காந்தியும் பன்முக இந்திய தேசமும்

Share this:

கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து தனது 45 வயதில் போராட்டப் பயணத்தை முடித்துக்கொண்டு கி.பி. 1915இல் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த காந்திக்கு, இறுதியாக ஒரு கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்படுகிறது. அதுவும் அந்தக் கூட்டமானது ஒடுக்கப்பட்டவர்களான துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டியதாகும்.

அதில் அவர் பேசும்பொழுது, “நீங்கள் எங்கள் சகோதரர்கள், உங்களை அவமரியாதை செய்வது எங்களது தகுதி எவ்வளவு குறைவானது என்பதைத்தான் காட்டுகிறது. அது பெரிய அறப்பிழை” என்பதனைச் சுட்டிக்காட்டி மனிதன் செய்கிற தொழில் சார்ந்த பிரிவுகளைக் கொண்டு அவனை வேறுபடுத்துவது என்பது மனிதாபிமானம் உள்ள எவருக்கும் தகுதியற்றது என்றும் உலகில் அறத்திற்கு எதிரானது என்பதினையும் எடுத்துரைத்தார். ஏற்றத் தாழ்வற்ற சமூகமே மேன்மையடையும் என்கிற கொள்கையே அவரின் தென் ஆப்பிரிக்க இறுதியுரையாக இருந்தது.

காந்தி இந்தியா வருகை:

கி.பி. 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பம்பாய் துறைமுகத்தில் காந்தி வந்திறங்கியபோது இந்தியாவிற்கான சுதந்திரப் போராட்டத்தினை எவ்வகையில் முன்னெடுப்பது என்கிற சிந்தனை அவரை உலுக்கியது. ஏனெனில் இந்தியா என்பது ஒரு பன்முகக் கலாச்சாரமும் பல சமயங்கள் நிறைந்ததுமான ஒரு நாடு. இதை வழிநடத்திச் செல்வது என்பது ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது என்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதுதான் காந்தியின் உண்மையான ஆளுமை. அது மட்டுமில்லாமல் அதற்கான அடித்தளத்தை அமைப்பதற்குப் பலதரப்பட்ட மக்களையும் ஒன்றிணைப்பதற்குப் பொதுவான ஒரு தத்துவ முழக்கம் தேவைப்பட்டது அவருக்கு. ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் “சத்தியம்“ என்கிற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் இதுவே “சத்தியாக்கிரகமாக” வலுப்பெற்றது. மேலும் ‘சத்தியம்’ என்ற அந்த மையப்புள்ளியில் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைக்கிறார். இதனூடாகவே தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்கிற புரிதலும் அதற்கான முன்னெடுப்பும் காந்தி அவர்களின் அறப்போரின் சாராம்சமாகும்.

காந்தியும் கோகலேவும்:

காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த 21 ஆண்டுகளில் அவரின் போராட்ட குணமும் மக்கள் சமூகவியலின் இயல்பான பார்வையும் கோகலேவைக் கவர்ந்தது. ஆகையால் காந்தியை இந்தியா வருமாறு அழைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்கனவே முற்றிலுமாக அறிந்திருந்த கோகலே அவர்கள் முதன் முதலாக காந்திக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையின் புரிதலுக்காகச் சொன்ன வழி, “காதைத் திறந்துக் கொண்டு, வாயை மூடிக்கொண்டு, இந்தியாவை ஒரு வருடம் சுற்றுங்கள்”. கோகலேயின் வேண்டுக்கோளுக்கிணங்க காந்தி இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். இந்தியாவைப் புரிந்துக்கொள்ளத் தொடங்கப்பட்ட நீண்ட பயணத்தில் ஏழைகளோடு ஏழையாகவும் மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டிகளிலும் பயணம் செய்தார். இதில் தான் பெற்ற அனுபவத்தில் தன்னைத் தானே இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார் என்றால் மிகையாகாது. காந்தி அவர்கள் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கோகலேவுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தன்னுடைய சுற்றுப்பயணத்தின் வாயிலாக நிறைவேற்றித் தந்தார்.

காந்தியும் தாய் மொழியும்:-

காந்தி அவர்கள் தன்னுடைய தாய் மொழியான குஜராத்தியை மிகவும் நேசித்தவர். அதேபோல் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர். ஒருநாள் குஜராத்தி மேட்டுக்குடி வர்க்கம் அவருக்கு அளித்த வரவேற்பில் எல்லோரும் காந்தியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆங்கிலத்தில் பேசி முடிக்க, அவரோ தன் பதிலுரையை குஜராத்தி மொழியில் தொடங்கினார். “குஜராத்திகள் கூடியிருக்கும் ஒரு சபையில் ஆங்கிலத்தில் பேசத் தேவை என்ன?” என்று ஆரம்பித்தவர் முழுமையாக குஜராத்தி மொழியிலேயே பேசி முடித்தார். அவர் கல்விக்காக ஆற்றிய பங்கில் ”ஆதாரக் கல்வி” என்பது முக்கியமானது. இதில் மாணவர்கள் தங்களுடைய தொடக்கக் கல்வியைத் தமது தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்று வற்புறுத்தியவர் அதற்கான பாடத் திட்டத்தினையும் இந்தியாவின் புறச்சூழல், சமூகச் சூழலுக்கேற்றவாறு திறம்பட வகுத்துத் தந்தவர் ஆவார்.

காந்தியும் விவசாயிகளும்:-

காந்தி அவர்கள் தனது கூடுதல் கவனத்தை விவசாயிகளுக்காகச் செலுத்தியவர். அவர்களைப் பற்றியே சிந்தித்தவர். கி.பி. 1921ஆம் ஆண்டு மதுரை பயணத்தின் போது அவர் தமிழக உழவர்கள் அணிந்திருந்த உடையைப் போன்று  தானும் அணிந்து, விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும் அவர்களின் குரலாகவும் இருந்தவர். கி.பி. 1916இல் காசியில் அன்னி பெசன்ட்டும் மாளவியாவும் நிர்வகித்து வந்த இந்துப் பல்கழைக்கழக மத்தியக் கல்லூரித் திறப்பு விழாவில் பேசுவதற்குக் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட காந்தி அவர்கள் அந்தப் பேச்சின் மையக் கருத்தாக விவசாயிகளைப் பற்றிப் பேசினார். அது பேச்சாக மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்கான உறுதிப் பிரகடனமாகவும் அமைந்தது. “இந்தியாவில் எந்த நகரிலும் ஒரு பிரமாண்ட மாளிகை எழும்பொழுது எனக்குள் பொறாமை எழுகிறது. ஆஹா… இவ்வளவும் நம்முடைய விவசாயிகளிடமிருந்து வந்த பணம் அல்லவா? விவசாயிகளின் உழைப்பைப் பறித்துக் கொண்டாலும் சரி, பிறர் பறிக்க இடம் கொடுத்தாலும் சரி நம்மிடம் உண்மையான சுயாட்சி உணர்வு இருக்க முடியாது. குடியானவர்களால்தான் நமக்கு விடுதலை ஏற்பட வேண்டும். பணக்கார மிராசுதாரர்களோ, மருத்துவர்களோ, வழக்குரைஞர்களோ சுயாட்சியைப் பெற்றுத் தரப் போவதில்லை” என்கிற அவருடைய எதேச்சையான, உள்ளார்ந்த கருத்துடைய பேச்சு, பிற்காலத்தில் செயல்வடிவம் கண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு மேற்கூறிய மேல்தட்டு மக்களின் பங்களிப்பைக் காட்டிலும் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் சிறுபான்மையினரும் விவசாயிகளும் வழங்கிய பங்களிப்பு என்பது பன்மடங்கு கூடுதலானது என்பதுதான் உண்மை. இதை முன்னரே உணர்ந்தவர் காந்தி.

காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மையப்புள்ளி. இது அவரின் தலைமைக்கான மமதையை அவருக்கு ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக தனது சகாக்களைத் திறம்பட செயலாற்றப்ப் பணித்தவர்; அவர்களுடைய ஆளுமைக்குப் பணிந்தவர். வசீகரப் பேச்சுக்குச் சொந்தக்காரரான தன் சகா நேருவை, பொதுக் கூட்டங்களுக்கு அனுப்பிப் பயன்படுத்திக் கொண்டார். பட்டேலின் நிர்வாகத் திறனை காங்கிரஸ் கட்சியைக் கட்டமைத்து வழி நடத்தவும் ஜே.சி. குமரப்பாவின் உழைப்பை கிராம வளர்ச்சிக்கும் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் தீராத் தாகமான இந்தியர்களின் கல்வி வளர்ச்சியை அவரிடம் ஒப்படைத்து, பலதரப்பட்ட தலைவர்களிடம் இருந்த பல்வேறு திறமைகளையும் உரிய வகையில் காந்தி பயன்படுத்திக்கொண்டார்.

மாபெரும் இந்திய தேசத்தை எப்படி ஒரு மதச்சார்பற்ற நாடு என்று காந்தி எண்ணினாரோ அதேபோன்று அந்த தேசத்திற்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்தபோதும் சாதி, மத, மொழி பேதம் பார்க்காமல் அவரவர்கள் சார்ந்த துறைகளுக்கும் ஈடுபாட்டுக்கும் மதிப்பளித்தவர் காந்தி. ஆக, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் இந்திய தேசம் என்கிற பொதுப் புள்ளியில் இணைந்தவர்கள். அவர்களை அவர்கள் இனம் சார்ந்த தலைவர்கள் உரிமை கொண்டாடுவதும் தம் மாநிலத்தில் அல்லது ஊரில் பிறந்தார் என்பதற்காக ஒருவர் பிறந்த மண் சார் மக்கள் உரிமை கொண்டாடுவதும் அவர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துவதாகும். அதைவிட மோசமானது அவர்கள் மதம் சார்ந்த பின்புலத்தை முன் நிறுத்துவதும் அதில் தன்னை வளர்த்துக் கொள்வதும்!

– பா. செ. சிராஜுத்தீன்,
மின்னஞ்சல்: bssiraj@gmail.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.