கருப்பு அங்கிகளுக்குள் காவிப்படை

Share this:

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும்; முகம்மது அப்சலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 20 அன்று அப்சலைத் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. எனினும், அப்சலின் உறவினர்கள் அரசுத் தலைவர் கலாமிடம் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில், இத்தூக்கு தண்டனை மறு தேதி குறிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, டிச.13, 2001 அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இரண்டாவது நாளிலேயே டிச. 15, 2001 அன்றே எஸ்.ஏ.ஆர். கீலானி, முகம்மது அப்சல், ஷெளகத் ஹூசைன் குரு, ஷெளகத்தின் மனைவி அஃப்ஸான் குரு ஆகிய நால்வரும் தில்லி சிறப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டனர். போலீசின் குற்றச்சாட்டின்படியே இந்த நால்வரும் இச்சதித் திட்டத்தைத் தீட்டிய மூளைகள் கிடையாது. தாக்குதலை நிறைவேற்ற உதவியவர்கள் தாம்.

தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஐந்து பேரும் சம்பவம் நடந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். தாக்குதலுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்து இயக்கிய மூவரில், காசி பாபா காசுமீரில் போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும்; மௌலானா மசூத் அஸார், தாரிக் அகமது ஆகிய இருவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும் போலீசார் கூறி வருகின்றனர்.

“”நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்” எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை தில்லி சிறப்புப் போலீசார் 17 நாட்களிலேயே முடித்துவிட்டனர் இதற்குக் காரணம், தில்லி போலீசின் துப்பறியும் திறமை அல்ல. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரும், போலீசாரால் “கண்டுபிடிக்கப்பட்ட’ சாட்சியங்கள் அனைத்தையும், தங்களின் சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டுதான் தாக்குதலே நடத்தியிருக்கிறார்கள்!

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் வந்த காரின் கண்ணாடியின் மீது, “”முட்டாள் வாஜ்பாயியையும், அத்வானியையும் நாங்கள் கொல்வோம்” என ஒட்டப்பட்டிருந்த “”ஸ்டிக்கர்”; தாக்குதலுக்கு முன்பாக, தீவிரவாதிகள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்; தீவிரவாதிகள் யார் என்ற விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை இப்படி இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. நகைச்சுவை படத்தில் கூட இப்படிப்பட்ட அப்பாவி சதிகாரர்களை நாம் பார்த்திருக்க முடியாது.

 

*******

வழக்கின் முக்கிய கட்டமான சிறப்பு நீதிமன்ற விசாரணையின்பொழுது, அப்சலுக்கு உதவி செய்ய அனுபவம் அற்ற ஒரு இளம் வழக்கறிஞர் சட்ட உதவுனராக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கறிஞர், அப்சலுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட போலீசு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யாமல், அரசு தரப்புக்குச் சார்பாக நடந்து கொண்டார். “”சட்ட உதவுனரை எதிர்தரப்பு வழக்குரைஞராகப் பார்க்க முடியாது; அவர், நீதிமன்றத்தின் நண்பனாகத்தான் நடந்து கொள்வார்” என்கிறார், பிரபல கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி.

 

“”சிறப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இளம் வழக்குரைஞர் இந்துமத உணர்வுள்ளவர்; அவர் ஒருமுறைகூடச் சிறைக்குச் சென்று எனது கணவரைச் சந்திக்கவில்லை. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திங்க்ராவும் கூட நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக தனது மத உணர்வை வெளிப்படுத்தினார்” என அப்சலின் மனைவி தபஸ்ஸூம் விசாரணையின் நேர்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

 

அப்சல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, தனது சட்ட உதவுனரை மாற்ற வேண்டும் எனக் கோரியதோடு, எட்டு வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் யாரையாவது ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இந்து மதவெறியர்களால் தாக்கப்படுவோமோ என அஞ்சிய அந்த வழக்குரைஞர்களுள் (அப்சலுடன் குற்றஞ்சாட்டப்பட்ட கீலானிக்கு வாதாடப் போவதாக ராம் ஜெத்மலானி அறிவித்ததையடுத்து, அவரது அலுவலகம் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டது) ஒருவர் கூட அப்சலுக்காக வாதாட முன் வரவில்லை. நீதிபதி திங்க்ரா, “”இதற்கு மேல் நான் எதுவும் செய்ய முடியாது” எனக் கூறி, அப்சலை நிர்க்கதியாகத் தவிக்க விட்டார்.

இது மட்டுமன்று; “”நீதி விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கூற்றுகளை எனக்குக் காட்டாமலும்; பல்வேறு சாட்சிகள் மற்றும் எனக்கெதிராக அவர்களின் சாட்சியங்கள் குறித்த எனது மறுப்புகளையும், பதில்களையும் பதிவு செய்யாமலும், சிறப்பு நீதிமன்றம் தனது குரலை மவுனமாக்கி விட்டதாக” அப்சல், “”விசாரணைக் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளின் பாதுகாப்பிற்கான கழகத்திற்கு” எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை அப்சலிடமிருந்து பறித்ததன் மூலம், சிறப்பு நீதிமன்றம் அவரது கழுத்தில் சுருக்கை மாட்டியது.

*******

தில்லி உயர்நீதி மன்றத்திலோ இந்த வழக்கு, விநோத முரண்பாடாக நடந்து முடிந்தது. குற்றவாளிகள் நான்கு பேரும் தில்லி சிறப்பு போலீசிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை, உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. குற்றவாளிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதில் சட்டபூர்வ வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. அதாவது, கொடூரமான சித்திரவதைகள், மிரட்டல்கள், உறவினர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்து கொண்டு அச்சுறுத்துவது போன்ற சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம்தான் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பது வழக்கு விசாரணையில் மீண்டும் அம்பலமானது. இதன் அடிப்படையில்தான், சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கீலானியும், ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸான் குருவும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், இந்த இருவரின் விடுதலைக்குப் பொருந்திய இந்த நியாயத்தை, முகம்மது அப்சலுக்கும், ஷெளகத் குருவிற்கும் பொருத்த உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

*******

உச்சநீதி மன்றமோ, தீர்ப்பை முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டு விசாரணை நாடகத்தை நடத்தியிருக்கிறது. “”அப்சல், ஏற்கெனவே சரணடைந்துவிட்ட தீவிரவாதி, அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தற்பொழுது எந்தவிதமான தொடர்பும் கிøடயாது” என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டாலும், “”அப்சல் இந்த நாட்டிற்கு எதிரான சதிச் செயல்களை மீண்டும் மீண்டும் நடத்துவதற்குத் துணிந்தவர்” என்று தானே இட்டுக் கட்டிய பழியை அவர் மீது சுமத்தியிருக்கிறது. “”பொடா சட்டத்தின் கீழ் அப்சல் மீது வழக்குத் தொடர ஆதாரம் இல்லை” எனக் கூறியுள்ள உச்சநீதி மன்றம், அச்சட்டத்தின் கீழ் அப்சலிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களையும்; சந்தர்ப்ப சாட்சியங்களையும் ஆதாரமாகக் காட்டி, அவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

அப்சல் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தில்லி சிறப்பு போலீசாரும், காசுமீர் போலீசாரும் அளித்துள்ள சாட்சியங்களில் உள்ள முரண்பாட்டை தில்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றம் தீர விசாரித்திருந்தால், இந்த வழக்கில் அப்சல் பலிகடா ஆக்கப்பட்டிருக்கும் உண்மை அம்பலத்துக்கு வந்திருக்கும்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட பொருட்களைத் தங்களிடம் அப்சல் வாங்கியதாக தில்லியைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் அப்சலுக்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சாட்சியம் பெறுவதில் போலீசு, அடையாள அணி வகுப்பு நடத்துவது போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பின்பற்றவில்லை என உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், உச்சநீதி மன்றமோ, “”சாதாரண பொதுமக்கள் அப்சலை ஏன் குற்றவாளியாக்க வேண்டும்?” என்ற கேள்வியை இட்டுக் கட்டி கேட்டு, போலீசின் சட்ட விரோத சாட்சியங்களைச் சட்டபூர்வமாக்கி விட்டது.

 

அப்சல், தில்லி உயர்நீதி மன்றத்திடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “”போலீசின் நிர்பந்தித்தினால்தான், நான் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை, போலீசு சொல்லியபடி அடையாளம் காட்டியதாக”க் கூறியிருக்கிறார். அதேசமயம், உயர்நீதி மன்றத்தில் அப்சலுக்காக வாதாட நியமிக்கப்பட்ட காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற வழக்குரைஞர்தான், தீவிரவாதிகளை அடையாளம் காட்டி போலீசிடம் அப்சல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, அரசு தரப்பின் வேலையை எளிதாக்கினார்.

காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற அந்த வழக்குரைஞர் இதை மட்டுமா சொன்னார். “”தூக்கில் போடப்பட்டுச் சாவதைவிட, விஷ ஊசி போட்டு அப்சல் சாக விரும்புவதாக” நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வக்கீலே தனக்குக் குழி பறித்ததை அப்சல் அப்பொழுது அறியவில்லை. ஏனென்றால், அப்சலுக்குத் தண்டனை எப்படித் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழி பறித்த பொழுது, அப்சலோ, திகார் சிறையில் தனிமைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தார்.

 

ஷெளகத், அப்சல், கீலானி, முகம்மது ஆகியோருக்கு இடையே, தாக்குதலுக்குச் சற்று முன்புவரை செல்போன் தொடர்பு இருந்தது என்பதற்கு போலீசு தரப்பில் முன் வைக்கப்படும் சாட்சியம், சான்றளிக்கப்படாத சில “”பில்” பதிவுகள்தான். ஒரே நேரத்தில் ஒரே “சிம் கார்டில்’ இருந்து இரு அழைப்புகள் செய்யப்பட்டுள்ளது என இப்பதிவு தெரிவிக்கிறது. இரு வெவ்வேறு எண்ணுள்ள செல்போன்களில் இருந்து இவை பேசப்பட்டுள்ளன. ஒரே சிம் கார்ட் இரண்டு வெவ்வேறு செல்போன்களிலிருந்து ஒரே நேரத்தில் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வியை மெத்தபடித்த நீதிபதிகள் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

அப்சலுக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்களில் உள்ள இவை போன்ற முரண்பாடுகளை, சட்டவிரோத நடைமுறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான், உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளுள் ஒருவரையாவது கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் நோக்கமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பழிவாங்கும் வெறியை அவர்கள் மறைத்துக் கொள்ளவும் இல்லை. “”குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தின் பொது மன சாட்சியைத் திருப்திபடுத்த முடியும்” எனப் பச்சையாகவே நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ள சமூகத்தின் பொது மனசாட்சி என்பவர்கள் யார்? அப்சலைத் தூக்கில் ஏற்றிவிடத் துடிக்கும் வாஜ்பாயி அத்வானி போன்ற இந்து மதவெறியர்கள்; அக்கும்பலைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியாடுடே, துக்ளக் போன்ற பத்திரிக்கைகள்; முசுலீம் எதிர்ப்பு இந்த மதவெறியாலும், பாக். எதிர்ப்பு இந்திய தேசிய வெறியாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள மேல்தட்டு மேல்சாதி நடுத்தர வர்க்கம் இவர்கள்தான் அந்தப் பொது மனசாட்சி. இந்தக் காவி மனச்சாட்சியின் உருவகம்தான் உச்சநீதி மன்றம் என்பதை இத்தீர்ப்பு பச்சையாக எடுத்துக் காட்டிவிட்டது.

 

*******

நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி தில்லி போலீசு கட்டமைத்த கதைதான் ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அத்தாக்குதலுக்கு மர்மங்கள் நிறைந்த இன்னொரு பக்கம் உண்டு. அப்சல், உச்சநீதி மன்றத்தில் தனக்காக வாதாடிய வழக்குரைஞர் சுசில்குமாருக்கு எழுதிய கடிதத்தில், மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

 

“”சரணடைந்த போராளியான தன்னை மிரட்டிப் பணம் பறிக்கவும்; போலீசின் ஆள்காட்டியாகச் செயல்படக் கூறியும் காசுமீரின் சிறப்பு அதிரடிப் படை தொடர்ந்து தன்னைச் சித்திரவதை செய்து வந்ததையும்; காசுமீரின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் திராவிந்தர் சிங்கின் கட்டளைப்படி தான், நாடாளுமன்றத் தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட முகம்மதுவை தான் தில்லிக்கு அழைத்து வந்ததையும்; திராவிந்தர் சிங் செல்போன் மூலம் தனக்குக் கொடுத்த கட்டளைப்படிதான், கார் உள்ளிட்டு பல பொருட்களை முகம்மதுவுக்குத்தான் வாங்கிக் கொடுத்ததையும்; தனது தம்பி ஹலால் அஹமத் குருவைப் பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு, தில்லி சிறப்பு போலீசு சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் எனத் தான் தில்லியில் சித்திரவதை செய்யப்பட்டதையும்; தனது மனைவி தபஸ்ஸும்; தனது தம்பி ஆகியோரின் பாதுகாப்புக்காக, தில்லி சிறப்புப் போலீசைச் சேர்ந்த துணை கமிசனர் ராஜ்பீர் சிங் சொன்னபடி தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும்,” அப்சல் அந்தக் கடிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.

முகம்மதுவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், முகம்மதுவைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைத்து உதவச் சொன்ன சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளை விசாரிக்க மறுப்பது ஏன்? முகம்மதுவுடன் தான் செல்போனில் பேசிய பேச்சுக்களைச் சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், அதே செல்போன் மூலம் காசுமீர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு விசாரித்து வந்ததைக் காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? இப்படி அடுத்தடுத்து அப்சல் எழுப்பும் பல கேள்விகள் இன்று திகார் சிறையில் புதையுண்டு கிடக்கின்றன.

*******

“”அப்சல் என்ற தனிமனிதனின் கதை அல்ல இது; காசுமீரிலுள்ள பல இளம் தம்பதியினரின் கதை இது…. காசுமீரில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் ஈடுபடாவிட்டால்கூட, காசுமீரில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் கூட இயக்கங்கள் குறித்த ஏதேனும் தகவலை அறிந்திருப்பார்கள். மக்களை உளவு சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம், சகோதரரைச் சகோதரருக்கு எதிராகவும்; மனைவியைக் கணவனுக்கு எதிராகவும்; குழந்தைகளைப் பெற்றோர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புப் படையினர் மாற்றுகின்றனர். அவர்கள் மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்க மாட்டார்கள்” என்கிறார், அப்சலின் மனைவி தபஸ்ஸும்.

இந்த பரிதாபகரமான கதைகளைத் தோண்டித் துருவினால், இந்திய ஆளும் கும்பல் அதிகார வர்க்கம் அனைத்தையும், ஏன் தாங்களே கூட குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும் என்பது உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குத் தெரியும்; சதாம் ஹுசைனைத் தூக்கில் போடக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போலி கம்யூனிஸ்டுகள், அப்சல் பிரச்சினையில் வாயை மூடிக் கொள்கிறார்களே, அந்த மௌனத்திற்கும் இந்தக் கதை தெரியும்.

நாஜிகளின் ஆட்சியின் பொழுது, ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டார்கள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடக்குமானால், இந்திய பாசிச சக்திகளின் சதிகளும் அம்பலத்துக்கு வரலாம்!

இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த இரண்டொரு நாட்களிலேயே அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பொடா சட்டத்தை நிறைவேற்றியது; அதோடுகூட, பாக். மீது படையெடுக்க எல்லைப்புறத்தில் இராணும் குவிக்கப்பட்டு, 10,000 கோடி ரூபாய் புஸ்வாணமாக்கப்பட்டது. இவை இரண்டையும் நிறைவேற்ற நாடாளுமன்றத் தாக்குதல் காரணமாக அமைந்ததா, இல்லை, இவை இரண்டையும் நிறைவேற்றுவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற உண்மைகூட வெளிச்சத்துக்கு வரலாம்!

– குப்பன்

நன்றி: தமிழரங்கம்-இணையத்தளம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.