{mosimage}வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசியத் தொழிலதிபரைத் தேர்ந்தெடுக்க நடந்து வரும் இணைய வாக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையது முஹம்மது சலாஹூத்தீன் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கீழக்கரையைச் சேர்ந்த சலாஹூத்தின் வளைகுடா உள்பட உலகின் 20 நாடுகளில் பரந்து விரிந்துள்ள ETA தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ETA குழுமம் 5 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன் 60,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாகும்.
இந்நிலையில் வளைகுடாவின் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஆசியத் தொழிலதிபர் யார் என்ற இணைய வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளார் சலாஹூத்தீன். ஒருமாத காலம் நடந்த இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, நடுவர் குழுவினர் பல்வேறு ஆய்வுகள்-ஆலோசனைகளை நடத்தியும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்தும் இறுதிச் சுற்றுக்கு தொழிலதிபர்களைத் தேர்வு செய்துள்ளது.
தொழிலில் அதிக லாபம் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை வெற்றியோடு சமூகத்துக்கு செய்த சேவைகள், நாட்டின் வளர்ச்சிக்கும், தொழிலாளர் முன்னேற்றத்துக்கு செய்த பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் வளைகுடாவின் வளர்ச்சிக்கு உதவிய மிகச் சிறந்த ஆசியர் (Outstanding Asian Contributor to the ME Development) மற்றும் மிகச் சிறந்த ஆசியத் தொழிலபதிபர் (Asian Business Leader of the Year) ஆகிய பிரிவுகளின் கீழ் இறுதிச் சுற்றுக்கு சலாஹூத்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வளைகுடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழரும் தொழில்துறை நிர்வாகியுமான MJM இக்பால் கூறுகையில், கூர்மையானத் தொழில் அறிவும், செய்யும் தொழிலில் நேர்மையும், எளிமையும், தொழிலாளர்களுடன் அன்புடன் பழகும் தன்மையும் வாய்ந்த சலாஹூத்தீன் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை என்றார்.
வரும் டிசம்பர் 1ம் தேதி வரை கிடைக்கும் ஆன்லைன் வாக்குகள், குறுஞ்செய்திகளின் அடிப்படையில் வெற்றியாளர் இறுதி செய்யப்படுவார்.
வளைகுடா மட்டுமல்லாது தாயகத்திலும் பல்வேறு ஊர்களில் கல்வி நிலையங்கள் குறிப்பாகப் பெண்களுக்கான கல்வி நிலையங்கள் அமைத்து சமுதாயத்திற்கு மிகச் சிறந்த சேவை ஆற்றிவரும் ETA குழும நிர்வாக இயக்குனர் சலாஹூத்தீன் அவர்கள் வெல்ல, வாழ்த்தித் துணை நிற்போம்.
தகவல் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்