“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர்.

என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் அராஜகங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன. எவருக்கும் எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல், தொழுநோயாளிகளைக் கூடத் தொட்டுத் தூக்கிச் சேவை புரிந்த மருத்துவர் முதல் கர்ப்பத்தில் இருந்தச் சிசு வரை எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி வெட்டித் துண்டாக்கப் பட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பள்ளியில் சேவை புரியும் கன்னியாஸ்திரிகள் முதல் உலகமே அறியாமல், தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்று வாழும் குடும்பப் பெண்கள் வரை நடுத்தெருவில் – பலர் முன்னிலையில் கற்பு சூறையாடப்படுகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரம் திட்டமிடப்பட்டுக் களவாடப்படுகின்றன.


பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்தியாவின் காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் அரசாங்கங்களோ இவற்றையெல்லாம் கண்டுக் கொண்டே கைகட்டி, வாய்பொத்தி எதையும் காணாதவர்களாகவும் கேட்காதவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இயன்றவரை வன்முறைக்குத் துணைப் போகவும் செய்கின்றன.


இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட முஸ்லிம், தாழ்த்தப்பட்டச் சமுதாய மக்களோ போதிய உணர்வின்றி, தம் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்கள் நடக்கும் பொழுது மட்டும் “அய்யோ, அம்மா, கொல்கிறார்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?” எனக் கதறி அழுவதும் ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்குத் தங்களிடமிருந்தே இருப்பதில் சிறிதைப் பிச்சையாகப் போட்டு விட்டு அதனை அப்படியே மறந்து விடுவதுமாக வாழ்ந்து வருகின்றனர்.


அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனைகள் படைத்துக் கொண்டு உலக அரங்கில் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும், சுதந்திரம் அடைந்துச் சுமார் 60 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் நூற்றாண்டில் பீடு நடை போடும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவினுள் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவ, தாழ்த்தப்பட்ட மக்களின் எதார்த்த நிலை இது தான்.


போலியாக உலக அரங்கின் முன் தலை நிமிர்ந்து நிற்பதாகப் போலிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்தியாவை உண்மையிலேயே உலக அரங்கின் முன் தலை நிமிர வைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட அவலநிலைகள் இந்தியாவிலிருந்துக் களையப்பட வேண்டும்.


அதற்கு என்ன வழி? இதனை ஆராயும் முன் மேற்கண்ட இந்தியக் குடிமக்களின் அவலநிலைகளுக்குரியக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியம்.


பல்வேறு இன, மத, மொழி, கலாச்சார மக்கள் நிறைந்த ஒரு நாடு, உண்மையிலேயே அது ஜனநாயக நாடாக ஆக வேண்டும் எனில், அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார நிலைகள் ஒரே சமச்சீரில் மேன்மையடைய வேண்டும். சமூகத்தில் எந்த இனமும் தாழ்நிலையில் இருக்கக் கூடாது. இயன்றவரை எல்லா இன மக்களின் கல்வி , பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக நிலைகள் குறைந்தபட்சம் ஒரே நிலைக்கு எட்ட வேண்டும்.


இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் வெறும் 2.5 சதவீதத்தினரே இருக்கும் உயர் குடியினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணச் சமூகம், அரசின் அனைத்து அதிகார உயர்மட்டப் பதவிகளையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பிரபல ஊடகங்களிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, பாதுகாப்புத்துறை வரை அனைத்து இடங்களிலுள்ள அதிகார உயர்மட்டப் பதவிகளிலும் அவர்களே நிறைந்துக் காணப்படுகின்றனர்.
இந்தியாவில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் – கல்வியில் பின்தங்கியுள்ளனர்; இவர்களுக்கு ஒரு சாதாரண கல் உடைக்கும் தொழிற்சாலையிலிருந்து, அரசு சார் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் உள்ள உயர் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; சாதாரண கிராமப் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிப் பதவிகளில் இருந்து மாவட்ட, மாநில அரசு அதிகாரிப் பதவிகள் வரை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்கள் வேலை செய்யும் படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களும் உயர்சாதியினரின் கைகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் அதிகாரங்கள் உடைய உயர்பதவிகளை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்ல விடாமல் தடுப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக உண்மையைப் பொய்யுடன் கலந்து அந்தப் பொய்யையும் உண்மையாகச் சமூகத்தில் நம்ப வைக்கும் உத்தியை இவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.


ஓர் உதாரணத்திற்கு:

கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தனியார் தொழிற்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, “இட ஒதுக்கீட்டு முறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என்பது மட்டுமல்லாமல் தொழிற்துறையை அது வெகுவாகப் பாதிக்கும்” என வாதிடுகிறது.

மேலும், ‘மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவினைகள் தான் உலகிலேயே மிக அசிங்கமான ஒரு சமூக அமைப்பாக இருக்க முடியும். மனுவின் சட்டப்படி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிராமணருக்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொன்னால், கொதிக்க வைக்கப்பட்ட எண்ணை அவரது வாயிலும் காதிலும் ஊற்றப்பட வேண்டும். இதன் காரணத்தினாலோ என்னவோ, சிறந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை உயர்சாதியினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் அவை கிடைப்பதே இல்லை.

இந்த நிலைமையைச் சீர் செய்யவே, இந்திய அரசு, 1950-லிருந்தே கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தியது. ஆயினும், சுமார் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக்கொள்கை போதிய பலனை நல்கியதா என்றால் இல்லை” என இக்கட்டுரைத் தொடர்கிறது.

“இருப்பினும் பல அரசியல் காரணங்களுக்காக அரசு இக்கொள்கையை தனியார் துறையிலும் திணிக்க முயல்கிறது” எனக் குற்றம் சாட்டும் இக்கட்டுரை, “பிரதமர் மன்மோகன் சிங் தலித் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிட்டத்தட்ட மிரட்டியதாகச்” சொல்கிறது. “ஏற்கெனவே பொதுத்துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு கொள்கையை தனியார் துறையிலும் நடைமுறைப் படுத்த முயல்வது பைத்தியக்காரத்தனம்” எனவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

“சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படச் செய்வது தனியார் நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இம்மக்களின் அவலநிலை தொடருவதற்குக் காரணமான உண்மையான குற்றவாளி, அரசாங்கமும் அழுகிப்போன அதன் கல்விக் கொள்கையும்தான்”
என்ற அழுத்தமான ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.


கட்டுரையின் ஆரம்பப்போக்கைக் கவனிப்பவர்களை, “இந்தியாவின் கேடுகெட்ட சமூக நிலைக்குக் காரணம் புறந்தள்ளப்பட வேண்டிய மனுதர்மக் கொள்கையின் அடிப்படையிலான உயர்சாதியினரின் செயல்பாடுகளும், அவர்களே உயர் வேலைவாய்ப்புகளில் நிறைந்திருப்பதுமே” என்ற ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் அசைக்க முடியாத உண்மை, அக்கட்டுரையின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து விடுகின்றது.


தொடர்ந்து, “பொதுத்துறையில் தோல்வியடைந்த ஒரு கொள்கையை அரசு தேவையில்லாமல் தனியார் துறையிலும் திணிக்கப்பார்க்கின்றது” என்றக் குற்றச்சாட்டை வைத்து மக்களின் மனதில் “ஆம், சரி தானே” என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொதுத்துறையில் தோல்வி அடைவதற்கானக் காரணம் என்ன என்பதைக் குறித்துப் பேசாமலேயே தொடர்ந்து, “தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றுக் கூறி மொத்த உண்மைகளையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றது.


கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்த “உயர் சாதியினரின் மனுதர்மக் கொடுமை” என்ற உண்மை, கட்டுரையின் மையக்கருவாகக் கூறியப் பொய்யை உண்மைப்படுத்த கொடுக்கப்பட்ட ஒரு விலை மட்டுமே என்பதை அநேகமாக எவரும் அறிய வாய்ப்பின்றி அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மையான நிலை என்ன?.

“இந்தியத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவரைக் காட்டிலும் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது” என அமெரிக்கப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு ஒன்று உண்மையைப் போட்டு உடைக்கின்றது.


அதே தி எகனாமிஸ்ட் சஞ்சிகையின் அக்டோபர் 20 இதழில், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள், இக்கட்டுரையில் வைக்கப்பட்ட அந்தப் பொய்களை மறுத்து அவற்றுக்கு எதிராக பதிலளித்துள்ளனர்.

நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இப்பேராசிரியர்கள் கடந்த இரண்டாண்டு காலமாக இந்த ஆய்வை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த ஆய்வு, நன்கு படித்தத் தகுதியுள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மோடி நடத்திய இன ஒழிப்பு அராஜகத்தை எவ்விதம் தெஹல்காவினர் உலகிற்கு வெளிப்படுத்தினரோ, அதே பாணியில் இவர்கள் நடத்திய ஆய்வு முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடியை வெளிக் கொணர்ந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு ‘விண்ணப்பித்த’ தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் ‘விண்ணப்பதாரர்களின்’ நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

இந்திய இஸ்லாமியச் சமுதாயத்திற்கு கவலையளிக்கக் கூடிய வகையில், அசைக்கவியலா ஆதாரங்களுடன் இந்த ஆய்வறிக்கை சொல்லும் கருத்து, தனியார் துறைகளின் உயர்பதவிகளில் புகுந்துக் கொண்டு உயர்சாதியினர் நிகழ்த்தும் தகிடுதத்தங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.


மேற்கூறப்பட்ட உதாரணம், இந்தியாவில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள பிராமணச் சமூகத்தினர் உயர் அதிகாரப் பதவிகள் அனைத்தையும் தொடர்ந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளில் மிகச் சாதாரணமான ஒரு யுத்தி மட்டுமே.


தகுந்த ஆதாரங்களுடன் ஹிந்துத்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்த தெஹல்காவைப் போன்று, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தனியாரில் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பையும் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான பாரபட்சத்தையும் தோலுரித்த அமெரிக்கப் பேராசிரியர்களின் செயல்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இவை இந்தியச் சமூகத்தை மேல்மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அனைவருக்கும் சமநீதி கிடைத்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கவும் போதாது.

அதற்கு, இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மக்களுக்கும் நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட முற்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, தானாக முன்வந்து கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிப் பின்வாங்க வைத்த பாரபட்சமில்லாத நீதி நடைமுறைப்படுத்த வேண்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்களின் மூலம் இந்தியாவில் நிலைகொண்டு விட்ட ஹிந்துத்துவத்தின் முகமூடியை தெஹல்கா கிழித்து எறிந்தப் பின்னரும் இதுவரை அதனைக் குறித்து வாயைத் திறக்காதது மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தப் பின்னரும் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக இருப்பதிலிருந்து மேற்கூறப்பட்டதற்கான அவசியம் மேலும் உறுதியாகின்றது.

தகவல்: இப்னு பஷீர்