குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !

2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர் அஹ்மத் ஷா ஆகியோர் தங்கியிருந்தனர். தில்லி சிறப்புப் போலீசு பிரிவைச் சேர்ந்த ரவீந்தர் தியாகி அறை வாசலில் நின்றிருந்தார்.

அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜூலை 2-ம் தேதி மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷீர் அஹ்மத் ஷா ஆகிய இருவருடன் சக்யூப் ரெஹ்மான் மற்றும் நஸீர் அஹ்மத் ஸோஃபி ஆகியோரை உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்த ஊடகங்களின் முன் போலீசார் காட்சிப் படுத்தினர். அவர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை 8-ல் அதே நாளில் நடந்த ‘என்கவுண்டரில்’ கைது செய்யப்பட்ட பயங்கரமான தீவிரவாதிகள் என்று அறிவித்தார் போலீசு அதிகாரி தியாகி.

தியாகி விவரித்த கதையின் படி, நீல நிற டாடா இண்டிகா காரில் தீவிரவாதிகள் ஜெய்ப்பூரில் இருந்து பெரும் ஆயுதக் குவியல் சகிதம் தில்லி நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது; தியாகி தனது தலைமையில் போலீசு படை ஒன்றை அழைத்துக் கொண்டு நெடுஞ்சாலைக்கு விரைந்து சென்று அங்கே காத்திருக்கிறார்; ’பயங்கரவாதிகளுக்கும்’ போலீசாருக்கும் இடையே நடந்த சில பல கையெறி குண்டு வீச்சுகளையும், துப்பாக்கிச் சண்டையையும், கார் துரத்தல்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தலை குப்புற விழுந்து விட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தர் பட் மேற்கொண்ட குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான தியாகி சொன்ன கதைகள் நொறுங்கிப் போயின. தியாகியால் தனக்கு தகவல் அளித்தவர் குறித்த விவரங்களை தர முடியவில்லை, தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவலை தனது மேலதிகாரிகளுக்கோ தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கோ உடனடியாக ஏன் தெரிவிக்க முயற்சிக்கவில்லை என்பதற்கும் விளக்கங்கள் ஏதும் அளிக்க முடியவில்லை.

2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டவர்களின் குறுக்கு விசாரணை எனும் உரைகல்லில் சோதித்தறிய தக்கதாக இல்லாத ‘இட்டுக் கட்டப்பட்ட’ இரசிய தகவல்களின் அடிப்படையில் எவரையும் தண்டிக்க இயலாது” என்று முடிவு செய்தார்.

இந்த விசாரணை மேலும் சில கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. மொயின்னுத்தீன் தர்ருக்கு இராணுவச் சீருடைகளை விற்றதாக சாட்சியமளித்த தையல்காரர் போலீசார் சார்பில் வழக்கமாக தோன்றும் போலி சாட்சியம் என்பது அம்பலமானது.

விசாரணையின் போது தீவிரவாதிகள் திருடி பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட டாடா இண்டிகா கார், திருடப்பட்டதாக சொல்லப்பட்ட தேதிக்கு நீண்ட காலத்துக்குப் பின்னரே போக்குவரத்து அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் “குற்றம் சாட்டப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காகவே இந்த டாடா இண்டிகா கார் கதையின் உள்ளே சொருகப்பட்டிருக்கிறது” என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

ஏற்கனவே ஐந்தரை ஆண்டுகளை சிறையில் கழித்து விட்ட தர், ஷா, ரெஹ்மான் மற்றும் ஸோஃபி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதி “கவுரவமாக விடுவித்தார்”.

”அப்பட்டமான போலி மோதல் கதை ஒன்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மோதல் கதையை தில்லி போலீசின் சிறப்பு அலுவலகத்தில் வைத்து அதன் முக்கிய கதாசிரியரான தியாகி தனது உதவி ஆய்வாளர்களான நிராகர், சரண் சிங் மற்றும் மகேந்தர் சிங் ஆகியோருடைய துணையுடன் எழுதியுள்ளார்” என்று நீதிபதி கூறினார்.

”தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம்” செய்ததற்காகவும் “போலி மோதல் நாடகத்தை ஏற்பாடு” செய்ததற்காகவும் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

’சிக்க வைத்தல், குற்றவாளியாக்குதல், விடுதலை செய்யப்படுதல் : தனிச்சிறப்பு வாய்ந்த பிரிவு பற்றிய தொகுப்புகள்’ (Framed, Damned, Acquitted : Dossiers of a very special cell) எனும் பெயரில் ஜாமியா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில் விவரிக்கப்பட்டுள்ள 16 போலி வழக்குகளில் ஒன்று தான் இது. இந்த 16 வழக்குகளிலும் அல் பதர், ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி, லஸ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளோடு தொடர்புடைய “பயங்கரவாதிகள்” என்று கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளினின்றும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

ஜாமியா ஆசிரியர்கள் அமைப்பைச் சேர்ந்த மனிஷா சேத்தி, “இந்த வழக்குகள் அனைத்திலும் விசித்திரமான புனையப்பட்ட ஒரு உருமாதிரி” இருப்பதாகச் சொல்கிறார். இது போலீசு மற்றும் குற்றவியல் நீதி அமைப்பைப் பீடித்திருக்கும் நோயின் தீவிரத்தை உணர்த்தும் “பனிப் பாறையின் நுனி” என்கிறார்.

இந்த வழக்குகளின் தொகுப்பில் முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு வழக்கிலும் அரசு தரப்பு வாதங்கள் எந்த அளவுக்கு உருவாக்கப்பட்ட சாட்சியங்களைக் கொண்டதாகவும், கட்டுக்கதைகளாகவும், புனையப்பட்டதாகவும் இருந்ததென்று வழக்கை விசாரித்த நீதிபதிகளே கருத்து சொல்லியிருக்கும் முறை தான். இந்த வழக்குகள் அனைத்திலும் ஆச்சர்யமூட்டக் கூடிய வகையில் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. போலீசுக்குக் கிடைத்த தகவல் எப்போதும் இரசியமானதாகவே இருப்பதால் அதை சரிபார்க்க முடியாது. கைது செய்யப்படுவது பரபரப்பான பொது இடங்களில் என்றாலும் போலீசார் ஒரு போதும் பொதுமக்களில் ஒருவரையோ சுயேச்சையான சாட்சிகளையோ ஆஜர்படுத்தியதில்லை.

அதிகாரபூர்வ போக்குவரத்து பதிவுகளை தவிர்ப்பதற்காக நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற அமைப்புகளிலிருந்து கோரிப் பெறப்பட்டுள்ளன.  ’குற்றம் சாட்டப்பட்டவர்கள்’ போலீசாரால் அழைத்துச் செல்லப்படுவதற்கும் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டதாக பதிவு செய்யப்படுவதற்கும் ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை கால இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில் தான் சித்திரவதை செய்து சட்டவிரோத ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது.

அல்-பதர் இயக்கத்தினர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த சி.பி.ஐ, சிறப்புப் போலீசு பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் வினய் தியாகி, சுபாஷ் வத்ஸ் மற்றும் தியாகி ஆகியோரின் மீது “போலி சாட்சியங்களை உருவாக்கியதற்காக” வழக்குத் தொடர பரிந்துரைத்துள்ளது.

எனினும், தியாகியின் போலி மோதல் கதையில் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டு இது வரையில் எந்த போலி மோதல் வழக்குகளிலும் காவல் துறை அதிகாரிகள் கிரிமினல் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்கிறார் சேத்தி. “ஆனால் மறுபுறம் இது போன்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதற்கோ, பதவி உயர்வுகளுக்கோ, ஜனதிபதி மெடல்கள் வழங்கப்படுவதற்கோ நீதிமன்றத்தின் எதிர்மறையான கருத்துக்களும், கண்டிப்புகளும், கடுமையான வார்த்தைகளும் ஒரு போதும் குறுக்கே நின்றது இல்லை” என்கிறார்.

ஜாமியா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆவணத்தில் 2006-ம் ஆண்டு சோனியா விகாரில் போலி மோதலை ஏற்பாடு செய்தவராக சுட்டிக் காட்டப்பட்டவரும், தேசிய மனித உரிமை பாதுகாப்புக் கமிஷனால் குற்றம் உறுதி செய்யப்பட்டவருமான போலீசு துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவ், இசுரேல் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற முக்கியமான, கவனமாக கையாளப்பட வேண்டிய வழக்குகளில் விசாரணைத் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார் என்று முடிக்கிறார் சேத்தி.

தமிழாக்கம் – தமிழரசன் / நன்றி: வினவு