ஆந்திரா I.T மாநிலமானது எப்படி?

ஒருநாடு முன்னேற வேண்டும் எனில், அந்நாட்டு மக்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாகத் தொழிற்கல்வியில் மக்களிடையே தெளிவான கண்ணோட்டமும் உயர் தொழில் நுட்பங்களைக் கற்பதற்கான வசதி வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். இவ் விஷயத்தில் எந்த அரசுஅதிகக் கவனத்துடன் இருந்து மக்களுக்கு உயர் தொழில் நுட்பங்களைக் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றதோ அவ்வரசு ஆளுகின்ற நாடு விரைவாகமுன்னேறும்.

இதற்குப் பல உதாரணங்களைக் கூற இயலும். அமெரிக்க ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திலிருந்து மக்கள் புரட்சி மூலம் விடுதலையடைந்த கியூபா அரசை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். விடுதலைக்குப் பின் அமெரிக்கக் குள்ளநரித் தனத்தினால் மிகப் பெரிய பொருளாதாரச் சீர்குலைவை அந்நாடு சந்தித்த போதும்தன் நாட்டு மக்கள் அனைவரும் கல்வியறிவில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே தன் நாடு முன்னேறும் என்பதில் மிக உறுதியாக இருந்த புரட்சி வீரன்டாக்டர். சே குவேரா,மக்கள் அனைவருக்கும் இலவச உயர் கல்வித்திட்டத்தை அறிவித்தார். வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் எழுத்தறிவு கூடஇல்லாத விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நேரடியாகச் சந்தித்து உயர்கல்வியின் கட்டாயத் தேவையை அவர்கள் புரியும் விதம் எடுத்துரைத்து, “கல்விகற்றல் கட்டாயம்” எனச் சட்டம் கொண்டு வந்து, கியூபாவைப் பார்த்து உலகமே வியக்கும் விதத்தில் அதிவிரைவான முன்னேற்றமடைய வைத்துக் காட்டினார். 

இது போன்ற உலக வரலாறுகளைப் படிக்கும் பொழுதும் கேள்விபடும் பொழுதும்அனைத்து வளங்களையும் வசதி வாய்ப்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள இந்தியாவும் உலக நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேற முடியாமல் போவதன் காரண முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன.

இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டதனால்நாட்டின்வளர்ச்சிக்கான தொழிற் கல்வி என்ற முக்கிய அடிப்படை விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டஆந்திர மாநில அரசு, கடந்த குறுகிய ஐந்து ஆண்டுகளுக்குள் தகவல் தொழில்நுட்பத்தில் அசுரவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. 

ஆம், வசதியில்லா மக்களுக்கும் சமூக நீரோட்டத்தில் கலக்க இயலாமல் பின்தங்கியுள்ள சிறுபான்மை, தாழ்த்தப்பட்டப் பழங்குடி மக்களுக்கும் உயர்கல்வியைக் கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக ஆந்திர அரசு வழங்கி வருகிறது. இதற்கான பிரதிபலனே ம்மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் அசுரவளர்ச்சிக்கான காரணம். 

இந்த இலவச உயர்கல்வித் திட்டத்தின் அடுத்தக் கட்டமாக, இவ்வாண்டு முதல் தொழிற்கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில்இவ்வாண்டு ஆந்திர மாநில அரசு, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 20 ஆயிரம்புதிய பொறியியல் பயிலும் மாணவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்துகிறது. இதுமட்டுமின்றி, ஏற்கனவே பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும், இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களின்கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. 

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான ரூ.30 ஆயிரம் கட்டணத்தோடு, மருத்துவம் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணத்தையும்அரசே செலுத்துகிறது. ஆந்திரா முழுவதும் 16 விதமான தொழிற் கல்விகளைப் படிக்கும் அனைத்து முஸ்லிம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்துகிறது. தற்போது, ஆந்திராவில் 20 ஆயிரம் முஸ்லிம் மாணவர்கள் பொறியியல் படித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில், பொறியியல் படிக்கும் முஸ்லிம் மாணவர்களைவிட, ஆந்திராவில்தான் அதிகம் பேர் இந்தப் படிப்பில்சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் அனைத்து மக்களும் கல்வியறிவில் போதிய தேர்ச்சி பெற்றாலேமாநிலம் சீராக வளர்ச்சியடையும் என்பதைப் புரிந்துக் கொண்ட ஆந்திர மாநிலஅரசு, வெறுமனே பேசிக்கொண்டு இருக்காமல் தீவிரமாகக் கல்விப் புரட்சியில் களமிறங்கியுள்ளது. ஏற்கெனவே சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் சமூகநீரோட்டத்தில் கலக்கச் செய்ய, நாட்டில் கலகம் விளைவித்து மனு ஆட்சியைக் கொண்டு வரத்துடிக்கும் மதவெறிக் கட்சிகளின் நெருக்கடிகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு உச்சநீதிமன்றத்திடமிருந்து முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடுக்கு ஆதரவாக ஆந்திர அரசு தீர்ப்பைப் பெற்றுள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான ஆந்திர அரசின் அணுகுமுறை இவ்வாறுஇருக்க, “முஸ்லிம்களின் பாதுகாவலன்”, “குல்லா அணியாத முஸ்லிம்” எனப் பைசா பெறாதப் பலப்பட்டபெயர்களுடன் முஸ்லிம்களின் தோழனாக உலாவரும் கருணாநிதிஆட்சியில், “வீடு தோறும் துணி விற்றுத் தன் மகளைப் படிக்க வைத்துமேல்நிலையில் உயர்கல்விக்கான மிகச் சிறந்த மதிப்பெண் எடுக்க வைத்தும் மகள்நினைக்கும் பொறியியல் படிப்பிற்கு அனுப்ப வழி இல்லாமல் திண்டாடும் ஆண்துணையில்லா முஸ்லிம் தாய்”கள் திண்டாடும் நிலையில்தான் தமிழ்நாட்டின்நிலை உள்ளது.

ஒரு காலத்தில் தமிழகத்தோடு ஒப்பிடுகையில் வளர்ச்சியில் எவ்வளவோ கீழ்நிலையில் இருந்த ஆந்திரமாநிலம் அசுர வேகத்தில் வளர்ந்தமைக்கான நேரடி காரணமே, அனைவருக்கும் உயர்கல்வி பெறும் வழியினை இலகுவாக்கியதாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அணுகுமுறையைத் தமிழக அரசும் வெறும் வாய்ச்சவடால் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் நேரடியாக இலவசத் தொழில் நுட்பக் கல்வி அனைவருக்கும்கிடைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தகுதி வாய்ந்த ஷாஜிதா போன்ற மாணாக்கர்கள், வசதியின்மையின் காரணமாகத்தொழில் நுட்பக் கல்வியினைப் பெற முடியாமல் ஒருபக்கம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது, இலவசத் தொலைக் காட்சிகளையும் இலவச அரிசி, வேட்டி, சேலைகளையும் வழங்கி மக்களைச் சோம்பேறிகளாக ஆக்குவதை அரசு மும்முரமாகச் செய்து கொண்டிருக்கின்றது”. இது நல்ல ஒரு அரசுக்கு அழகல்ல.

நாடு முன்னேற வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை இருக்கும் எனில், நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த அரசுகள் முனையட்டும்.