9 என்பது 11 அல்ல; நவம்பரும் செப்டம்பரல்ல!

அருந்ததி ராய் – தொடர்-1

1997ஆம் ஆண்டின் உலகளாவிய எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசை வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் நாடறிந்த சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், கடந்த மாதம் பம்பாயில் நடைபெற்ற பயங்கரவாதம் குறித்துத் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். இவரது ‘ஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை’ என்ற கட்டுரையை ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சமீபத்தில் அவுட்லுக் இந்தியா இதழில் வெளிப்படுத்திய அவரது கருத்துகளைத் தமிழில் இங்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். – சத்தியமார்க்கம்.காம்

 

நம் நாட்டில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றி சுயமாக விவாதிக்கும் உரிமையைக் கூட நாம் இழந்து விட்டோம் போலுள்ளது. மும்பையில் அந்தப்பயங்கரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது நம் நாட்டு 24 மணி நேரச் செய்தி சானல்கள், “நாம் இந்தியாவின் செப்-11-ஐ பார்த்துக் கொண்டிருக்கிறோம்”என்று அறிவித்தன.

ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம் போல நாம் ‘நடிக்க’ வேண்டிய காட்சிகளும் வசனங்களும் கூட ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது -அதே வசனங்களை நாம் முன்னரே பேசி, நடித்திருந்தும் கூட.

தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவியபோது அமெரிக்க செனட்டர் ஜான்மெக்கெய்ன், “பாகிஸ்தான் விரைவாகச் செயல்பட்டு ‘கெட்ட நபர்களை’ கைது செய்யாவிடில் அதன் ‘தீவிரவாத முகாம்’களின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதாக தனக்குத் தனிப்பட்ட தகவல் கிடைத்திருப்பதாகவும், மும்பைத் தாக்குதல் ‘இந்தியாவின் செப்-11’ என்பதால் இந்தியாவின் பதில் தாக்குதல்களை அமெரிக்காவால் தடுக்க முடியாது” என்றும் பாகிஸ்தானை எச்சரித்தார்.

ஆனால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008ஆம் ஆண்டு 2001ம் அல்ல; பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்கா அல்ல!

நம் நாட்டில் நிகழ்ந்த அத்துயரச் சம்பவம் பற்றி நாமாகவே நமது மூளையைக் கொண்டும் புண்பட்டிருக்கும் நமது மனதைக் கொண்டும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே நமக்கான முடிவுகளை நாம் எடுக்க முடியும்.

நவம்பர் இறுதிவாரத்தில் காஷ்மீர மக்கள் ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்களின் கண்காணிப்பினூடே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வரிசையில் காத்து நின்றபோது, இந்தியாவின் பணக்கார நகரங்களுள் ஒன்றான மும்பையில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி, போர்களில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருக்கும் காஷ்மீரின் குப்வாரா பிரதேசம்போல காட்சியளித்தது விசித்திரமானதுதான்.

இந்த ஆண்டில் இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் தீவிரவாதச் செயல்களில் மும்பைத் தாக்குதல் என்பது மிக அண்மை நிகழ்வாகும்.

அகமதாபாத், பெங்களூர், டெல்லி, குவஹாத்தி, ஜெய்ப்பூர், மாலேகான் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமிருக்கின்றனர்.

சந்தேக நபர்கள் என இந்திய காவல்துறை கைதுசெய்திருப்போரில் இந்துக்களும் இருக்கின்றனர்; முஸ்லிம்களும் இருக்கின்றனர்.

அனைவருமே இந்தியப்பிரஜைகள்! காவல்துறை சந்தேகப்படுவது சரியானதென்றால், நம்நாட்டில் எதுவோ மிகவும் தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது.

நீங்கள் தொலைக்காட்சிச் செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தீர்களென்றால் மும்பைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதை அறிந்திருக்க மாட்டீர்கள்.

பரபரப்பான ரயில்நிலையம் ஒன்றிலும் பொது மருத்துவமனை ஒன்றிலும் அவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். தங்களால் தாக்கப் படுபவர்கள் பணக்காரர்களா? ஏழைகளா? எனத் தீவிரவாதிகள் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்த இரண்டு தரப்பினரையுமே அவர்கள் ஒன்றுபோல ஈவு இரக்கமின்றி கொன்றிருக்கின்றனர்.

ஆனால், இந்திய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் ‘பணக்கார இந்தியா’வின் தடுப்புச் சுவர்களை ஊடுருவிச் சென்று சலவைக்கற்கள் பொதிக்கப்பட்ட உயர்தர ஹோட்டல்களின் வரவேற்பறைகளிலும் மினுமினுக்கும் அவற்றின் நடன அரங்குகளிலும் ஒரு சிறுயூத மையத்திலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரங்கள் மட்டுமே.

தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல்களில் ஒன்று ‘இந்தியாவின்அடையாளச் சின்னம்’ என்று கூட நமக்கு அறிமுகப் படுத்தப்பட்டது!

அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

அது இந்தியாவின் சாதாரண பொதுஜனம் நாள்தோறும் சந்திக்கும் அநீதிகளின் அடையாளச் சின்னம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

நன்றி : அவுட்லுக் இந்தியா / தமிழில் : ஸலாஹுத்தீன்