ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்

ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.

 

ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.

 

காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது நமக்குக் “குரங்கு கையில் பூமாலை” பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

 

நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.

 

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் “முகத்திரையைக் கிழிப்போம்”, “தோலுரித்துக் காட்டுவோம்”, “வேஷத்தைக் கலைப்போம்” போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.

 

“இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.

 

ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, “இறையச்சம் அற்றவர்கள்”, “கருத்தில் தெளிவில்லாதவர்கள்”, “தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்” என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் “உள்நோக்கம் தெரிகிறது” என்றார்கள்.

 

உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் – அதாவது கருத்தை மட்டும் – விமர்சனம் செய்ய வேண்டும்.

 

அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலைக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.

 

அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.

 

நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.

 

அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!

 

“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்” (அல்-குர் ஆன் 005:008).