இஸ்லாமிய உலகில் உள்ள மதப் பிரிவினைகளைத் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் நிராகரித்துள்ளார். “இஸ்லாத்தை, சுன்னி அல்லது ஷியா என வகைப்படுத்தக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அங்காராவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய எர்டோகன், ”மக்களை மதம், இனம் அல்லது மொழி அடிப்படையில் துருக்கி பாகுபடுத்துவதில்லை” என்றும், இஸ்லாமியர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் கூறினார். அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்கள் மத மோதல்களைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்த அவர், மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இஸ்லாமியர்கள் ஒரே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை எர்டோகன் வலியுறுத்தினார். “சுன்னி இஸ்லாம், அல்லது ஷியா இஸ்லாம் என்று தனித் தனி இஸ்லாம் என்று எதுவும் இல்லை” என்று அறிவித்த அவர், மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
“சுன்னி அல்லது ஷியா இஸ்லாம் போன்ற எந்த வேறுபாட்டையும் நாங்கள் அங்கீகரிப்பதில்லை. ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது. அலி எங்களுடையவர், உமர் எங்களுடையவர், எங்கள் தாய் ஆயிஷா எங்களுடையவர், எங்கள் தாய் ஜைனப் எங்களுடையவர்,” என்று எர்டோகன் கூறினார்.
நன்றி : தி ஜாமியா டைம்ஸ்
