இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள், அப்பாவிகளை அநியாயமாகக் கொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர்களை மனித விரோதத் தீவிரவாதிகள் எனலாம். ஆனால், கடந்தச் சில வருடங்களில் உலகளாவிய அளவில் இந்த அகராதிப் பொருள் அராஜகவாதிகளால் மாற்றியமைக்கப்பட்டு விட்டது. ஆம், ஒரு முஸ்லிம் பெயர், நீண்ட தாடி, கரண்டைக்கு மேலே தொங்கும் கீழாடை. ஒருவரை தீவிரவாதி என முத்திரைக் குத்த இவ்வளவு  போதுமானது.

தீவிரவாதிகளின் இலக்கணங்களான இப்புதிய அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாமல் தர்க்கரீதியிலான அகராதிப் பொருளின் படி நபர்களைக் கண்டுகொள்வதில் இன்று உலகில் ஒருசில நாடுகளில் உள்ள பகுதிகளே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
 
இந்த வரிசையில் இந்தியாவில் கல்வியறிவில் தன்னிறைவு பெற்ற மாநிலமான கேரளத்தைப் பட்டியல் இடலாம். சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து இன்று வரை கம்யூனிஸவாதிகளுக்கும் சங் பரிவார RSS கூட்டத்திற்கும் காணும் இடத்தில் வெட்டிக் கொல்லும் அளவுக்குப் பகைமை நிலை நின்ற போதிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்று கேரளத்தில் மனித குல விரோதக் கூட்டமான RSS-ன் பார்வை மாறாடு போன்ற சிற்சில உதாரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக அதிக அளவில் முஸ்லிம்களைப் பாதித்ததில்லை எனக் கூறலாம்.
 
ஆனால் கடந்த சில வருடங்களாக, முக்கியமாகக் கேரள RSS-ன் முதல் எதிரியான கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தப் பின்னர் முஸ்லிம்களின் மீதான பார்வை தீவிரவாத விஷயத்தில் உலகமயமாக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் காவல்துறை, ஊடகத்துறை, நீதித்துறைகளின் முஸ்லிம்களின் மீதான மாற்றுப் பார்வையிலிருந்துத் தனித்து விளங்கிய கேரள அரசின் சமீபகாலச் செயல்பாடுகள் கல்வியறிவில் தனித்து விளங்கும் அவர்களிடையேயும் இஸ்லாத்தைக் குறித்த பயம் உள்ளூரத் தோன்ற ஆரம்பித்து விட்டதைக் காண்பிக்கின்றது. 
 
கேரள ஊடகத்துறையில் பிரபலமான ஏசியாநெட் தொலைகாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது முக்கியச் செய்தித் தொகுப்பாளரான ஒரு பெண்ணைக் கொண்டுத் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் கேரளாவில் தற்பொழுதும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக ரகசிய விசாரணை அறிக்கை என்றப் பெயரில் பொய்களை அவிழ்த்து விட்டுப் பரபரப்பு காட்டியது. இதற்கு ஆதாரமாக சிமியின் முன்னாள் கேரள பொறுப்பாளரின் பணியிடம் சென்று ஒரு பேட்டி எடுத்து, அதனை அவர்களின் இரகசிய செயல்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்ததாக பொய் கூறியது. 
 
இச்செய்தியின் அடிப்படையில் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், ”சிமி முன்னாள் உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எல்லா வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்று அறிக்கை விடும் அளவில் கொண்டு வந்து சேர்த்தது. பின்னர் அதே சிமியின் முன்னாள் பொறுப்பாளர் ஏசியாநெட் செய்தி சேகரிப்பாளருடன் நடந்த உரையாடல் ஒலிப்பதிவு ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஏசியாநெட் கொடுத்த அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனைச் சந்தித்து இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிப்பேன் எனவும் சம்பந்தப் பட்டவரின் கருத்து பத்திரிக்கைகளில் வெளியானதோடு ஏசியாநெட்டால் வீசப்பட்ட சிமி அஸ்திரம் புஸ்வாணமாகிப் போனது. 
 
இந்த வரிசையில் தற்பொழுது கேரளத்தை உலுக்கும் மற்றொரு இஸ்லாமிய தீவிரவாதப் பிரச்சனை தான் காஷ்மீரைச் சேர்ந்த அல்தாப் அஹ்மத்கான் என்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி கைது செய்தி. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் கேரளாவிலுள்ள குமளி என்ற இடத்திலிருந்து அல்தாப் அஹ்மத்கான் என்ற காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம், கேரள காவல்துறையினரால் தீவிரவாதி எனக்கூறி கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இவரின் ஜாமீன் மனுவை, “காஷ்மீரில் இவர் மீது எண்ணற்ற தீவிரவாத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு பாகிஸ்தானின் ISI-உடன் தொடர்பு உள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய இவரை மத்திய உளவுத்துறை தேடிக் கொண்டு இருக்கும் அளவிற்கு பயங்கரமானவராவார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
இவ்வளவு அதிதீவிர குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட இவரைக் குறித்துத் தற்பொழுது காஷ்மீரிலிருந்து வெளியாகும் செய்தி வேறு விதமாக உள்ளது. 
 
“தீவிரவாதத் தொடர்புக் குற்றம் சுமத்தி கேரள காவல்துறை குமளியில் கைது செய்து சிறையிலடைத்த காஷ்மீரைச் சேர்ந்த அல்தாப் அஹ்மத்கானின் மீது ஒரு வழக்கும் காஷ்மீரில் நிலுவையில் இல்லை எனவும் காஷ்மீர் காவல்துறையும் உளவு துறையும் இவரை தேடி வருவதாகக் கூறிய கேரளக் காவல்துறையின் குற்றச்சாட்டு உண்மையில்லை எனவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.” 
 
நிரபராதி என்ற போதிலும் இவரை விடுதலை செய்யாததற்கான காரணம் என்ன என்ற தேஜஸ் தினப்பத்திரிக்கையின் கேள்விக்கு, “நாங்கள் செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து விட்டதாகவும் அவரை விடுதலை செய்யாததற்கான காரணத்தை கேரள காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும்” என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை IG, S.M.ஸஹாய் பதில் கூறினார். மேலும் அல்தாபின் மீது ஒரு வழக்கும் காஷ்மீரில் நிலுவையில் இல்லை என கேரளக் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் (SP) செய்யத் அஃபத் முஜ்தப கூறினார். 
 
இதற்கிடையில் மகனின் விடுதலைக்காகக் காவல்துறை மற்றும் முதலமைச்சர் குலாம் நபி ஆஸாதிடம் முறையிடப்போவதாக அல்தாபின் தந்தை அப்துல் ரஹ்மான் கான் கூறியுள்ளார். 
 
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை IG-யின் அறிக்கையிலிருந்து அல்தாப் மத்திய மற்றும் காஷ்மீர் உளவுதுறையினர் தேடிக் கொண்டிருக்கும் அதிபயங்கரத் தீவிரவாதி என்றும் இவருக்கு எதிராக ஜம்முவில் எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கேரள காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது அனைத்தும் பொய் என நிரூபணமாகியுள்ளது. 
 
ஸ்ரீநகர் லால் பஸாரைச் சேர்ந்த அல்தாபைக் கடந்த ஜனவரி 5 -ம் தேதி கேரளக் காவல்துறை கைது செய்தது. காஷ்மீரில் எண்ணற்ற தீவிரவாத வழக்குகளில் இவருக்கு தொடர்பு உண்டு எனவும் வழக்குகளிலிருந்து தப்புவதற்காக கேரளத்தை இவர் மறைவிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் எனவும் இவர் வெளியில் வந்தால் தேசவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவார் எனவும் காவல்துறை நீதிமன்றத்தில் வாதிட்டதைத் தொடர்ந்து அல்தாபைக் காவல்துறை பொறுப்பில் (custody) நீதிமன்றம் விட்டது. பின்னர் பிணையில் வெளிவரத் தடைவிதித்து விய்யூர் சிறைச்சாலையில் இவரை அடைத்தது. 
 
அல்தாப் கைது செய்யப்பட்ட அடுத்தச் சில தினங்களில் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவில் குடியேறியிருக்கும் அனைவரையும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வருவோம் எனவும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபார விஷயமாகக் கேரளம் வருவோர் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார். தொடர்ந்துச் சமீப காலங்களில் தீவிரவாதிகள் கேரளத்தை மறைவிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களைக் கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 
 
இன்ன காரணம் என ஒன்றும் கூறாமல் ஜனவரி 5 ஆம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அல்தாபினைக் காவல்துறையினர் கைது செய்தனர் என அவரின் தந்தை பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். “கடந்த 8 வருடங்களாக அல்தாப் குமளியில் வியாபாரம் செய்து வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த இரு பார்ட்னர்களும் இவருடன் வியாபாரப் பங்காளிகளாக உள்ளனர். கடந்த 8 வருடத்தில் ஒரு முறை கூட காவல்துறை அவரிடம் எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் விசாரணை நடத்தவில்லை. திடீரென ஒருநாள் வந்து காஷ்மீரில் எண்ணற்ற வழக்குகளில் இவர் தேடப்படுகிறார் எனக் கூறியது வியப்பாக உள்ளது. ஒரு வழக்கில் கூட அல்தாபைக் காஷ்மீர் காவல்துறை தேடவில்லை என அறிவித்தப் பின்னரும் அவனை விடுவிக்காததன் காரணமென்ன?” என அல்தாபின் தந்தை கேள்வி தொடுத்தார். 
 
அல்தாபைக் காண்பதற்கோ பேசுவதற்கோ கேரளக் காவல்துறை எவரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அல்தாபினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி அவரைக் கைது செய்து ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தவும் அதன் மூலம் தீவிரவாதியைக் கைது செய்து விட்டோம் என்ற பெயரில் புகழடையவுமே கேரள காவல் துறையினர் விரும்புகின்றனர் என அல்தாபின் வழக்கறிஞர் கூறினார். அல்தாப் காவல்துறையின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அல்தாபின் தந்தை தெரிவித்தார்.
 
தற்பொழுது கேரளத்தில் வாழும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியமாக காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் முழு கண்காணிப்பில் காவல்துறை வைத்துள்ளது.
 
எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றிப் பொய்க்குற்றச்சாட்டுகளைப் புனைந்து ஒரு முஸ்லிமைத் தீவிரவாதியாக்கும் மற்றவர்களின் முன்னுதாரணத்தை கல்வியறிவில் சிறந்தக் கேரளத்தைச் சேர்ந்தக் காவல்துறையும் மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது, மற்றவர்களைப் போன்று இஸ்லாத்தின் மீதான பயம் கேரளத்தையும் ஆட்டுவிக்க ஆரம்பித்து விட்டது என்பதற்கான தெளிவாகும். அல்தாபைக் கைது செய்யக் கூறப்பட்டக் காரணமும் நீதிமன்றத்தில் கேரளக் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பதற்கு அடுக்கியக் காரணங்களும் புனையப்பட்ட அப்பட்டமான பொய்கள் என காஷ்மீர் காவல்துறையின் அறிக்கையிலிருந்துத் தெளிவான பின், அல்தாபைத் தீவிரவாதியாக்க அவரின் நீண்ட தாடியும் முஸ்லிம் பெயருமே காரணமின்றி வேறென்ன?