ஜகாத் எனும் உன்னதத் திட்டம்!

Share this:

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-4)

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.  (குர்ஆன்  13:11)

 

இந்திய இஸ்லாமியச் சமுதாயம் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகாட்டல் இந்த இறைமறை வசனத்தில் இருக்கிறது.  மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் அதற்கான முயற்சிகள் முதலாகச் சமுதாயத்திற்குள்ளிருந்தே செயல்படுத்தப்பட வேண்டும்.  இந்த நோக்கத்தை அடைவதற்கு இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கும் உன்னதமானத் திட்டம் ஜகாத்.  அதன் முக்கியத்துவத்தை சரிவர உணர்ந்து அதனை முறையாக செயல்படுத்துவதற்குப் பதிலாக நாம் இடஒதுக்கீட்டை வேண்டி அரசியல்வாதிகளின் தயவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போல..!

சச்சார் கமிஷன் அறிக்கை ‘கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்’ எனப் பொட்டில் அறைந்தாற்போல் சுட்டிக் காட்டுகிறது.  வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் இன்னொரு அதிர்ச்சியான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.  இன்று முஸ்லிம்களை விடவும் சிறதளவாவது முன்னேற்றம் கண்டிருக்கும் தலித் மக்கள், காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாகவும், பண்ணையாட்களாகவும், விவசாயக்கூலிகளாகவுமே அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது.  முன்பு ஒரு காலத்தில் அவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தார்கள் என்றோ, செல்வந்தர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் நடுத்தர வர்க்கத்தினராகவோ வாழ்ந்து நொடித்து போனார்கள் என்றோ சொல்வதற்கில்லை.  அவர்களிடம் ஒரு சமுதாய கட்டமைப்போ, தலைமைத்துவ வழிகாட்டல்களோ கூட இருந்திருக்கவில்லை.  சுதந்திரத்திற்குப் பிறகு தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தவர் அம்பேத்கர்.  

மாறாக, முஸ்லிம்கள் சுமார் 800 ஆண்டுகாலமாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.   முஸ்லிம்களில் பெரும் பெரும் நிலப்பரப்புகளை உடமையாகக் கொண்ட செல்வந்தர்கள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள் இருந்திருக்கிறார்கள்;  இன்னும் இருக்கிறார்கள்.   அவர்களுள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் இந்தியா முழுவதிலும் பொதுச்சொத்தாக வக்ஃப் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சொத்துக்களின் மதிப்பு மட்டுமே பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும்.

தேசப்பிரிவினையின்போது பெரும்பாலான வசதிபடைத்த மற்றும் நடுத்தர வர்க்க முஸ்லிம் குடும்பங்கள், குறிப்பாக வட இந்திய பிரதேசங்களில் வசித்து வந்தவர்கள், பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தது உண்மையே என்றாலும் இந்தியாவிலேயே தங்கிவிட்டவர்களிலும் கணிசமான எண்ணிக்கையில் வசதி படைத்தவர்கள் இருந்தார்கள்.  சுதந்திரத்திற்குப் பிறகான காலக்கட்டத்தில் குஜராத் போன்ற பகுதிகளில் ஏராளமான முஸ்லிம் வணிகர்களும் தொழிலதிபர்களும் உருவானார்கள்.   

மேலும், சமுதாயத்தில் செல்வ வளம்பெற்றவர்கள் நலிந்த பிரிவினருக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்பதை கட்டாயக் கடமையாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம்.  வேறெந்த மதங்களிலோ கொள்கைகளிலோ வலியுறுத்தப்பட்டிராத இந்த அம்சம், ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பினை வரையறுக்கிறது.  சமூகத்தில் நலிந்த பிரிவினரின் தேவைகளை நிவர்த்தி செய்து அவர்களைக் கைகொடுத்துத் தூக்கி விடுவதற்காக விதியாக்கப்பட்டுள்ள கடமையே ஜகாத்.

இதுபோன்ற வளங்களோ வழிகாட்டல்களோ இருந்திராத தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் ஏறுமுகமாக இருந்த காலக்கட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரமோ இறங்குமுகமாக இருந்தது.  இன்னும் அவ்வாறே இருந்துக் கொண்டிருக்கிறது.  இஸ்லாமிய சமுதாயம் தம்மிடம் உள்ள வளங்களை ஒரு தொலைநோக்குத் திட்டத்துடன் முறையாக பயன்படுத்திக்கொள்வதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

ஜகாத்:

தொழுகையை நீங்கள் நிலை நாட்டுங்கள்.  ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் அடிபணிவோருடன் சேர்ந்து நீங்களும் அடிபணியுங்கள் (2:43)

குர்ஆனில் இது போன்ற பல வசனங்களில் தொழுகையுடன் சேர்த்து ஜகாத்தும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஜகாத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதனைப் பெறுபவர் இதனால் பயனடைவதைப் போலவே இதனை வழங்குபவருக்கும் இதனால் பலன்களுண்டு.

“(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களை தூய்மையாக்குவீராக! (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக!  மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக!  ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்குச் சாந்தி அளிக்கக்கூடியதாகும்.  மேலும் அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.”  (9:103)

ஜகாத் கொடுப்பவரின் உள்ளத்தைக் கருமித்தனம், கல்மனம், சுயநலம் ஆகிய குறைபாடுகளிலிருந்து தூய்மைப் படுத்துகிறது ஜகாத்.  கட்டாயக்கடமைதான் என்றாலும் ஜகாத்தை ஒருவர் மனமுவந்து செலுத்தி வரும்போதுதான் இத்தகைய அழுக்காறுகள் கழுவப்பட்டு அவரது உள்ளம் தூய்மைப்படுத்தப்படுகிறது.  அவ்வாறு தூய்மைப்படுத்தப்படுவதில்தான் முன்னேற்றம் இருக்கிறது.  மேலும் அவர்களுக்காக நல்லருள் வேண்டி பிரார்த்திக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் அல்லாஹ்.  நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனை நிச்சயமாக சாந்தி அளிக்கக்கூடியது என்றும் உத்தரவாதம் அளிக்கிறான் அல்லாஹ்.  வேறென்ன வேண்டும் ஒரு நம்பிக்கையாளருக்கு?

ஒருங்கிணைந்த ஜகாத் வினியோகம்:

ஜகாத் எனும் மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதில் இன்றைய முஸ்லிம்கள் கிட்டத்தட்ட மறந்து போய்விட்ட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.  இஸ்லாமிய சமுதாயத்தின் வசதிபடைத்த பிரிவினரிடம் ஜகாத் பற்றிய விழிப்புணர்வு பரவலாக இருந்தும், அவரவர் வசதிக்கேற்ப ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினரிடம் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.  காரணம், ஜகாத்தை சேகரித்து வினியோகம் செய்ய குறைந்த பட்சம் மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒரு அமைப்பு இல்லாததுதான்.  இன்றைய முஸ்லிம் சமுதாயம் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய அம்சம் இது.

{youtube}DHeX8ftwP-k&{/youtube}

இஸ்லாத்தில் எல்லாக் காரியங்களும் சமுதாய அமைப்பை வலியுறுத்துவதாகவே அமைக்கப் பட்டுள்ளன.  தனித்து நிற்கிற வாழ்வை இஸ்லாம் விரும்பவில்லை.  பள்ளிவாசலை விட்டு தூரத்திலிருப்பவர் தனித்து நின்று தொழுது கொண்டால் அது நிறைவேறிவிடும் என்றாலும் அவர் சிரமப்பட்டாவது பள்ளிக்குச் சென்று அணிவகுப்பில் கலந்து தொழ வேண்டும் என்றுதான் மார்க்கம் விரும்புகிறது.

அதுபோலவே, ஜகாத் தொகையை அவரவர் வசதிக்கேற்ப தனித்தனியே வினியோகித்தாலும் அவரது கடமை நிறைவேறிவிடும் என்றாலும் ஜகாத்தை ஒரு பொதுநிதியாக சேகரித்து குர்ஆன்-ஹதீஸ் வழிகாட்டல்படி முறையாக வினியோகம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  மேலே குறிப்பிடப்பட்ட (9:103) குர்ஆன் வசனம் இதனைத்தான் சுட்டிக் காட்டுகிறது.     “(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களை தூய்மையாக்குவீராக!” ‘அவர்களிடமிருந்து ஜகாத்தை வசூல் செய்யுங்கள்’ என்றுதான் இறைவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறானே தவிர ‘ஜகாத்தை எடுத்துத் தனித்தனியே செலவு செய்யுங்கள்’ என்று முஸ்லிம்களுக்கு அவன் கூறவில்லை.

நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை (ஆளுநராக) அனுப்பியபோது அவரிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) – புஹாரி) என்ற ஹதீஸும் ஜகாத் வசூலிக்கப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

மேலும், “ஜகாத் பெறத்தகுதியானவர்களின் பட்டியலில் வசூலிப்பவர்களையும் அல்லாஹ் இணைத்துள்ளதிலிருந்து, ஜகாத் கூட்டாக வசூலிக்கப்பட்டு வினியோகிக்கப்படுவதே மிகவும் சிறப்பானது என்பது உறுதியாகிறது”. அத்தகைய சிறப்புமிக்க ஜகாத் கடமையை, கூட்டாக வசூலித்து வினியோகிப்பதில் முஸ்லிம் சமுதாயம் அசிரத்தையாக இருந்ததன் விளைவைத் தான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இறைக்கட்டளையை மீறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை இந்தச் சமுதாயம் இனிமேலாவது உணர்ந்து, ஜகாத் எனும் கட்டாயக்கடமையை முறையாக வசூலித்து வினியோகிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கவேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றைப் பார்த்தால் நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்த கலிஃபாக்களும் ஜகாத்தை வசூலித்து பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக பதியப் பட்டுள்ளது.  இன்று இஸ்லாமிய ஆட்சி இல்லையென்றாலும் ஜகாத்தைச் சேகரித்துப் பங்கிடுவதற்கான ஒரு சமுதாயக் கூட்டு அமைப்பை உருவாக்க முனைவது இன்றைய சூழலில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு இன்றியமையாததாகும்.  அவ்வாறு திட்டமிட்டு செயல்படும்போதுதான் ஜகாத்தினால் ஏற்படவிருக்கும் நன்மைகளை சமுதாயம் முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்..

கட்டுரை: சகோதரர் சலாஹுத்தீன்

< பகுதி-3


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.