முழுப்படையை அனுப்பினாலும் ஈராக்கில் US தப்பிக்க முடியாது – ஸவாகிரி பேச்சு.

அமெரிக்கா தனது ஒட்டுமொத்தப் படையையும் ஈராக்கிற்கு அனுப்பினாலும், ஈராக்கிடமிருந்து அமெரிக்காவால் தப்பிக்க முடியாது என்று அய்மன் அல்-ஸவாகிரி கூறினார். அமெரிக்கப்படையைப் போன்ற பத்துமடங்கு படைகளுக்கு சவக்குழிகள் தயார் செய்யும் சக்தி ஈராக்கிற்கு உண்டு எனவும் ஸவாகிரியின் பேச்சு அடங்கிய புதிதாக வெளியான ஒளி நாடாவில் அவர் அறிவித்துள்ளார்.

"இஸ்லாத்திற்கெதிராக களமிறங்கும் எதிரிகளுக்கு எதிராக கையில் ஆயுதம் ஏந்துவது தற்காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். புஷ்ஷின் புதிய ஈராக் கொள்கை மிகப்பெரிய தோல்வியை புஷ்ஷிற்கு பெற்றுத் தரும். புதிதாக அனுப்பும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 20,000 த்தோடு நிறுத்திக் கொண்டது ஏன்? ஈராக் தெருக்களில் நாய்கள் அமெரிக்க படையினருக்காக காத்துக் கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியாதா?" என்று அதில் ஸவாகிரி கேள்வி எழுப்பினார்.

"கிலாஃபத்திற்கும் தர்மயுத்ததிற்கும் பெயர்பெற்ற மண்ணான ஈராக்கில் போராளிகள் அவர்களை அழித்தொழித்து உலகை அவர்களிடமிருந்து காப்பாற்றுவர்" என்றவாறு தொடர்ந்த ஸவாகிரியின் பேச்சு புஷ்ஷின் மக்கள் விரோத செயல்பாடுகளைப் பட்டியலிட்டு அவரை உலக சமாதானத்திற்கெதிரான அழிவுசக்தியாகத் சித்தரித்தது.

இது, புஷ் தனது புதிய ஈராக் கொள்கையை அறிவித்த பின்னர் வெளிவந்த அல்காயிதாவின் முதல் ஒளி நாடாவாகும். "புஷ்ஷின் வஞ்சக வார்த்தைகளில் மயங்கி மாய உலகில் சஞ்சரிப்பதை நிறுத்தி விட்டு உலகில் நடக்கும் யதார்த்தத்தை அமெரிக்க மக்கள் தெரிந்து கொள்ள முயலவேண்டும்" எனவும் ஸவாகிரி வேண்டுகோள் விடுத்தார்.

"முஸ்லிம்களோடு நல்ல பந்தம் தொடர்வதற்குரிய நம்பகத்தன்மையை நீங்கள் காண்பிக்க வேண்டும். முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையை ஆபத்திற்குள்ளாக்கி விட்டு நிம்மதியாக வாழ்ந்து விடலாம் என நீங்கள் கருத வேண்டாம். பாதுகாப்பு ஒரு பொது உடமையாகும் அனைவருக்கும் அது பொதுவானதாக இருக்க வேண்டும்" என்றும் அமெரிக்கர்களை நோக்கி ஸவாகிரி கூறினார்.

"ஆப்கானிஸ்தான் அமெரிக்கப்படைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடம் அல்ல என்பது தற்போது புரிந்திருக்கும். சோமாலியாவில் தலையிடும் எத்தியோப்பியப் படைகளை அங்குள்ள போராளிகள் அடித்து விரட்டுவர்" என்றும்   தொடர்ந்து அவர் கூறினார்.

14 நிமிட நேரங்கள் நீண்ட ஸவாகிரியின் புதிய ஒளி நாடா எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது இதுவரை புலப்படவில்லை. இது இம்மாதத்தில் வெளிவரும் ஸவாகிரியின் மூன்றாவது ஒளிநாடாவாகும்.