சிமி தடை நிலைக்காது – அஜித் ஸாஹி!

உலக வர்த்தகமையத்தின் மீது நடத்தப்பட்ட ‘இரட்டைக் கோபுரத் தாக்குதலைச்’ சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, ‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை’ 2001 ஆம் ஆண்டு  தடை செய்து,  தங்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டது. பின்னர் ஒவ்வொரு இரு வருடங்களிலும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற காங்கிரஸ் அரசு அத்தடையை நீட்டித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்குக் காரணமாக இன்று சுட்டிக்காட்டப்படும் சிமி, தெளிவான ஒரு பலிகடாவாகும் என 11 முக்கிய நகரங்களில் 3 மாத காலம் செலவழித்து ஆய்வு செய்த தெஹல்கா ஆசிரியர் அஜித் ஸாஹி உறுதியுடன் கூறுகிறார். அவரிடம் அவரது ஆய்வு தொடர்பாக ஒரு சிறு நேர்காணல்:

அரசு, காவல்துறை, ஊடகங்கள் ஆகிய எல்லாமே இணைந்து ஒருமித்தக் குரலில் “சிமி ஒரு தீவிரவாத இயக்கம்” எனக் கூறும் பொழுது நீங்கள் “இல்லை” எனக் கூறுகின்றீர்கள். இதனைக் குறித்து ஆராய உங்களைத் தூண்டியது எது?

 

ஒரு பத்திரிகையாளனின் சத்தியத்தின் மீதான விருப்பமே இதற்குத் தூண்டுகோலாக இருந்தது. சிமி விஷயத்தில், குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஒருதலைபட்சமானது என எனக்குத் தோன்றியது. காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களோடு இணைந்து ஊடகங்களும் சிமி வேட்டையில் பங்காளிகளாகச் செயல்படும் வேளையில், இதற்கு ஏதாவது வெளிவராத மறுபக்கம் உண்டா? என்பதைக் குறித்து ஆராய வேண்டியது, ஒரு பத்திரிகையாளன் என்ற நிலையில் எனது கடமையாக இருந்தது. அவ்வாறு சிமியுடன் தொடர்பு படுத்தப்பட்ட வழக்குகளை ஆய்வதற்கும் அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்துவதற்கும் தீர்மானித்தேன்.

 

அது நடந்தது நான்கு மாதங்களுக்கு முன்னர். விசாரணையின் இறுதிபலன் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து அன்று எவ்வித ஊகமும் இல்லாமல் இருந்தது. முழுக்க முழுக்க திறந்த மனதுடன் அதனை அணுகினேன். ஆனால், மூன்று மாத ஆய்வின் முடிவில் என் முன்பாக வெளிப்பட்டவை அனைத்தும் அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மைகளாக இருந்தன.

 

அதாவது, சிமிக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவைகளாக இருந்தனவா?

 

நான் ஆய்வு செய்த வழக்குகள் அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகளை உடையவை என என்னால் உறுதியாகக் கூற இயலும். அவற்றுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

 

அரசாங்கம் சிமிக்கு எதிராக ஏன் திரும்பியுள்ளது?.

 

என்னுடைய பார்வையில் சிமி ஒரு பலிகடாவாகும். இதில் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவை ஊடகங்களே. காரணம், நாட்டில் குண்டுவெடிப்புகளோ வேறு ஏதாவது அசம்பாவிதங்களோ ஏற்படும் பொழுது, காவல்துறையையும் அரசாங்கத்தையும் ஒருவித நிர்பந்த நிலைக்குள்ளாக்குவது ஊடகங்களாகும். “குற்றவாளிகளை இதுவரை ஏன் பிடிக்கவில்லை?” என அவை கேட்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஒன்றோ இரண்டோ தினங்களில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கைதுசெய்தல் என்பது நடக்காத காரியமாகும். ஆனால், பலமான நிர்பந்தம் மூலம் யாரையாவது கைதுசெய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில்தான் சிமி தீவிரவாத இயக்கமாக ஆக்கப்படுகின்றது.

 

இதன் அர்த்தம், தீவிரவாத சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் என்பதல்லவா?

 

நிச்சயமாக! அதுதான் நடக்கின்றது. வாயடைப்பதற்காக நிரபராதிகளைக் கைதுசெய்து சிறையிலடைக்கும் வேளையில், உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதோடு ஒரு சாராரை அச்சத்துக்குள்ளாக்குதல் நிலைநிறுத்தப் படுகின்றது.

 

சிமிக்கு எதிரான ஆதாரங்கள் உண்டு எனக் கூறும் காவல்துறை மற்றும் அரசு அமைப்புகளால் அவற்றை நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க முடியாமல் போவதன் காரணம் என்ன?

 

அதைத்தான் நான் முன்பே கூறினேன். சிமிக்கு எதிரான வழக்குகள் அனைத்திலும் ஆதாரங்கள் ஒன்று கூட உறுதியானவை அல்ல. சிமிக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலுமாக 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் உண்டு என அரசு கூறுகிறது. சிமி தடை தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றங்களின் முன்னிலையில் அவற்றில் மிகவும் உறுதியான ஆதாரங்களுடன் கூடிய வழக்குகளையே அரசு தரப்பு கொண்டு வரும் என சாமான்ய அறிவு உள்ளவர் கருதுவர். ஆனால், டில்லி உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட சிமி வழக்குகளில் ஒன்றுக்குக் கூட உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இல்லை.  குற்றவாளிகள் எனக் கைதுசெய்யப் பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களே அனைத்து வழக்குகளிலும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம் சாட்டப் பட்டவர்களிடமிருந்து காவல்துறை முன்னிலையில் பெற்றுக் கொண்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் நிற்காது என்பது யாருக்குத் தான் தெரியாது?. கைது செய்த காவல்துறையினர் உண்மையானவர்களாக இருந்தால், நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்பதன் உண்மையான அர்த்தம், குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவருமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்பதேயாகும்.

 

நீதிமன்றத்தின் முதல் மூன்று தீர்ப்புகள் சிமியின் தடையினை உறுதி செய்திருந்தனவே?

 

அது சரிதான். ஆனால் நான் கூறுகிறேன், முதல் மூன்று தீர்ப்புகளும் கண்மூடித்தனமான பிழையாகும். காரணம், நீதிபதி கீதா மித்தலின் நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்த ஆதாரங்களைத்தான் முதல் மூன்று நீதிமன்ற விசாரணைகளின்போதும் அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. தடைக்கு ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் அன்றும் இன்றும் ஒன்றாகத்தான் இருந்தன. பள்ளிக் குழந்தைகள்கூட தயாராக்குவதற்குத் தயங்கும் விதம் நகைப்புக்குரியனவாக அந்த ஆதாரங்கள் இருந்தன. “காங்கிரஸ் அரசு ஆதாரங்கள் சமர்ப்பிக்காததே சிமியின் மீதான தடை நீக்கப்பட்டத் தீர்ப்பு வரக்காரணமாக அமைந்தது” என்ற பாஜகவின் குற்றச்சாட்டும் இதிலிருந்துப் பொய்யாகின்றது.

 

நீதிமன்றங்கள் பாரபட்சமாக செயல்படுகின்றன என்பதல்லவா இதன் அர்த்தம்?

 

சிமி தடைக்கு எதிராக முன்னாள் சிமித் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி தாக்கல் செய்த மூன்று மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாகத் தூசுபடிந்து கிடக்கின்றன. அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மரியாதைக்குரிய நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. ஆனால், சிமி மீதான தடை நீக்கிய டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மித்தலின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சமர்ப்பித்த மேல்முறையீட்டை எவ்வளவு வேகமாகப் பரிசீலனைக்கு எடுத்துத் தீர்ப்பு ஸ்டே செய்யப்பட்டது?. குறைந்தபட்ச வார்த்தைகளில் கூறினால், “இது முழு அநீதியாகும்”!.

 

சிமி விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமான நிலைபாடு எடுப்பதற்கான காரணம் என்ன?

 

அரசும் காவல்துறையும் கூறுவதைச் சந்தேகத்துடன் அணுகும் ஊடக நடைமுறை நமக்கு முன்பு இருந்தது. ஆனால், இன்றைய ஊடகச் செயல்பாடுகளை ஒரு தட்டச்சாளரின் வேலையோடு மட்டுமே உவமிக்க முடிகிறது. காவல்துறை கூறுவதை அப்படியே வரிபிசகாமல் அச்சில் ஏற்றும் நிலைமை!. பிரசுரிக்கப் படுபவற்றில் அநேகமானவை அடுக்கி வைத்தப் பொய்களும் விவரம் கெட்ட கதைகளுமாகும். தேசிய ஊடகங்கள் என பெருமையாக அழைக்கப்படுபவற்றின் நிலைமையிலும் பெரிய வித்தியாசமில்லை.

 

எதனால் இப்படி நிகழ்கின்றது?

 

முக்கிய காரணங்களில் ஒன்று, ஊடக முதலாளிகள் அரசு அமைப்புடன் இணைந்து நிற்கின்றனர் என்பதனாலாகும். அவர்கள் அரசிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் கள்ளத்தனமாக அனுகூலங்கள் பலவற்றையும் அனுபவிக்கின்றனர். எனவே, அரசோடும் காவல்துறையோடும் இணைந்து நிற்பதல்லாமல் வேறு எதைத்தான் இது போன்ற ஊடகங்களால் செய்ய முடியும்?

 

சிமி வேட்டையை அமெரிக்கத் தலைமையில் நடக்கும் தீவிரவாத எதிர்ப்புப் போரின் தொடர்ச்சியாகக் கருதலாமா?

 

இது ஒரு வகையில் மிகச் சரியான கணிப்பாகும். சக்தியுள்ளவர்களுடன் சார்ந்து நிற்பது என்ற ரீதியை இந்திய அரசு பின்பற்றியதன் நேரடிப் பலன் இது. உலகின் எல்லாப் பகுதியிலுமுள்ள இஸ்லாமிய முன்னேற்றங்களின் மீது தீவிரவாத முத்திரை குத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. தங்களுக்குக் கட்டுப்படாத ஈராக், ஆப்கான், இரான் போன்ற பல நாடுகள் அதன் பட்டியலில் உள்ளன. இரான், எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் துல்லியமாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் நாடாகும். சாதாரண ஒரு மேயராக இருந்த அஹ்மதி நஜாத் அவ்வழியிலேயே அதிபர் ஆனார். ஜனநாயகத்தைக் குறித்துப் பெரிதாக நீட்டி முழக்கும் ஜார்ஜ் புஷ், “மத்திய ஆசிய நாடுகளை ஜனநாயக மயமாக்க இரானிடம் கோரிக்கை வைப்பது” ஒன்றே அவர் செய்ய வேண்டிய செயலாகும்.

 

சிமிக்கெதிரான தடை நீதிமன்றத்தில் வெற்றிபெறும் என்று தோன்றுகிறதா?

 

இவ்விஷயத்தை நன்றாக ஆய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற நிலையில், எனக்கு உறுதியாகக் கூற இயலும் – வழக்கில் சிமியின் பக்கம் பலமானதாகும். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சட்டப்படி ஒருபோதும் தாக்குப் பிடிக்காது.