பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே!

பிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக மனிதர்களைக் கொல்லுமாறுப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் சென்ற அக்டோபரில் ஓர் அதிர்ச்சி ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்போது அந்த ஆய்வு அறிக்கை வெறுப்புகளாலும் பொய்களாலும் புனையப்பட்ட வெறும் புரளியே எனத் தெரிய வந்துள்ளது.

BBC நிறுவனம் தனது BBC2 அலைவரிசையின் நியூஸ்நைட் (Newsnight) என்னும் நிகழ்ச்சியில் இந்த ஆய்வறிக்கையை நுண்ணிய முறையில் அலசி இந்த ஆய்வறிக்கை பொய்யும் புரளியுமே எனக் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல கார்டியன் நாளிதழும் இந்த ஆய்வறிக்கை புரளி என்று கண்டறிந்து அறிவித்துள்ளது.

சென்ற அக்டோபரில் பாலிஸி எக்ஸ்சேஞ்ச் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் முகவரிகளில் மஸ்ஜிதுகள் இல்லை என்றும் பெரும்பாலானவை புத்தகக் கடைகளின் முகவரிகளே என்றும், பலரது கருத்துகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்தவை ஒரே நபருடையது தான் என்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் BBC கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

 

பிரிட்டிஷ் முஸ்லிம்கள் இது குறித்துப் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாலிஸி எக்ஸ்சேஞ்ச் மட்டுமல்லாது சேனல் 4 என்னும் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனமும் இதேபோலப் பொய்த்தகவல்களை வெளியிட்டு அவை வெளியில் தெரிய வந்தவுடன் கடும் கண்டணத்துக்கு ஆளாகி இருந்தது. பாலிஸி எக்ஸ்சேஞ்சால் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டப்பட்ட லேய்ட்டன் மஸ்ஜித் நிர்வாகம் அவ்வமைப்பின் மீது உரிமை மீறல், அவதூறு பரப்புதல் போன்ற வழக்குகளைத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

பாலிஸி எக்ஸ்சேஞ்சின் இந்த மலிவான வெறுப்புப்பரப்பும் உத்தியை அனைவரும் அறிந்து கொள்ளும்படித் தோலுரித்த BBC-யை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த ஆய்வறிக்கை பாலிஸி எக்ஸ்சேஞ்சின் இஸ்லாமிய வெறுப்பை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கியதால் அதுவே அவர்களுக்கு எதிரானதாகிவிட்டது என பிரிட்டிஷ் முஸ்லிம் கூட்டமைப்பு (Muslim Council of Britain – MCB) தெரிவித்துள்ளது.