{mosimage}அமெரிக்கா நடத்தும் ஆக்ரமிப்புகளும் அக்கிரமங்களும் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஐநா பொதுக்குழு கூட்டத்தை வரவேற்றுப் பேசிய போது அமெரிக்கா மீது குற்றம் சுமத்தி இவ்வாறு பேசினார். ஏதாவது ஒரு நாட்டுடன் எதிர் கருத்து உருவாகும் பொழுது வாதியும், வழக்கறிஞரும், நீதிபதியும் என எல்லாமுமாக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அவர்களுக்கு எதிராகும் பொழுது விஷேச 'வீட்டோ' அதிகாரத்தை உபயோகித்து அவர்கள் அதனைத் தகர்க்கின்றனர்.
"ஐநா சபையின் ஏதாவது பிரிவிற்கு அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியுமா? விஷேச அதிகாரம் அவர்களுக்கு இருக்கும் பொழுது எந்த தீர்மானமாவது அவர்களின் அக்கிரமங்களைக் குறித்து கேள்வி எழுப்ப இயலுமா? ஐநா உருவாக்கப்பட்ட பிறகு இதுவரை எப்பொழுதாவது ஒரு முறையாவது அது போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கின்றதா?" என அஹ்மதிநிஜாத் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
அணு ஆயுதங்களை இதற்கு முன் ஒரு நாட்டு மக்களின் மீது பிரயோகித்தவர்களும் தற்போதும் தங்களிடம் அதனை கைவசம் வைத்திருப்பவர்களும் ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை விமர்சிப்பது நகைப்பிற்குரியதாகும் என நஜாத் கூறினார். மனித சமூகத்திற்கு எதிராக அணு ஆயுதங்களை பிரயோகித்த பாரம்பரியத்தை உடையவர்களும் அணுக்கரு அறிவியல் வித்தையை தற்பொழுதும் இராணுவ அவசியங்களுக்கு உபயோகித்துக் கொண்டிருப்பவர்களும் தங்களது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் அமெரிக்காவை கண்டித்தார்.
ஈரானின் அணு நடவடிக்கைகள் சமாதானமான செயல்பாடுகளுக்கு மட்டுமே உபயோகிக்கப்படும் என அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அதனை யார் வேண்டுமானாலும் கண்டு பரிசோதித்துக்கொள்வதற்காக தாங்கள் வாயிலைத் திறந்து வைத்துள்ளதாகவும் ஈரான் அதிபர் கூறினார்.
அதே நேரம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு குறித்த நிலைப்பாட்டினை புஷ் நியாயப்படுத்தினார். "தீவிரவாதிகள்"-தான் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாகவும் அவர்களுக்கு சிரியாவும், ஈரானும் ஆயுதங்களும் பண உதவியும் வழங்கி உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் புஷ் குற்றம் சாட்டினார். மேற்குலகு இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எதிரானதன்று எனவும் அவர் கூறினார்.
ஆனால் இராக்கை சட்ட விரோதமாக ஆக்ரமிக்கவும், இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கவும் செய்யும் அமெரிக்காவுடன் எவ்வகையிலும் சமரசம் செய்து கொள்ள முஸ்லிம் உலகம் தயாராக இல்லை என அஹ்மதிநிஜாத் புஷ்ஷின் அறிக்கைக்கு பதிலளித்தார்.