ஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை.

 

அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது.  சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் “குட் மார்னிங் அமெரிக்கா” நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது.

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், “ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது” என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது.

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்” என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்

அப்போது கேட்க பட்ட கேள்விதான்,

ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே?

அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

“அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்…..”


இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்…


……ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)…உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்?

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது.

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர்.

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள்.

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் —

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?


எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. …….ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது.

செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.

அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், “இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று”.  முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை—

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது.

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்?

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

என்னால் உடன்பட முடியவில்லை…..

அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.

அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது.

…நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா?

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது?

NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.

அதேபோல,  உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம்.

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்?

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள—

அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.

கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.

விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு  அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன்.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா ?

இது—-என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது—

என்னை பேச அனுமதியுங்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா?

இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.

வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.

ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை?

நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது?

நேற்று அமெரிக்கா “எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன” என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது?

ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.

இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,


உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும்.

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை .

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.

நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா?

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன்.

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா?

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று?

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்…

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை.

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது.

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?

நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து?

நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.

நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்?

தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,


நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா?

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.

உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.

சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான்.

இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம்.

பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,

  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.


இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,

இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.

நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?

அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.


புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?….

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்….

This article is the extract of Iran President’s Interview with George Stephanopoulos which was translated by Aashiq Ahamed for Unnatham Magazine.


My sincere thanks to:
1.Unnatham Magazine.

References:
1. Mahmoud Ahmadinejad on Nuclear Programme – ABC News dated 5th May, 2010.

நன்றி : உங்கள் சகோதரன், ஆஷிக் அஹ்மத் அ


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.