தேவை முஸ்லிம்களுக்கான வர்த்தக அமைப்பு

லக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

எந்தப் பொருளையும், எந்தப் பகுதிக்கும் காலதாமதமின்றி எடுத்துச் செல்வதற்காக வளரும் நாடுகள் கட்டுமானத் துறையில் (Infrastructure) அதிகம் முதலீடு செய்து புதிய விமான நிலையங்கள், பெரிய துறைமுகங்கள், நான்கு வழிச் சாலைகள், புதிய இரயில் பாதைகள் போன்ற உலகை இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதே போல மிகப் பிரம்மாண்டமான கப்பல்களும், விமானங்களும் இரண்டு அடுக்கு இரயில் பெட்டிகளும் அதிகப் பொருட்களைக் கையாளும் வசதிகளோடு உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் புதிய கடல் வழித்தடங்களைக் கண்டுபிடித்து கண்டங்களுக்கு மத்தியில் சரக்குப் போக்குவரத்தை அதிகப்படுத்திட சாட்டிலைட் உதவியுடன் பூமியின் அமைப்பை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐரோப்பாவிற்கு பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்காக வட கிழக்கு ஆர்டிக் கடலில் ரஷ்யா வழியாக ஒரு புதிய கடல் வழியை சீனா பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதுவரையிலும் சீனாவிலிருந்து ஐரோப்பா சென்ற கடல் பாதையிலிருந்து மாறி இந்தப் புதிய பாதையில் செல்வதால் 11 ஆயிரம் மைல் தூரம் குறைகிறது. இதனால் சீனத் தயாரிப்புகள் ஐரோப்பாவில் குவியப் போகிறது.

உலகின் அனைத்துப் பகுதியிலும் வியாபாரத்தைப் பெருக்க நாடுகளுக்கு மத்தியில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreement), சர்வதேசப் பணப் பரிவர்த்தனைகள், கூட்டு முதலீடுகள் போன்ற சர்வதேச வியாபாரத்திற்கு வலு சேர்க்கும் வேலைகள் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது உலகம் முழுவதுவம் காணப்படும் சர்வதேசப் பொருளாதாரத் தேக்க நிலை (Recession) என்பது கண்மூடித்தனமான வளர்ச்சி என்ற தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மையற்ற தன்மையின் விளைவுகளே!

தொடர்ச்சியாக பெருகி வரும் வியாபாரத்தை இந்த தற்காலிக தேக்க நிலை பெரிய அளவில் பாதிக்காது.

இந்தியாவில் பல துறைகள் கணிசமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. உணவு பதப்படுத்தல், மருந்து, எரிசக்தி, ஜவுளி போன்ற மனித வாழ்வின் அடிப்படைத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு புதிய புதிய தொழிற்கூடங்கள் உருவாகி வருகின்றன.

வளர்ந்து வரும் இந்த வாய்ப்புகளை இந்தியாவின் பல சமூகங்களும் நுணுக்கமாக ஆய்வு செய்து அதற்கான ஏற்பாடுகளோடு அவற்றை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்தியாவில் சாதிய இழிவுகளால் கேவலமான அடக்குமுறைகளுக்கு ஆளான நாடார் சமூகம் காமராஜர் காலத்தில் வியாபாரத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக ”மகமை” போன்ற வருமானத்தின் ஒரு பகுதியை தங்கள் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். நாடார் சமூக சிறு, குறு, பெருந்தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து ஒரு வங்கியை உருவாக்கி (Mercantile Bank) அதை வியாபாரிகளுக்கான வங்கி என்று பொதுமைப் படுத்தியுள்ளனர். நாடார்களின் வர்த்தக வெற்றிக்கு மெர்கன்டைல் வங்கி பெரிதும் உதவுகிறது.

அதேபோல மார்வாடி சமூகம் தங்கள் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பல சங்கங்களை, அமைப்புகளை நடத்துகின்றனர் அவர்கள் செய்யாத தொழிலும் இல்லை. இந்தியாவில் அவர்கள் இல்லாத ஊரும் இல்லை.

அதேபோல முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான தாவூதி போரா சமூகத்தில் ஏழை, தொழில் இல்லாதவர் என்று ஒருவரைக் கூடக் காண இயலாத அளவிற்கு தொழிலுக்கு முதலீடு பற்றாக்குறை என்ற பேச்சே எழாத அளவில் அந்த சமூகம் தனக்கான கட்டமைப்புகளை வைத்துள்ளது. அவர்களிடையே ”ஜகாத்” முறையாகப் பங்கீடு செய்யப்படுகிறது.

புனாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ”மிலிந்த் காம்ப்ளே” என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ”டிக்கி” என்ற (Dalit Indian Chamber of Commerce and Industry) வர்த்தக அமைப்பை உருவாக்கி அடுத்த 10 ஆண்டுகளில் தலித் சமூக இளைஞர்களை தொழில் துறையில் ஈடுபடுத்தி குறைந்தது நூறு தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கும் இலக்கோடு பணியாற்றி வருகிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2.5 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். பல இலட்சம் புதிய தொழில் அதிபர்கள் உருவாகியுள்ளனர்.

வணிகச் சமூகம் என்று வரலாறு முழுவதும் அறியப்பட்ட முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஹலாலான வியாபாரத்தின் மூலம் தான் எல்லையில்லா இலாபத்தை ஈட்ட முடியும். அதனால்தான் உற்பத்தியைக் காட்டிலும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது நமது முந்திய தலைமுறை.

ஆனால் இன்று சேவைத் துறையின் (Service Sector) பெருக்கம், பன்னாட்டுத் தொழில் நிறுவங்களின் வருகை, வளைகுடா வேலை வாய்ப்பு ஆகியவை மாத ஊதியத்திற்கு பணியாற்றுவதை இலகுவாக்கி அதற்கு உதவும் பொறியியல் போன்ற படிப்புகளையும் கவர்ச்சியாக்கியுள்ளது.

தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.

பொறியியல் படிப்பை நன்றாகப் படித்தவர்களில் சிலர், பெரும் பொருள் ஈட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானத்திற்கும் எல்லை உண்டு. தொழில் துறையில் விரிவாக்கத்திற்கும், இலாபத்திற்கும் எல்லை இல்லை. அது இறைவனின் அருளையும் அபிவிருத்தியையும் பெற்றது.

கேரள முஸ்லிம்கள் தொடக்க காலத்தில் வளைகுடா நாட்டிற்கு அடிப்படை வேலைக்குச் சென்றாலும் கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு இன்று பெரும் தனவந்தர்களாக மாறியுள்ளனர். புதிது புதிதாக இளம் தொழில் அதிபர்கள் உருவாகி வருகின்றனர்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்களை தொழில் முனைவோராக (Entrepreneur) உருவாக்கும் எந்த கட்டமைப்பும் முஸ்லிம் சமூகத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை. தானாக உருவாகி வருபவர்கள் மிகக் குறைவு, அப்படி உருவாகி வருபவர்களிடம் சமூக அக்கறை இருப்பது குறைவு. சமூகத்தால் உருவாக்கப்படுவோருக்குத்தான் சமூகத்துடனான தொடர்புகள் அதிகமாக இருக்கும்.

தமிழக முஸ்லிம் சமுதாயம் தொழில் துறையில் வளர்ச்சி பெறுவதற்கு மிக அடிப்படையாக ஒரு வர்த்தக அமைப்பு (Chamber of Commerce) உடனடியாக உருவாக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது.

இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு பெரிய தொழில் செய்பவர்கள், பாரம்பர்யத் தொழில் செய்பவர்கள் முதலில் இசைவு தெரிவிப்பது கடினம். பசித்தவர்களுக்கு பழங்கஞ்சி பஞ்சாமிர்தம் என்பது போல சிறு, குறு தொழில் செய்யும் வேட்கையுடைய முஸ்லிம்களை இணைத்தாலே பின்னால் அது எல்லோரையும் இணைக்கும் பெரிய நிறுவனமாகி விடும்.

முஸ்லிம்களிடையே இதுபோன்ற வளர்ச்சிக்கான கருத்துக்கள் கூறப்படும் போது உடனடியாக “நம்மகிட்ட ஒற்றுமை இல்ல பாவா” என்று யாருக்கும் விளங்காத ஒரே ஒரு வார்த்தையைக் கூறி முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். தொழில் ரீதியாக ஒருங்கிணைய வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உள்ள மக்களை ஒருங்கிணைத்தாலே போதும்; மாற்றம் உருவாகும்.

மிகப் பெரிய மாற்றங்களை நோக்கி உலகம் ஓடுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலமான ராஸ் அல் கைமா அரசின் சார்பில் அங்கே உருவாக்கபட்டுள்ள தடையில்லா வர்த்தக மையத்தின் (RAK Free Trade Zone) அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்து – ஆங்கில நாளேட்டில் அதன் அறிவிப்பு வந்தது. ஏறக்குறைய 500 தொழில் முனைவோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்தும் ஆர்வலர்கள் வந்திருந்தனர். முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பலவிதமான தொழில் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகளுக்கு அந்த நிகழ்வு வழிகாட்டியது. மற்றவர்களை விட நம் சமூகம் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்க முடியும் என்று தோன்றியது.

பயன்படுத்துவது யார் என்ற பெருமூச்சும் சேர்ந்தே வந்தது.

பணத்தை வைத்துக் கொண்டு அதைப் பாதுகாப்பதிலேயே நெஞ்சு வீங்கி வாழ்நாளை செலவிடும் மக்கள் நம்மில் அநேகம் பேர் உள்ளனர்.

அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றில் பெருமானார் செய்து சாதித்த ஒன்றில் நேர்மையான வழியில் திட்டமிடுதலோடு சிறிய முதலீடுகளை ஒன்று திரட்டி பெரும் முதலீடுகளோடு கூட்டு முயற்சியாக ஈடுபடுகின்ற போது வெற்றி நிச்சயம். இது போன்ற வாய்ப்புகளைக் கலந்து பேசுவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் முஸ்லிம்களுக்கென்று வர்த்தக அமைப்பு தேவை.

– CMN சலீம்