தேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்!

Share this:

ரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அத்தனையையும் கடுமையாக சீர்குலைத்துள்ளது. நாட்டு மக்களின் அடிவயிற்றில் அடிக்கும்படியான, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையே கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. மாநில சுயாட்சி உரிமைகளைப் பறிக்கும் விதமாக ஜி எஸ் டி உட்பட பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சமூக நீதியைப் பறிக்கும் விதமாக இட ஒதுக்கீடை இல்லாமலாக்க முனைகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் எவரும் உயர் கல்வி, உயர் பதவிகளுக்கு வரவிடாமல் செய்யும் வகையில் நீட் என்ற கொடிய தேர்வைக் கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தை மட்டுமே குறிவைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் சிறிதும் மதிக்காமல் தம் விருப்பத்துக்குச் சர்வாதிகார ஆட்டம் ஆடுவதற்கு, மாநிலங்களவையிலுள்ள அதிமுக உறுப்பினர்கள் முற்றுமுழுதாக உறுதுணையாக இருந்துள்ளனர். மாநிலங்களவையிலுள்ள தமிழகத்தின் பிரதிநிதிகளான இந்த அதிமுக உறுப்பினர்கள் மட்டும் எதிராக வாக்களித்திருக்கும் பட்சத்தில், பாஜகவின் மேற்கண்ட எந்த ஒரு அராஜக சட்டமும் நிறைவேறியிருக்காது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் அதிமுக, அதன் முன்னாள் தலைவர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் பாஜகவின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிந்து முழுக்க முழுக்க பாஜக சார்பாக மாறியுள்ளது.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகமிழைக்கும், அநியாயமிழைக்கும் சட்டங்கள் நிறைவேற தமிழக அதிமுக அரசு செய்த உதவியால், மறைமுகமாகவேனும் பாஜகவின் மக்கள் விரோதச் சட்டங்கள் நிறைவேற தமிழக மக்களான நாம் காரணமாக இருந்துள்ளோம். இனியுள்ள பாஜகவின் 4 ஆண்டு ஆட்சி காலத்திலாவது, மேலும் இதுபோன்ற அராஜக சட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் இருக்க வேண்டுமெனில் அதற்கு மாநிலங்களவையில் பாஜக எதிர்ப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தே ஆக வேண்டும். இதுவரை அதிமுக உறுப்பினர்கள் செய்த தவறைத் திருத்துவதற்கான பொன்னானதொரு வாய்ப்பே இப்போதைய தேர்தல்.

எனவே வாக்களிப்பு கூடுமா/கூடாதா, போட்டியிடுபவர்களில் நல்லவர் இவரா/அவரா, போட்டியிடுபவன் அத்தனை பேருமே கெட்டவனாக இருப்பதால் நான் ஓட்டு போடுவதா/வேண்டாமா முதலான கேள்விகளெல்லாம் கேட்டு கொண்டிருப்பதற்கான தேர்தல் அல்ல இது. கண்முன் நடக்கும் ஒரு அக்கிரமத்தைப் பார்த்துகொண்டு இதில் நான் செய்வதற்கு எதுவுமில்லை என அமைதியாக ஒதுங்கி இருப்பதைவிட எவ்வகையிலேனும் தட்டி கேட்க முனைவதும் அதற்கு எதிராக பேசுவதும் சிறந்தது.

அவ்வகையில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தைச் சற்றாவது தடுத்து நிறுத்துவதற்கு என் ஒரு ஓட்டு உபயோகப்படுமெனில் அதனைச் செய்வது, ஓட்டளிக்காமல் ஒதுங்கியிருப்பதைவிட ஆயிரம் மடங்கு மேலான செயல். அத்துடன், அவரவர் வாக்குரிமையை வேறு யாரும் பயன்படுத்தி விடாமல் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டியதும் ஒவ்வொருவரின் கடமை. வாக்களிக்கச் செல்லும் இடத்தில் அனுமதிக்கப்பட, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கைவசம் கொண்டு செல்வதும் முக்கியம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தேயாக வேண்டும் என்பதில் இப்போது யாருக்கும் மாற்று கருத்திருக்காது. அது, மாநிலங்களவையிலுள்ள தமிழகத்தின் பிரதிநிதிகள் பாஜகவுக்கு எதிரானவர்களாக இருக்கும் வகையில் அமையவேண்டும் என்பதே முக்கியம். அதற்காக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற ஒரு கேள்வி எல்லோரின் மனத்திலும் எழுந்து நிற்கும். இங்கே யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்ற கேள்விக்கு நேரடியாக பாஜக கூட்டணிக்கு எனப் பதிலளித்து விடலாம். எனினும் அந்த ஒரு கூட்டணியைத் தவிர வேறு எவருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாமா என்ற குழப்பம் அப்போதும் நிலை நிற்கும். எனவே, ஆட்சி மாற்றத்தை வலுவாக கொண்டுவர, யார் யாருக்கெல்லாம் வாக்களிக்கக்கூடாது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

வேற்று, விருப்பற்று நடுநிலையாக நின்று பிரதான அத்தனை கட்சிகளையும் இங்கு அலசி முடிவுக்கு வரலாம்.

  1. அதிமுக/பாஜக கூட்டணி

இக்கூட்டணியிலுள்ள பாஜக தான் இன்று நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பை முற்று முழுதாக குழிதோண்டி புதைப்பதனைத் தலைமையேற்று நடத்தும் கட்சி. எனவே, இக்கட்சி போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் வாங்குவதல்ல, முந்தைய நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என்ற நிலையையே மீண்டும் இத்தேர்தல் உறுதிபடுத்தும் வகையில் மக்கள் இக்கட்சியை முழுதாக புறம் தள்ள வேண்டும்.

இதிலுள்ள அதிமுக, அதன் தலைவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக தம்மைப் பாஜகவுக்கு அடிமையாக மாற்றிவிட்ட கட்சி. ஃபாசிசத்துக்கு எதிரான அத்தனை மக்கள் போராட்டங்களையும் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஒடுக்கிய கட்சி. ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, குடியுரிமை திருத்தச் சட்டம், நான்குவழிச் சாலை, மீத்தேன் முதலான மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் அத்தனையிலும் கர்ணக் கொடூரமாக மக்களை ஒடுக்கியுள்ளது. பொள்ளாச்சியில் சுமார் 268 இளம்பெண்களை அதுவும் 16-18 வயது மகள்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த கயவர்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கட்சி. இப்படி இக்கட்சி செய்த மக்கள் விரோத செயல்களைப் பட்டியலிட்டால் எண்ணி மாளாது. எனவே, இக்கட்சிக்கு இந்தமுறை ஒரு எம் எல் ஏ கூட கிடைக்கவிடக் கூடாது.

இக்கூட்டணியிலுள்ள பாமக தம் குடும்ப நலனுக்காக வன்னியர் சமுதாயத்தை அடகு வைக்கும் கட்சி. இறுதிகட்டத்தில், 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்துக்கு வாங்கி கொடுத்துவிட்டதாக அச்சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருக்கிறது. அந்த ஒதுக்கீடு தற்காலிமானது என துணை முதல்வர் ஓ பி எஸ் அந்தர்பல்டியடித்துவிட்டார். இதிலிருந்து, தேர்தலில் வன்னியர் ஓட்டைப் பெறுவதற்காக இவர்கள் போட்டுள்ள திட்டம்தான் இது என்பது வெளிப்படை. மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டையே இல்லாமலாக்கும் பாஜகவுடன் இந்தக் கட்சி இணைந்து நிற்பதே இக்கட்சியை முற்றும் புறக்கணிக்கப் போதுமான காரணமாகிவிடும்.

  1. அமமுக கூட்டணி

இக்கூட்டணியிலுள்ள அமமுக தேர்தல் அறிவிப்பின் இறுதிகட்டம் வரை அதிமுகவைக் கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கில் உள்ளரங்கத்தில் பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த கட்சி. ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அதிமுக/பாஜகவுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க நாங்கள் தயார். எங்கள் தலைமையை ஏற்க வேண்டுமென்பது மட்டுமே நிபந்தனை என அறிவித்த கட்சி. அக்கட்சியின் இப்போதைய நோக்கமும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவைக் கைப்பற்றுவதுதான். ஜெயலலிதாவின் சக்தியால் கிடைத்த ஆட்சியை, பாஜகவின் தயவால் ஓட்டியவர்களால் இத்தேர்தலில் வெற்றிபெறவே முடியாது என்பதும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவினுள் குழப்பம் அதிகரித்துவிடுமென்பதும் அமமுகவின் எதிர்பார்ப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் முதலான பாஜகவின் எந்த ஒரு மக்கள் விரோத சட்டங்களுக்கும் வெளிப்படையான நிலைபாடுகள் எதையும் அறிவிக்காமல் பூசி மெழுகி கொண்டும், அதில் தவறில்லை என்றும் கூறி கொண்டிருக்கும் கட்சி. இக்கட்சியின் பிரதான நோக்கமே சசிகலாவைப் பாதுகாப்பதும் அவர்கள் சம்பாதித்த சொத்துகளைப் பாதுகாப்பதும் மட்டும்தான். சில தொகுதிகளில் இக்கட்சியின் வேட்பாளர்களே இக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தும் பாஜகவுக்கு ஓட்டு கேட்டும் வருகின்றனர். இவ்வாறான அமமுகவுக்குப் போடும் ஓட்டு வீணானது. அதற்கென தனி ஓட்டு வங்கியும் கிடையாது. அதிமுகவின் ஓட்டு வங்கியைப் பிரித்து ஆதாயம் அடைவதற்காக மட்டுமே நிற்கும் இக்கட்சிக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் வீணானதே.

இதிலுள்ள தேமுதிகவைப் பொறுத்தவரை, அது அதிமுகவிலிருந்து அதிக சீட் பெறுவதற்காக இறுதிவரை முயற்சி செய்து முடியாமல் போனதால் வெளிவந்து இந்த அணியில் இணைந்திருக்கும் கட்சி. அதன் நோக்கம் இத்தேர்தலில் மீண்டும் தம் வாக்கு வங்கியை அதிகரித்துக் காட்டி, அடுத்தத் தேர்தலில் அதிமுகவுடன் பேரம் பேசுவது மட்டுமே. ஏற்கெனவே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டார். அவரைக் காட்டி அரசியல் ஆதாயம் தேடுவதையே அக்கட்சியின் நிர்வாகிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அதனைவிட முக்கியமாக, முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பொதுகூட்டம் நடத்திய ஒரே கட்சி இதுமட்டும்தான். இந்தியா இந்து நாடுதான் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றும் வெளிப்படையாக அறிவித்த கட்சி. இது, முந்தைய பாஜக கூட்டணியில் இருந்த போது கூட்டணி அரசியலுக்காக செய்த அரசியல் நாடகம் மட்டும்தான் என்று புறம்தள்ளுவதற்கில்லை. இவ்விசயத்தில் இந்த நிமிடம் வரை இக்கட்சி தம் நிலைப்பாட்டை மாற்றிகொண்டதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, இவ்வாறான இக்கட்சி இத்தேர்தலுடன் முற்றுமுழுதாக ஒழித்துகட்டப்பட வேண்டும்.

இக்கூட்டணியிலுள்ள எஸ் டி பி ஐ கட்சி,  எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாத வகையிலான சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. எதற்காக இக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம் என இக்கட்சியின் தொண்டர்களுக்கே இதுவரை தெளிவான பார்வை இல்லை. ஆளாளுக்கு ஒரு நியாயம் கூறி கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளர்கள் 6 பேருடன் எதிர்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டுமென மேடையிலேயே அரசியல் விவேகமற்று அறிவித்தும் கோமாளித்தனம் செய்துகொண்டிருக்கின்றனர்.

தம் பின்னால் முஸ்லிம்களின் ஓட்டுகள் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காக, வீம்புக்காகவே இக்கட்சி இந்தக் கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுகிறது. இருக்கும் பிற கட்சிகளை ஒப்பிடுகையில், பாசிச பாஜகவை எதிர்கொள்வதில் இக்கட்சி மிக உறுதியானது என்பதில் எவ்வித மாற்று கருத்து யாருக்கும் இருக்காது. ஆனால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒருங்கிணைந்து பாசிசத்தை வீழ்த்துவதற்காக ஒரே அணியில் நிற்கும்போது தம் கட்சியின் சுயநலனுக்காக மட்டுமே இக்கட்சி இந்தக் கூட்டணியில் வந்து இணைந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை, டெல்லி ஷாகின்பாகுகளில் பெண்களுக்கு எதிராக காவல்துறையினர் செய்த அட்டூழியத்தைக் கொஞ்சமாவது மனத்தில் நினைத்து பார்த்திருந்தால், அதனை ஆதரித்து பொதுகூட்டமே நடத்திய தேமுதிக இடம்பெற்றிருக்கும் இக்கூட்டணியில் ஒரு நிமிடம்கூட இக்கட்சி தொடர்ந்திருக்காது. தேர்தல் காலங்களில் சந்தர்ப்பவாத, பொருந்தா கூட்டணிகள் உருவாவது அரசியலில் சகஜமே. ஆனால் நேர்மையான, சமரசமற்ற, சந்தர்ப்பவாதமற்ற, கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தாத அரசியல் செய்வதாக மார்தட்டிக் கொள்ளும் இக்கட்சியின் தலைவரான தெஹ்லான் பாகவியே, தாம் அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணிதான் என பேட்டியில் ஒத்துகொண்டுள்ளார். இதிலேயே இக்கட்சி தமக்கான கௌரவத்தையும் நம்பிக்கையினையும் தொலைத்து கட்டிவிட்டது. தம் கட்சியின் சுய ஆதாயத்துக்காக மட்டுமே இப்படியானதொரு கேவலமான சந்தர்ப்பவாத கூட்டணியில் தொடர்வதன் மூலம், தாமும் பிற எந்த ஒரு கட்சிக்கும் சளைத்தவர்களல்ல என நிரூபித்துள்ளனர். எனவே, இக்கட்சிக்குத் தன்மானமுள்ள எந்த ஒரு முஸ்லிமும் தம் ஓட்டுகளைச் செலுத்தமாட்டான். கூடுதலாக, இக்கட்சி பிரிக்கும் ஒவ்வொரு ஓட்டும் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் நிச்சயமாக, கட்டாயம் வீழ்த்தியே ஆகவேண்டிய அதிமுக/பாஜக கூட்டணிக்கே சாதகத்தை ஏற்படுத்தும். எனவே, இத்தேர்தலில் இக்கட்சியும் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டேயாக வேண்டும்.

  1. மநீம கூட்டணி

இக்கூட்டணியிலுள்ள நடிகர் கமல் தலைமையிலான மநீம கட்சி தெளிவான எந்த ஒரு கொள்கையும் அறிவிக்காத கட்சி. தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவால் தோன்றிய வெற்றிடத்தைக் கைப்பற்றிவிடலாம் என தவறான கணக்கீட்டில் வந்துள்ள கட்சி. நடிக பிரபலம் என்ற ஒற்றை விசயத்தை நம்பி தொடங்கியிருக்கும் கட்சி, வெளிப்படையாக கட்சி கொள்கைகளை அறிவித்தால் மற்றவர்கள் காப்பியடித்துவிடுவர் என கோமாளித்தனம் செய்துகொண்டிருக்கும் கட்சி. இக்கட்சிக்கென ஓட்டுவங்கி இல்லை என்பது நிதர்சனம். ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் ஓட்டுகளால், ஓட்டைப் பிரித்து அதிமுக/பாஜக கூட்டணிக்குச் சாதகத்தை உருவாக்க வந்திருக்கும் கட்சி என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதற்கு ஏற்பவே இவரின் அணுகுமுறையும் வெளிப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இக்கட்சி பேசுவதிலிருந்தே, இக்கட்சி வெளிப்படையாக வெளியிடாத கட்சியின் கொள்கைமீதான நம்பிக்கை சிதைந்துவிடுகிறது. கட்சியின் கொள்கைகளை முழுமையாக வெளியிட்டு, மக்களின் நம்பிக்கையைப் பெறும்வரை முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி இது.

இதில் இடம்பெற்றிருக்கும் பிற கட்சிகளெல்லாமே சூழலைப் பயன்படுத்தி ஆதாயம் தேட இணைந்தவை என்பது தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் இக்கூட்டணி அமைந்த விதத்தைப் பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். வருபவர்களுக்கெல்லாம் சீட்டுகளை அள்ளி வீசிய தாராள பிரபு இக்கூட்டணியின் தலைவர். அதிலிருந்தே இக்கூட்டணியின் லட்சணம் புரியும். முதலில் இக்கட்சியில் எஸ் டி பி ஐ கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்குவதாக அறிவித்து, தேசிய ஊடகங்களெல்லாம் அதனை வைத்து பெரும் விவாதங்களே நடத்தி கொண்டிருந்த வேளையில் இதனைப் புறக்கணித்து வெறும் 6 தொகுதிகள் ஒதுக்கிய அமமுக கூட்டணியில் போய் அக்கட்சி இணைந்து கொண்டது. இதிலிருந்தே இக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான லட்சியமே அடிபட்டுவிட்டது. இக்கூட்டணி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டணி. இக்கூட்டணிக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் ஓட்டுகளைச் சிதறடிக்க மட்டுமே பயன்படும்.

  1. நாதக

இக்கட்சியைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியுடனும் சமரசம் செய்யாமல் தனித்து நிற்கும் கட்சி. கூட்டணிகளைப் பற்றிய அலசலில் இக்கட்சியை எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் இக்கட்சி அத்தனை தொகுதிகளிலும் 1000 சொச்ச ஓட்டுகளையாவது ஒவ்வொரு தேர்தலிலும் பிரித்துவிடுவதால், இதனைப் பற்றியும் இத்தேர்தலில் முடிவெடுத்தே ஆக வேண்டும்.

தமிழர்களே தமிழகத்தை ஆள வேண்டுமென, மகாராஷ்டிராவின் சிவசேனாவை ஒத்த அரசியலை முன்னெடுக்கும் இக்கட்சியின் இன அரசியல் பரவலாக தமிழக இளைஞர்களிடையே ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான எந்த ஒரு அரசியலும் இளைஞர்களையே முதலில் வளைக்கும் என்பதற்கான மற்றொரு சான்றாக இக்கட்சி திகழ்கிறது. இதன் தலைவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இவரின் வசீகரமான, தீர்க்கமான பேச்சுகளில் நியாயங்கள் நிறைந்திருப்பதும் மறுக்க முடியாது. இன அரசியல்கள் எப்போதுமே அழிவையே கொண்டுவரும் என்பதுதான் வரலாறு. இதற்கு ஹிட்லரின் ஜெர்மானிய இன அரசியலிலிருந்து பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால், இந்தியாவில் மாநில சுயாட்சிகளின் மீது பாசிசம் படுபயங்கரமான தாக்குதலைத் தொடுத்து வரும் சூழலில் தமிழகத்தின் சுய உரிமையைப் பாதுகாக்க இவ்வாறான அரசியல் தேவைதான் என்பதானதொரு எண்ணமும் எழுவதில் தவறில்லை.

ஆனால், நடைபெறும் இத்தேர்தலைப் பொறுத்தவரை இப்பதிவின் ஆரம்பத்திலேயே கூறியதைப் போன்று, இருக்கும் நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதற்கான தேர்தல் இது. தமிழகத்தில் மிருகபலத்திலொரு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி நடந்தால்தான், தேர்தலுக்குப் பின்னர் பாஜக பிற மாநிலங்களில் செய்தது போல் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றவிடாமல் செய்யவும் முடியும். பாஜகவை இனியுள்ள 4 ஆண்டுகளுக்கு அடக்கி வாசிக்க வைக்க வேண்டுமெனில், மாநிலங்களைவையின் கட்டுப்பாடு பாஜகவுக்கு எதிர் பக்கம் நிற்கும் கட்சிகளின் கைகளில் வந்தாக வேண்டும். இதுவரையிலான தேர்தல்களிலிருந்து வெறும் 1 சதவீத அளவுக்கான ஓட்டு வங்கியையே கையில் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்குப் போடும் ஓட்டு நிச்சயமாக ஓட்டு சிதறலையே ஏற்படுத்தும். இதனைத் தாண்டி கொள்கையளவில் ஆய்வு செய்து, இக்கட்சிக்கும் இத்தேர்தலில் ஓட்டுபோடுவதைத் தீர்மானிப்பதற்கான நேரமன்று இது. எனவே, இத்தேர்தலில் இக்கட்சிக்கு ஓட்டு போட்டு வாக்கைச் சிதறடிக்காமல் இருப்பதுதான் நன்று.

இத்தேர்தலில் மேற்கண்ட கூட்டணிகள் மற்றும் நாதகவுக்கு எதிராக திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, முஸ்லிம் லீக், மமக என மிக வலுவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணிக்குப் பிற சமுதாய அமைப்புகளும் தங்களின் ஒருங்கிணைந்த ஆதரவைத் தந்துள்ளன. இக்கூட்டணியினைப் புறக்கணிக்க வலுவான எந்த ஒரு காரணமும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் திமுக, பாஜகவுக்கு ஆதரவாக மாறிவிடாதா என்றொரு விமர்சனம் அதன் முந்தைய பாஜகவுடனான கூட்டணியை முன்வைத்து எழுப்பப்படுகிறது.

அத்தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவின் முக்கியமான நோக்கங்களான காஷ்மீர் 370 சட்ட நீக்கம், பொது சிவில் சட்டம், ராமர் கோயில் முதலானவற்றைக் கைவிட்டு பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் அமைந்தக் கூட்டணி. அப்போது இவை எதையுமே வாஜ்பாய் அரசு செயல்படுத்த முனையவில்லை என்பதும் தற்போதைய அரசில் அதிமுகவின் ஆதரவுடனேயே இவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளதும் அடுத்து பொது சிவில் சட்டம் பற்றி பேச ஆரம்பித்துள்ளதும் கவனத்தில் எடுக்க வேண்டும். அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை என்பதே உண்மை. அதில், மக்கள் விரோத கொள்கைகளை முன்வைத்து கூட்டணிகள் அமையக் கூடாது என்பதை மட்டும்தான் கவனத்தில் எடுக்க வேண்டும். மேற்கண்ட நீதியிலான முந்தைய கூட்டணிகளை முன்வைத்த விமர்சனங்களை முன்வைக்கும்போது, இதனை மனத்தில் வைத்து விமர்சனங்களை முன்வைப்பதே நேர்மையான செயல். ஆனால், சந்தர்ப்பவாத அரசியலுக்குள் சிக்கிவிட்ட எந்த ஒரு கட்சியிடமிருந்து இவ்வாறான நேர்மையான விமர்சனங்களை எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, எவ்வகையில் அலசினாலும் மத்தியில் ஆளும் பாசிச பாஜகவிற்குத் தற்காலிகமேனும் கடிவாளம் இட, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தேயாக வேண்டுமென்பது உறுதி. அதற்கான ஒரே வாய்ப்பு, பிற கூட்டணிகளையும் உதிரிகளையும் தவிர்த்து ஒவ்வொரு தமிழனும் தம் வாக்குகளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகளான திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

பாசிசத்தின் வெற்றி என்பது அதன் பலத்தில் அல்ல; அதனை எதிர்ப்பவர்களின் பிரிவினையில் உள்ளது என்பதையும் பாசிசத்தை எதிர்ப்பவர்களைப் பல அணிகளில் பிரித்து நிற்க வைப்பதே பாசிசத்தின் தந்திரங்களில் பிரதானமானது என்பதையும் எப்போதும் நினைவில் வைப்போம். இணைந்து நின்று ஃபாசிசத்திடமிருந்து நம் தாய் இந்தியாவை மீட்டெடுப்போம்!

இறுதி வெற்றி கட்சிகளுக்கல்ல, மக்களுக்கானதாக இருக்கட்டும்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.