்னவோ தனது அயல்நாட்டுக் கொள்கையினை  மாற்றியமைப்பதில் மிகப் பெரும் பங்காற்றப் போவது மட்டும் நிச்சயம்.