கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்

புதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் ராமன்துறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 25ம் தேதி அன்று அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்கள் மோதி கொள்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், புதுக்கடை போலீசார் அந்த பகுதிக்குள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, ஒரு வீட்டின் அருகே நின்று ஓய்வெடுத்தனர். இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை துரத்தியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து, குளச்சல் ஏஎஸ்பி கங்காதருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, 10 நாட்டு வெடிகுண்டுகள், 13 பாட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 23 வெடிகுண்டுகளை கைப்பற்றி, புதுக்கடை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்குளம் கிராமநிர்வாக அலுவலர் ரகுமான் புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியை சேர்ந்த ஜெரோம்(41) என்பவரை கைது செய்தனர்.  இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகளை, நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் பார்வையிட்டனர். இதன்பின், வில்லுக்குறியில் உள்ள தனியார் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பாக வைக்க வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த குண்டுகள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி: தினகரன் (29-01-2015)