ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.!

ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை போராட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்றே சொல்லலாம். ஆனால், அத்தனை குரல்களையும் புறம் தள்ளிவிட்டது தமிழக அரசு

 

எந்த வருடமும் இல்லாததுபோல் இந்த வருடம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் முதல்வரின் சுதந்திர தின உரையின் மீது இருந்தது. பூரண மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த அனைத்துத் தரப்பினருக்கும் முதல்வரின் சுதந்திர தின உரை ஏமாற்றத்தையே அளித்தது. இத்தனை போராட்டங்கள் நடைபெற்றும் அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் செயல்படும் அ.தி.மு.க அரசை, மக்கள் நலன் காக்கும் அரசு என்று எப்படிச் சொல்வது?

எப்போதும் தன் இனம், மொழி என சிலவற்றிற்காக மட்டும் ஒன்று சேரும் நம் தமிழக மக்கள், இப்போது ஒரு சமூகத்தீமைக்கு எதிராக ஒரே குரலாக எல்லோருமாய் ஒலித்திருப்பது மதுவினால் ஏற்பட்டிருக்கும் சீரழிவு எல்லை கடந்துவிட்டது என்பதைக் காட்டுகின்றது. கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என எந்தப்பாகுபாடுமின்றி அனைவரும் மதுவிலக்கு வேண்டி போராடி வருகின்றனர். இங்கே கட்சிகளின் நிலைப்பாட்டை பொருத்தவரையில் “மதுவிலக்கு” என்பது ஒரு அரசியலாகத்தான் பார்க்கப்படுகின்றது. மதுவிலக்கு பற்றிப் பேசாத கட்சிகள் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந்திப்பது மிகக் கடினம் என்பதால்தான், வேறு மாநிலங்களில் வேறொரு நிலைப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்கிறது இரட்டை வேடம் கொண்ட பா.ஜ.க.

கட்சிகளின் போராட்டங்கள் நமக்குத் தேவைதான்…! ஏனெனில் கட்சிப் போராட்டங்கள்தாம் செய்திகளை ஊடகங்களுக்கு மிக விரைவில் எடுத்து செல்லும்…! ஆனால், நமக்குத் தேவை மக்கள் போராட்டங்கள், அவைதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்…! இன்று மதுவிலக்கு வேண்டி மக்கள் போராட்டங்களில் இறங்கியிருப்பது பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் காலம் அண்மையில் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் மக்கள் போராட்டங்களில், அதுவும் ஒரு சமூகத்தீமைக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ளார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சிதான் என்றாலும், மறுபக்கம் மக்களை ஒருங்கிணைப்பதற்கும், மக்களின் போராடங்களை சரியான வழியில் நடத்திச் செல்வதற்குமான தலைவர்கள் இல்லை என்பது நம்மை வருந்தச் செய்கின்றது. மதம் பாராமல், ஜாதி பாராமல் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக போராடும் தலைவர்கள் இல்லையே நம் சமூகத்தில். கட்சியும், ஆட்சியும், பதவியும் தான் இன்று பிரதான நோக்கமாக இருக்கின்றது. பதவிக்காக அல்லாமல், மக்களுக்காக உழைக்கும் மக்கள் தலைவன் வேண்டும் நம் சமூகத்திற்கு…!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்களும் காந்தியவாதி சசிபெருமாள் அய்யா அவர்களும் சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். முன்னவர் அறிவுத்தளத்தில் மக்களைத் தயார் படுத்தினார், முன்னேற்ற முயன்றார். பின்னவர் மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலே முனைப்புடன் செயல்பட்டார். இருவரிடமும் வெற்றுக் கோஷங்கள் மட்டும் இருக்கவில்லை; சமூகத்தைக் குறித்த சிறந்த பார்வை அவர்களிடம் இருந்தது. பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன்வைத்தார்கள். ஆக்கப்பூர்வமான வழியில் அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள்.

இன்று மக்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருப்பவர்கள் உணர்ச்சியின் வழியே மக்களை ஒருங்கிணைக்கின்றார்கள். இதனால் மக்கள் தவறான தடத்தில் வழிநடத்தப்படுகின்றார்கள். இப்படி ஒருங்கிணைக்கப்படும் மக்கள் போராட்டத்தால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் பயணிக்க முடியும்.

மக்களின் போராட்டங்கள் வெல்ல வேண்டும் என்றால், அதற்குச் சிறந்த தலைமை வேண்டும். மதம், ஜாதி பாராமல், சமூக முன்னேற்றம் என்ற நோக்கோடு, பிரச்சினைகளை விமரிசனம் செய்யாமல் அவற்றை எதிர்கொண்டு களைவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைத் தேடும் சிறந்த சிந்தனையாளர்களாகவும் செயல் திறன் மிக்கவர்களாகவும்  தலைவர்கள் இருக்க வேண்டும்.

களத்தில் சுயதம்பட்டம் மற்றும் சுயவளர்ச்சியை நோக்காமல் சமூக முன்னேற்றம் என்ற இலக்கோடு பயணம் செய்யும் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து மக்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் ஒரு சூழல் வர வேண்டும், அப்போது நம் சமூகத்திற்குச் சிறந்த தலைவர்களும் கிடைப்பார்கள், நம் சமூகம் எல்லா மட்டத்திலும் வளர்ச்சி பெறும். அப்படியான தலைவர்கள் ஒன்று சேரும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது, அந்தச் சூழ்நிலைக்கு அச்சாணியாய் கோவையில் சென்ற மாதம் பல்வேறு சித்தாந்தங்களை பின்புலமாகக் கொண்ட, பல்வேறு மாணவ அமைப்புகளை உள்ளடக்கிய ‘சமூக மாற்றத்திற்கான மாணவ கூட்டமைப்பு’ என்ற மாணவர் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. சமூகப் பிரச்சனைகளை, போராட்டங்கள் மூலம் மட்டுமல்லாமல் ஆக்கப்பூர்வமான வழியில் குறிப்பாக அறிவு ரீதியில் தீர்வு காணப்போவதாகவும் கூறி வருகின்றார்கள். அவர்களின் முதல் நிகழ்வாக மதுவுக்கெதிரான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முனைப்புடன் செயல்படுகின்றனர். மேலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மது அல்லாத மாற்று வழிகளை ஆய்வு செய்யும் விதமாகக் கல்லூரி வளாகங்களில் கருத்தரங்குகளை நடத்த இருக்கின்றார்கள். இவர்களின் மற்ற செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்; ஆனால், மாணவர் அமைப்புகள் ஒரே தளத்தில் ஒன்றுகூடியிருப்பது சமூகத்தின் மிகப்பெரும் வெற்றிக்கான அடித்தளம் என நம்புவோம்…!

– மு.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,(Ph.D)

ஆராய்ச்சி மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

99656 31860 biothakir@gmail.com