அமித் ஷா!
இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர். யாரிந்த அமித் ஷா?
குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள் மரியாதையுடன் புகழப்படும், குஜராத் உள்துறை இணையமைச்சராகப் பதவி வகித்தவர்தான் இவர். மோடியின் அந்தரங்கங்களை அறியும் அளவுக்கு மிக நெருக்கமான அமித் ஷா, பேசப்படுவதற்கேற்ப மாநிலத்தில் மோடியின் பதவிக்கு அடுத்த உயர்ந்த பதவியில் மோடியால் அமர்த்தப்பட்டு அழகுபார்க்கப்பட்டவர்.
சுருக்கமாக, மோடியின் மனசாட்சி!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அளவுக்குப் பாஜகவில் சக்தி பெற்றவராகச் சித்தரிக்கப் பட்டார் மோடி. அந்தமோடியின் இந்த வலங்கை, சமீபத்தில் சிபிஐயால் விலங்கிடப் பட்டது.
மோடியின் துருப்புச் சீட்டான சொஹ்ராபுதீன்!
சொஹ்ராபுத்தீன் என்பது இன்றுபோல் 2005ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இந்திய ஊடகங்களில் நிறைந்து நின்ற மற்றொரு குஜராத்வாலாவின் பெயர். சுமார் 3000க்கும் அதிகமான முஸ்லிம்களை விரட்டி விரட்டி வேட்டையாடி, இந்திய வரலாற்றின் ஏடுகளில் தீராத களங்கத்தைப் பதிவு செய்த நரேந்திரமோடியின் கோரமுகத்தை உலகின்முன் மூடிமறைக்க, ‘லஷ்கரீ’ முத்திரையோடு பயன்படுத்தப் பட்டவர். குஜராத்தில் நடைபெற்ற நரவேட்டை அட்டூழியங்களைத் தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஓட்டுகளை அள்ளியெடுக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, “மோடியைக் கொலை செய்ய முயன்றவர்கள்” எனும் ரெடிமேடுத் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, போலி என்கவுண்டர்கள் மூலம் போட்டுத்தள்ளப்பட்ட அநேகரில் ஒருவர்தான் இந்த சொஹ்ராபுதீன்!
அன்று சொஹ்ராபுதீன் அஸ்திரம் மோடிக்குத் தேர்தலில் வெற்றியைக் கொடுத்தது எனில், இன்று அதே அஸ்திரம் பூமராங்காகத் திருப்பி வந்து மோடியின் பரிவாரங்களை ஒவ்வொன்றாக வீழ்த்தி வருகிறது. காவல்துறையிலுள்ள ஒருசில மோடிவாலாக்களை வீழ்த்தத் துவங்கிய சொஹ்ராபுதீன் வழக்கு அஸ்திரம், மோடியால் கொடுக்கப்பட்ட பல்வேறு இடையூறுகளையும் உடைத்தெறிந்து உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சிபிஐ விசாரணையின் மூலம் பல காவல்துறை உயரதிகாரிகள், நான்கு ஐபிஎஸ் உத்தியோகஸ்தர்கள் என நீண்டு, இன்று குஜராத் உள்துறை இணையமைச்சர்வரை தொட்டு நிற்கிறது.
இந்த அஸ்திரம் இத்தோடு நிற்குமா? அல்லது குஜராத்தின் அனைத்து பயங்கரவாதங்களுக்கும் ஆணிவேரான மோடியையும் வீழ்த்திய பின்னரே ஓயுமா? என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
“குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய வந்த லஷ்கரே தொய்பா தீவிரவாதி சொஹ்ராபுதீன் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, மோடி எதிர்பார்த்ததைப் போன்று முஸ்லிம் சமூகத்தின்மீது மற்றொரு தீவிரவாதச் சேறு பூசப்பட்ட கையோடு, மீண்டும் முதல்வர் பட்டமும் மோடிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், விடாமுயற்சியோடு சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுத்தீன் தொடர்ந்த சட்டப்போராட்டத்தின் இறுதியில் சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சொஹ்ராபுதீன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலுள்ள முடிச்சு 2007இலிருந்து ஒவ்வொன்றாக அவிழத் துவங்கியது.
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலிருந்து… |
நவம்பர் 19, 2005இல் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய பேருந்திலிருந்து சொஹ்ராபுதீனையும் அவர் நண்பர் துளசிராம் ப்ரஜாபதியையும் நவம்பர் 22 அன்று காவல்துறையினர் வழிமறித்து வலுக்கட்டாயமாக இறக்கியபோது, சொஹ்ராபுதீன் மனைவி கௌஸர்பீவியைக் கொலை செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. கௌஸர்பீவியை அவர்களின் செயலுக்குத் தடையாக வராமல் அவரை விலக்கவே முயற்சி செய்தனர். கௌஸர்பீவியைப் பேருந்திலேயே பயணம் தொடரக் காவல்துறையினரில் ஒருவர் கேட்டுக்கொண்ட போது, “என் கணவரை விட்டு நான் மட்டும் செல்ல முடியாது” என கௌஸர்பீவி பிடிவாதமாக மறுத்து விட்டார். கௌஸர்பீவியைப் பேருந்தில் அனுப்பிவிடக் காவல்துறையினர் எவ்வளவோ முயன்றும் அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால், வேறு வழியில்லாமல் கௌஸர்பீவியைத் தனியாக ஒரு டாட்டா சுமோவில் ஏற்றினர். சொஹ்ராபுதீனையும் பிரஜாபதியையும் ஏற்றிய குவாலிஸிற்குப் பின்னால் கௌஸர்பீவியை ஏற்றிய டாட்டா சுமோ பயணித்தது. செல்லும் வழியில் வல்ஸாத் உணவகத்தில் அனைவரும் மதிய உணவு உண்டனர். அங்கு வைத்து, ராஜஸ்தானிலிருந்து வந்த STF காவலர்களின் மற்றொரு வாகனத்தில் ப்ரஜாபதி ஏற்றப்பட்டார். சொஹ்ராபுதீனும் கௌஸர்பீவியும் காந்திநகர்-சர்கேஜ் நெடுஞ்சாலையிலுள்ள திஷா பண்ணைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அர்ஹாம் பண்ணை வீட்டிற்கு மாற்றபட்டனர். இந்த அர்ஹாம் பண்ணை, பிஜேபி கவுன்ஸிலர் சுரிந்தர் ஜிராவாலாவின் தம்பி ராஜு ஜிராவாலாவுக்குச் சொந்தமானது. மூன்று நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து சொஹ்ராபுதீனை மட்டும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப்படையினரும் ராஜஸ்தான் STF காவலர்களும் இணைந்து நரோல்-விஷாலா பகுதிக்கு அரசு வாகனத்தில் கொண்டு சென்றனர். வாகனம் அப்பகுதியினை அடைந்தபோது, சொஹ்ராபுதீனை வெளியே இறங்கப் பணித்தனர். அங்கு வைத்து சொஹ்ராபுதீன் கொடூரமான முறையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் கௌஸர்பீவி அர்ஹாம் பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார். அவரின் உடல் கறுப்பு பெட்ஷீட்டில் சுற்றி, கார் மற்றும் ஜீப் பின்தொடர டெம்போவில் ஏற்றி லோல் கிராமப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு காவலர் கிராமத்தின் புறப்பகுதியிலிருந்து விறகு மற்றும் வைக்கோல் சேகரித்து டெம்போவில் ஏற்றினார். பின்னர் சற்று தூரம் சென்று சாலையின் ஓரமாக அவற்றை இறக்கி, அங்கு சிதை மூட்டினர். சிதையில் கௌஸர்பீவியின் உடலை எரிக்கும் போது, அதில் ஈடுபட்ட சில காவலர்களுக்கு அந்த உடல் யாருடையது என்பது தெரியாது. அவர்களில் ஒருவரான காவலர் V.A. ரதோட், டெம்போவிலிருந்து உடலை இறக்கும்போது பெட்ஷீட்டிலிருந்து வெளியான உடல்பாகங்களைக் கருத்தில் கொண்டு அது ஒரு பெண்ணின் உடல் எனக் கூறினார். அவருடன் உடலை இறக்கிய மற்றொரு காவலர், “இது கௌஸர்பீவியின் உடல்” என அவரிடம் தெரிவித்தார். ஒரு காவலர் ஜீப்பிலிருந்த டீசல் நிரம்பிய கேனை எடுத்து சிதையின்மீது வைக்கப்பட்டிருந்த கௌஸர்பீவியின் உடலின் மீது ஊற்றினார். ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா, சிதைக்குத் தீவைத்தார் (இந்த வன்சாரா, சிறுவயதில் ஏழ்மையால் பாதிக்கப்பட்டு முஸ்லிம்களின் உதவியுடன் படித்து ஐபிஎஸ் அதிகாரியானவர்). சிதை எரிந்து முடிந்த பின்னர், ஒரு காவலர் புகைந்து கொண்டிருந்த சிதையின் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தார். சிதையில் மீதமிருந்த எலும்பு மற்றும் சாம்பலை இரு காவலரை அழைத்து ஒரு கோணிப்பையில் சேகரிக்க வன்சாரா உத்தரவிட்டார். பின்னர் அவை நர்மதா ஆற்றில் கலக்கப்பட்டது. (இந்தக் கொடும் குற்றங்களில் குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை கருப்பாடுகள் ஈடுபட்டிருந்தன). குற்றவாளிகளில் ஒருவரான டிஎஸ்பி நரேந்திர குமார் அமின், இப்போது அப்ரூவராக மாறி, சிபிஐக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவருடன் சிறையிலடைக்கப்பட்டிருந்த மற்றொரு குற்றவாளியான இன்ஸ்பெக்டர் N.V. சவுஹான் அமினுடன் பேசும் போது, “கௌஸர்பீவியைக் கொன்று எரித்துவிட குஜராத் இணையமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வன்ஸாராவிற்கு உத்தரவு வந்தது. அமித் ஷாவிடமிருந்து அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருந்த உத்தரவுகளுக்கு ஏற்ப, கௌஸர்பீவியை எரித்துச் சாம்பலைக் கரைக்கும் வரையில் வன்ஸாரா தொடர்ந்து எங்களை விரட்டிக் கொண்டிருந்தார்” எனத் தெரிவித்துள்ளார். இதனை அமின் பதிவு செய்து சிபிஐக்குக் கைமாற்றியுள்ளார். சொஹ்ராபுதீன் என்கவுண்டரிலும் அவர் மனைவி காணாமல் போன விஷயத்திலும் சந்தேகமடைந்த சொஹ்ராபுதீன் சகோதரர் ருபாபுத்தீன் ஷேக் வழக்குப் பதிவு செய்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றால் 50 லட்சம் ரூபாய் தருவதாக டிசிபி அபய் சுதாசமா சொஹ்ராபுதீன் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அதற்கு சொஹ்ராபுதீன் குடும்பத்தினர் சம்மதிக்காத உடன், “அமித் ஷா மத்தியப் பிரதேசத்திலிருந்து உங்களை ஒழித்து விடுவார். அங்கும் பிஜேபி அரசுதான் நடக்கிறது என்பதை மறவாதீர்கள்” என சுதாசமா மிரட்டல் விடுத்துள்ளார். சொஹ்ராபுதீன் என்கவுண்டர் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் ரிட் தாக்கல் செய்த ஷாஹித் கத்ரி என்பவரையும் அமித் ஷா மிரட்டியுள்ளார். சொஹ்ராபுதீன் குடும்பத்தினரைக் கொலை செய்ததோடு, ஆதாரங்களை முழுமையாக அழித்தல், சாட்சியத்தை இல்லாமலாக்கும் நோக்கில் அவர் நண்பர் துளசிராமைக் கொலை செய்தல், புகார் கொடுத்தவர்களை மிரட்டி பின்வாங்கவைத்தல் எனப் பல்வேறு குற்றங்களை அமித் ஷாவும் காவல்துறை உயரதிகாரிகளும் செய்துள்ளனர். அமித் ஷாவின் தலைமையில் ஐபிஎஸ் உயரதிகாரிகள் அடங்கிய நிழலுலக தாதா குழு ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பெரிய வியாபாரிகளை மிரட்டிப் பணம்பறிக்கும் ஒரு ஏஜண்டாக சொஹ்ராபுதீன் பயன்பட்டு வந்தார். வியாபாரிகளின் அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பயத்தை ஏற்படுத்தி எளிதாகப் பணம் பறிப்பதே சொஹ்ராபுதீனுக்குரிய வேலையாகும். தங்கள் கீழே வேலைபார்த்த சொஹ்ராபுதீனை, தங்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட பிரச்சனையில் எதிர்காலத்தில் தமக்குப் பிரச்சனையாக ஆகி விடுவாரோ என்ற பயம் ஏற்பட்டபோது திட்டமிட்டு தீர்த்துக் கட்டி, மோடியைக் கொலை செய்ய வந்த லஷ்கரே தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகப் போலி என்கவுண்டர் நாடகமாடியதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. |
சிபிஐ
“சொஹ்ராபுதீன் ஒரு தீவிரவாதியல்ல” எனவும் “அவர் மோடியைக் கொலை செய்யவரவில்லை” எனவும் “மோடியின் சரிந்துபோன இமேஜைத் தூக்கி நிறுத்தும் வகையில், அவரின் வலது கையான அமித் ஷா, தான் வகித்து வந்த உள்துறை இணையமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளின் துணையுடன் நேரடி உத்தரவு பிறப்பித்து, சொஹ்ராபுத்தீன், அவரின் மனைவி கௌஸர்பீவி, துளசிராம் ப்ரஜாபதி ஆகிய மூவரையும் ஒருவர்பின் ஒருவராக அநியாயமாகக் கொலை செய்துள்ளனர்” என்ற உண்மையை, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிபிஐ விசாரணை குழு, ஆங்கிலத் திகில் படக்காட்சிகள் போன்று பக்கம் பக்கமாக விவரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விவரிக்கும் நிகழ்வுகள் அச்சமும் அதிர்ச்சியும் ஊட்டுபவை! அரசு இயந்திரத்தை மக்களின்மீது தங்கள் சுயநலனுக்காக அரசியல்வாதிகள் இவ்வாறெல்லாம்கூட பயன்படுத்துவார்களா? என்று அதிர்ச்சியில் உறைய வைக்கும்படியான விவரங்கள்!
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை விவரங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.
சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் நடந்த நாளிலிருந்து, உண்மைகள் வெளியான இப்போதுவரை இடைப்பட்ட காலத்தில் அவ்வழக்குக் கடந்து வந்த பாதையில் பயணித்துப் பார்த்தால் மோடி அரசின் அயோக்கியத்தனங்கள், சட்டமீறல்கள், இந்திய ஜனநாயகம்-சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக – அவற்றை ஒரு பொருட்டாககூட மதிக்காத மோடி அரசின் தில்லுமுல்லுகள் ஆகியவற்றை வண்டி வண்டியாக அள்ளலாம்.
சொஹ்ராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மனைவி கௌஸர்பீவியைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எனவும் சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுத்தீன் அளித்த மனுவை ஆரம்பத்தில் யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
2007ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் குஜராத் அரசு வேண்டா வெறுப்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி
சிஐடி ஐஜி கீதா ஜோஹ்ரி ஐஏஎஸ் தலைமையில் நடந்த அந்த விசாரணை, ஓர் எல்லைவரை சரியான பாதையில் பயணித்தது. ஒரு கட்டத்தில் அப்போது காவல்துறை அமைச்சகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இதே அமித் ஷா, அதுவரை விசாரித்து வைத்திருந்த சிஐடி அறிக்கையைத் தன் மேசைக்கு வரவழைத்து அதில் கூறப்பட்டத் தகவல்களுக்கு மாற்றமாக அறிக்கை தயார் செய்யும்படியும் தொடக்கத்திலிருந்து இந்த வழக்கை விசாரித்த சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி அளித்த உண்மையான அறிக்கையிலுள்ள சில விவரங்களை அழித்து விடும்படியும் வற்புறுத்தியுள்ளார்.
கீதா ஜோஹ்ரி ஐஏஎஸ்
சொஹ்ராபுதீனின் நண்பர் துளசிராம் ப்ரஜாபதியை சொஹ்ராபுதீன் கொலையுண்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் எனவே ராஜஸ்தான் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ப்ரஜாபதியை விசாரப்பதற்குத் தமக்கு அனுமதி தரவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் சோலங்கி, கீதா ஜோஹ்ரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற சில நாட்களில் ப்ரஜாபதியும் மற்றொரு போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.
அத்தோடு சோலங்கியின் கடித விவகாரத்தையே கீதா ஜோஹ்ரி தன் சிஐடி அறிக்கையிலிருந்து மறைத்து விட்டார். ஆரம்பத்தில் சரியான திசையில் சென்ற விசாரணை, திசைமாறிச் செல்வதை உணர்ந்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது “குஜராத் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வரலாம் என எதிர்பார்த்த குஜராத் அரசு, கீதா ஜோஹ்ரியை அதிரடியாக விசாரணையிலிருந்து நீக்கி நாடகமாடியது.
நரேந்திர குமார் அமின்
இப்போது அப்ரூவராக மாறியிருக்கும் நரேந்திர குமார் அமின் எனும் முன்னாள் அதிகாரி (DSP-Crime, Ahmedabad), “கீதா ஜோஹ்ரி பல அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதனால், போலி என்கவுண்டர் வழக்கைத் திசை திருப்பினார். சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான நாதுஷா ஜடேஜா என்பவர் தலைமறைவாகி விட்டதாகப் பொய் அறிக்கை சமர்ப்பித்தார் ஜோஹ்ரி. பின்னர் அவரே, ‘இந்த வழக்கில் ஜடேஜாவை ஒரு சாட்சியாளர்’ என்பதாகப் பிரமாணப் பத்திரத்தைத் தயாரித்தளித்தார். கீதா ஜோஹ்ரியை முறைப்படி விசாரிக்க வேண்டும்” என சிபிஐயிடம் கூறியுள்ளார்.
சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரம் நாடாளுமன்றத்திலேயே பிரளயத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேளையில் மோடியை “மரண வியாபாரி” எனக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி விமர்சித்தார்.
2007 ஏப்ரல் 26
“சொஹ்ராபுதீன் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; குஜராத் பாஜக உள்துறை இணையமைச்சர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக கோஷங்கள் இட்டனர். இது நடந்தது 2007 ஏப்ரல் இறுதியில்.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், காங்கிரஸ் என நாடு முழுவதும் மோடிக்கு எதிராக சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் விஷயத்தில் தீவிரம் காட்டிய வேளையில், மோடி தன் அயோக்கியப் புத்தியைப் பயன்படுத்தி, குஜராத் தேர்தல் பிரச்சாரத்திலேயே “தீவிரவாதியை என்ன செய்ய வேண்டும்?” எனக்கேட்டு, “கொலை செய்ய வேண்டும்” எனக் கூடியிருந்தவர்களைக் கூற வைத்து “அதைத்தான் நானும் செய்தேன்” என்று சொஹ்ராபுதீன் என்கவுண்டரை நியாயப்படுத்தி அதையும் ஓட்டாக மாற்றினார்.
இவ்வளவு அப்பட்டமாக ஒரு அநியாயக் கொலையை நியாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசிய பின்னரும் இந்தத் திறமையான குற்றவாளிக்கு எதிராக இந்திய அரசியல் சட்டம் எதுவும் இதுவரையிலும் பாயவில்லை! ‘ஒப்புக்கு மாவு இடிக்கும்’ வகையில், இந்தியத் தேர்தல் கமிஷன் மட்டும் மோடியிடம் ஒரு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியதோடு மூடிக்கொண்டது.
தொடர்ந்து குஜராத் மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள சிஐடி விசாரணை, அமித் ஷாவால் கூர் மழுங்கடிக்கப்படுவது தெளிவான வேளையில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு மனு அளிக்கப்பட்டது. முதலில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் தொடர் முயற்சியில் இறுதியாக உச்ச நீதிமன்றம், “சிபிஐ விசாரணை தேவை” என அறிவித்தது.
கடந்த ஆறுமாத கால அளவில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை ஆதாரத்துடன் கண்டறிந்த சிபிஐ, இறுதியாக சொஹ்ராபுதீன், கௌஸர்பீவி, பிரஜாபதி ஆகியோரின் அநியாயக் கொலைகளில், குஜராத் உள்துறை இணையமைச்சரின் நேரடிப் பங்கினை வெளிப்படுத்தியது.
ஒரு மாநிலத்தின் உள்துறை இணையமைச்சர் ஒருவர், பதவியில் இருக்கும்போதே சிபிஐயால் கொலைக் குற்றம் சுமத்தப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். இந்திய சரித்திரத்திற்குப் பல அவமானங்களைத் தேடித்தந்துள்ள சங்கபரிவார பாசறையிலிருந்து இந்தியாவுக்கு மற்றொரு தீராக் களங்கம்!
பதவியில் இருக்கும்போதே தலைமறைவான உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா, வேறுவழியின்றி சிபிஐ கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் தலைமறைவாக இருந்து கொண்டே தன் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் மோடிக்குக் கடிதம் அனுப்பினார். முதல்வருக்கும் சிபிஐ தேடும் தலைமறைவான உள்துறை இணையமைச்சருக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டதற்குச் சமம் இது. அயோக்கியத்தனங்களின் மொத்த உருவம் மோடி என்பதற்கும் குஜராத்தில் நீதியின் ராஜ்யம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, மோடி ராஜ்யம் நடைபெறுகிறது என்பதற்கும் இதைவிட தெளிந்த மற்றொரு உதாரணம் தேவையில்லை.
2005 நவம்பர் 21 அன்றிலிருந்து.. அதாவது சொஹ்ராபுதீன் குடும்பம் காவல்துறையால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பிருந்து நவம்பர் 30 வரை, அதாவது சொஹ்ராபுதீன் மனைவி கௌஸர்பீவி கற்பழிக்கப்பட்டு, விஷம் ஊட்டப்பட்டு, பின்னர் எரித்துக் கொலை செய்யப்படுவதுவரை டிஜிபி நரேந்திர குமார் அமினுடன் குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தொலைபேசியில் 30 முறை தொடர்பு கொண்டு, கௌஸர்பீவியைக் கொலை செய்வது குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்பதற்கான ஆடியோ ஆதாரமும் அதேபோன்று ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவிற்கும் இதே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்பதற்குமான ஆதாரங்களும் சிபிஐயால் கைப்பற்றப் பட்டுள்ளன.
இவ்வளவு ஆனபின்னரும் பாஜக கூடாரம் மோடிக்குத் தன் மொத்த ஆதரவையும் தெரிவித்துள்ளது. முன்னர் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் ப்ரக்யா சிங் கைது செய்யப்பட்டபோதும் பாஜக தலைவர் அத்வானி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்வீயை அரவணைத்தார். அண்மையில் இந்தியத் துணை ஜனாதிபதி அன்ஸாரியைக் கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ் தலைவர் திட்டம் தீட்டிய தகவலிலிருந்து இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டதற்கான ஆதாரங்களைத் தனியார் தொலைகாட்சி அலைவரிசை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்பியது. இதைக் கண்ட வெறிகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கபரிவார் பயங்கரவாதிகள் கும்பலாகச் சென்று அந்தத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தைத் தாக்கியதும் நினைவிருக்கலாம். இந்தியாவில் சங்கபரிவாரத்தின் ஆதிக்கம் அரசு இயந்திரங்கள்வரை ஊடுறுவி உள்ளதும் அவற்றை பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் சங்பரிவார் பயன்படுத்தப்படுவதும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
சொஹ்ராபுதீன் குடும்பம் படுகொலை, கல்லூரி மாணவி இர்ஷாத் படுகொலை, குஜராத் இனப்படுகொலை, மாலேகோன், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, தென்காசி, கோவா, அஹமதாபாத் குண்டுவெடிப்பு முதலான சங்கபரிவாரத்தின் பயங்கரவாதச் செயல்களில் இறுதிநீதிக்கான போராட்டம் இந்திய அரசியல் சாசனத்துக்கும் சங்கபரிவாரத்துக்குமே நடக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இதில் இறுதி வெற்றிபெறப் போவது, ஃபாஸிஸ சங்கபரிவாரமா? அல்லது இந்திய அரசியல் சட்டமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
மேலதிகத் தகவல்களுக்கு, தொடர்புடைய நமது பதிவுகள்:
1. போலி என்கவுண்ட்டர்கள் : குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதிக்கெடு
2. குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)
3. மோடியின் அரசில் ராமனுக்கு நேர்ந்த கதி!
4. சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி – விசாரணை குழு அறிக்கை!
5. தெளிவான தீவிரவாதி…!
6. ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!
7. ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!
8. சட்டத் தீர்ப்புக்கு அப்பால்…
9 ஜனநாயகத் தூண்களே …!
Follow-up: (சமீபத்திய தகவல்கள்) 1. இதுவரை மூன்று முறை சிபிஐயால் அமித்ஷா விசாரிக்கப்பட்டுள்ளார். இதுவரை எதையுமே ஒப்புக்கொள்ளாத அமித்ஷா, “எனக்கு எதுவுமே நினைவில்லை” என்று திரும்பத் திரும்ப கூறுவதாக சிபிஐ கூறுகிறது. அத்துடன், அமித்ஷா விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறது. 2. சொக்ராபுதீன் ஷேக் என்கவுண்டரை சிஐடி விசாரித்துக்கொண்டிருக்கும் வேளையில் குஜராத் டிஜிபியாக இருந்த மூத்த ஐப்பிஎஸ் அதிகாரி பி.சி.பாண்டேயை ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது. 3. அரசியல்வாதிகள், குற்றவாளிகளைத் தப்புவிக்க முயல்கிறார் என பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட, சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிஐடி தலைவர் கீதா ஜோஹ்ரியையும் சிபிஐ விசாரிக்க இருக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி கிதா ஜோஹ்ரி விசாரிக்கப்பட இருக்கிறார். 4. குஜராத் முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திர மோடியையும் விசாரிக்க சிபிஐ ஆலோசித்து வருகிறது. உள்துறை இணையமைச்சராக இருந்த அமித்ஷா, மோடிக்குத் தெரிந்து தான் அந்தக் கொலைகளை நடத்தினாரா? என்பது குறித்து மோடியிடம் விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. இது நடந்தால், இந்த ஆண்டு இது இரண்டாவது தடவையாக மோடி சிபிஐயால் விசாரிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 5. சொக்ராபுதீன் கொலை செய்யப்பட்டது போலி என்கவுண்டர் மூலம் தான் என்பதையும் அதை குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் தான் நிறைவேற்றப்பட்டது என்பதையும் விவரிக்கும் இரு காவலர்களுக்கு இடையிலான உரையாடல் ஆதாரம் காண்க: http://www.ndtv.com/news/videos/video_player.php?id=155074
|
-oooOooo-
Update : 1.11.2022