முஸ்லிம் விரோதப் போக்கா?

Share this:

முஸ்லிம் விரோதப் போக்கிற்கு முட்டுக் கொடுக்கும் கீற்று.காம்
– லக்கிலுக் / பிலால் முகமது

“இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னைப் புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னைக் கொன்றுபோட்டாலும் நான் இதைச் சொல்லத் தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இலங்கை இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.
அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலைக் கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி, இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும்கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர்மீது தொடுத்தத் தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லிம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய்க் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியைத் தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதல்களுக்குப் பரிகாரமாகத்தான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கிக் கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாகக் குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.

மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார். வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமியர் தாக்கப்பட்ட சம்பவங்களை பேசத் தொடங்கினார். பின்னர் சமகாலத்தில் புலிகளால் விரட்டப்பட்ட தமிழர் அமைப்புகள் பலவும்கூட சிங்களவரை சரணடைந்ததைச் சொன்னார். கடைசியாக கருணா அம்மானும்கூட இங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின்னால் சிங்களப் பேரினவாத அரசிடம் போய்ச்சேர வேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக் காட்டினார். இஸ்லாமியரை மட்டும் எப்படி இத்தகைய சூழலில் தனித்துக் குற்றம் சாட்டமுடியும்? என்றவகையில் அவரது தொனி இருந்தது. குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தை அறுத்தெடுக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதற்கு இணையான கொடூரங்கள் இலங்கையிலும் நிகழ்ந்திருக்கிறது. அவ்வகையில் வயிற்றில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட ஒரு குழந்தை அம்மிக்கல்லில் அடித்து கொலை செய்யப்பட்டது என்றும் கண்ணீர் ததும்பப் பேசினார்.

மேலும், “கிழக்கில் இஸ்லாமியர்மீது நடத்தப்பட்டப் பெரிய தாக்குதல்கள் கருணா அம்மானின் கட்டளைப்படி நடந்தது. ஆனால் அவையெல்லாம் பிரபாகரனின் கட்டளைப்படி நடந்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபின்னர்தான் கருணா கூறினார். கருணாவின் கூற்றை முழுமையாக ஏற்கமுடியாது. வடக்கில் நடந்த தாக்குதல்களுக்குப் பிரபாகரன் காரணமென்றால், கிழக்கில் கட்டளைத் தளபதியாக இருந்த கருணாதான் அங்கே நிகழ்ந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் கூட்டத்தில் பெரிய சலசலப்பு. பேசிக்கொண்டிருந்த நண்பரை பேசவிடக்கூடாது என்று உரக்க கத்த ஆரம்பித்தார்கள்.

ஓரிருவர் மேடைக்கு முன்பாகச் சென்று பேசவிடாது இடையூறு செய்யவும் தொடங்கினார்கள். முன்பு அதே நண்பர் வாசித்த பட்டியலுக்கு விளக்கம் கேட்டவர்களே, அவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது நிறுத்தவும் சொன்னார்கள் என்பது பெரிய முரண். இதையடுத்து அவசர அவசரமாகத் தமிழக இஸ்லாமியத் தோழர் ஒருவர் மேடையைக் கைப்பற்றினார். “நமக்கும் இந்துராமுக்கும், துக்ளக் ராமசாமிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை நிச்சயம் நாம் உணர வேண்டும். மேடையில் பேசிய நண்பருக்கு இங்கே நிலவும் சூழல் சரியாகத் தெரியவில்லை. ராஜபக்‌ஷேவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கோரிக்கை முதன்முதலாக நம்மிடமிருந்துதான் எழுப்பப்பட்டது!” என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே தெரிவிக்க, சலசலப்பு ஒட்டுமொத்தமாக அடங்கியது.

என்ன கொடுமை பாருங்கள்? இதுவரை இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியத் தேசியத்துக்கு விசுவாசமாக இருப்பதாக வலிந்து காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இனி, விரும்பியோ விரும்பாமலோ தமிழ்தேசியத்துக்கும் தாங்கள் விசுவாசிகள்தான் என்று காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்தது இந்துமக்கள் கட்சியின் கூட்டத்தில் அல்ல. ‘முற்போக்குத்தளம்’ என்று தன்னைச் சித்தரித்துக்கொள்கிற ‘கீற்று’ இணையதளத்தின் ஆறாம் ஆண்டுவிழாவில் நடந்த கொடுமைதான் இது.

கீற்று.காம் நடத்திய அத்தளத்தின் ஆறாம் ஆண்டு விழாவில் இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் (பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாக்குமூலங்கள்) அமர்வில் வாக்குமூலம் கொடுக்கவந்த இலங்கை இஸ்லாமியத் தோழர் ஒருவருக்குத் தமிழ்மண்ணில் நிகழ்த்தப்பட்ட அவமானங்கள். சிறுபான்மை இஸ்லாமியச் சகோதரர்கள் தங்கள் மீது ஏவப்பட்ட படுகொலைகள் குறித்துப் பேசும்போதெல்லாம், தமிழ்த்தேசியவாதிகளின் குரல், ‘ஒரு லட்சம் தமிழர்கள் செத்திருக்கிறார்கள், சில ஆயிரம் முஸ்லிம்கள்தாமே செத்திருக்கிறார்கள்” என்பது. கொலைகள் என்பது கொத்துக்கொத்தாய் நடந்தால்தான் அதுகுறித்துப் பேசுவோம் என்பது என்னவகையான மனநிலையில் சேரும் என்பதை யோசிக்க வேண்டும்.

கீற்று முன்பே தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டு இந்நிகழ்வை நடத்தியிருக்கலாம். தாங்கள் எதிர்ப்பது இந்திய இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்தானே தவிர, இலங்கை இஸ்லாமியருக்கானதல்ல என்று. பாவம், இதுபுரியாமல் வந்துவிட்ட அந்த இலங்கைத் தோழர் கூட்டத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக்கூட நாங்கள் விரும்புகிற குரலில்தான் பேச வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் குரல்வளையைத் துழாவித் தங்கள் குரல்களைப் பிடுங்கி எடுப்பதும் ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் வேறென்ன?

இந்நிகழ்வை ஒரு சாதாரண சம்பவம் என்று நம்மால் சுலபமாக கடந்துபோய்விட முடியாது. இது ஓர் எச்சரிக்கை. இந்துத்துவா எப்படி நரேந்திரமோடிகளை வளர்த்ததோ இஸ்லாமியருக்கு எதிராக இந்தியாவில் வெறியாட்டம் ஆடியதோ, அதைப்போல தமிழின் பெயரால் நவீனமோடிகள், நீரோக்கள் வளர்ந்துவருகிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று.

சிங்களவெறியன் ராஜபக்‌ஷே ஆயிரம் ஆயிரமாகத் தமிழர்களைக் கொன்று குவித்தானே? அவனிடம் போய் எந்தச்சூழலில் எம்மக்களை நீ கொன்றுக் குவித்தாய் என்று விளக்கம் கோருவோமா? இலங்கையில் இஸ்லாமியர் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களை சிங்கள பவுத்தன் ஒடுக்குகிறான், கொல்கிறான். தமிழ் இந்துவும் ஒடுக்குகிறான், கொல்கிறான் – இதுதான் அந்த நண்பர் சொல்லவந்த செய்தி. தேதிவாரியாக சம்பவங்களை பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார். இப்படி சம்பவங்களே நடக்கவில்லையென்று தமிழ்த்தேசியவாதிகளால் ஆதாரப்பூர்வமாக விளக்க முடிந்தால் நிச்சயமாக மகிழ்ச்சிதான். “நடந்தது. ஆனா ஏன் நடந்ததுன்னா…” என்று நாம் இழுப்பதே எவ்வளவு கொடூரமானது? “உங்களோடு சேர்ந்து நாங்களும் கொல்லப்பட்டிருக்கிறோம். நீங்களும் எங்களைக் கொன்றிருக்கிறீர்கள்” என்று அந்நண்பர் சொல்லுகிறார். உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒப்புக்கொள்வதில் தயக்கமென்ன? மாறாக நாம் அவரது குரல் எங்கும் பதிவுசெய்யப்பட்டுவிடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்துகிறோம்? இங்கே பேச அவரை அழைத்துவந்துவிட்டு அவமானம் அல்லவா செய்கிறோம்?

பார்வையாளர்கள் மட்டுமா அந்நண்பரை அவமானப் படுத்தினார்கள்? இந்நிகழ்வை நடத்திய கீற்று நிர்வாகி ரமேஷ் பின்னர் விளக்கமளிக்கத் தொடங்கினார். “நாங்கள் இந்நிகழ்வை நடத்துவதாக அறிவித்ததுமே, இந்த இலங்கை நண்பர் எங்களைத் தொடர்பு கொண்டார். இலங்கையில் நடைபெறும் இஸ்லாமிய ஒடுக்குமுறைகள் குறித்து நிறைய விஷயங்களைச் சொன்னார். ஆனால் இங்கே பேசும்போது ‘வேறு’ மாதிரியாக பேசிவிட்டார்” என்று சப்பைக்கட்டு கட்டினார். கீற்று நிர்வாகி இம்மாதிரியான ‘விளக்கத்தை’ அளித்துக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அந்த நண்பரும் தர்மசங்கடமாக நெளிய வேண்டியிந்தது.

நம்மைப் பொருத்தவரை, தமிழன்மீது நடக்கும் தாக்குதல்களை பாசிஸமென்போம். தமிழன் யாரையாவது தாக்கினான் என்று தெரியவந்தால் மூடிமறைப்போம் – இதுதான் இன்றைய பரவலான நிலைபாடாகிப் போனது. இதற்குக் கீற்றின் ஆண்டுவிழாவில் நடந்த நிகழ்வுகளே சாட்சி. ஆனால் கீற்றைப் பொருத்தவரை இப்படியாக நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பத்திரிகையாளர் பாலாவின் ‘ஈழம் – ஆன்மாவின் மரணம்’ என்ற கார்ட்டூன் புத்தகத்தின் வெளியீட்டுவிழாவை இதே கீற்று தளம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பேசியவர்களில் ஒருவர் தமிழ்நாடு வணிகர்சங்கத்தலைவர் வெள்ளையனின் சகோதரரும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற மரணமொக்கைப் படத்தை இயக்கியவரும் அது தணிக்கைத்துறையால் தடைசெய்யப்பட்டதாலேயே போராளி ஆகிப்போனவருமான புகழேந்தி தங்கராஜ். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ராமதாஸ், திருமா, வைகோ போன்ற புலி ஆதரவாளர்களை ஒரே கூட்டணியாக நிற்க வைக்க நடந்த பேச்சுவார்த்தை பற்றித் தன் பேச்சில் குறிப்பிட்டார் புகழேந்தி தங்கராஜ். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூட்டணி குறித்து பாரதிய ஜனதா கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பா.ஜ.கவும் இந்தக் கூட்டணி நிற்குமிடங்களில் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவாறாக தமிழகம் முழுவதுமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் நிறுத்துவதற்குப் 15 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடைசிநேரத்தில் திருமா கழன்றுகொண்டதால் கூட்டணியும் பணால், தேர்தலிலும் நிற்கவில்லை. அந்தப் 15 பேரில் ஒருவர் பாரதிராஜா. அவரை நிற்கவைக்கத் தேர்ந்தெடுத்த தொகுதி திண்டுக்கல், அதற்குப் புகழேந்தி சொன்ன காரணம், ‘அவர் அந்த இனத்தோட அடையாளம்’. அந்த இனம் என்பது ‘தமிழினம்’ அல்ல. முக்குலத்தோர் இனம் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

“ஈழமக்கள் ஆதரவு” என்ற பெயரில் இந்துத்துவத்தையும் ஆதிக்கச்சாதி உணர்வையும் தூக்கிப்பிடிப்பவர்கள்தான் தமிழ்த்தேசியவாதிகள். தான் ஒருங்கிணைத்த கூட்டத்தில் வெளிப்பட்ட ஆதிக்கச்சாதி உணர்வு தமிழ்த்தேசியவாதிகள் – இந்துத்துவவாதிகளின் கள்ளக்கூட்டு பற்றி விமர்சனம் எழுதுவதற்கு யோக்கியதையற்ற கீற்று.காம் கோவையிலே அ.மார்க்ஸ் கூட்டத்தில் நடக்காத ஒன்றைப் பதிவாக எழுதி வாங்கிப்போட்டது. மேலும் இதுகுறித்து விமர்சனங்களை முன்வைப்பவர்களை எல்லாம் ‘ராஜபக்‌ஷே ஆதரவாளர்கள்’, ‘காசுக்கு விலைபோனவர்கள்’ என்று அவதூறு செய்வதற்கும் கீற்று.காம் தயங்கியதில்லை.

புலிகளின் கைகளில் துவக்குகள் இருந்ததால் அவர்கள் துரோகிகளாக நினைத்தவர்களை எல்லாம் போட்டுத்தள்ளினார்கள். இந்த இணையப்புலிகளின் கைகளில் துவக்குகள் இல்லாததால் பின்னூட்டங்களிலும் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ‘போட்டுத்தள்ளுகிறார்கள்’. முஸ்லீம் விரோதப் புலிகளை ஆதரித்தும், இந்து உணர்வுடைய தமிழ்த்தேசியவாதிகளின் அவதூறு வாந்தி வதந்திகளுக்கு மேடை அமைத்துக் கொடுத்தும்வந்த கீற்று தளம், முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசுவதாகப் பாசாங்கு காட்டிய மேடையிலேயே கோவணம் அவிழ்ந்து அம்பலமான காட்சியை என்னவென்று சொல்ல?

(புகைப்படம் : புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை)

நன்றி : லும்பினி


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.