தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – பாகம் 5

Share this:

இன்னொரு கார்கரே வருவாரா? – காத்திருக்கிறது மும்பை A.T.S

மும்பையில் யூதர்களின் தலைமையிடமான நரிமன் ஹவுஸில் தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது, நவம்பர் 26 அன்று இரவு சுமார் 10.30 மணியளவிலாகும். இதே நேரத்திலேயே நரிமன் ஹவுஸிலிருந்து வெறும் 500 மீட்டருக்கப்பால், கிரனேடியர் படை, மேலிடத்து உத்தரவுக்காகக் காத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.

இரவு வெகுநேரம் ஆன பின்னரும் அவர்களுக்கு நரிமன் ஹவுஸில் இருந்த தீவிரவாதிகளை எதிர் கொள்ள எவ்வித உத்தரவும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்குப் பின்னர், டில்லியிலிருந்து என்.எஸ்.ஜி கமான்டோக்கள் வந்து சேர்ந்தப் பின்னரே நரிமன் ஹவுஸினை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் நகர்ந்தனர்.

கார்கரேயை காமா மருத்துவமனைக்கு நிராயுதபாணியாக, வலுக்கட்டாயமாக அனுப்புவதற்கு வேகம் காட்டிய மும்பை காவல்துறை, நரிமன் ஹவுஸிற்கு மிக அண்மையில் பாதுகாப்புப் படை நின்றிருந்த போதிலும் நரிமன் ஹவுஸைப் பாதுகாப்பதற்காகப் படையினரை அனுப்ப 12 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தாமதித்தது ஏன்?. ஓபராய் மற்றும் தாஜிலுள்ள மக்களை வெளியேற்றியப் பின்னர் இறுதியிலேயே நரிமன் ஹவுஸ் காலி செய்யப்பட்டது.

தீவிரவாதிகளின் தலைமையிடம் நரிமன் ஹவுஸாக இருக்குமோ? என்ற சந்தேகம் உறுதியாவதற்கான பல்வேறு கேள்விகள் விடையின்றி தொங்கி நிற்கின்றன.

தாஜ் ஹோட்டலின் மிக அண்மையிலுள்ள கொலாபாவில் ஓர் இடுங்கிய சந்தின் வால் பகுதியில் நரிமன் ஹவுஸ் என்ற அடுக்குமாடிக் கட்டிடம் உள்ளது. மும்பைத் தாக்குதல் நடப்பதற்கு முந்தைய சில நாட்களில் இங்கு நடந்த அசாதாரணமான பல சம்பவங்களை அக்கம்-பக்கத்தவர் இப்பொழுதும் நினைவு கூர்கின்றனர்.

வித்தல் தண்டேல் என்ற மீனவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தகவல் இதில் முக்கியமானதாகும்.

தாக்குதல் நடந்த அன்று புதன்கிழமை ஆறு/ஏழு சிறு படகுகளில் வந்திறங்கிய பலர், நேரடியாக நரிமன் ஹவுஸிற்குச் சென்றதை, தான் கண்டதாக தண்டேல் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர்களின் கைகளில் பொருட்கள் நிரம்பிய பெரிய பைகள் இருந்தன.

கடுமையான பாதுகாப்பு வளையங்களுள்ள நரிமன் ஹவுஸில், வசிப்பதற்கு யூதர்களுக்கு மட்டுமே அறைகள் அனுமதிக்கப்படும் என்ற விஷயம் அனைவரும் அறிந்ததாகும். அவ்வாறெனில் ஆறேழு படகுகளில் வந்திறங்கிய அவர்கள் யாவர்? மும்பையைத் தாக்கியவர்கள் அவர்கள்தாமா? அவர்கள் அனைவருமே நரிமன் ஹவுஸில் கொல்லப்படார்கள் எனில், அவர்களது உடல்கள் எங்கே போயின?

தாக்குதலின் முந்தைய நாள், நரிமன் ஹவுஸில் 100 கிலோவுக்கும் அதிகமாக மாமிசமும் மதுபானங்களும் உணவுப் பொருட்களும் வாங்கப்பட்டதாக அக்கம்-பக்கத்தவர் கூறுகின்றனர். ஒரு சாதாரண குடும்பத்திற்கு குறைந்தது ஒரு மாத காலத்திற்காவது தாரளமாகப் போதுமானதான அளவிற்கு உணவுப் பொருட்கள் அன்று வாங்கப்பட்டன.

அதே நேரம் மற்றொரு விஷயமும் நினைவில் இருத்த வேண்டும். தாக்குதல் துவங்கிய ஆரம்ப தருணங்களில் ஒரு தொலைகாட்சிச் சானலோடு தொலைபேசியில் பேசிய தீவிரவாதிகளில் ஒருவன், “நாங்கள் ஆறு பேர் நரிமன் ஹவுஸில் இருக்கிறோம்” என்று உறுதிப் படுத்தியிருந்தான்.

ஆனால், காவல்துறை நரிமன் ஹவுஸைத் தீவிரவாதிகளிடமிருந்துக் கைப்பற்றியப் பின்னர், அங்கு நடத்திய சோதனையில் இரு உடல்கள் மட்டுமே கிடைத்ததாகச் சொன்னது. மீதியுள்ளவர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி இஸ்ரேலியர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவ்வாறெனில், என்.எஸ்.ஜி நடத்திய தாக்குதலுக்கு இடையில் தீவிரவாதிகளில் நான்கு பேர் தப்பித்தது எவ்வாறு?

தாஜ் ஹோட்டலைப்போல் ஒளிந்திருந்துத் தாக்குவதற்கான எவ்வித வசதியும் இல்லாமல் இருந்த போதிலும் நரிமன் ஹவுஸில் தீவிரவாதிகள் என்.எஸ்.ஜியுடன் கடுமையாகப் போராடினர் என்பது கவனிக்கத்தக்கது.

இது போன்ற பதில்கள் இல்லாத, பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடையிலேயே மும்பைக் காவல்துறை இவ்வழக்கு விசாரணையை நடத்துகின்றது. விசாரணைக்குத் தலைமை ஏற்று நடத்தும் அதிகாரிகளோ, பல்வேறு காலகட்டங்களில் நம்பகத்தன்மையை இழந்தவர்கள்.

மும்பைத் தாக்குதல் விசாரணைக் குழுவிற்குத் தலைமை வகிக்கும் அடிஷனல் கமிஷனர் ராகேஷ் மரியா ஒரு யூதர் என்றும் விசாரணைக் குழுவிலிருந்து இவரை நீக்க வேண்டும் என்றும் இதற்குள்ளாகவே மும்பையிலுள்ள மனித உரிமை அமைப்பினர் கோரிக்கை வைத்தாயிற்று.

இவ்வழக்கில் உயிரோடு கைது செய்யப்பட்ட ஒரே ஒருவனான அஜ்மல் கஸபை விசாரணை நடத்தும் ஒரே அதிகாரி இந்த மரியாவாகும்.

கர்கரேக்குப் பதிலாக A.T.Sக்குத் தலைமையேற்ற பி.கே. ரகுவன்ஷிக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

2006இல் நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த முதல் மாலேகோன் குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில், “விசாரணையைக் கவிழ்த்து முஸ்லிம்களுக்கு எதிராகத் திசை திருப்பி விட்டார்” என்ற குற்றச்சாட்டு ரகுவன்ஷிக்கு எதிராக ஏற்கெனவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலேகோன் விசாரணைக் குழுவிலிருந்து ரகுவன்ஷியை மாற்ற வேண்டும் என ஒருங்கிணைந்த ஜனதாதள் தலைவர் சரத் யாதவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மும்பைத் தாக்குதலின் பின்னணியில் ஒவ்வொரு நாளும் எழுந்து கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் என்றாவது ஒரு நாள் தெளிவான விடை கிடைக்கும் என நம்பிக்கை வைப்பவர்கள் மிகக் குறைவே. மாலேகோன் வழக்கு விசாரணையினூடாக ஹிந்துத்துவத்தின் பின்னணியில் மறைந்துள்ள தீவிரவாதத்தை வெளி உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதில் முக்கிய பங்கு வகித்த மஹாராஷ்டிரா A.T.S தலைவர் ஹேமந்த் கார்கரே உட்பட உயர்ந்த காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதில் சந்தேகம் உள்ளது எனவும் கார்கரே கொல்லப்பட்டதைக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே கோரிக்கை விடுத்ததற்கு எழுந்த சலசலப்புகளை உலகம் கண்டுள்ளது.

“கார்கரே கொல்லப்பட்டதில் சதி நடந்தது என்பது உறுதி!” என்று மீண்டும் அடித்துக் கூறுகிறார் அம்ரேஷ் மிஸ்ரா.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.