தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

பேரா. பெரியார்தாசன்/அப்துல்லாஹ்
Share this:

ப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன. உண்டு என்பதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் உண்டு என்று கூறுவோரும் உளர்.

இதில் படைத்தவன் ஒருவன் உண்டு என்று கூறுவோரில் ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள் உண்டு என்ற நிலைபாட்டில் உள்ளோரில் பெரும்பாலோர் என்றாவது ஒருநாள் படைத்தவன் ஒருவன்தான் என்ற உண்மையைக் கண்டுகொள்கின்றனர். இது நாள்தோறும் நாம் படிக்கும் செய்திகளில் ஒன்றுதான்.

ஆனால், “படைத்தவன் என்றொருவனே இல்லை; அனைத்தும் தானாகவே தோன்றின” என நிரூபிக்கப்படா அறிவியலைத் துணைக்கழைத்து “பகுத்தறிவு” என்ற பெயரில் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகர், படைத்தவனைக் கண்டுகொள்தல் என்பது நிகழ்வுகளில் ஆச்சரியமும் அபூர்வமுமான நிகழ்வாகும். தமிழகத்தின் பகுத்தறிவு(!)ப் பாசறையிலிருந்து இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுள் மிகச் சிறந்த இலக்கியவாதியான முரசொலி/நீரோட்டம்/அடியார் அவர்கள் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட இன்னொருவரது வாழ்வின் திருப்புமுனை நிகழ்வு ஒன்று கடந்த வியாழன் (11.03.2010) அன்று சவுதி அரேபியாவில் நடந்தது.

ஆம்! “தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்” என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் “கடவுள் இல்லை” என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் பெரியார்தாசன் அவர்கள் கடந்த வியாழன் அன்று இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்டார்.

உள்ளம் திறந்து, முன்முடிவுகள் இன்றித் தேடமுனைபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தேடுவதில் முனைப்புடன் இருந்தால் என்றாவது ஒருநாள் அவர்கள் தேடுவதை அடைந்தே தீருவர். “படைப்பாளன் என்றொருவன் இல்லவே இல்லை” என்று எவ்வித உறுதியான சான்றும் இல்லாமல், கண்டுபிடிப்பில் இன்றும் கத்துக்குட்டியாக இருக்கும் விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மிக அற்பமான சிற்றறிவைப் பயன்படுத்திப் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகச் சகோதரர்கள், தங்களைத் தாங்களே “பகுத்தறிவுவாதிகள்” என அழைத்துக் கொள்வதிலாவது அவர்கள் உறுதியானவர்களாக இருப்பின், தம் மனதைத் திறந்து “படைப்பாளன்” குறித்துப் பேசும் அனைத்து வேத கிரந்தங்களையும் ஒப்பீட்டாய்வு செய்ய முன்வரவேண்டும் என்றும் படைத்தவனின் வாக்காக இவ்வுலகின் இறுதிநாள்வரை பாதுகாக்கப்பட இருக்கும் திருக்குர்ஆனை முழுவதும் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும் என்றும் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறோம்.

தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், “கருத்தம்மா” என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, ‘பெரியார்தாசன்’ ஆக வாழ்ந்தவர்.

சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11, 2010) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை “படைத்தவனுக்கு அடிமை” என்ற பொருள்படும் “அப்துல்லாஹ்” என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முனைவர் அப்துல்லாஹ் எனும் பெரியார்தாசனின் இறைதேடுதல் பயணம் சுவாரசியமானது. சிறுவயதில் தன்னுடன் பயின்றிருந்த சிராஜுதீன் என்ற முஸ்லிம் நண்பருடன் 2000ஆம் ஆண்டில் ஒருநாள் இரவு பல விஷயங்களைக் குறித்துக் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், படைத்தவனைத் தேடும் சிந்தனை எழக் காரணமான ஒரு கேள்வி சிராஜுதீனிடமிருந்து எழுந்தது என்றும் அதுவே தன் இறைதேடுதல் பயணத்தின் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் நினைவு கூர்கிறார்.

“படைத்தவன் என்றொருவன் இல்லை என்ற நாத்திக கொள்கைதான் சரியானது எனில் அதனால் நம்முடைய மரணத்துக்குப் பின் எந்த இழப்பும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக ஒருவேளை படைத்தவன் என்றொருவன் இருந்து விட்டால் மரணத்துக்குப் பின் நாம் மிகப் பெரிய நஷ்டவாளியாக நிற்க நேருமே” என்ற சிந்தனையினால் எழுந்த அச்சம்தான் “படைத்தவன் என்றொருவன் இருக்கிறானா?” என்ற தேடுதலுக்குத் தன்னை உந்தித் தள்ளியதாகக் கூறுகிறார்.

“கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அங்கு உரையாற்ற வந்த பெரியாரைப் புகழ்ந்து, நான் எழுதிய கவிதைதான், பெரியாரின் கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பமாக அமைந்தது” என்று கூறும் அவர், அதன்பின் கடுமையான கடவுள் மறுப்புச் சிந்தனை கொண்டவராக தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் இதற்கிடையில் இனத்தின் அடிப்படையிலான இழிவை அகற்ற “புத்த மதத்துக்கு” மாறியதாகத் தமிழக அரசு பதிவேடுகளில் தன் விவரங்களை மாற்றிக்கொண்டதையும் நினைவு கூர்கிறார்.

“2000இல் மனதினுள் எழுந்தக் கேள்வி, பல வேத கிரந்தங்களையும் ஆராயச் சொன்னது. இந்துமத வேதங்களில் கடவுளைத் தேடுபவன், கடவுள் மறுப்புக் கொள்கையில்தான் போய் சேருவான். பைபிளிலும் படைத்தவனைக் குறித்த தெளிவு இல்லை. இறுதியில் இஸ்லாத்தில் – திருக்குர்ஆனில் தேட முற்பட்டேன். திருக்குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதினுள் தெளிவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் தினசரி வேலைகளை ஒதுக்கி, நாளுக்கு 5 மணி நேரம் வரை திருக்குர்ஆனை வாசித்து முழுமையாக முடித்தேன். அதன் பின் ஹதீஸ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். 2004 இல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டேன். அதன் பிந்தைய 6 ஆண்டுகளும் முழுமையாக இஸ்லாத்தை ஆய்வு செய்வதிலேயே செலவழித்து, இறுதியில் உண்மையான இறைவனை இஸ்லாத்தின் மூலம் கண்டுகொண்டேன்” என்று தன் இறைதேடுதல் பயணத்தின் கடந்த 10 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

“கடவுள் இல்லை” என்ற சிந்தனையை ஆயிரக்கணக்கானோருக்கு விதைத்த இறைமறுப்பாளர் ஒருவர் இன்று இறைவனைக் கண்டுகொண்டுள்ளார். கடுமையான தேடுதல் மூலம் கண்டு கொண்ட ஓரிறையை இனிவரும் காலங்களில் மக்களுக்கு எடுத்தியம்ப இருக்கும் அன்னாரின் கண்டறிதலைத் தமிழ்ச் சமூகம் மனம் திறந்து கேட்கட்டும்; உண்மையான படைத்தவனைக் கண்டு கொள்ளட்டும்.

இறைமார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், மக்கா நோக்கிக் கடந்த சனிக்கிழமையன்று உம்ரா எனும் புனிதபயணத்தை மேற்கொண்ட அவர், இன்று 14.03.2010 இரவு 8.30 மணிக்கு ஜித்தா செனய்யாவில் “நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாறினேன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார், இன்ஷா அல்லாஹ்.

அவரது இந்நாள் வரையிலான பிழைகளைப் பொறுத்து, அவர் மூலம் இத்தூய மார்க்கம் மேலும் வலுப்பெற இறைவன் அருள்புரிவதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

“தேடுங்கள்; கண்டடைவீர்கள்!”

 


படைத்தவனை அறிந்தது எப்படி? முனைவர் பெரியார்தாசன் அவர்கள் பேட்டி – பகுதி1 (நன்றி: www.tmmk-ksa.com)

{youtube}FahyymZanbc{/youtube}

 


படைத்தவனை அறிந்தது எப்படி? முனைவர் பெரியார்தாசன் அவர்கள் பேட்டி – பகுதி2. (நன்றி: www.tmmk-ksa.com)

{youtube}7wXFcqNDX3E{/youtube}

 


நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? முனைவர் பெரியார்தாசன் அவர்கள் சிறப்புரை. (நன்றி: www.islamkalvi.com)

{youtube}kSjTIXnLGRU{/youtube}

 


– அல் அமீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.