உலகின் துயர முனை!

Share this:

”எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக் குருடாக்கி விடாது.

யூதர்களுக்கு தேசிய இருப்பிடம் வேண்டும் என்ற பெருங்குரல் சரியானதாக எனக்குப் படவில்லை. யூதர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளை, ஏன் தங்களின் சொந்த நாடாகக் கருதக்கூடாது? இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கும் சொந்தமோ… அப்படியே பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தம். அரேபியர்கள் மீது யூதத் திணிப்பு என்பது தவறானது, மனிதாபிமானத்துக்குப் புறம்பானது!” 

– பாலஸ்தீனத்தை அபகரித்த யூதர்களின் செயலைக் கண்டித்து, 1938-ம் ஆண்டு ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தியடிகள் எழுதிய வரிகள் இவை. நேருவும் இதே காலத்தின் யூத ஆக்கிரமிப்புக்கு எதிரான தன் கருத்துகளை, மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களில் பதிந்து உள்ளார்.

காந்தி, யூதர்களின் ஆக்கிரமிப்பு பற்றி எழுதி 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று யூதர்களுக்கு என்று இஸ்ரேலும், அரேபியர்களுக்கு என்று பாலஸ்தீனமும் உருவாகி, அதை 130-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஐ.நா-வும் அங்கீகரித்துவிட்டன. ஆனாலும், இரு தரப்புக்கும் யுத்தம் முடியவில்லை. பாலஸ்தீனத்துக்குள் வந்து குடியேறிய யூதர்களுக்கும், பூர்வீக பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் 1920-களில் தொடங்கியது. உள்ளூர் பூசல்களாக இருந்த மோதல்கள், 1947-ல் ‘இஸ்ரேல்’ என்றொரு நாடு யூதர்களுக்காக உருவான பின்னர், இரு தேசங்களுக்கு இடையில் போராக விரிவடைந்தது!

இப்போது ஏன் இந்தப் போர்?

கடந்த மே மாதத்தில், மூன்று இஸ்ரேலியக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். ‘ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர்தான் எங்கள் குழந்தைகளைக் கடத்திக் கொன்றுவிட்டார்கள்’ என்று இஸ்ரேல் குற்றம் சுமத்தித் தாக்குதலைத் தொடங்கியதோடு, ஒரு பாலஸ்தீன சிறுவனைப் பிடித்துப் பழிக்குப்பழியாக எரித்துக் கொன்றது. இப்படி ஜூலை ஆரம்பத்தில் தொடங்கியது இந்தப் போர். இதுவரை நடந்த போரில் பாலஸ்தீனியர்கள் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். 43 சிப்பாய்களும் இரண்டு பொதுமக்களும் இறந்துள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ஆனால், ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று வார யுத்தத்தில் சுமார் 1,300 பேர் பலியானார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள்… என ஒன்றுவிடாமல் தாக்கி அழிக்கப்படுகின்றன. காஸாவில் இருந்த ஒரே மின் நிலையமும் தகர்க்கப்பட்டு இருளில் தள்ளப்பட்டுள்ளது பாலஸ்தீனம். உலகில் இருந்து பாலஸ்தீனத்தைத் தனிமைப்படுத்தி இஸ்ரேல் நடத்தும் இந்த யுத்தத்தை, ‘பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுத் தண்டனை’ என்று கண்டித்திருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் போர் என்பது புதிது அல்ல. என்றாலும் இந்தப் போரில் இஸ்ரேல் குறிவைத்துக் கொல்வது பாலஸ்தீனக் குழந்தைகளைத்தான். பொதுவாக விதவிதமான குண்டுகள் வீசப்படும் யுத்த களத்தில் இருந்து வித்தியாசப்படுகிறது காஸா முனை. குண்டுகளோடு கூர் ஈட்டி போன்ற ஆயிரக்கணக்கான ஆணிகளும் வந்து விழுகின்றன. அது விழுந்து தெறிக்கும் இடத்தில் இருப்பவர்களின் உடல்களைக் குத்தித் துளைக்கின்றன. கற்பனை செய்ய முடியாத விபரீதத் தாக்குதலுக்குப் பலியாகி மடிகிறார்கள் பாலஸ்தீனக் குழந்தைகள்.

யூத அடிப்படைவாதக் கட்சியின் எம்.பி அயலெட் சாக்கெய்ட் உச்சகட்ட வன்மமாக, ”காஸாவில் உள்ள பெண்கள் குழந்தைகளைப் பெறவில்லை; நச்சுப் பாம்புக்குட்டிகளைப் பெறுகிறார்கள். ஆகவே, அவர்களை நிர்மூலமாக்க வேண்டும்” என்கிறார். ‘யுத்தத்தை நிறுத்த முடியாது. இந்த அழிவுகள் அத்தனைக்கும் ஹமாஸ்தான் காரணம் என்கிறார்’ இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு. இஸ்ரேலின் குன்றுகள் மீதேறி ஏதோ வாணவேடிக்கையைக் கண்டுகளிப்பதுபோல, காஸா துவம்சம் செய்யப்படுவதை ரசிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். இருந்தாலும் கணிசமான யூதர்கள் தங்களின் சொந்த அரசுக்கு எதிராக ‘போரை நிறுத்து, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்காதே’ என்றும் முழங்குகிறார்கள்.

யுத்தமுனைக்கு முதன்முதலாகச் சென்ற ‘சேனல் 4’ ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ, இதை ”குழந்தைகள் மீதான யுத்தம்” என்கிறார். ”காஸா முனை, இடைவிடாத குண்டுவீச்சால் புழுதி மண்டலமாக இருக்கிறது. அந்தப் புழுதிப் புயல்களுக்கு மத்தியில் குழந்தைகள் என்னைக் கண்டதும் ஓடிவந்தார்கள். ‘உங்களுக்குப் பயமாக இல்லையா?’ என்று கேட்டேன். அந்தக் குழந்தைகள் பதில் சொல்லாமல் சுற்றிலும் பார்த்தார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சடலங்கள் சுற்றிலும் பரவிக்கிடந்தன!” என்கிறார் ஜோன் ஸ்னோ.

ஆசிய நாடுகளைச் சார்ந்த மனித உரிமையாளர் களோடு, காஸாவுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசென்று கொடுத்து வந்த மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் காஸா நிலவரம் பற்றி கூறுகிறார். ”2009-ம் ஆண்டு இறுதியில் காஸாவுக்குச் சென்றிருந்தேன். உலகிலேயே மக்கள் மிக நெருக்கமாக வாழும் ஒரு சின்ன முனை காஸா. பல வருடப் போரின் சாட்சியாக வீடுகளும் வீதிகளும் சிதைந்தும் தகர்ந்தும் கிடந்தன. ஒரு பாலஸ்தீனப் பிரஜை அந்த மண்ணிலேயே பிறந்து, அந்த மண்ணிலேயே மடிந்துபோகும் நிலைதான் நிலவுகிறது. ஏனென்றால், அதைச் சுற்றியுள்ள எல்லைகள் யாவும் இஸ்ரேலிடமும் எகிப்திடமும் உள்ளன. தங்களுக்கு என ஒரு தேசம் இருந்தபோதிலும், அங்கு வாழும் 90 சதவிகித மக்கள் அகதிகளாகவே வாழ்கிறார்கள். தரமான மருத்துவச் சிகிச்சை, கல்வி, உணவு, தண்ணீர்… எதுவுமே கிடையாது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்களிலும் உதவிகளிலும்தான் வாழ்கிறார்கள். இன்று வரை இதுதான் நிலைமை!” என்கிறார்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை. பாலஸ்தீன மேற்குக் கரையை யாசர் அராஃபத்தின் வழிவந்த ஃபடா அமைப்பும், காஸாவை ஹமாஸ் போராளிக் குழுவும் ஆட்சி செய்கின்றன. ஐ.நா தீர்மானமும் ஓஸ்லோ ஒப்பந்தமும் இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் இறையாண்மை உள்ள இரு நாடுகளாக ஏற்றுக்கொண்டதோடு, அதற்கு அந்த இரு நாடுகளையும் உடன்படவும் வைத்தன. ஆனால், இஸ்ரேலை ஏற்றுக்கொள்வதில் ஃபாடாவுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன. பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஹமாஸும் ஃபடாவும் இணைந்து காஸாவில் ‘ஒற்றுமை அரசு’ அமைக்க முடிவு எடுத்ததை இஸ்ரேல் எரிச்சலுடனேயே பார்த்தது. ‘பாலஸ்தீனத்துக்குள் யூதர்கள் இருக்கட்டும். ஆனால், அவர்களுக்கான அரசாக இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்ற கொள்கைகொண்ட ஹமாஸ், ஃபடாவுடன் இணைவதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் போருக்கான அரசியல் கலந்த காரணங்களில் இதுவும் ஒன்று.

தொடர்ந்து பாலஸ்தீனப் பிரச்னை பற்றி எழுதிவரும் எழுத்தாளர் ஹெச்.பீர்முகம்மது ஹமாஸின் நிலைப்பாடு குறித்து சொல்லும் கருத்து முக்கியமானது. ”பெரும்பான்மை பாலஸ்தீன மக்கள் அகதிகளாகச் சொந்த நாட்டிலேயே முடங்கியுள்ளார்கள். சுமார்  25 லட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிகளாக அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், யூதர்களை மதரீதியாக நிரந்தர எதிரிகளாகப் பார்க்கும் பார்வையை ஹமாஸ் கைவிட வேண்டும். இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னையைத் தீர்க்க, அது எந்த வகையிலும் உதவாது. தவிரவும் யாசர் அராஃபத் போன்ற சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் இல்லாமல், இந்தப் பிரச்னையை ஆயுதங்கள் மூலம் தீர்க்க முடியாது என்பதை ஹமாஸ் உணர வேண்டும்” என்கிறார்.

ஆஃப்கான், ஈராக் உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா போரை நடத்தி முடித்ததுபோல பாலஸ்தீனப் போரை அமெரிக்காவோ வேறு வல்லரசு நாடோ நடத்திவிட முடியாது. பாலஸ்தீன மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளைப் புரிந்துகொண்ட மக்கள் உலகெங்கிலும் அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாறி வரும் உலக ஒழுங்கில் ஆயுதங்கள் மூலம் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்ற விதி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், ‘அதை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்ற பிடிவாதம் தொடருமானால், மூன்றாம் உலகப் போர் ஒன்றைச் சந்திக்க நேரிடலாம். இன்றைய உலகமயச் சூழலில், இன்னோர் உலகப் போர் நடந்தால், அது கற்பனைக்கு அப்பாற்பட்ட பேரழிவில்தான் முடியும்!

டி.அருள் எழிலன்

(ஆனந்த விகடன் ஆகஸ்ட் 13, 2014)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.