என்னால் இயன்ற அறம்!

Share this:

வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக் கடந்து உள்ளே சென்றுவிடும்.

அவரும் பதில் உரைத்துவிட்டு கடந்து செல்வோருக்கு வழிவிட்டுவிட்டு தம் பணியைத் தொடர்வார். சரி, பள்ளிவாசல் நிர்வாகம் வேலைக்கு அமர்த்திய துப்புரவுத் தொழிலாளி போலும் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். அவரது வயதும் தோற்றமும் பரிவு ஏற்படுத்தும் ரகம். இருந்தாலும் மெனக்கெட்டு யாரும் நெருங்கிச் சென்று அவரிடம் பேசியதில்லை.

இரு வாரங்களுக்குமுன் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, பள்ளிவாசலுக்கு நிதி திரட்டுவதற்காக, நிர்வாகிகளுள் ஒருவரான இப்ராஹீம், அவரிடம் பேசிய போதுதான் அவ்விஷயம் தெரியவந்தது. எப்பொழுதும்போல் பெருக்கிக் கொண்டிருந்தவரிடம் இப்ராஹீம் கேட்டிருக்கிறார், “சிரமப்படுகிறீர்களோ? ஏதும் உதவட்டுமா?”

“இல்லை சகோதரா… இறைவனின் இல்லத்திற்கு என்னாலான மிகக் குறைந்தபட்ச உதவி இது. மூன்று இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு எனக்கு உடலில் வலு இல்லை. பண வசதியும் இல்லாதவன் நான். என்னால் முடிந்தது இதுதான். இதை மட்டுமாவது நான் செய்துவிட்டுப் போகிறேனே” வார்த்தையில் லேசான குழறலுடன் பதில் சொல்லியிருக்கிறார் பெரியவர்.

பள்ளி நிர்வாகி மூலம் இச்செய்தியை அறிந்த பலரது கண்களும் அவரைத் தேடத் தொடங்கின. சிலர் கண்ணீரால் தளும்பியிருந்தனர்.  அன்று நிதி திரட்டும்போது பலரும் அள்ளி வழங்கியிருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட துடைப்பமும் கையுமாக இருந்த பெரியவர்தான் என் மனதில் நிறைந்திருந்தார். www.satyamargam.com

அதற்கு முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு. நபியவர்களின் பள்ளியைத் துடைத்து சுத்தம் செய்பவர் இறந்ததும் அவர் ஒரு சாதாரண துப்புரவுத் தொழிலாளிதானே என்ற நினைப்பில் தோழர்கள் அவரை அடக்கம் செய்து விட்டிருந்தனர்.  அவர் பள்ளிவாசலில் இல்லாதததைக் கவனித்து விசாரித்த முஹம்மது நபி (ஸல்), தமக்கு அந்த மரணச் செய்தியைத் தமக்கு தெரியப்படுத்தாமல் போனதற்கு தோழர்களிடம் ஆட்சேபம் தெரிவித்துவி்ட்டு, அந்த தொழிலாளிக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தி இறைஞ்சிய வரலாறு நினைவுக்கு வந்தது.

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒருநாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) ‘இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்துவிட்டார்!” என்றதும் ‘எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’ எனக் கேட்டனர். தோழர்கள், அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, ‘அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’ எனக் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, கப்ருக்குக் வந்து (ஜனாஸாத்) தொழுதார்கள்.              அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி – எண் 1337, பாகம் 2, அத்தியாயம் 23)

மாபெரும் தலைவர் ஒரு சாதாரண தொழிலாளி மீது காட்டிய மனிதாபிமானம் ஏற்படுத்திய பிரமிப்பு ஒருபுறமிருக்க, பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தப்படுத்துவது நமக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அதுவும்கூட ஒப்புயர்வற்ற அறச் செயலே என்பதுதான் அந்த ஹதீஸில் ஒளிந்திருக்கும் பாடம் என்ற கருத்து எனக்குள் உண்டு.

பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு இந்திய மளிகைக் கடையில் எடுபிடியாக வேலை செய்துதான் அப்பெரியவரின் ஜீவனம் ஓடுகிறது என்பதைப் பிறகு கவனித்தேன். கடந்த வாரம் பள்ளியில் அவரைச் சந்தித்தபோது அணுசரனை சிறிதும் மரியாதை அதிகமுமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இறுதியில், “உங்களைப் பற்றி இந்தியாவில் உள்ள தமிழ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  ஃபோட்டோ எடுக்கவா?” என்ற கோரிக்கைக்கு சங்கோஜத்துடன் சம்மதித்தார்.

“உங்களது பெயர்?”

“ஷௌகத் அலி” என்று அதே மெல்லிய குழறலுடன் பதில் வந்தது.

குறைகளைச் சுட்டும் விரலை மடக்கி வைத்துவிட்டு நம்மாலான அறம் என்று அவரவரும் தத்தம் வசதிக்கேற்றவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டால் சமூகத்தில் குப்பைக்கு ஏது இடம்?

-நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.