சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் படுமோசமான அளவில் பின் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் யார் என்று ஆராய்வதைவிட, அதனை மாற்றுவது எப்படி என ஆராய்ந்து தீர்வு காண்பது சிறந்தது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1980களுக்குப் பின்னர் தோன்றிய பல்வேறு முஸ்லிம் இயக்கங்களால், சமுதாயத்தினுள்ளே மிகச் சிறந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அவற்றுள் மிக முக்கியமாக கல்வி, அரசியல், பொருளாதார முன்னேற்றம் தேவை என்ற விழிப்புணர்வு எனும் மாற்றம் தலையாயது.
உயர்கல்வியில் நன்கு முன்னேற வேண்டுமென்ற விழிப்புணர்வும் சமூக விசயங்களில் பங்களிப்பாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் இயக்கங்களின் வருகையால் விளைந்த நற்பலன்களில் முக்கியமானவை.
அதே சமயம், புதிய தொழில் வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், நலிவடைந்த தொழில்களை முன்னெற வைத்தல், தனிநபர் வருமானம் அதிகரித்தல் முதலான பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விசயங்களில் இயக்கங்கள் ஆற்றிய பங்களிப்பு என்பது கேள்விக்குறியானது.
சமூக நீதியும், சமத்துவமும் அரசியல் அதிகாரம் கிடைப்பதன் வழியே சாத்தியமென்ற அரசியல் விழிப்புணர்வு சமுதாயத்தினுள் பரவலாக விதைக்கப்பட்டதில் இயக்கங்கள் ஆற்றிய பங்களிப்பு அபாரமானது. ஆனால், ஏற்பட்ட விழிப்புணர்வைச் சரியான திசையில் செலுத்தி அரசியல் அதிகாரம் பெறுவதிலோ அரசியலில் சமுதாயத்தின் பங்களிப்பைச் சரியான அளவில் செலுத்த வைப்பதிலோ இயக்கங்கள் பெரும் தோல்வியையே தழுவியுள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.
இதற்கு, இருக்கும் 5-6 சதவீத ஓட்டுகளைப் பிரித்துக் கொள்வதற்குப் போட்டியிடும் வகையில் ஆளாளுக்கு ஓர் அரசியல் கட்சி தொடங்கியதே காரணம். சரியான சமுதாயப் பார்வை கொண்ட, சுயநலமற்ற எவரும் மிக நிச்சயமாக இத்தவறைச் செய்திருக்கவே முடியாது.
எவருக்கும் கட்சி தொடங்கும் உரிமையை ஜனநாயகம் தருகிறது என்பதற்காக, சமுதாய நன்மைக்காக நானும் ஒரு கட்சி தொடங்குவேன் என்பது முட்டாள்தனமானது. சமுதாயத்தைச் சுக்குநூறாக உடைத்து எறிவதற்கு ஒப்பானது அது!
விழிப்புணர்வு பெற்று ஒரு திசையில் பயணிக்க வேண்டிய சமுதாயத்தை, நான்கு பேர் தலைமையில் நான்கு திசையில் கூறுபோட்டுப் பயணிக்க வைப்பது எவ்வளவு விபரீதமானது என்பதைச் சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் என்பது சுதந்திரத்துக்கு முன்னரிலிருந்தே முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சி தலைமையில் நடந்து வந்துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை அரசியல் ரீதியாக முன்னேற்ற அந்த ஒரு அரசியல் கட்சி போதுமானது. அக்கட்சியின் தலைமையிலோ உள்ளேயோ ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவை திருத்த முடியாதவை அல்ல. முஸ்லிம்களின் ஓட்டுகளை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற விரும்புவோர் ஒரேயொரு கட்சியின் தலைமையில் இணைவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். அதற்கு ஏற்றது முஸ்லிம் லீக் தான். முஸ்லிம் சமுதாயத்தினுள்ளே சுற்றி வந்து அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருக்கும் கட்டமைப்பைச் சீர்குலைக்காமல், சக்தியைச் சிதறடிக்காமல் இவ்விசயத்தில் இனிமேலாவது உடனடி தீர்மானத்துக்கு வரவேண்டும். அதுமட்டுமே, சமுதாயத்துக்கு நல்லது. சமுதாயத்துக்காக எனக்கூறி, தத்தம் சொந்தக் கட்சியின் நலனுக்காக சுயநலமாக சிந்திக்கும் கட்சிகள் மிக நிச்சயமாக சமுதாயத்துக்குக் கேடே விளைவிக்கும்.
மாறாக,
முஸ்லிம் லீக் தவிர்த்த அத்தனை கட்சிகளும் இந்திய அரசியலில் பொது அரசியல் களத்துக்குச் செல்ல வேண்டும். முஸ்லிம் ஓட்டுகளை மட்டும் குறிவைத்து, “நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற வட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். அது மதரீதியான பாகுபாட்டை அதிகரிக்க வைக்க மட்டுமே உதவி செய்யும். அதுவல்லாமல், அக்கட்சிகளுக்கோ அல்லது சமுதாயத்துக்கோ எவ்விதப் பலனையும் அது தரப்போவதில்லை!
முஸ்லிம்களின் அரசியல் நலன் ஒரு தலைமையில் வலிமையாக பேச வைக்க, பிற முஸ்லிம் அரசியல் கட்சிகள் முஸ்லிம் லீக் தலைமையில் ஒன்றுபடட்டும். தத்தம் கட்சிகளைத் தொடர விரும்பினால், முஸ்லிம் சமூகத்தினுள் முஸ்லிம் கட்சி என்ற பிரச்சாரத்தைக் கைவிட்டு எல்லா சமூகத்துக்குமான பொதுவான அரசியல் கட்சியாக தம்மை அறிவித்து செயலாற்றத் தொடங்கட்டும். இந்தியா வலிமையான, தன்னலமற்ற, ஊழலற்ற, மதச்சார்பற்ற சிறந்த அரசியல் கட்சிகளை எதிர்பார்த்து நிற்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதே முஸ்லிம்களின் சரியான அரசியலாக அமையும்!